நவ.7: கொண்டாடும் தகுதி வேண்டும்

இன்று ரஷ்யப் புரட்சி நாள். தோழர் லெனின் தலைமையில் பரந்துபட்ட நாட்டில், பல்வேறு கட்சி அமைப்புகளை ஒன்றுபடுத்தி, எஃகுறுதியான கட்சியைக் கட்டி, பாட்டாளி மக்களின் அதிகாரத்தை வென்றெடுத்த நாள். நூறாண்டுகளைக் கடந்த பின்பும், நினைக்குந்தோறும் அந்தப் பெருமிதம் நம் நெஞ்சை நிறைத்து வழிகிறது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் யாராலும் உலகின் முதல் சோசலிச அரசு அமைந்த அந்த நாளை, உழைக்கும் மக்களின் உவகை ஊற்றெடுத்த அந்த நாளை மறக்கவோ, மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

அதேநேரம் இந்த நாள் ஒரு தீபாவளியைப் போலவோ, ஒரு கிருஸ்துமஸ் போலவோ, ஒரு ஹஜ் நாளைப் போலவோ வெற்று கொண்டாட்டத்துக்கான நாள் அல்லவே. ஏதோவொரு மதம் சார்ந்த பெருநாள் போல சடங்குகளினால் ஆன நாள் அல்லவே. அல்லது, இந்த நாளில் உறுதியேற்கிறோம், இந்தியாவிலும் ஒரு புரட்சியை சாதிப்போம் என்று தேர்தல்கால வாக்குறுதிகளைப் போல ஆண்டுதோறும் சபதமேற்கும் ஒரு நாளா? இல்லை என்றால் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏதோ ஒரு புரட்சிகர அமைப்பில் இருந்து விடுவதாலேயே, கம்யூனிசம் என்ற பெயரில் ஏதோ ஒன்றைச் செய்து விடுவதாலேயே அந்த நாளை நம்மில் நிறைத்துக் கொள்ளும் உரிமை நமக்கு வந்து விடுமா?

இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தொடங்கி நூறாண்டுகள் ஆகி விட்டது, அல்லது நூற்றாண்டை எட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால், போல்ஷ்விக் கட்சியைப் போல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் புரட்சியை நோக்கி அது எட்டு வைத்து முன்னேறி இருக்கிறதா? இந்தக் கேள்வியை எழுப்பாத யாரும் தன்னை கம்யூனிஸ்ட் என்று அழைத்துக் கொள்ள முடியாது.

இந்தக் கேள்வியை உள்ளுக்குள் எழுப்புவது என்பது வேறு, கேள்வியை உள்வாங்கி விடைக்காக முயல்வது என்பது வேறு. கட்சிகளின், குழுக்களின் கடந்த கால தவறுகளை அலசுவது மட்டும் இதற்கு போதுமானதில்லை. தத்துவத்தை நடைமுறையோடு இணைப்பதில் இன்றுவரை நமக்குள் இருந்து கொண்டிக்கும் மயக்கங்களை உடைப்பதே தேவையானதாக இருக்கிறது.

சமூகம் குறித்த ஆய்வு என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் உயிர்நாடி போன்றது. அந்த உயிர்நாடி இன்றுவரை சரியான முறையில் பிடித்துப் பார்க்கப்படவும் இல்லை, அது இயல்பு நாடியாக இருக்கிறதா? எடை நாடியாக இருக்கிறதா? என்று மதிப்பிடப்படவும் இல்லை. சட்டோபத்யாயா, ரொமிலா தாப்பர் என வரலாற்றாசிரியர்கள் முதலாக இன்றைய அமைப்புகளின் தடித்தடியான நூல்கள் வரை ஆய்வுகள் எனப்படுபவை தங்கள் தேவை, விருப்பம் உள்ளிட்டவைகளின் எல்லைகளை தாண்டி விரியவே இல்லை.

அதானால் தான் இன்றைய பாசிச அரசுக்கு எதிராகவும் கூட, ஒரு மக்கள் நல அரசுக்கு எதிரான போராட்ட வடிவங்களையே முன்வைத்துக் கொண்டிருக்கிறோம். அதையும் கூட கொரோனா அச்சமூட்டலை இழுத்துப் போர்த்திக் கொண்டு ‘ஸூம்’களின் நீள அகலங்களுக்குள் சுருங்கிக் கொண்டோம்.

மக்கள் எல்லை எதுவோ அதை தாண்ட முடியாதே என்று மாவோவை மேற்கோளுக்கு இழுத்து வரலாம். பிழைப்புவாதிகள் என்பது கம்யூனிச கலைச் சொல். அதை கம்யூனிஸ்டுகளுக்கு பொத்திப் பார்க்கலாமே தவிர மக்களுக்கு பொருத்திப் பார்க்க முடியாது, பொருத்திப் பார்க்கவும் கூடாது. மக்கள் பிழைப்புவாதிகளாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அவர்களின் எல்லையில் நின்று பாசிச அரசுக்கு எதிராக நெற்றியை சுருக்க வேண்டும். இதுவும் மாவோவின் மேற்கோள் தான்.

மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்விலிருந்து இற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆம். பாசிச அரசுகளுக்கு மக்கள் குறித்த கவலை எள்முனையளவிலும் இல்லை. அது எல்லோருக்கும் தெரிந்தது தான். கடந்த ஓர் ஆண்டாக தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. உதிரும் மயிருக்கு இருக்கும் மதிப்பு கூட அங்கு போராடும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இல்லை. மறுபக்கம் தீரமாக போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் நிகழ்வுகள் மெல்ல மெல்ல அன்றாடமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கமோ இடதுசாரி அறிவுசாலிகளாக இருக்க வேண்டும் என்பதில்லை வலது சாரிக்கு எதிரான அறிவுசாலிகளாக இருந்தாலே போதும் பிணை கிடைக்காமல் ஆண்டுக் கணக்காக சிறையினுள் இயற்கையான கொலைக்கு காத்திருக்க வேண்டும். இந்த சூழலில் மக்களை போராட்டங்களை நோக்கி முகம் திருப்பச் சொல்லும் நமக்கு மக்கள் குறித்த கவலை இருக்கிறதா?

அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன? என்பன குறித்த புரிதல் இல்லாமல் மக்களை போராட அழைப்பது என்பது உண்ண எதுவும் கிடைக்காமல் இரத்தம் சொட்டச் சொட்ட முட்களை உண்ணும் ஒட்டகத்தின் முன்னால் நின்று கொண்டு இரத்தம் வழிகிறது பார் என்று தமிழில் கத்துவது போன்றதாகும்.

ரஷ்ய வழியா, சீன வழியா; சோசலிசப் புரட்சியா? புதிய ஜனநாயகப் புரட்சியா எனபன போன்ற விவாதங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, இந்தியாவுக்கு என்ன வழி என்று சிந்திப்போம். அப்போது தான் அந்த யுகப் புரட்சி நாளை கொண்டாடும் தகுதி கொஞ்சமாவது நமக்கு கிடைக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s