கடந்த நவம்பர் மாதம் முழுவதும் சென்னையில் கடும் மழை கொட்டியது. குடியிருப்புகளில் பல நாட்களுக்கு மழைநீர் தேங்கி நின்று மக்களை முடக்கியது. சாலைகள் நாசமாகியது தொடங்கி, நீர்வழிப் பாதைகள், வடிகால் பாதைகள் முறையாக செப்பனிடப்படாதது வரை சென்னை தத்தளித்தது. தொடர்ச்சியாக இருந்த அரசுகள் இதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுடன் உட்கட்டுமானப் பணிகள் என்ற பெயரில் நடந்த ஊழலும் வெளிச்சத்துக்கு வந்தது. இருந்த போதிலும் தற்போது இருக்கும் திமுக அரசு இந்தப் பேரிடரின் போது எவ்வாறு செயல்பட்டது என்ற கேள்வியை எழுப்பினால், குறை சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் பேரிடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் .. ?
அவை சீர் செய்யப்பட வேண்டும் என்பதிலோ, எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகளால் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை. இதற்கான நிதியை விடுவிக்க வேண்டி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு மூன்று நிதி அறிக்கைகளை அனுப்பி இருக்கிறது. இன்னும் கூடுதலாக கொரோனா பெருந்தொற்றினால் நிதி நிலைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழை வெள்ள பாதிப்புகள் கடும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் மாநில பேரிடர் நிதியை முழுமையாக பயன்படுத்தி விட்டோம் என்றும், எனவே, உடனடியாக ஒன்றிய பேரிடர் நிதியை ஒதுக்கீடு செய்து விடுவிக்க வேண்டும் என்று கடிதமும் எழுதியிருக்கிறார் முதல்வர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒன்றிய பேரிடர் நிதி விடுவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் தமிழ்நாடு இல்லை. ஒன்றிய அரசின் குழு ஒன்று தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பத்து நாட்களில் ஒன்றிய அரசிடம் அறிக்கை கொடுப்போம் என்று சொல்லி விட்டுச் சென்றார்கள். அறிக்கை கொடுத்தார்களா? அந்த அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதா, மறுக்கப்பட்டதா? அந்த அறிக்கையில் என்ன இருந்தது? எதுவும் தெரியாது. ஆனால் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்து விடுவிப்பதில் ஏதேனும் அளவுகோல் இருக்கிறதா? எந்த அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நிதி மறுக்கப்பட்டிருக்கிறது?
ஜிஎஸ்டி என்ற பெயரில் மாநிலங்களின் நிதியை ஒன்றிய அரசு சூரையாடி விட்டது. ஜிஎஸ்டியில் மாநிலங்களுக்கு திருப்பி அளிக்க வேண்டிய தொகை குறிப்பாக தமிழ்நாட்டுக்கு திருப்பியளிக்கப்பட வேண்டிய தொகை 9000 கோடிக்கு மேல் நிலுவையில் இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த விதயத்தில் ஒன்றிய நிதியமைச்சர் தேவைப்பட்டால் சேமநல வங்கியில் (ரிசர்வ் வங்கி) கடன் பெற்றுக் கொள்ளுங்கள் என்று திமிராக கூறியது நினைவிருக்கலாம். அதே போல் அண்மையில் இன்னொரு விமானநிலையம் குறித்த கோரிக்கையின் போது, தமிழ்நாடு ஒன்றிய அரசுக்கு அதிக நிதி பங்களிப்பு செய்கிறது என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று. அதைக் காட்டி கோரிக்கை வைக்காதீர்கள் என்றார் அந்த நிதியமைச்சர். அதிக நிதி பங்களிப்பு செய்யும் மாநிலத்துக்கு பேரிடர் நிவாரண நிதி ஒதுக்கவில்லை என்பது குறித்து பெருமைப்பட வேண்டுமா? சிறுமைப்பட வேண்டுமா? என்பதை அந்த நிதியமைச்சரிடம் யார் கேட்பது?
எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக வுக்கு இந்த நிதி ஒதுக்கப்படாத விதயத்தில் கருத்து ஏதும் இருக்கிறதா? பாஜகவின் தமிழ் மாநில தலைமை இது குறித்து என்ன கருத்து கொண்டுள்ளது? ஊடகங்கள் இது குறித்து கேள்வி எதுவும் எழுப்பியிருக்கின்றனவா?
கடந்த மே மாதம் வீசிய புயலின் போது எந்த ஆய்வறிக்கையும் இல்லாமலேயே உடனடியாக குஜராத்துக்கு ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது அதன் கூடுதலாக 1133 கோடியை ஒதுக்கியிருக்கிறார்கள். ஒன்றிய பாஜக அரசு எவ்வித ஒளிவுமறைவும் இன்றி தன்னுடைய அரசியல் அதிகார நலனிலிருந்து மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவான அதிகார அமைப்புகள் அனைத்தையும் அது தன்னுடைய நலனின் கீழ் இருத்தி வைக்கும் மாற்றங்களை வேக வேகமாக செய்து வருகிறது. ஒருபக்கம் முற்றுமுழுதாக இந்திய கார்ப்பரேட் பெருமுதலாளிகளின் நலனுக்காக மட்டுமே செயல்படுவது. மறுபக்கம், அதற்கு மேல் பூச்சாக மதவாத பிளவை மக்களுக்குள் ஏற்படுத்தி குளிர் காய்வது. ஒவ்வொரு குடிமகனும் இதை கேள்விக்கு உட்படுத்தியே ஆக வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள்.