அனீஸ் கைதை முன்னிட்டு .. ..

கடந்த திசம்பர் 29 ம் தேதி கோவையில், இஸ்லாமியராகப் பிறந்த நாத்திகரான அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். இஸ்லாம் மதத்தை விமர்சித்து சமூக வலை தளங்களில் மீம்ஸ் போட்டது தொடர்பாக இவர்  கைது செய்யப்பட்டுள்ளார். இன்று வரை பிணை மறுக்கப்பட்டு சிறையில் உள்ளார். கருத்துரிமைக்கு எதிரான கைதாக இதை பலரும் கண்டித்து வருகின்றனர். குறிப்பாக, முன்னாள் முஸ்லீம்கள் என்ற பெயரில் இயங்குவோர்கள் இந்த கைதுக்கு எதிராக தொடர்ச்சியாக இயங்கி வருகிறார்கள்.

கருத்துரிமை என்பது இந்தியாவைப் பொருத்தவரை ஏட்டுச் சுரைக்காய் தான். பேராசிரியர் சாய்பாபா போன்றோர் கைது செய்ய்ப்பட்டு பிணை கிடைக்காமல் சிறையில் வாடுவது தொடங்கி கல்புர்கி, பன்சாரே போன்றோர் கொல்லப்பட்டது வரை அரசு ரீதியாகவே கருத்துரிமைக்கு என்ன மதிப்பிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டும் சான்றுகளாக இருக்கின்றன. இன்னும் நுணுகிப் பார்த்தால் அரசுக்கும், பார்ப்பனிய மதத்துக்கும் எதிராக யார் என்ன சொன்னாலும் அவர்களின் கருத்துரிமை இரக்கமின்றி நசுக்கப்படும். அரசுக்கு ஆதரவாக, பிற மதங்களுக்கு எதிராக பார்ப்பனிய மதம் சார்ந்து யார் என்ன அவதூறுகளைச் செய்தாலும் அவர்கள் கருத்துரிமை என்ற பெயரில் பாதுகாக்கப்படுவார்கள்.  இது தான் இந்தியாவைப் பொருத்தவரை கருத்துரிமையின் இலக்கணம்.

இந்த இலக்கணத்துக்கு மாறாக அனீஸ் கைது செய்யப்பட்டிருக்கிறார். கைதுக்கு காரணமாக சுட்டப்படும் மீம்ஸ் இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனமாக வெளியிடப்பட்டிருந்தது. அண்மையில் அன்னபூரணி என்பவர், தானே ஆதிசக்தி என கூறிக் கொண்டு, கடவுளாக(!) இருந்து பக்தர்களுக்கு(!) அருள் பாலித்தார். இந்த திடீர் சாமியாரிணியை அல்லது திடீர் கடவுளை பலரும் எள்ளி நகையாடினர். இதில் இஸ்லாமியர்களும் உண்டு. சந்தடி சாக்கில் இதையே இஸ்லாமியர்கள் மதப் பரப்புரையாகவும் செய்தார்கள். இதற்கு எதிர்வினையாகத் தான் அனீஸின் அந்த மீம்ஸ் அமைந்திருந்தது. அதாவது, இன்று எப்படி அன்னபூரணி தன்னை கடவுள் என்று கூறிக் கொண்டிருக்கிறாரோ அது போலவே 1400 ஆண்டுகளுக்கு முன் முகம்மதுவும் கூறிக் கொண்டிருந்தார் என்பது அனீஸினுடைய மீம்ஸின் பொருள். இதற்காக இரு மதங்களுக்கிடையில் மத மோதலைத் தூண்டி விட்டர் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறது காவல் துறையும், நீதித்துறையும்.

இதில் முதன்மையாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், அனீஸ் மீது யாரும் குற்றம்சாட்டி முறையீடு செய்யவே இல்லை. காவல்துறை தானாகவே முன்வந்து வழக்குப் பதிவு செய்திருக்கிறது. காவல்துறையே முன்வந்து வழக்கு பதிவு செய்து கைது செய்யும் அளவுக்கு அந்த மீம்ஸில் ஒன்றும் இல்லை. என்றால் ஏன் கைது? இது தான் புதிராக இருக்கிறது. இந்தக் கைதின் பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்ன காரணம்? என்பது தெரியவில்லை. ஆனாலும் இஸ்லாமிய மதவாதிகள் இதன் பின்னிருக்கலாம் என்பது யூகம். என்றாலும், இஸ்லாமிய மதவாதிகளின் கோரிக்கையை ஏற்று, முறையீடு பெறாமலேயே காவல் துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதில் ஏதோ இடறுகிறது. அதிலும் குறிப்பாக, கோவை காவல்துறை பார்ப்பனியமயம் ஆகியிருக்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. எனவே, இந்த ஐயத்தை ஒதுக்குவதற்கில்லை.

பொதுவாக காவல் துறை சட்டத்தை மதிக்காத துறையாக இருக்கிறது, நீதித்துறையையும் சேர்த்து. வழக்கு பதிவு செய்தாலே கைது செய்தே ஆக வேண்டும் என்பது சட்டத்தின் நிலை அல்ல. கைது தவிர்க்க முடியாதது எனும் சட்ட நிலையை தவிர்த்து ஏனைய குற்றச்சாட்டுகளில் கைது கட்டாயம் எனும் நிலை இல்லை. இதில் காவல் துறை நினைத்ததை செய்கிறது. இதை நீதித்துறையும் கண்டு கொள்வதில்லை.

இது போலவே, ஒருவரை கைது செய்யும் போது என்னென்ன நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. காவல்துறை இதில் அராஜகம் செய்கிறது. எந்த நடைமுறையும் எனக்குத் தேவையில்லை என்பது போலத்தான் காவல் துறை நடந்து கொள்கிறது. இதை நீதித்துறையும் வேடிக்கை பார்க்கிறது. மட்டுமல்லாது, நீதிமன்றக் காவலுக்கு தேவையில்லாத வழக்குகளில் கூட 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்பது நீதிபதிகளுக்கு சடங்குத் தனமாய் மாறிப் போய் விட்டிருக்கிறது.

இது போன்ற அரசின் அடாவடிகளுக்கு அப்பாற்பட்டு தான் முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். நீதி மன்றங்களில் லட்சக் கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றால் அதற்கு முதற்காரணம் காவல்துறையின், நீதித்துறையின் இந்த அடாவடித் தனம் தான். இந்த அடாவடியினால் ஆயிரக் கணக்கானவர்கள் – சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்கள் – பாதிக்கப்பட்டு சிறைகளில் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதை எதிர்கொள்வது எப்படி என்பது தான் முன்னிற்கும் கேள்வி. அரச பயங்கரவாதம் என்றாலும், மத பயங்கரவாதம் என்றாலும் அவை நிறுவனமயமாக்கப்பட்ட பாசிச அமைப்புகள். இவைகளை எதிர்கொள்ள தத்துவம் சார்ந்து இயங்கும் மக்கள் மயமாக்கப்பட்ட அமைப்புகளால் மட்டுமே இயலும். மத எதிர்ப்பை, கடவுள் எதிர்ப்பை மட்டுமே கொண்டிருக்கும் உள்ளீடற்ற நாத்திக அமைப்புகளால் முடியாது. இதேநேரத்தில், இன்னொரு குறிப்பையும் தவிர்க்க முடியாமல் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அனீஸ் கைது குறித்து, அவர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, இவர்கள் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை என்பன போன்றும், பார்ப்பன மதத்தை எதிர்ப்பது போல் இஸ்லாமியத்தை ஏன் எதிர்க்கவில்லை? என்பன போன்றும் தூவப்படும் கேள்விகள் அந்த உள்ளீடற்ற தன்மையை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

பின்குறிப்பு: பதிவு வெளியிடும் போது இந்த மீம்ஸ் கிடைக்கவில்லை. இப்போது தான் கிடைத்தது.

13 thoughts on “அனீஸ் கைதை முன்னிட்டு .. ..

  1. என்ன பைத்தியக்காரத்தனம், இந்த பெண் போல மக்களை மாக்களாக ஆக்கி பணம் பிடிங்கினாரா? 23 வருடத்தில் ஒரு சமுதாயத்தை தலைகீழ் மாற்றம் செய்த உத்தமர் முஹம்மது நபி ஸல்

  2. இதே போல் அந்த பெண்ணைப் பின்பற்றுகிறவர்களும் நம்புகிறார்கள் என்றால் என்ன செய்வது? அதே போல் இதை மறுப்பவர்களுக்கும் ஒரு நம்பிக்கையோ கருத்தோ இருக்கலாம் தானே.

  3. முஹம்மது நபி ஸல் அவர்களை இறைவன் இறைத்தூதராக அறிவிக்கும்முன் நம்பிக்கையாளர், உண்மையாளர், அமானிதங்களை பேணுபவர், என்றெல்லாம் மக்களால் அறியப்பட்டார், நபியானபிறகும் அதை தொடர்ந்தார்கள். எங்கேயும் மக்கள் ஏமாற்றும் செயலில் ஈடுபடவில்லை.

  4. நம்பிக்கை கொள்வது அவரவர் உரிமை. மக்களை ஏமாற்றினாரா என்பதற்கு குரானிலேயே சான்றுகள் இருக்கிறது. எனவே, நம்பிக்கை கொள்வது அவரவர் உரிமை. அது பொது உண்மை எனும் போது தான் சிக்கல்கள் வருகின்றன.

  5. ஏமாற்றவில்லை என்பது உண்மையாளர்களின், அறிவாளர்களின் கூற்று

  6. அந்த உண்மையாளர்களின், அறிவாளர்களின் கூற்று குரானின் கூற்றுக்கு மாற்றாக இருந்தால் .. .. ..

  7. No way என்பதன் பொருள் என்ன?
    குரான் அப்படி கூறவில்லை என்பதா?
    உண்மையாளர்கள், அறிவாளர்கள் அப்படி கூறவில்லை என்பதா?
    கொஞ்சம் தெளிவாக கூறிவிடுவது நல்லது.

  8. No way என்பதன் பொருள் – அறிவாளிகளை உண்மையாளர்களை ஏமாற்றாது என்று அர்த்தம்

  9. சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பதில் கூறலாமே. இப்போதும் நீங்கள் கூறியிருப்பது எனக்கு துல்லியமாக புரியவில்லை. எனவே, குழப்பாமல் கூறுங்கள். நீங்கள் சொல்லவருவது என்ன?

    \\என்ன குமாரு பயந்துட்டியா? என் கருத்தை வெளியிடல// ஹா…. ஹா…
    ஓகே சிரிச்சுட்டேன் போதுமா?

  10. செங்கொடி செத்த கோடி ஆகிவிட்டது , எனது பின்னூட்டத்தை பிரசுரிக்கவில்லை, கம்ம்யூனிச சங்கி

  11. உங்களின் எந்த பின்னூட்டத்தை வெளியிடவில்லை? என்னை திட்ட வேண்டும் என நினைத்தால் தாராளமாக திட்டிக் கொள்ளலாம். அதற்காக பொய் சொல்லி பொய்யான காரணத்தை உருவாக்கி திட்ட வேண்டாம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s