வதைபடும் நாடாளுமன்றம்

வரலாறு காணாத வகையில் வதைபடும் நாடாளுமன்ற ஜனநாயகம்..!

”விவாதிக்க வேண்டுமா..? – முடியாது!”

”பேச வேண்டுமா – அனுமதி கிடையாது!”

”இவை அநீதியான சட்டங்கள் மக்கள் பாதிக்கப்படுவார்களே”

”நீங்கள் பேசிய எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது..”

”நாங்க பேசும் எதையும் காதில் வாங்க மாட்டீர்களா..? அப்ப எதுக்கு சபை?”

”உட்காருங்க, நீங்க சபை விதிகளை மீறுகிறீர்கள்!”

”மக்கள் விரோத சட்டங்களை தனி நபர்கள் ஆதாயத்திற்காக கொண்டு வருகிறீர்கள்! பிரதமரும், உள் துறை அமைச்சரும் ஏன் சபைக்கு வரவில்லை.’அவர்கள் வந்து பதில் சொல்ல வேண்டும்.”

”கூச்சல் போட்டு சபையின் புனிதத்தை கெடுக்கிறீர்கள்..! தற்போது புதிய மசோதா ஒன்றை அமைச்சர் அறிமுகப்படுத்த உள்ளார்.அமைச்சர் பேசட்டும்.”

”பெகாசஸ் உளவு வேலையை ஏன் வரம்பு மீறி செய்தீர்கள். வெளி நாட்டு உளவு கருவி நிறுவனத்திற்கு நம் நாட்டு விவகாரங்கள் தெரிய வருவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லையா..?”

”யாரங்கே..அமைச்சர் பேசும் போது கூச்சல் போடுபவர்களை மார்ஷல்கள் வந்து தூக்கி வெளியே போடுங்கள்!”

இந்த கூத்து தான் கடந்த 18 நாட்களாக பாராளுமன்ற கூட்டத் தொடரின் போது நிகழ்ந்துள்ளது!

”எதிர்கட்சி உறுப்பினர்கள் கத்தினார்கள், டேபிள் மீது ஏறி நின்றார்கள், பேப்பரை கிழித்து போட்டார்கள்..! அய்யோ சபையின் புனிதம் கெட்டுவிட்டதே!” என்பதாக ‘புனிதர்கள்’ புலம்பினார்கள்

மக்களுக்கு எதிரான சட்டங்களை அராஜகமாக –  விவாதமின்றி – நிறைவேற்றக் கூடிய இடம் எதுவானாலும் அந்த செயலே அதன் புனிதத்தை போக்கிவிடாதா..?

”நாங்கள் எது வேண்டுமானாலும் செய்வோம். அதை நீங்கள் சுட்டிக் காட்டவோ, தட்டிக் கேட்கவோ முயற்சித்தால்..ம்கூம் அது முடியாது ராஜா!” – இது தான் பாஜக அரசின் ஸ்டைல்!

நடந்து முடிந்தவற்றை தொகுத்து ஆராய்ந்து பார்த்தால், பாஜக அரசு அணுவணுவாகத் திட்டமிட்டுத் தான் ஒவ்வொன்றையும் நிகழ்த்துகிறது.

விவசாயத்தை வேரறுக்கும் மூன்று வேளாண் சட்டங்கள்..! பெட்ரோல்,டீசல் விலை உயர்வு, கொரானா தடுப்பு நடவடிக்கைகள், தொழிலாளர் விரோத சட்டங்கள், லாபகரமான அதி முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் போக்குகள், மத ரீதியான பாகுபாடுகளை, சாதிய ரீதியான தாக்குதல்களை ஊக்குவிக்கும் அரசின் நடைமுறை செயல்பாடுகள்..இவை அனைத்தையும் விட வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடந்த வேவு பார்க்கும் இழிவான நகர்வுகள்..! இவை எது ஒன்றும் சபை குறிப்பில் கூட ஏறக் கூடாது என பாஜக அரசு திட்டமிட்டு சாதித்துவிட்டது.

ஏனென்றால், இதற்கான பதில்கள் அவர்களிடம் இல்லை.பதில் சொல்ல முயன்றால் பகிரங்கப்படுத்தப்பட்டுவிடுவார்கள்! அது தானே மிகவும் ஆபத்து!

தாங்கள் நினைத்ததை நிறைவேற்றிச் செல்ல வேண்டும் என்ற மூர்க்கத்தனமே அவர்களிடம் மேலோங்கி இருந்தது! இந்த திட்டமிடலின் ஒரு அங்கமாகத் தான் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல் நாள் மட்டும் சபையில் தலைகாட்டிவிட்டு சென்றுவிட்டனர். பிறகு கடைசி நாள் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது தான் வந்து நின்றனர். பிரதமரும், உள் துறை அமைச்சரும் பொறுப்பாக பதில் சொல்லாமல், கமுக்கமாக கள்ள மெளனம் காத்துள்ளனர்!

எதிர்கட்சிகள் விவாதிக்க வேண்டும் என நாள் தோறும் கெஞ்சி கொண்டிருந்த தருவாயில் தான் நாளொன்றுக்கு சுமார் 19 மசோதாக்கள் வீதம் ஏகப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றித் தள்ளிவிட்டனர். இதில் 15 மசோதாக்கள் ஒரே ஒரு நிமிடம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அதில் எல்.ஐ.சி மாதிரியான பொதுகாப்பீட்டு நிறுவனங்களை மெல்ல, மெல்ல, தனியார்மயப் படுத்தும் சட்டம், பழங்குடியினர் மறுமலர்ச்சி என்ற பெயரில் அவர்களை இருக்கும் இடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் சட்டம், இந்திய மருத்துவத் துறை தொடர்பான மசோதா, வரிவிதிப்புகள் தொடர்பான  நிதி துறை மசோதாக்கள், தேங்காய் வளர்ச்சி மசோதா..இப்படியானவற்றை எல்லாம் விவாதிக்காமலே எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி ஒரிரு நிமிடங்களில் நிறைவேற்றிச் சென்றுள்ளனர்! இவை கோடானு கோடி மக்களை கடுமையாக பாதிக்கவுள்ள சட்டங்கள்!

இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை அங்கீகரிக்கும் சட்டம் ஒன்று தான் ஓரளவேணும் விவாதிக்கப்பட்டு நிறைவேறியது! இதில் தான் நமது தமிழக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி கிடைத்த வாய்ப்பில் சிறப்பாக பேசினார்! இதை அவர்கள் ஓ.பி.சி ஓட்டுக்காக தவிர்க்க இயலாமல் அனுமதித்தனர். இவ்வளவு முக்கியமான ஒரு மசோதா நிறைவேற்றப்படும் போது பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவையில் இல்லாமல் போவது என்பதெல்லாம் இது வரை இந்திய அரசியலே பார்க்காத அதிசயமாகும்.

பொதுவாக கடந்த காலங்களில் எல்லாம் கூட இது போன்ற கூச்சல், குழப்பங்கள் பாராளுமன்றத்தில் நடந்துள்ளன. இதை விட அதிகமாக கத்தி, கூச்சல் எழுப்பி கலங்கடித்த அனுபவங்கள் பாஜகவிற்கு உண்டு. இந்த கலாட்டாக்களில் வெங்கையா நாயுடு ஒரு விற்பன்னராகத் திகழ்ந்தவர்! ஆனால், அவர் இப்போது, ”ஐயோ சபையின் புனிதம் கெடுகிறதே..” என அங்கலாய்க்கிறார். ‘புனிதம்’ என்ற வார்த்தையின் புனிதத்துவமே இது போன்ற போலி மனிதர்களின் நாவிலிருந்து வெளிவரும் போது போய்விடுகிறதே!

காங்கிரஸ் ஆடசியில் நிலக்கரி சுரங்க ஊழல் விவகாரத்தில் நீண்ட நாட்கள் சபையை முடக்கினார்கள்! 2 ஜீ ஊழல் விவகாரத்தில் ஐம்பது நாட்கள் சபையை முடக்கினார்கள்! அப்போது ”சபையில் பேசவே கூடாது”என்றோ, ”பேசியவை அவை குறிப்பில் ஏறாது” என்றோ சொல்லப்பட்ட தில்லை. தவறான வார்த்தை பிரயோகங்கள் சபைக் குறிப்பில் தவிர்க்கப்பட்டதுண்டு! பாராளுமன்ற விவகார அமைச்சர் எதிர்கட்சி உறுப்பினர்களை சந்தித்து சமாதானம் செய்வார். சபையை சிறப்பாக நடத்திச் செல்ல ஒத்துழைப்பை கேட்பார்! அதே  சமயம் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் சொன்னார்கள்! முக்கியமாக மன்மோகன் சிங் எவர் கேள்வியையும் எதிர் கொள்ளாமல் ஓடி ஒளிந்தார் என்ற பேச்சுக்கே இடம் தந்ததில்லை!

தற்போது இவை எல்லாவற்றையும் நாடு பார்த்துக் கொண்டுள்ளது! எவ்வளவு பெரிய ஈவு இரக்கமற்ற அராஜகவாதிகளிடம் நாடு சிக்கி சின்னாபின்னமடைந்து கொண்டுள்ளது என எல்லோருக்குமே ஒரு மனக்குமுறல் உள்ளது!

அதன் ஒரு அம்சமாகத் தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா சமீபத்தில் தெரிவித்த வேதனையாகும். ”பாராளுமன்றத்தில் புதிய சட்டம் சட்டங்களை இயற்றும் போது போதுமான அளவுக்கு விவாதங்கள் நடத்தாது மிகவும் கவலையளிக்கிறது. முன்பெல்லாம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து ஆழமான,தெளிவான விவாதங்கள் நடைபெறும். ஒரு சட்டம் சரியாக விவாதிக்கப்பட்டு,குறைகள் களையப்பட்டு நிறைவேறுவது தான் ஜனநாயகம். விவாதமின்றி கொண்டு வரப்படும் சட்டங்களின் நோக்கங்கள் குறித்து நீதிமன்றங்களாலே புரிந்து கொள்ள முடியவில்லை. இது போன்ற சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால் நீதிமன்றத்தின் சுமையும் அதிகரிக்கிறது… ”என தலைமை நீதிபதியே பேச வேண்டிய துர்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கூடவே, ‘இந்த ஆட்சியாளர்கள் இது போன்ற மனசாட்சியுள்ள நீதிபதிகளை ரொம்ப நாள் விட்டுவைக்க மாட்டார்களே…’ என்ற கவலையும் ஏற்படுகிறது. எனினும், ‘நீதித் துறையில் மனசாட்சியின் குரல்’ ஒலிப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s