இந்தியாவில் கம்யூனிசம் குறித்தோ, புரட்சி குறித்தோ பேச முற்பட்டால் தவிர்க்கவே முடியாமல் முன் வந்து நிற்கும் சிக்கல் தேசிய இனச் சிக்கல் தான். இந்தியாவில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிசக் குழுக்களில் பாதிக்கும் மேற்பட்ட குழுக்களின் பிளவுக்கு தேசிய இனச் சிக்கல் ஒரு காரணியாக இருந்திருக்கிறது.
தவிரவும், தமிழ்நாட்டைப் பொருத்தவரை, பார்ப்பனியம் ஒன்றிய அதிகாரத்தில் அழுத்தமாக காலூன்றி நிற்கும் – இன்னும் குறிப்பாக சொல்லப் போனால் அரசு உறுப்புகளிலும், அரசாங்க உறுப்புகளிலும் மிக அழுத்தமாக காலூன்றி நிற்கும் – இந்த காலகட்டத்தில் தமிழ் நாடு முன்னிலும் அதிகம் ஒடுக்கப்படும், ஒதுக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. மறுபக்கம் கலாச்சாரம் பண்பாடு அடிப்படையில் பார்ப்பனியம் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கி நகரும் பாட்டையின் எதிர்வினையாக தேசிய்க் கலாச்சாரத்தை உயர்த்திப் பிடிக்கும் போக்கும் விளைவாக ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாடு போன்று தங்களுக்கு அதிகார அடிப்படை இல்லாத மாநிலங்களில் பார்ப்பனியம் இந்தப் போக்கை ஓர் எல்லை வரை ஊக்குவிக்கவும் செய்கிறது.
இந்த சூழலில் தேசிய இனப் பிரச்சனை குறித்த மார்க்சிய லெனினிய நிலைப்பாடு என்ன? என்பதை தெரிந்து கொள்வதும், மீள்வாசிப்புக்கு உட்படுத்துவதும் மிகவும் இன்றியமையாததாகிறது. எனவே, தோழர் லெனினின் “தேசிய இனப் பிரச்சனைகளும் பாட்டாளிவர்க்க சர்வதேசியவாதமும்” எனும் நூலை தோழர்கள், நண்பர்கள் அணைவருக்கும் வாசிப்புக்கும், மீள்வாசிப்புக்குமாக தருகிறேன்.
படியுங்கள் .. புரிந்து கொள்ளுங்கள் .. பரப்புங்கள்