
அண்மையில் “பெண் ஏன் அடிமையானாள்?” எனும் பெரியாரின் நூலை ஒரு பள்ளி மாணவிகளுக்கு விளம்ப முற்படுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் அதை தடுத்தன என்றொரு செய்தியை பார்த்திருப்போம். ஆர்.எஸ்.எஸ் போன்ற படு பிற்போக்கான அதிகாரத்தை கையில் கொண்டிருக்கும் அமைப்புகள் அப்படித்தான் செயல்படும் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. ஆனால் பெரியாரிய அமைப்புகள் இதில் செய்த எதிர்வினைகள் ஏன் மொன்னையாக இருக்கின்றன?
அண்மையில் கோவை பொன்தாரணியின் ‘தூண்டப்பட்ட தற்கொலை’ நிகழ்வில் கிட்டத்தட்ட எல்லோருமே கொதித்துப் போனோம். பெண்களை சமூகம் அணுகும் விதம் குறித்து பலரும் பல விதங்களில் எழுதி மாய்ந்தோம். இதில் பெரியாரிய புரட்சிகர இடதுசாரிகளின் பங்கு அதிகம்.
ஆனால், அந்த பெரியாரிய, புரட்சிகர இடதுசாரி இயங்களில் சில அமைப்புகள், பெண்களை எவ்வாறு அணுகுகின்றன எனும் கேள்வி தற்போது முதன்மையானதாய் எழுந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ‘லூலு’ என்றொரு குழு சமூக ஊடகங்களில் பேசு பொருளாய் இருந்தது. அதாவது கட்டற்ற பாலியல் வேட்கை கொண்டவர்களின் குழுவாக அது அறியப்பட்டது. ஏதோ சிலரின் தனிப்பட்ட, விருப்பத்துடனான, சமூக, தத்துவப் புரிதலற்ற வெதும்பைகளின் குழு என்பதான அறிதல் தான் கிடைத்தது. ஆனால் அதன் கொடுங்கரங்கள், அந்தக் குழுவுக்கு வெளியிலும் பல பெண்களின் வாழ்வில் சீரழிவையும், அமைதியின்மையும் திணித்திருக்கின்றன என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது.
இந்த செய்தி வெளிவந்த போது, வெகு மக்களின் பெரிதான கவனம் எதையும் ஈர்க்கவில்லை. அல்லது ஈர்த்துவிடாமல் செய்து மறைக்கப்பட்டது. ஆனால் முற்போக்காளர்கள், பெரியாரிய, புரட்சிகர இடதுசாரிகள் ஏன் இதை பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்து முடக்குவதற்கோ, அம்பலப்படுத்துவதற்கோ, அல்லது சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்கோ செய்யாமல் இருந்தன எனும் கேள்வி இன்றியமையாதது. ஏனென்றால் அந்தக் குழுவில் பல பெரியாரிய அமைப்பினரும், புரட்சிகர இடதுசாரியினரும் இருந்திருப்பார்களோ எனும் ஐயம் தற்போது மெல்ல மெல்ல உண்மையாகிக் கொண்டு வருகிறது.
ஒருபக்கம் ‘அப்படி’ இருந்து கொண்டே மறுபக்கம் பெண் ஏன் அடிமையானாள்? என்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்க முயல்வதும், பாலியல் அத்துமீறல் நிகழ்வுகளில் பொங்குவதும் ஒருசேர நடந்து கொண்டிருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது?
மட்டுமல்லாமல், பெருங்கடலில் மறைந்திருக்கும் பெரும் பனிப்பாறையின் முனை தான் இந்த விதயத்தில் வெளிப்பட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. இதன் ஒரு நுனியாக தற்போதைய விவாதங்கள் அமைகின்றன.
இந்த விகாரங்களை தொடக்கத்திலிருந்தே விடாமல் பேசிக் கொண்டிருப்பவர்களில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் தோழர் தமிழச்சி முதன்மையானவர். இந்த தமிழச்சி குறித்து, சாரதா என்பவரிடம், தோழர் தியாகுவின் இயக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிலம்புச் செல்வன் என்பவர் தொலைபேசியில் பேசும் போது ‘முதன்முறை பேசும் போதே தமிழச்சி என்னிடம் நாம் இருவரும் சைட் அடித்துக் கொள்ளலாமா?’ என்று கேட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அதாவது அப்படி பேசிய ஒருவருடன் நீங்கள் தொடர்ந்து நட்பை பேண முயலாதீர்கள். அவரோடு நட்புடன் இருந்தால் நீங்கள் தனிமைப்படுத்தப் படுவீர்கள் என்று மிரட்டி இருக்கிறார். இது தான் தற்போது விவாதமாகி இருக்கிறது.
அதேநேரம், சாரதா அவர்கள், தோழர் தமிழச்சி, சிலம்புச் செல்வன் குறிப்பிடும் அந்த முதன்முறை பேச்சின் போது உடனிருந்த இன்னொரு தோழர் ஒருவர் ஆகியோருடன் ஒரு குழு அழைப்பை ஏற்படுத்தி சிலம்புச் செல்வனையும் இணையுமாறு அழைத்திருக்கிறார். ஆனால் சிலம்புச் செல்வன் அந்த குழு அழைப்பில் இணைய மறுத்திருக்கிறார், மறுத்து வருகிறார். இதற்கு மாறாக சிலம்புச் செல்வன் தன்னுடைய சமூக வலைதள கணக்குகளில் தன்னை லூலு குழுவினருடன் இணைத்து அசிங்கப்படுத்துகிறார்கள் என்று முறைப்பாடு வைக்கிறார். இது குறித்து விளக்கம் கேட்கும் யாரிடமும் ‘அதை பேச விரும்பவில்லை’ என்று கூறி வருகிறார்.
இந்த முரண்பாடான செயல்பாடுகள் உணர்த்துவது என்ன?
சாரதா அவர்களை ஏன் மிரட்டவும், தாக்கவும் (முன்னதாக ஒரு தாக்குதல் முயற்சியும் நடந்திருக்கிறது. அது யாரால் நடத்தப்பட்டது என்பது தெரியவில்லை) முற்பட வேண்டும்? நடந்தது என்ன என்று சிலம்புச் செல்வன் ஏன் வெளிப்படையாக பேச மறுக்கிறார்?
இதில் சட்ட நடவடிக்கை பெரிய அளவில் உதவும் என்று தோன்றவில்லை. ஏனென்றால் கடலடியில் மறைந்து கிடக்கும் அந்த பனிப்பாறையில் அதிகாரம் மிக்கவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியவில்லை.
சிலம்புச் செல்வன் இது குறித்து பொது வெளியில் பேசியாக வேண்டும். சாரதா அவர்களை ஏன் மிரட்ட முற்பட்டார்? தோழர் தமிழச்சி குறித்து ஏன் அவதூறு பரப்பினார்? ஆகியவை குறித்து பேசியாக வேண்டும். அவர் பேசுவாரா தெரியாது.
தற்போது தோழர் தியாகுவிடம் இந்த விதயத்தை கொண்டு செல்ல விருப்பதாக சாரதா அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுவும் எந்த அளவுக்கு பலனளிக்கும் என்று தெரியவில்லை. தொடர்புடைய பெண்கள் பேசுவதற்கு முன்வர வேண்டும். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அவர்களின் அடையாளங்களை மறைத்து பாதிக்கப்பட்ட விவரங்களை தொகுக்க ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
முன்னதாக தோழர் தமிழச்சி அவர்கள் தங்களிடமிருக்கும் விவரங்களை தொகுத்து பொதுவெளியில் முன்வைக்க வேண்டும். அதற்காக, இந்த விகாரத்தை வெளிக் கொண்டுவர தொடக்கத்திலிருந்து முயற்சிக்கும் தோழர் தமிழச்சி அவர்களுக்கும், தொடர்ந்து முயற்சிக்கும் சாரதா அவர்களுக்கும் பெரியாரிய, புரட்சிகர இடதுசாரி, முற்போக்கு இயக்கங்களில் செயல்படுவோர்கள் தங்கள் ஏற்பையும், துணையையும் அவர்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். முன்வைக்கிறேன்.