வீடு மாற்றும் சடங்கு

சடங்கு எனும் சொல்லுக்கும் வழமை எனும் சொல்லுக்கும் இடையில் பொருள் மாறுபாடு உண்டு. இயல்பாக ஒரு செயலை மீண்டும் மீண்டும் செயல்படுத்த நேர்வதை வழமை என்று குறிப்பிடுகிறோம். சடங்கு எனும் போது அதில் ஒரு திணிப்பு ஏற்றப்படுகிறது. மதம் அல்லது வேறு ஏதோ ஒரு நம்பிக்கை சார்ந்த கட்டாயத்தினால் திரும்பத் திரும்ப செயல்படுத்த நேர்வதை சடங்கு எனக் குறிப்பிடலாம். ஆனால், கருத்து முதல் வாதம் சார்ந்த சடங்குகளில் இருக்கும் ஈர்ப்பு, வேறு வகைகளினால் ஏற்படும் சடங்குகளில் இருப்பதில்லை. அது போன்ற ஈர்ப்பில்லாத சடங்குகளில் முதன்மையானது வீடு மாற்றுவது எனக் கருதுகிறேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் எட்டு முறை வீடு மாற்றி இருக்கிறேன். ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் ஒவ்வொரு விதமான காரணங்கள். கமுக்கக் காவலர்களின் தொல்லை தொடங்கி, அமைப்பு வேலை வரை பலவிதமான காரணங்கள். என்ன காரணம் என்றாலும் வீடு மாற்றுவது தொல்லை பிடித்த, அதேநேரம் பழகிப் போன வேலையாக ஆகிவிட்டது.

வீடு மாற்றுவது ஒரு கலை போல மிக நுட்பம் தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. வீடு மாற்றும் தேவை எழுந்ததும், தற்போது இருக்கும் வீட்டின் குறை நிறைகள் என்ன? புதிய வீட்டுக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படும்? போன்ற கலந்துரையாடல்கள் தொடங்கும் இடத்தில் இருந்து அந்தக் கலை தொடங்குகிறது. இணையரும் மகன்களும் கூறும் அல்லது கோரும் வசதிகள் எந்த அளவுக்கு நம்மை கூர் பார்க்கும் என்பதை அந்தந்த நொடிகளிலேயே உணர்ந்து கொள்வது முதல் நிலை. அதை ஏற்பதா மறுப்பதா என்பதை தீர்மானித்து, மறுப்பதாக இருந்தால், பொருளாதார கரணிகளை மட்டுமல்லாது உடலியல், மெய்யியல் காரணிகளையும் சேர்த்து விளக்கி அவர்களையும் ஏற்க வைப்பது அடுத்த நிலை. இது மிகவும் கவனம் தேவைப்படும் வேலை. எந்த அளவுக்கு என்றால், நீர் தழும்பும் கண்ணாடிக் குடுவையை கையில் ஏந்திக் கொண்டு சிந்தாமல் உடையாமல் வழுக்கு மரத்தில் ஆற்றைக் கடக்கும் அளவுக்கு வித்தை தேவைப்படும் வேலை. கொஞ்சம் பிசகினாலும், அடுத்த முறை புதிய வீட்டை மாற்றும் தேவை ஏற்படும் வரை, செருப்பில் குத்தி உடைந்து போன முள்ளின் கண்ணுக்குத் தெரியாத மிச்சம் போல குத்திக் கொண்டே இருக்கும்.

வெற்றிகரமாக வீடு மாற்றிய பின், கடைசியாக செய்யும் வேலை, யாருடைய உதவியும் கிடைக்காத வேலை, மிகுந்த பொறுமையும் நேரமும் தேவைப்படும் வேலை நூல்களை அடுக்கி வைப்பது. முகநூலில் நான் பார்த்த அதிக வலைஞர்கள் தாங்கள் பேசும் போது பின்னணியில் நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி இடம்பெறுவதை விரும்புவோர்களாக இருக்கிறார்கள். அவர்களின் வாசிப்பு அனுபவத்தை காட்சிப்படுத்த இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்காது தானே. என்னிடம் அதிகம் நூல்கள் இல்லை, சற்றேறக் குறைய 400 நூல்கள் வரைதான் இருக்கிறது. என்றாலும், அதை கொடுத்திருக்கும் இலக்கத்தின் படி அடுக்கி வைப்பது என்பது ஓரிரு நாட்கள் பிடிக்கக்கூடிய வேலை. நிறைய நூல்கள் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். இதற்கு இந்த முறை ஒரு தீர்வை கண்டடைந்திருக்கிறேன். பழைய வீட்டிலேயே நூல்களை படித்தவை, படிக்க வேண்டியவை, படித்திருந்தாலும் அதிகம் தேவைப்படும் நூல்கள் என்று மூன்றாக பிரித்து பெரும் பகுதியாக இருந்த படித்த நூல்களை தனியாக அட்டைப் பெட்டியில் போட்டுக் கட்டி புது வீட்டிலும் பிரித்து அடுக்காமல் அப்படியே வைத்து விட்டேன். படிக்க வேண்டிய புதிய நூல்களையும், அதிக தேவைப்படும் நூல்களையும் மட்டும் அடுக்கி வைத்து விட்டேன். இதனால் வேலை பெருமளவு குறைந்து விட்டது.

தொடக்கத்தில் அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வீடு மாற்றுவது பொருத்தமான வீடு தேடுவதும், பின்பு பொருட்களை இடம் மாற்றி அதனதற்கு பொருத்தமான இடம் கண்டுபிடித்து ஒழுங்கு படுத்தும் வேலை என்பதாக மட்டும் தான் இருந்தது. ஆனால் பின்னாட்களில் முஸ்லீம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை எனும் கருத்து பொதுப்புத்தியில் ஏறும் விகிதத்தில் வீடு கிடைக்கும் கடினத்தன்மை கூடிக் கொண்டே போனது. இந்த முறை வீடு தேடிக் கண்டடைவதற்கு மட்டும் ஒரு மாதத்துக்கும் அதிகமான காலத்தை செலவிட நேர்ந்தது. அதுவும் ஒரு சிறு நகரத்தில் என்பது எவ்வளவு கொடுமையானது.

சமூகத்தில் உடனுறையும் மனிதர்களுக்கு இடையிலான உறவில் மதம் எனும் மாயத் திரை எந்த அளவுக்கு வேட்டு வைத்திருக்கிறது என்பதற்கு இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு. இந்தியாவைப் பொருத்தவரை பன்னெடுங் காலமாக பார்ப்பனியம் அதிகாரத்தில் இருக்கிறது என்றாலும், பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்பு அதன் வேகமும் பரப்பெல்லையும் அதிகரித்திருக்கிறது என்பது மறுக்க முடியாதது. பாஜகவின், ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பனியத்தின் கொடுக்குகள் பெரியார் மண் என்று கூறப்படும் தமிழ்நாட்டிலும் சிறு நகரம் வரை நீண்டிருப்பது, புரட்சிகர ஆற்றல்கள் முன்னிலும் அதிகமாக மக்களிடம் நெருங்க வேண்டும் என்பதைத் தான் உணர்த்தி நிற்கிறது.

இதன் மறுபக்கத்தில் ஒரு குழப்பமான உண்மையும் ஒளிந்திருக்கிறது. தாங்கள் இந்துக்களை முன்னிருத்தும் கட்சியாக காட்டிக் கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் செய்யும் மதவாத அரசியலில் ஏதோ ஒரு புள்ளியில் இணையும் மக்கள், அதன் விளைவாக முஸ்லீம்களிடம் ஒருவித இனம் புரியாத வெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே வீடு இல்லை என மறுப்பது தொடங்கி, ஏன் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்குள் வர வேண்டும்? எனும் கேள்வி வரை பாஜக உருட்டும் பகடையின் தாயங்களாக இருக்கிறார்கள். ஆனால் வீடு மாற்றி வந்த பிறகு பழகும் விதங்களில் போலித்தனம் இருப்பதில்லை. முஸ்லீம் எனும் வெறுப்பும் இற்று இல்லாமலேயே போய் விடுகிறது. மாறாக, எந்தக் கடவுளையும் ஏற்காத குடும்பம், கம்யூனிஸ்ட் என்று தெரிந்து கொண்ட பின்பு அவர்களுக்கு இயல்பாகவே ஒரு விலக்கம் வந்து விடுகிறது. இந்த விலக்கத்திலும் போலித்தனம் இருப்பதில்லை. இதற்கு கமுக்கக் காவலர்களின் தொழிற்பாடும் ஒரு காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் இருக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் தலைக்குப் பின்னே புரட்சிகர ஒளி வட்டம் கொண்டவர்களல்லர் என்றாலும் அது அவ்வாறு தான் நடக்கிறது. நேரடியாக எங்களிடம் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ளாத கமுக்கக் காவலர்கள் பக்கத்து, அருகாமை வீட்டிலிருப்பவர்களை சந்தித்து எங்களை மீப்பெரிய பயங்கரவாதிகளைப் போன்று உருவேற்றி விடுகிறார்கள். க.கா வந்து பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதை பார்த்தவுடனே சொல்லிவிடலாம். இருட்டிலிருந்து வந்தவர்களைப் போல கண்கள் பெரிதாகவும் மருட்சியாகவும் தெரியும். அவ்வப்போது இவ்வாறான புனைகளை ஏற்றிக் கொள்வதால் எங்களை ஒரு எல்லைக்கு அப்பாலேயே எப்போதும் நிறுத்திக் கொள்கிறார்கள்.

இந்த மதவாதப் பிளவு முயற்சிகளுக்கு இன்னொரு விளைவும் இருக்கிறது. தங்களை இந்து என்று கருதிக் கொள்வோரில் சிலர் எவ்வாறு முஸ்லீம்களுக்கு வீடு இல்லை என மறுக்கிறார்களோ, அது போலவே முஸ்லீம்களில் சிலரும் பிற மதத்தவர்களுக்கு வீடு கொடுப்பதில்லை என விலக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் பரப்புரை வெற்றியடைந்திருக்கிறது என்பதன் அடையாளம் இது. தற்போது நாங்கள் குடி வந்திருக்கும் வீடு ஒரு முஸ்லீமின் வீடு தான். அவர்களும் முஸ்லீமல்லாத யாருக்கும் வீடு கொடுப்பதில்லை எனும் முடிவிலிருந்தார்களாம். நான் பெயரில் தான் முஸ்லீம் என மெலிதாக தெரிவித்த போது மறுக்கவில்லை வீடு தர சம்மதித்தார்கள். காரணம் கேட்ட போது, வீட்டில் கோலம் போடுவது அவர்களுக்குப் பிடிக்காதாம். வேடிக்கையாக இல்லை. எந்த மதத்தினராக இருந்தாலும், வேடிக்கையான காரணங்களின் திரட்சி தான் மதவாத இறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் உணர்வதே இல்லை.

சொந்த வீடு என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் மிகப் பெரும் கனவு என்பது இங்கு அனைவராலும் ஏற்கப்பட்டிருக்கிறது. சொந்த வீடு என்பது ஆடம்பரமல்ல, என்றாலும், ஒருவகையில் வாடகை வீடு என்பது ஏற்புடையது தான். ஒரு கணக்கிற்காக குறைந்த அளவாக 20 லட்சம் செலவு செய்து சொந்த வீடு ஒன்றை கட்டுவதாகக் கொள்வோம், தோராயமாக இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வீட்டை நீங்கள் மறுகட்டுமானம் செய்தால் தான் அது வாழும் அளவுக்கு நவீனத்துக்கு நெருக்கமாக இருக்கும். எனவே, ஒவ்வொரு பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் மறு கட்டுமானம் செய்ய வேண்டியதிருக்கும். அதற்காக தோராயமாக பதினைந்து லட்சம் ஒதுக்க வேண்டியிருக்கும். இந்தத் தொகை நிச்சயமாக வாடகை கொடுப்பதை விட அதிகம் தான். மட்டுமல்லாது வாடகை வீட்டில் இருப்பது நமக்கு பல வசதிகளை ஏற்படுத்தித் தருகிறது. எனவே சொந்த வீட்டை விட வாடகை வீடு சிறப்பானது, பொருத்தமானது.

இந்தியாவில் சாலையோரங்களிலும், ஒரு கூரையின் கீழ் இருக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் கோடிகளில் இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் இன்னல்களோடு ஒப்பிட்டால், வீடு மாற்றுவதில் இருக்கும் இன்னல்கள் மாத்திரை குறைவானவை. சரியாகச் சொன்னால் ஒப்பிட்வே முடியாதவை. கம்யூனிச மாமேதைகளெல்லாம் நாடு நாடாக துரத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் இலக்கு வைத்து முன்னேறி இருக்கிறார்கள். மக்களுக்காக செங்குத்துப் பாறையில் ஏறி இருக்கிறார்கள். அதிலிருந்து தான் படிப்பினைகள் பெற வேண்டும். பெற்றாக வேண்டும்.

One thought on “வீடு மாற்றும் சடங்கு

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s