இந்தியத் துணைக்கண்டத்தின் உற்பத்தி முறை

(தைமூர் ரஹ்மான் ஒரு பாகிஸ்தானிய கல்வியாளர், இசைக்கலைஞர் மற்றும் சோசலிச அரசியல் ஆர்வலர். இவர் பாகிஸ்தானின் மஸ்தூர் கிசான் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் முன்னணி கித்தார் கலைஞராகவும், லால் என்ற முற்போக்கான இசைக் குழுவின் செய்தித் தொடர்பாளராகவும் உள்ளார். அவர் லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் கற்பிக்கிறார்)

பாகிஸ்தானின் வர்க்க கட்டமைப்பு என்ற நூலின் ஆசிரியர் தைமூர் ரஹ்மான் நியூஸ்கிளிக் என்ற ஊடகத்திற்கு இந்நூல் பற்றி YOUTUBE இல் அழைத்த வாய்வழி அறிமுகத்தின் தமிழாக்கமே இந்தக் கட்டுரை.

இந்தப் புத்தகத்தை எழுத எது என்னைத் தூண்டியது ?

நான் 1998-ல் இருந்து இடதுசாரி அரசியல் இயக்கங்களில் பங்கேற்று வருகிறேன். அப்போதிருந்தே இடதுசாரி அறிவுஜீவிகளிடம் பாகிஸ்தானின் வர்க்கக் கட்டமைப்பு குறித்தோ, பாகிஸ்தானில் என்ன விதமான உற்பத்திமுறை நிலவுகின்றது என்பதைக் குறித்தோ ஒத்தக்கருத்து இல்லை. அவர்கள் அனைவரிடமும் இதனைப் பற்றி ஒரு குழப்பம் சூழ்ந்திருக்கிறது.

லெனின் தான் எழுதிய “ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூலில், ரசியாவில் என்ன உற்பத்திமுறை பிரதானமாக இருக்கிறது, என்னென்ன வர்க்கங்கள் இருக்கின்றன, அவற்றின் தன்மை, அளவு பற்றிய ஒரு விரிவான சித்திரத்தை நமக்குக் கொடுக்கிறார். இதுப்போன்று பாகிஸ்தானின் உற்பத்திமுறை குறித்து ஒரு ஆய்வு நூல் பாகிஸ்தானில் இல்லை.

பாகிஸ்தானின் வர்க்கக் கட்டமைவு பற்றியோ, அதன் உற்பத்தி முறை பற்றியோ ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட பகுதியளவிலானதாகவோ, ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியை பற்றியோ தான் இருக்கிறது. இந்த நிலைமைதான் பாகிஸ்தானின் வர்க்கக் கட்டமைப்பு பற்றியும், அதன் உற்பத்தி முறையின் வளர்ச்சி பற்றியும் ஒரு முழுநீள அளவிலான ஆய்வை மேற்கொள்ள என்னை உந்தித் தள்ளியது. அதாவது காலனி ஆட்சி காலத்துக்கு முன்பிருந்த காலம் முதல் தற்காலம் வரையிலான ஒரு ஆய்வை மேற்கொள்ள வைத்தது.

இதைப் பற்றி ஆய்வு செய்தவர்களின் கருத்துக்களை படிக்கையில், இதே பிரச்சினையை ஒட்டி இந்தியாவில் நடைபெற்ற விவாதங்கள் போலவே பாகிஸ்தானிலும் காண முடிந்தது. அதாவது, பொருளாதாரம் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையிலிருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிச் சென்றுள்ளதா, மாறியிருந்தால் எந்தளவுக்கு மாறியிருக்கிறது என்ற அதே விவாதம்.

இந்த விவாதங்களில் நான் எதை பிரச்னைக்குரியது என்று பார்க்கிறேன் என்றால், ”முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன் இருக்கும் உற்பத்திமுறை நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை” என்ற முன்முடிவு தான். இது குறித்து பேசுவதற்கு முன் இந்தப் புத்தகத்தில் இருக்கும் முதல் இரண்டு தலைப்புகள் இந்தியாவுக்கும் முக்கியத்துவமுடையதே என்று குறிப்பிடுகிறேன். அடுத்த இரண்டு தலைப்புகள் குறிப்பாக பாகிஸ்தானின் தற்கால வர்க்க கட்டமைப்பு என்ற அம்சத்தைப் பற்றி பல்வேறு தரவுகளுடன் பரிசீலிப்பதாக உள்ளன.

தலைப்புகளுக்குள் போவதற்கு முன்பு நான் ஒன்றை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த நூல் முழுக்க முழுக்க தெற்காசிய சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்தை மார்க்சிய அடிப்படையில் ஆய்வு செய்யும் நூல். இந்த நூல் வரலாற்று ஆய்வு, சமூகவியல் ஆய்வு தொடர்பானது அல்ல . மேலும் இந்த ஆய்வு முழுக்க முழுக்க ஒரு செவ்வியல் மார்க்சிய பார்வையில் எழுதப்பட்ட நூல் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் ”வரலாறு பற்றிய ஒற்றை நேர்கோட்டு வளர்ச்சி” என்ற கருத்தை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன். அதாவது இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்று எந்த நாடாக இருந்தாலும் அவையனைத்தும் புராதன பொதுவுடமை, ஆண்டான்-அடிமை, நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சோசலிசம் என்ற ஒற்றை நேர்கோட்டு வளர்ச்சிப் பாதையை பின்பற்றுகின்றன என்ற புரிதலை நான் கேள்விக்குள்ளாக்குகிறேன்.

மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் மூலச்சிறப்புமிக்கவர்களாக கருதப்படும் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காவுட்ஸ்கி, லக்சம்பர்க் என அனைத்து ஆரம்ப கட்ட மார்க்சிஸ்டுகளும் இந்தியா அல்லது சீனா நிலப்பிரபுத்துவ சமூகம் என்று கருதாத போது, வரலாறு பற்றிய இந்த ஒற்றை நேர்கோட்டு வார்ச்சி என்ற கருத்து எப்படி நிலைபெற்றது?
மார்க்ஸ் தன்னுடைய ஆய்வு மேற்கு ஐரோப்பாவைப் பற்றியது என்று தெளிவாக சொல்லிய பின்பும் இக்கருத்து நிலைபெற்றது எங்கே எப்போது நடைபெற்றது ?. இப்போக்கு (வரலாறு பற்றிய இந்த ஒற்றை நேர்கோட்டு வார்ச்சி) முதலில் 1920,30-களில் சோவியத் யூனியனில் தொடங்கி பின் தன் பாதையை இதர நாடுகளுக்குள் செலுத்தி கொண்டது.

நாம் உலகெங்கும் மிகவும் வேறுபட்ட கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் பார்க்கிறோம். ஆனாலும் இவையனைத்தும் உற்பத்தி முறையின் ஒரே மாதிரியான வளர்ச்சிப் பாதையை பின்பற்றின என்று நம்மை நம்பச் சொல்கிறார்கள். முதலாளித்துவ உற்பத்தி முறை எல்லா நாடுகளிலும் பரவி நிறைந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் ஆண்டான்-அடிமை உற்பத்தி முறையும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையும் எல்லா நாடுகளுக்கும் பொதுவானது என்று சொல்ல முடியுமா?

ஏங்கெல்ஸின் ”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற நூலை எடுத்துக் கொள்வோம், அதில் அவர் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை தோன்றியதற்கான குறிப்பான சூழ்நிலைகளை விளக்குகிறார். அதாவது, ரோமானிய பேரரசின் வீழ்ச்சியும், அதனை கைப்பற்றிய ஜெர்மானிய மக்களினத்தின் குறிப்பான தன்மைகளைக் கொண்ட, இரண்டு உற்பத்தி முறைகள் சேர்ந்து உருவாகும் புதிய உற்பத்திமுறையைத் தான் அவர் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்கிறார்.

ஆக இந்தக் குறிப்பான வரலாற்று நிகழ்ச்சி தான் ஐரோப்பாவில் இந்த புதிய உற்பத்தி முறையை, நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை, தோற்றுவித்தது என்றால் தெற்காசிய சமூகத்தில் இதே போன்றதொரு நிகழ்வை நாம் எங்கே பார்க்கிறோம்?
இந்தியாவில் உற்பத்திமுறை குறித்த ஆய்வுகளை முன்வைத்துள்ள ஆய்வாளர்களிடையே இந்த மாற்றம் பற்றிய, அதாவது நிலப்பிரபுத்துவத்திற்கு மாறிச் சென்ற காலத்தை வரையறுப்பதில் பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களை நம்மால் காண முடியும்.. உதாரணமாக, அடிமை சமூகத்திலிருந்து நிலப்பிரபுத்துவத்துக்கு மாறிச்சென்றது எப்போது? ஏனென்றால் அனைவராலும் ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றான ஒரு நிகழ்வே இங்கில்லை. ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளர்கள் அனைவரும் ரோமானிய பேரரசின் வீழ்ச்சியை வரலாற்றின் ஒரு முக்கியமான மைல் கல்லாக பார்க்கிறார்கள்.

மார்க்சும் எங்கெல்சும் ஒரு முக்க்கியமான கருத்தாக்கத்தை நமக்குக் கொடுக்கிறார்கள். ஒரு உற்பத்திமுறையை வரையறுப்பதில் அந்தச் சமூகத்தில் இருக்கும் உடைமை வடிவத்துக்கும்-(அதனை அவர்கள் உற்பத்தி உறவுகளின் சட்டபூர்வ வடிவம் என்கிறார்கள்), உபரியின் வடிவத்துக்கும் (அதாவது அடிமை உற்பத்தி முறையில் அது பயன் மதிப்பாகவும், நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அது கட்டாய உழைப்பு சேவையாகவும், தனியுடமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையில் அது உபரி மதிப்பாகவும்) உள்ள முக்கியத்துவம் அது.

ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது முகலாயர் ஆட்சியின் கீழ் உள்ள இந்தியாவில் எங்குமே நாம் நிலத்தில் தனியுடமையை பார்க்க முடியவில்லை. ஒரு தனிநபர் நிலத்தை உபயோகித்துக் கொள்ளலாம், ஆனால் உபயோகிப்பதற்கும், சொத்திற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. பல இடங்களில் நிலம் கைமாற்றிக் கொடுப்பதை நம்மால் பார்க்க முடியும், ஆனாலும் அதுவே விதியாக இல்லை.

உபரியின் பிரதான வடிவமும் நில வருமானமாக (நில வாடகை அல்ல) இருந்தது, இது கட்டாய உழைப்பு சேவையில் இருந்து வெகுவாக மாறுபட்ட ஒன்று. அரசு உருவாக்கம் என்ற விசயத்திலும் தெற்காசியாவின் நிலைமைகள், ஐரோப்பிய நிலைமைகளோடு ஒப்பிடுகையில் மிகவும் மாறுபட்ட ஒரு சித்திரத்தையே நமக்குக் கொடுக்கின்றன. இது எல்லாவற்றிற்கும் மேலாக எகிப்திலும் இந்தியாவிலும் மொத்த சமூக அமைப்பே சாதியை அடிப்படியாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ளது.

ஆக இவ்வளவு வேறுபட்ட தன்மைகள் கொண்டுள்ள இரு வேறு புலப்பாடுகளை நாம் ஒரே சட்டகத்திற்குள் எவ்வாறு அடைத்தோம்? நாம் அதற்கான வரையறைகளை சற்றே அகலப்படுத்தி விட்டோம். மார்க்சிய ஆய்வாளர்கள் மிக நேர்த்தியாக நிலப்பிரபுத்துவத்திற்கான விளக்கத்தை மாற்றுவதன் வாயிலாக, பல்வேறு வித்தியாசங்களை கொண்டிருக்கும் பல்வேறு குறிப்பான நிலைமைகளை ஒரே வார்த்தைக்குள் அடைக்கும் அளவிற்கு அந்த சட்டகத்தை விரித்து விட்டார்கள்.
சமூக அறிவியலில், பொதுவாக அறிவியலிலேயே கூட ஒரு கலைச்சொல்லை விரிவாக்கிக் கொண்டே போகும்போது என்ன ஆகும்? அது விளக்கம் அளிப்பதற்கான சக்தியை இழந்து விடும். அது தான் இங்கும் நடந்துள்ளது.

ஐரோப்பிய உற்பத்திமுறைக்கும் காலனிய ஆட்சிக்கு முந்தைய தெற்காசிய உற்பத்தி முறைக்கும் இடையில் உள்ள தெளிவான வேறுபாடுகள் குறித்து பார்ப்போம்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ்க்கு பிறகு வந்தவர்கள் ஐரோப்பிய உற்பத்தி முறை குறித்தும், ஆசிய உற்பத்தி முறை குறித்தும், இவ்விரண்டு உற்பத்தி முறைக்கிடையுள்ள உள்ள ஒற்றுமைகள் குறித்தும், வேற்றுமைகள் குறித்தும் என்ன கூறியிருக்கிறார்கள் என்று சற்று விரிவாக பரிசீலிப்போம்.

முதலில், முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறை அனைத்தும் இயற்கை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டவையே. முகலாய இந்தியாவில் நாணயப் புழக்கம் இருந்ததை சுட்டிக்காட்டி அது இயற்கை பொருளாதாரம் இல்லை என இர்பான் ஹபீப் வாதிடுகிறார். ஆனால் இயற்கை பொருளாதாரத்தை விளக்குவது அந்த அம்சம் மட்டுமல்ல.

எங்கே உழைப்புப் பிரிவினை சந்தையை அடிப்படையாகக் கொண்டில்லாமல் வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதோ அது தான் இயற்கை பொருளாதாரம். இங்கே உழைப்புப் பிரிவினை சாதியை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்டு, கருத்தியல் அமைப்புகளால் நியாயப்படுத்தப்படுகிறது. சந்தை, உழைப்புப் பிரிவினையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம், ஆனால் அதன் போக்கை மாற்றிவிடவில்லை. ஆனால் இது ஐரோப்பாவுக்கும் பொருந்தும். (அங்கும் உழைப்பு பிரிவினை பிரதானமாக சந்தையை அடிப்படையாக கொண்டதாக இருக்கவில்லை)

இரண்டாவதுநிலத்தில் தனியுடைமை பற்றியது. நிலத்தில் தனியுடைமை இருந்தது என்று வாதிடக்கூடிய பல்வேறு ஆய்வுகளை படிக்க முடிந்தது. ஆனால் அனைத்திலும் எது முக்கியமான பிரச்சனை என்றால் உடைமைக்கும், உபயோகிப்பதற்கான உரிமைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளை புறக்கணிப்பதுதான். உடைமை, சொத்து என்பது ஒரு உயர் நிலையான சட்டபூர்வ, சமூக அங்கீகாரத்தை குறிக்கக் கூடிய ஒன்று.

ஐரோப்பாவில் அரசு ஆணையால் தான் பெறப்பட்ட நிலத்திற்கு அருகிலோ, அல்லது நடுவிலோ ஒரு அரண்மனையில் ஒரு நிலப்பிரபு வசிப்பார். அவர் நிச்சயமாக ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, அவர் ஒரு போர் வீரராக இருக்கலாம், இல்லை சாதாரணமாக வாழ்வை கழிப்பவராகக் கூட இருக்கலாம். ஆகவே உற்பத்தியை ஒழுங்கமைப்பதிலோ, மேற்பார்வையிடுவதிலோ அவருக்கு எந்த பங்கும் இல்லாமல் போகலாம்.
இது முதலாளித்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையின் ஒரு பொது அம்சமே.. அவர் அங்கேயே தான் வாழ்வார். அவர் மட்டுமல்ல, தலைமுறை தலைமுறையாக அங்கேயே அவரது குடும்பமும் வாழும். அவர் நிலத்தை உபயோகிப்பதற்கு மட்டும் உரிமை படைத்தவரல்ல நிலம் அவரது உடமையாகவும் இருக்கிறது என்பதை காட்டுகிறது. மேலும் கத்தோலிக்க தேவாலயங்கள் மூன்றில் ஒரு பங்கு விவசாய நிலத்தை உடமையாகக் கொண்டிருந்தன. மார்க்ஸ் இதனை நிலப்பிரபுத்துவத்தின் மையப்புள்ளி என்று கூறுகிறார்.

இந்தியாவில் முகலாயர் காலத்தில் (காலனி ஆட்சிக்கு உடனடியாக முன் இருந்தது முகலாயர்கள் ஆட்சிக் காலம் என்பதால் அதற்கு முந்தைய காலத்தை நான் ஆய்வுக்கு எடுத்து கொள்ளவில்லை) ஜாகிர்தாரை அதாவது ஒரு பெரிய மான்சப்தாரை (ராணுவ தளபதி) பார்க்கிறோம். அவர் ஒரு போதும் அவர் பொறுப்பில் உள்ள நிலத்தில் வாழ மாட்டார். அவர் எப்போதும் நகரங்களில் தன்னுடைய படையோடு வாழ்ந்தார், உபரியை பெற்றுக் கொணர்ந்து அரசரிடம் ஒப்படைப்பார். ஒப்படைத்த பிறகு தனக்கும், தன் படைக்கும் தேவையான பொருளை கோரி பெற்றுக் கொள்வார்.

அது மட்டுமில்லாமல், மன்னன் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அவரது ராஜ்ஜியத்திற்கு கீழ் உள்ள வேறொரு பகுதியை மேற்பார்வையிட ஜாகிர்தாரை இடம் மாற்றி விடலாம். சொல்லப் போனால் 3 4 வருடத்திற்கு ஒரு முறை இடம் மாற்றவும் செய்தார். இங்கே நாம் ஒரு வேறுபட்ட சித்திரத்தைப் பார்க்கிறோம், ஆனால் இதனை ஒரே சட்டகத்திற்குள் (நிலப்பிரபித்துவம்) அடைத்து விட்டோம். எப்படி? அவரை நிலத்தில் தாங்காத நிலப்பிரபு என்று சொல்லி விட்டோம்.

மூன்றாவதாகஅரசு மற்றும் பொதுப்பணிகள் குறித்தது.. பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் ஆசிய கொடுங்கோன்மை என்ற கருத்தாக்கத்தை மறுக்கிறார்கள். நாம் ஒரு விசயத்தை கணக்கில் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஒரு பெரிய மத்தியப்படுத்தப்பட்ட அரசு என்பது விதிவிலக்காகவே இருந்துள்ளது. அக்பரின் காலத்தில் மிகவும் மத்தியப்படுத்தப்பட்ட அரசு இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றின் பெரும்பகுதியை பார்க்கையில் ஒரு பெரிய மத்தியப்படுத்தப்பட்ட அரசை பார்ப்பது கடினமே.

அரசியல் பொருளாதார அடிப்படையில் நாம் கூறும் ஆசிய கொடுங்கோன்மை என்ற சொல்லில் இன்று பல்வேறு அரசியல் சார்ந்த கருத்துக்கள் சேர்ந்து அதன் அர்த்தத்தையே சிதைத்து விட்டன, ஆகவே நாம் அந்த வார்த்தையை கைவிட்டு விடலாம், ஆனால் அது உணர்த்தும் பொருளை புறக்கணிக்க முடியுமா? முடியாது என்றே நான் கருதுகிறேன்.

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூலில், எந்த வித தனிச்சொத்தும் இல்லாத புராதான பொதுவுடமை சமூகத்தில் இருந்த உழைப்புப் பிரிவினை பற்றி கூறுகையில் அங்கே போர்க் கால தலைவர்கள், அமைதி கால தலைவர்கள் இருந்தார்கள் என்று எங்கெல்ஸ் கூறுகிறார். இந்தப் பொறுப்புகளை தனித்திறமையின் அடிப்படையில் அவர்கள் பெற்றார்கள். பிறகு சில காலங்களுக்குப் பிறகு உற்பத்தி முறையின் வளர்ச்சியோடு இவர்கள் மக்கள் சேவகர்கள் என்ற நிலையில் இருந்து மக்களுக்கு மேலானவர்களாக மாறுகிறார்கள்.

தெற்காசியாவில் ஐரோப்பாவை போல மூன்று நாட்களுக்கு ஒரு முறையெல்லாம் மழை பெய்யாது, இங்கே 80% மழை ஒரே மாதத்திற்குள் கொட்டி தீர்ந்துவிடும். ஆண்டின் மற்ற காலம் முழுவதும் ஒப்பீட்டளவில் வறட்சியே நீடிக்கும். ஆகவே இங்கே ஏதோவொரு அமைப்பு இங்குள்ள இனக்குழுக்களை செயற்கை நீராதாரங்களை உருவாக்கிக் கொள்ள ஒன்றிணைத்திருக்க வேண்டும், அது பண்டைய அரசு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டும்.

மார்க்ஸ் ஆசிய கொடுங்கோன்மை என்பதை முழுமையாக, சரியாக வரையறுத்தார் என்று நான் சொல்லவில்லை ஆனால் மார்க்சிய அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் இங்கே அரசு உருவாக்கத்தை பற்றி ஆய்வு செய்பவர்கள், இந்த பூகோள காரணம் என்ற அம்சத்தை ஒரு அடிப்படையான கருதுகோளாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். இந்த புத்தகத்தில் நான் அரசு உருவாக்கம் குறித்து எதும் பேசவில்லை, ஆனால் அதனை பின்னாட்களில் செய்வேன் என்று கருதுகிறேன்.

நான்காவதுஉபரியின் வடிவம்- காணிக்கை.
சமீர் அமீன் போன்றவர்கள் இதனை காணிக்கை செலுத்தும் உற்பத்தி முறை என்றே வரையறுக்கிறார்கள். இது ஆசிய உற்பத்தி முறைக்கு வேறு பேர், அவ்வளவு தான். சொல்லப்போனால் காலனிகள் பற்றிய விவாதத்தில் லெனின் நான் ஆசியபாணி உற்பத்திமுறை என்ற சொல்லுக்கு பதிலாக தந்தையாதிக்க குடும்ப உற்பத்தி என்றே குறிப்பிடுவேன், ஏனென்றால் ஆசியபாணி உற்பத்திமுறை என்ற வார்த்தை பிரயோகம் காலனியாதிக்கத்திற்கு ஆதரவானதாக போகக்கூடும் என்று அவர் சொல்கிறார்.

ஆக, உபரியின் வடிவம் காணிக்கையாக உள்ளது. அது 50% அரசுக்கும், 10% ஜமீன்தார்க்கும் மீதம் உள்ளவை சாதி அடிப்படையில் மக்களுக்கும் போகும், சந்தை அடிப்படையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சதவீதங்களை இர்ஃபான் ஹபீப் கொடுக்கும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் நான் கூறுகிறேன். இதுதான் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷின் நிலைமை.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில்,

1) இங்கே இருந்தது இயற்கை பொருளாதாரம், உழைப்புப் பிரிவினை சந்தை, பரிவர்த்தனை அடிப்படையில் அமையவில்லை.

2) உடமை வடிவம் – சொத்துடைமையின் மிகவும் வேறுபட்ட வடிவங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவுகின்றன.

3) அரசு மற்றும் பொதுப்பணிகள் – இங்கேயும் ஒருவேறுபாடு இருக்கிறது. இனக்குழுக்களை அமைப்பாக பயன்படுத்துவதற்கான தேவை.

4) உபரியின் வடிவம். ஐரோப்பாவில் பண்ணையடிமையின் சொத்தான நிலத்தில் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் பண்ணையடிமைக்கு சொந்தம், இதனை மார்க்ஸ் உழைக்கும் வர்க்கத்தின் மறுஉற்பத்திக்குத் தேவையான அவசிய உழைப்பு என்று கூறுகிறார். உபரி உழைப்பு முழுவதும் நிலப்பிரபுவின் நிலத்தில் கட்டாய உழைப்புச் சேவையாக பெறப்படுகிறது. பல வரலாற்று ஆசிரியர்கள் இந்தியாவில் இலவச உழைப்பாக பெறப்பட்டதோ அதனை நாம் பண்ணயடிமை உழைப்போடு ஒப்பிடலாம் என்கிறார்கள். ஆனால் மீண்டும் நாம் அந்த வார்த்தைக்கான சட்டகத்தை அகலப்படுத்தும் போக்கையே கடைப்பிடிக்கிறோம்.

மார்க்சும் ஏங்கெல்சும் கடிதங்களிலும், அவர்களின் வேறு சில எழுத்துக்களிலும் ஒரு விசயத்தை சொல்கிறார்கள். ஒரு உற்பத்தி முறையை, குறிப்பான உற்பத்தி உறவுகளை கொண்டே அடையாளப் படுத்துகிறார்கள். அதாவது எங்கே அடிமை முறை நிலவியதோ அதை மட்டும் தான் அவர்கள் பண்டைய உற்பத்தி முறை என்று அழைத்தார்கள், எங்கெல்லாம் பண்ணையடிமை முறையோ, கூலி உழைப்போ இல்லையோ அதனை அவர்கள் முறையே நிலப்பிரபுத்துவம் என்றோ, முதலாளித்துவம் என்றோ சொல்லவில்லை.

ஜெர்மன் சித்தாந்தம் எனும் நூலில் உழைப்பு பிரிவினையும், உடைமை வடிவமும் சமுகத்தின் தன்மையை இரு வேறு வகையில் வெளிப்படுத்தும் ஒரே தன்மையுள்ள விவரிப்புகள் என்கிறார். ஒன்று உழைப்பின் செயலை வைத்தும், மற்றொன்று உழைப்பின் விளைவைக் கொண்டும் ஒரே புலப்பாட்டை விளக்குகிறது. வேறு வார்த்தைகளில் உடைமை வடிவம் என்று சொல்லலாம். இதனை எல்லாம் பார்க்கையில் உற்பத்தி முறைக்கு உழைப்புப் பிரிவினைக்கும், உடைமை வடிவத்துக்கும் இடையில் அவர்கள் காட்டும் ஒரு வலுவான பந்தத்தை நம்மால் உணர முடிகின்றது.

அடிமைமுறை அமுலில் இருந்த போதும் அமெரிக்காவின் தென் பகுதியை அவர்கள் முதலாளித்துவ உற்பத்திமுறை என்று கருதுகிறார்கள், அமெரிக்காவின் தென்பகுதி ஏற்கனவே சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்பட்டிருந்ததால் தான். அங்கேயும் மிகத் தெளிவாக, அப்பகுதி முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் கட்டத்தில் இருப்பதாகவே சொல்கிறார்கள். ஒரு வேளை சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் அவர்கள் அப்படி சொல்லியிருக்க மாட்டார்கள்.
ஆகவே நான் என்ன சொல்கிறேன் என்றால் தெற்காசியாவில் இருந்த உற்பத்தி முறையை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை என்று அழைப்பது பிரச்னைக்குரியதே.

சீனாவை ஆசியபாணி உற்பத்தி முறை என்று சொல்ல முடியுமா, இல்லை துருக்கியை அப்படி சொல்ல முடியுமா என்றால் அதனை நாம் ஆய்வுக்கு உட்படுத்தத் தான் வேண்டும், மார்க்ஸ் ஒரு வேளை அதனை தவறாக கூட சொல்லியிருக்கலாம். ஆனால் தெற்காசியா பற்றிய அவரது வரையறை மிகப் பொருத்தமானதே.

காலனியாதிக்கத்தின் கீழ் முதலாளித்துவத்திற்கு மாறி செல்லும் பாதை

அந்நியர்களின் ஆதிக்கத்தின் மூலமாக தான் இங்கே முதலாளித்துவத்திற்கு மாறி செல்வது நடந்தேறியது. இது குறித்தும் பல்வேறு வாதங்கள் வைக்கப்படுகிறது, அதாவது முதலாளித்துவத்திற்கு முந்தைய பாணியிலான வர்த்தகமும், வணிகமும் வங்காளத்திலும், பம்பாயிலும் இருந்தது என்றும், அது முதலாளித்துவமாக வளர்ச்சி பெற்றிருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனால் ஒரு புதிய உற்பத்திமுறையின் வளர்ச்சி என்பது வர்க்கப் போராட்டத்தால் நடந்தேறக்கூடியது. வர்க்கப் போராட்டம் என்பதும் முன் நோக்கிய நேர்கோட்டு பாதையில் பயணிப்பது என்றில்லை. வரலாறு முழுக்க நாம் அதற்கான ஆதாரங்களை பார்க்கிறோம்.

ஐரோப்பாவில் 100 ஆண்டுகளுக்கு பல்வேறு சீர்திருத்தம் மேற்கொள்ளப்படுபதை நாம் பார்க்கிறோம், அடுத்த 100 ஆண்டுகளில் அங்கே பெற்ற அனைத்து சீர்திருத்தங்களையும் இழப்பதையும் பார்க்கிறோம். சோவியத் யூனியன் வளர்ச்சியையும் பார்க்கிறோம், அதன் வீழ்ச்சியையும் பார்க்கிறோம். இவையெல்லாம் உணர்த்துவது என்ன? வரலாறு மேல் நோக்கிய நேர்கோட்டு பாதையை மேற்கொள்ளவில்லை என்பதைத் தான்.
சொல்லப் போனால் வரலாறு பல்வேறு சிக்கலான பாதைகளை மேற்கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். ஆகவே பிரிட்டிஷ் இங்கே வரவில்லை என்றால் முதலாளித்துவம் வளர்ந்திருக்கும் என்று கூறுவது ஒரு ஊகம் தான். அது நிர்ணயமான ஒன்றல்ல.

நிலத்தில் தனியுடைமையை புகுத்துவதில் தொடங்கி பிரிட்டிஷ்காரர்கள்தான் இங்கே முதலாளித்துவ உற்பத்திமுறையை பரந்த அளவில் புகுத்துகிறார்கள். நிலத்தில் தனியுடைமையை கொண்டு வருவதும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வகையாக தான் புகுத்துகிறார்கள்.

இவையனைத்தும் அமைதியான முறையில் நடைபெறவில்லை. பல்வேறு இடங்களில் உள்ளூர் ஆளும் வர்க்கத்தின் எதிர்ப்புகளும், கொந்தளிப்புகளும் இருந்தன, ஆனால் அவையனைத்தும் சரிக்கட்டப்பட்டன. நிலத்தில் தனியுடைமையும், முதலாளித்துவ உற்பத்தி முறையும் புகுத்தப்பட்ட உடனேயே அதற்கே உரித்தான பண வரி முறை, பண வருவாய், நீதித்துறை என பல்வேறு நிறுவனங்கள் நிலைநாட்டப்படுகின்றன. இங்கே நாம் குறிப்பாக பார்க்க வேண்டியது, இவையனைத்தும் காலனிய அரசால் மேலிருந்து கீழாக புகுத்தப்படுகிறது என்பதை தான்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ள பொருளின் மிகவும் சிக்கலான தன்மை, தன்னை இங்கே தான் வெளிக்காட்டிக்கொள்கிறது. நாம் இங்கே நிலத்தில் தனியுடமை அமுலில் இருப்பதை பார்க்கிறோம், சந்தைக்கான உற்பத்தி நடப்பதையும் பார்க்கிறோம், பண வரி, பண வருவாய் என்று அனைத்தையும் பார்க்கிறோம். ஆனாலும் கூலி உழைப்பு முறை வெகு காலத்திற்கு அமுலாகவே இல்லை. இன்றும் கூட பாகிஸ்தானில் விவசாய உற்பத்தியில் கூலி உழைப்பென்பது விதிவிலக்காக உள்ளதே தவிர விதியாக அல்ல.

இங்கே என்ன உற்பத்தி முறைதான் உள்ளது? சில மார்க்சிய எழுத்தாளர்கள் விவசாய உற்பத்தியில் 50% நிலப்பிரபுத்துவ உற்பத்தியும், 40% முதலாளித்துவமும் உள்ளது என்று சொல்வது போல் இங்கே நாம் சொல்ல முடியாது. ஏனென்றால் இங்கே மொத்த பொருளாதாரத்தையும் இயக்கக் கூடிய முதலாளித்துவ அமைப்பே இல்லை.

சிலர் காலனி நாடுகளில் உள்ள உற்பத்தி முறையை ஒரு பிரத்யேகமான உற்பத்தி முறை என்றே வரையறுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள், ஆனால் அப்படி சொல்லவேண்டும் என்றால் பிரத்யேகமான உற்பத்தி உறவுகளை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும், ஆனால் அப்படியொரு நிலை இங்கில்லை என்பது தெளிவு. இதனை பிரத்யேகமான உற்பத்திமுறை என்று நம்மால் சொல்ல முடியாது, ஆனால், முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் பிரத்யேகமான பாதை என்று நான் சொல்கிறேன்.
லெனின் மேலே கூறிய தன்னுடைய நூலில் முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்லும் இரண்டு பாதைகளை பற்றி கூறுகிறார். ஒன்று ஜனநாயக பாதை, அதாவது முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ சமூகத்தில் முளைத்து, வளர்ந்து மக்கள் புரட்சியின் மூலம் நிலப்பிரபுத்துவத்தை தூக்கி எறிந்து நிலைபெறுவது (உதாரணம்-பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா).

இன்னொன்று ஜங்கர் பாதையில் முதலாளித்துவ முறைக்கு, அதாவது மேலிருந்து கீழ் புகுத்தப்படும் முதலாளித்துவ உற்பத்தி முறை. இதனை சுட்டிக் காட்டி விட்டதோடு நிற்காமல் முதலாளித்துவத்திற்கு மாறிச் செல்வதற்கு இது போல 1000 வேறு பாதைகள் இருக்கலாம் என்கிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால் இவை இரண்டும் இல்லாமல் மிகப்பெரிய மூன்றாவது பாதை ஒன்றிருக்கிறது அது தான் காலனியாதிக்கத்தின் கீழ் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாறிச் செல்வது.

தெற்காசியாவில் முதலாளித்துவ உற்பத்திமுறை ஆசியபாணி உற்பத்திமுறையின் மேல் அப்படியே பொருத்தப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த வினோதமான புலப்பாடுகள்.

இங்கே நமக்கும், ஜங்கர்பாணி முறைக்கும் சில பொதுத் தன்மைகளும், குறிப்பான தன்மைகளும் இருக்கின்றன. இரண்டிலும் முதலாளித்துவ உற்பத்தி மேலிருந்து கீழ் தான் நிறுவப்பட்டிருக்கிறது, ஆனால் இங்கே குறிப்பான தன்மை இந்த மாற்றங்கள் அனைத்தும் அந்நிய படையெடுப்பின் மூலம் நிகழ்கின்றன. ஆகவே இங்கே அரசு உருவாக்கமும், அரசு கட்டமைப்பும் காலனியாதிக்கவாதிகளுக்காகவும், மிகப்பெரிய அளவில் உபரியை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற வகையில் கட்டியமைக்கப்பட்டது.

இப்படியொரு சித்திரத்தை மனதில் வைத்து கொண்டு நான் அடுத்த இரண்டு தலைப்புகளில் தற்கால பாகிஸ்தானின் வர்க்கக் கட்டமைப்பை ஆய்வு செய்துள்ளேன்.

பாகிஸ்தானின் பிரத்தியேகமான வர்க்கக் கட்டமைப்பும், அதன் தன்மைகளும்.

இந்த அத்தியாயங்கள் குறிப்பாக பாகிஸ்தான் பற்றியவை. இங்கே வர்க்கங்களின் வகைகளும், அவற்றின் தன்மைகளும் பரிசீலிக்கப்படுகிறது. இதற்கு நான் பயன்படுத்தியுள்ள பல்வேறு தரவுகள் அரசின் தரவுகளை அடிப்படையாக கொண்டது. ஆனால் இந்தத் தகவல்கள் மோசமான தகவல் சேகரிப்பு முறை, பக்கச்சார்பு என பல்வேறு குறைகளை உள்ளடக்கியவை. ஆனால் நான் எதிர்பார்க்கும் அளவிலான தரவுகள் அரசிடம்தான் கிடைக்கிறது.

இந்தத் தரவுகளில் நான் கண்டுபிடித்த மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நகரங்களிலும் கிராமப் பகுதியிலும் கூலி உழைப்பு முறை வளர்ச்சி பெறாமல் இருப்பது தான். குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினரும், சிறு உடைமையாளர்களும் தான் பாகிஸ்தானின் நகரங்களை ஆட்கொண்டுள்ளனர். ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் இல்லாமை மிகத்தெளிவாகப் புலப்படுகிறது.

கிராமப்புறங்களில் குத்தகை விவசாயம் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கே நான் குத்தகை விவசாயம் என்பதையும், குட்டி முதலாளித்துவ உற்பத்தி என்பதையும் நவீன அர்த்தத்தில் சொல்லவில்லை. இவை சாதி முறையுடன் பின்னிப்பிணைந்துள்ளன. தொழிலாளி தன் முதலாளியுடன் கூலி உழைப்பாளி என்ற உறவையும் தாண்டி ஒரு வகையான ரத்த உறவினர் என்ற உறவையும் பெற்றிருக்கிறார்.

ரோம், அரேபியா போன்றவற்றை நாம் பார்க்கையில் ஒரு வணிக வர்க்கத்தை நம்மால் பார்க்க முடியும், ஒரு வகையில் அதனை நாம் முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு முந்தைய காலத்திய குட்டி முதலாளித்துவ வர்க்கம் என்றே சொல்லலாம், அதே போன்றதொரு முதலாளித்துவத்திற்கு முந்தைய ஒரு உறவுமுறை முதலாளித்துவத்திற்கு பின்பும் கூட சிறு உற்பத்தியில் அது தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஆகவே இவையனைத்தும் எதை உணர்த்துகிறது? முதலாளித்துவ உற்பத்தி முறையோடு சிறிதும் தொடர்புபடுத்தி பார்க்க முடியாத சாதி, கலை, கலாச்சாரம், அரசியல் எல்லாம் இன்றும் நிலவுவது என்பது அரசியல் பொருளாதார அடித்தளம் மாறிய பின்பும் ஏதோ அது தனியாக இயங்கக்கூடிய அளவு சுயேச்சை தன்மையை பெற்றுக் கொண்டுள்ளது என்பதால் அல்ல, மாறாக அது இன்னும் அரசியல் பொருளாதாரத்தில் வேரூன்றியுள்ளதால் தான். வர்க்கக் கட்டமைப்பில் அது இன்னும் வேரூன்றி இருப்பதால் தான்.

மிக எளிமையாக சொல்வதென்றால், இந்த ஆசிய மேல் கட்டமைப்பு என்பது இன்னும் அரசியல் பொருளாதாரத்தில் வேரூன்றி உள்ளது. மேல்கட்டுமானத்தில் அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும் ஆனால் அது இன்னும் அடித்தளத்தில் வேரூன்றி உள்ளது என்பதை உணர்ந்து போராட வேண்டும்.

ஒரு மார்க்சியவாதியாக நாம் ஒவ்வொருவரும் சமூகத்தை மேற்கட்டுமான அளவிலும், அரசியல் பொருளாதார அளவிலும் புரிந்து கொள்ளவேண்டும், அது மட்டுமல்லாமல் இந்த மேற்கட்டுமான புலப்பாடுகள் அரசியல் பொருளாதாரத்தில் வேரூன்றி உள்ளன என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். அப்படி புரிந்துக் கொள்வது தான் சமூகத்தை புரட்சிகரமாக்குவதற்கும் அதனூடே ஒரு சோசலிச சமூகத்தை கட்டியமைக்கவும் முடியும்.

அதற்கு என்னுடைய இந்த ஆய்வு உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி.

-தைமூர் ரஹ்மான் . *** மொழிபெயர்த்தவர்-கார்மேகம்

முதற்பதிவு: YCL

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s