இலங்கையும் அதன் பொருளாதாரமும்

கடந்த பல மாதங்களாக, ஆழமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி பற்றிய கட்டுரைகள் உள்ளூர் ஊடகங்களிலும் உலகளாவிய ஊடகங்களிலும் பிரதானமாக இடம்பெறுகின்றன. ஆயினும்கூட, இலங்கையினுடைய பெரும் வெளிநாட்டுக் கடன் சுமை, அந்நியச் செலாவணி இருப்புக்கள் குறைதல், எரிபொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டுள்ள சவால்கள் முதலான நெருக்கடியின் அறிகுறிகள் பற்றி பெரும்பாலான கட்டுரைகள் பேசுகின்றன. எவ்வாறாயினும், இலங்கை அரசியல் பொருளாதாரத்தின் நீண்டகால அம்சங்களும், அவற்றுக்கு இப்போதைய நெருக்கடியுடன் உள்ள உறவுகளும் பற்றிய கேள்விகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த கால இலங்கை அரசாங்கங்களின் அரசியல் பொருளாதாரக் கொள்கை முடிவுகள், பெருந்தொற்றுக்குப் பின்னர் இலங்கைப் பொருளாதாரத்தை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதா? பொதுவெளியில் வல்லுநர்களும் கருத்தாளர்களும் பொருளாதாரம் பற்றி எப்படி விவாதிக்கின்றார்கள்? இப்போதைய அரசாங்கத்தின் முன்னுள்ள பணிகள் என்ன?

அரசியல் பொருளாதார நிபுணரும், வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் கௌரவத் தலைவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் அவர்களுடன் நாம் மேற்கொண்ட கலந்துரையாடல் இந்நேர்காணல். கதிர்காமர் இலங்கையின் பொருளாதாரப் பாதை, அதன் கட்டமைப்பு அம்சங்களை மட்டும் விவரிக்காமல், இப்போதைய நெருக்கடிகள் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறார். அதே வேளையில் இப்போதைய பிரச்சனை குறித்த விவாதங்களில் தென்படும் சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறார்.

Rethinking Sri Lanka’s economic crisis என்ற தலைப்பில் Himal Southasian தளத்தில் வெளியான ஆங்கில நேர்காணலின் தமிழாக்கம் இது.

***

இன்று இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை நீங்கள் எவ்வாறு விளக்குவீர்கள்? மேலும் நிகழ்கால நெருக்கடியைப் புரிந்துகொள்ள, நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய இலங்கை அரசியல் பொருளாதாரத்தில் வேர்கொண்டுள்ள சிக்கல்கள் எவை?

அகிலன்: இது 1948ல் சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை எதிர்கொண்டுள்ள மிக அழிவுகரமான நெருக்கடி ஆகும். இப்போதைய சூழ்நிலையானது 1930களில் இலங்கை பெரும் பொருளாதார மந்த நிலைமையால் மட்டுமல்லாமல், மலேரியா நோயாலும் பெரும் துன்பங்களுக்கு ஆட்பட்டு நின்றதைப் போன்றது. இப்போது பெருந்தொற்று மருத்துவ அவசரநிலை, கணிசமான பொருளாதார சீர்குலைவு ஆகிய இரண்டும் நிலவுகின்றது. அதே வேளையில் பெருதொற்றைவிட, இலங்கையில் இப்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகமிக பரந்ததாகவும் ஆழமானதாகவும் உள்ளது.

1970களின் பிற்பகுதியில் தாராளமயமாக்கலைத் தொடர்ந்து இலங்கைப் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளானது. தெற்காசியாவில் கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டு, புதிய தாராளவாதப் பாதையில் சென்ற முதல் நாடு இலங்கை. ஜே.ஆர். ​​ஜெயவர்த்தனா அரசாங்கம் கொண்டுவந்த அந்தப் பொருளாதார மாற்றங்கள், உள்நாட்டில் ‘திறந்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள்’ என்று அழைக்கப்பட்டன. அச்சிர்திருத்தங்கள் சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு மட்டுமல்லாமல், தொழிற்சங்கங்களையும் இடதுசாரிகளையும் தாக்கி அழிப்பதற்கும் சர்வதிகார ஆட்சியைக் கொண்டுவந்தன. ஜெயவர்த்தனா அரசாங்கம் 1979ல் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) இயற்றி, தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்தது என்பதை நாம் நினைவுகூரும்போது, ​​1980 ஜூலையில் அவர் ஆட்சி தொழிற்சங்கங்களை நசுக்கியதை மறந்துவிடுகிறோம். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டனர்; தொழிலாளர்களை அமைப்பாக்க இயலாத அளவுக்குச் சிற்றளவு தொழிற்கூடங்கள் மூலம் தொழிற்சங்கங்கள் இல்லாத வலயங்கள் நிறுவப்பட்டன; இந்நிலைமையிலிருந்து இன்றுவரை வரையும் தொழிலாளர் இயக்கம் மீளவில்லை.

1970களின் பிற்பகுதியில் பொருளாதாரம் திறந்துவிடப்பட்டதிலிருந்து தொடங்கிய பொருளாதார நெருக்கடிக் குமிழி, மேற்கத்திய மூலதனத்தின் வரவால் உந்தப்பட்டு, 1982ல் இலங்கையின் பொருளாதாரம் சீர்குலையத் தொடங்கியது. 1983 ஜூலையில் நடந்த கொடூரமான இனப் படுகொலை, பொருளாதார வீழ்ச்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப ஜெயவர்த்தனா ஆட்சியின் முயற்சியாகும். உள்நாட்டுப் போர் தொடங்கியவுடன், அரசின் முன்னுரிமைகள் போர்க்காலப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதாக மாறியதால், நவதாராளவாதக் கொள்கைகள் முழு அளவுக்குத் தொடர முடியவில்லை. இந்தச் சூழலில், இருப்பத்தாறு ஆண்டுகாலமாக நீடித்த கொடும் உள்நாட்டுப் போரினால், உலக மூலதனம் இலங்கை மீதான ஆர்வத்தை இழந்தது. 2009ம் ஆண்டின் பிற்பகுதி, ராஜபக்ச ஆட்சி திணித்த இறுதிப்போர் பேரழிவும் சர்வாதிகார ஆட்சியும்,  உலகளாவிய மூலதன விருப்பத்தைத் தூண்டி, கணிசமான மூலதன வரவுகளை ஈட்டியது. 2008ம் ஆண்டின் மாபெரும் நிதி நெருக்கடிக்குப் பிறகு, வளர்ந்து வரும் சந்தைகளை நோக்கி அபரிமிதமான மூலதனப் பாய்ந்தது. இலங்கை வளர்ந்து வரும் சந்தையாகவும், மோதலுக்குப் பிந்தைய பொருளாதாரமாகவும் கருதப்பட்டது. மேலும் போருக்குப் பிறகு 18 மாதங்களில் கொழும்பு பங்குச் சந்தையின் மதிப்பு நான்கு மடங்காக அதிகரித்தது.

பத்தாண்டுகளுக்கு முன்னர், போருக்குப் பின்னரான சர்வாதிகார ஆட்சியுன் கூடிய இந்த அரசியல்-பொருளாதார மாற்றங்களை, இலங்கையில் ஆட்சியாளர்களின் சந்தை சார்பு கொள்கைகள் அடங்கிய நவதாராளவாதத்தின் இரண்டாவது அலை என்று நான் விளக்கினேன். பெருந்தொற்றுப் பேரழிவுகளைவிட, பெருகிவரும் உலக மூலதன நிதியமயமாக்கலின் இரண்டாவது அலைதான் இலங்கையை இப்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் ஆழமாகத் தள்ளியுள்ளது.

பொருளாதார நெருக்கடி குறித்த பொது உரையாடல்களில் வேளாண் கொள்கைகள், வர்த்தக விதிமுறைகள், பணவியல் கொள்கை, வெளிநாட்டுக் கடன் முதலான பலவித சிக்கல்கள் பேசப்படுகின்றன. பொருளாதார வீழ்ச்சியின் சில அறிகுறிகளை அவற்றின் வேர்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியுமா?

அகிலன் : கடந்த சில தசாப்தங்களாகப் பொருளாதாரக் கொள்கைத் தொகுப்புகள் ஏறக்குறைய ஒவ்வொரு துறையையும் பாதித்துள்ளன; மேலும் பொருளாதாரத்தின் பல்வேறு கூறுகளைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளைக் காலப்போக்கில் தோற்றுவித்துள்ளன. உதாரணமாக, தாராளமயமாக்கலுக்குப் பிறகு வேளாண் கொள்கைகளை எடுத்துக் கொண்டால், வேளாண்மையில் அரசு முதலீடுகளில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்கைகள் வேளாண்மை உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தைக் குறைத்து, வேளாண்மையில் தாராளமய வர்த்தகத்தை ஊக்குவித்து, வேளாண் பொருட்களின் இறக்குமதியை அதிகரித்தது. இலங்கையின் பேரியல் பொருளாதாரக் கொள்கைகள் உள்கட்டமைப்பு மேம்படுத்தல், சுற்றுலா துறையில் அந்நிய முதலீட்டை ஈர்த்தல் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்ல முயல்கின்றன; ஆனால் வேளாண்மையையும் உணவில் தன்னிறைவையும் கைகழுவி விட்டன. எனவே, வேளாண்மை போன்ற ஒவ்வொரு துறையையும் நாம் தனித்தனியாகப் பார்க்க வேண்டும்; ஆனால் அந்தத் துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நவதாராளவாத பொருளாதாரக் கொள்கை தொகுப்புகளின் விளைவு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

ஏற்கனவே ஓரளவு பலவீனமான இலங்கையின் பொருளாதார நிலையை, கோவிட்-19 பெருந்தொற்றால் மேலும் பலவீனமடைந்துள்ளது என்பதில் பொதுவான ஒருமித்த கருத்து உள்ளது. பெருதொற்றை எதிர்கொள்ள இப்போதைய அரசாங்கம் என்ன வகையான பேரியல் பொருளாதார நடவடிக்கைகளையும் கொள்கை நிலைகளையும் எடுத்தது? அரசாங்க நடவடிக்கைகள் பற்றிய உங்களது மதிப்பீடு என்ன?

அகிலன்: பொருளாதாரத்தில் கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்புகள் வெளிப்படையாகத் தெரிந்த பிறகும் அரசாங்கம் மதிப்புமிக்க நேரத்தை வீணடித்தது. பெருந்தொற்றாலும் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தாலும் எதுவும் மாறவிடவில்லை என ஆளும் தரப்பினர்  ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’  என்கிற 2019 தேர்தல் அறிக்கையில் திரும்பத் திரும்பக் கூறினர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு சர்வ அதிகாரத்தையும் வழங்குகிற இருபதாவது திருத்தம், சர்வதேச நிதி நகரத்தை அமைக்கின்ற  துறைமுக நகர சட்டமூலம் (சட்டவரைவு) முதலானவற்றின் மூலம் அதிகாரத்தை மையப்படுத்துவதிலும், நிதிமயமாக்கல் மூலம் எளிதான தீர்வாகக் கருதியதைச் செயல்படுத்துவதிலும் மட்டுமே ஆளும் தரப்பினர் ஆர்வமாக இருந்தனர் என்பதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கும் தனியார்மயமாக்குவதற்கும் அவர்கள் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KNDU) சட்டமூலத்தை முன்வைக்க முயற்சித்த நேரத்தில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் இருந்து எதிர்ப்பு பெருகத் தொடங்கியது. 2021ன் பிற்பகுதியில், அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அவர்கள் அறிவித்தபோதுதான், நாடு நெருக்கடியில் இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

எவ்வாறாயினும், மக்கள் நெருக்கடியை உணர்ந்து, விவசாயத்தை நோக்கி திரும்புவது உட்பட, தங்கள் பொருளாதார நிலைமையை உறுதிப்படுத்த மற்ற வழிகளைத் தேடத் தொடங்கினர். ஆனால் 2021ம் ஆண்டின் முற்பகுதியில் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான திடீர் தடையினால், மக்கள் முயற்சியும் முடக்கப்பட்டது. பெருந்தொற்றும் பொதுமுடக்கமும், உழைக்கும் மக்களை, குறிப்பாக அன்றாட கூலி பெறும் குடும்பங்களை, வருமான இழப்பினால் பேரழிவிற்கு தள்ளின; மேலும் இலங்கையில் மக்களுக்கான நிவாரணம், மற்ற தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது கூட மிகக் குறைவாக இருந்தது.

இந்த நெருக்கடியைப் பற்றி பொதுவெளியில் உள்ள பொருளாதார வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கருத்தாளர்கள் எவ்வாறு விவாதித்து வருகின்றார்கள்? நாட்டிற்குள் இருக்கும் அரசியல் அல்லது கருந்திலைப் பிளவுகளை விவாதப் போக்குகளில் காண்கிறோமா? மேலும் ஒருசில நோக்குகள் மற்ற நோக்குகளைவிட அதிக கவனத்தைப் பெறுகின்றன என்று நினைக்கிறீர்களா?

அகிலன் : பொருளாதாரம் பற்றி மிகக் குறைவான விவாதங்கள் உள்ளன. சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன்படிக்கைக்கு செல்லப் போவதில்லை என்று அரசாங்கம் பகிரங்கமாக கூறிக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்கள் உண்மையில் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள், குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகயா), சர்வதேச நாணய நிதியத்தை மாய புல்லட் என்று நம்புகின்றனர். பெரும்பாலான அரசியல் செயல்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும்கூட ஊழல் மிக முக்கியமான பிரச்சனையாகக் கருதுகின்றார்கள்; மேலும் எப்படியாவது சர்வதேச நாணய நிதியம், சீனா, இந்தியா ஆகியவற்றின் ஆதரவு இலங்கையில் நிலவும் ஆழமான நெருக்கடியை தீர்க்க முடியும் என்று நம்புகிறார்கள். எவ்வாறாயினும், இந்த நெருக்கடியின் அளவைக் கருத்தில் கொண்டால் – நான் இந்நெருக்கடி அளவை 1930களின் பெரும் மந்தநிலையுடன் ஒப்பிடுவேன் – நமது கடந்தகால கொள்கைகளில் இருந்து தீவிரமான விலகல் இருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. இலங்கைப் பொருளாதார வல்லுநர்கள் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி முதலான ஏனைய சர்வதேச நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பரிந்துரைகளை எதிர்நொக்கி இருக்கும் சோம்பேறிகளாக மாறியுள்ளனர்; இந்த வரலாற்று நெருக்கடியை எதிர்கொள்ளும் திறனை இழந்துள்ளனர். சர்வதேச நாணய நிதியம் 2 பில்லியன் டாலர்கள் அல்லது அதிகபட்சம் 3 பில்லியன் டாலர்கள் என்ற அளவில் மட்டுமே கடனை வழங்க முடியும்; ஆனால் 2021ல் வர்த்தகப் பற்றாக்குறை 8.1 பில்லியன் டாலர்களாக இருந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு அழுத்தம் கொடுப்பவர்கள், இலங்கையை சர்வதேச மூலதனச் சந்தைகளிலிருந்து மீண்டும் கடன் வாங்குவதற்கு, வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்ட, சுற்றுலா தொடங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் அனுமதிக்கும் என நம்புகின்றனர். உண்மையில், அமெரிக்காவில் உள்ள பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ள நிலையில், குறிப்பாக உலகளாவிய நிலைமைகள் மாறிவிட்டதால், கடன் வாங்குவதற்கான வட்டிச் செலவு இலங்கை கொடுக்க இயலாததாக இருக்கும். மேலும், மூலதனச் சந்தைகளில் கடன் வாங்குவதும் கடன் வட்டிக் கட்டுவதும் இலங்கையை அகப்படுத்தியுள்ள கடன் நெருக்கடியை தொடர்ந்து நிலவச் செய்யும்.

‘நியோலிபரல்’ (நவதாராளம்) என்ற சொல் பயன்பாடு இப்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை துல்லியமாக சித்தரிக்கிறதா என்பது குறித்து சமீபத்தில் சில கேள்விகள் எழுந்துள்ளன. ஏனென்றால் அரசாங்கம் விலையைக் கட்டுப்படுத்துகிறது; பல துறைகளில் வர்த்தக பாதுகாப்புவாதத்தைக் கைகொண்டுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நீங்கள் எவ்வாறு விவரிப்பீர்கள்? ஏற்கனவே சொல்லப்பட்டு வருவதைப்போல கருப்பு வெள்ளையாகப் புரிந்துகொள்வது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அகிலன்: கடந்த சில தசாப்தங்களாக இலங்கையில் அரசியல் பொருளாதார புலமையிலும் மார்க்சிய பகுப்பாய்விலும் பற்றாக்குறை உள்ளது; இதனால் சிலர் நவதாராளவாதக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டுள்ளனர். உண்மையில், எங்களில் சிலர் 2012ல் இலங்கையின் வளர்ச்சிகளைப் புரிந்துகொள்வதற்கும், நவதாராளவாதத் திட்டம் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பதற்கும், இளைய கல்வியாளர்களுடனும் ஆர்வலர்களுடனும் இணைந்து மூன்று மாத கால வாராந்திர கருத்தரங்கை ஏற்பாடு செய்தோம். அது இலங்கையில் நவதாராளமயம் பற்றிய விவாதத்தை உருவாக்க உதவியது. உலகச் சூழலில் உள்ளூர் வளர்ச்சிகளைப் பார்த்தால் மட்டுமே, எமது பொருளாதாரச் சூழலை பகுப்பாய்வு செய்வதற்கான நவதாராளவாதச் சட்டகப் பயன்பாடு பற்றி புரிந்துகொள்ள முடியும். சுதந்திர சந்தைகளும் தனியார் முகமைகளும் முன்னெடுக்கும் கருத்துநிலையுடன் கூடிய பெருநிதிமூலதன வர்க்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை பொருளாதாரம் உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நமது கல்வியாளர்களும் அறிவாளிகளும் நவ தாராளமயம் பற்றிய பரந்த இலக்கியங்களை இன்னும் ஆழமாகப் பயிலவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது; அதே வேளையில் புலமைவாணர்களின் வர்க்க குணாதிசயமும் இதில் அடங்கியுள்ளது. நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்ட ஆராய்ச்சி திட்டங்களாலும் அல்லது மேற்கத்திய புலமை வட்டத்தில் நிலவுகின்ற நவதாராளவாதப் பொருளாதாரப் பகுப்பாய்வு முறையாலும் மேற்கத்திய நலன்களுக்கு புலமையாளர் கீழ்ப்படிந்து நடந்துகொள்கிறார்கள் என்பதையும் காண்கிறேன். தெற்காசியாவில் உள்ள பல நாடுகளில் இந்நிலமை ஓரளவிற்கு உண்மையாக இருந்தாலும், நவதாராளவாதக் கருத்துகளுக்கு சில எதிர்ப்புகளும் உள்ளன; குறிப்பாக நெருக்கடி காலங்களில், மாற்று வழிகள் பற்றிய விவாதம் முன்னுக்கு வருகிறது. உதாரணமாக, இந்தியாவில், பொருளாதாரத்தில் பழமைவாத, மையநீரோட்ட நிலைப்பாடுகளுக்கு மாற்றாக புதுதில்லியில் உள்ள பொருளாதார ஆராய்ச்சி அறக்கட்டளையால் நடத்தப்படும் மேக்ரோஸ்கான் இதழ் வெளியிட்ட ஆராய்ச்சியைக் கவனித்து வருகிறேன். இலங்கையில் இதுபோன்ற நடவடிக்கைகளும்கூட பெரும்பாலும் இல்லை.

1970களின் பிற்பகுதியிலிருந்து, இலங்கையில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நவதாராளவாத கொள்கைத் தொகுப்புகளைப் பின்பற்றி வந்தன என்றும், 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தப் போக்கு துரிதப்படுத்தப்பட்டது என்றும் நான் கூறுவேன். மேலும், அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் – அல்லது புதிய நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள் – சில வேறுபாடுகளுடன் நவதாராளவாதக் கொள்கைத் தொகுப்புகளைத் தொடர்ந்து பின்பற்றினர். ஆகவே நவதாராளவாத பார்வை தொடர்ந்து ஆட்சி செலுத்தி வருகின்றது. உதாரணமாக, மக்கள்நல நோக்கு, கிராமப்புற மேம்பாடு என்ற சொல்லாட்சிகள் ராஜபக்ச ஆட்சி சந்தைக்கு உகந்த கொள்கைகளை மறைத்துக் கொள்கிறது. எவ்வாறாயினும், நிதித்துறையில் அவர்களின் சலுகைகளும், முக்கிய பொதுத்துறைகளில் குறைந்த முதலீட்டையும் பார்க்கும்போது, ​​அவர்களின் நவதாராளவாத சார்பு கண்ணுக்குப் படாமல் போவது கடினம்.

கடந்த பல மாதங்களாக, சர்வதேச பத்திரிகைகளில் இலங்கையின் பொருளாதாரம் பற்றிய செய்திகள் ஓரளவுக்கு வந்துள்ளன. இந்தக் கதைகள் எந்தளவு நம்பகமானவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களின் வெளிச்சத்தில், இத்தகைய செய்திகள் குறித்து வேறு ஏதேனும் அவதானிப்புகள் உள்ளனவா?

அகிலன் : இலங்கையில் நிலவும் அடிப்படை உண்மைகளுக்கு மாறாக, இந்தியாவையும் சீனாவையும் மையமாகக் கொண்ட புவிசார் அரசியலுக்கு சர்வதேச செய்திகள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன என்பதே எனது கண்ணோட்டம். இது சர்வதேச பத்திரிகைகளின், சிந்தனைக் குழுக்களின் மேலோட்டமான பகுப்பாய்வு ஆகும். மேலும் இலங்கையின் அறிவாளிகளும் இத்தகைய புவிசார் அரசியல் கதையாடல்களுக்கு ஏற்ப உண்மைகளை வெட்டிக் குறைத்து நோக்குகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பே பின்வரும் விசயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளேன். நாம் கவலைப்பட வேண்டியது சீனக் கடன் பொறி பற்றியல்ல, ஏனென்றால் மொத்த கடனில் 10 சதம் மட்டுமே சீனாவிடமிருந்து பெற்றுள்ளோம். 40 சதம் அளவுக்கு மூலதனச் சந்தைகளில் பெற்றுள்ள தனியார் கடன்கள் பற்றியே கவலையுற வேண்டும். உலகளாவிய நிதி மூலதனத்துடன் அதிக ஒருங்கிணைப்பு செய்து, இலங்கையின் பொருளாதாரத்தை நவதாராளமயமாக்கல் செய்வது இலங்கையை ஆழமான நெருக்கடிக்குள் தள்ளும் என்று நான் வாதிட்டேன். அப்போது சிலர் மட்டுமே இதுபற்றி கவனம் செலுத்தினர்; ஆனால் இப்போது இந்த நெருக்கடிக்கு மத்தியில், திடீரென்று அனைவரும் சர்வதேச மூலதனச் சந்தைக் கடன் பத்திரங்கள் பற்றி பேசுகிறார்கள்.

காலனித்துவத்தின் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று பார்த்தால், ​​இலங்கையின் பொருளாதாரம் புவிசார் அரசியல் சூழ்ச்சிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும், சர்வதேச வர்த்தகத்தால் வஞ்சிக்கப்படும் சார்பு பொருளாதாரமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரியும். எனவே, உலக அரசியல் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் தீவில் எப்போதுமே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பரந்த பூகோளப் போக்குகளுக்கு மத்தியில் எமது நிலைமையை நாம் காண்பது முக்கியமானது என்றாலும், இலங்கைப் பொருளாதாரம் பற்றிய பகுப்பாய்வை வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும் உலகக் கதையாக மட்டும் சுருக்காமல், அதனை எவ்வாறு இலங்கைச் சமூக சூழலில் வைத்து புரிந்துகொள்கிறோம் என்பதே பிரச்சினையாகும். சீனச் சார்பு நிலைப்பாடு எடுக்கும் இடதுசாரிகள் நிலைப்பாட்டையும், இலங்கையில் வர்க்க / இன முரண்பாடுகளை அமெரிக்கத் தீர்க்கும் என்கிற நிலைப்பாட்டையும் சிக்கலானதாகவே கருதுகிறேன்.

சமீபத்தில், கடன்–திறன் மதிப்பீட்டு முகமைகளான ஃபிட்ச் நிறுவனம், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் நிறுவனம் ஆகியவை இலங்கையின் நீண்ட கால கடன் பெறும் திறன் தரமதிப்பீடுகளை குறைத்துள்ளன; இது இலங்கை அரசாங்கம் போதுமான அந்நிய செலாவணியை பராமரிக்க இயலாமையை பிரதிபலிக்கிறது. இத்தகைய மதிப்பீடுகள் எவ்வளவு துல்லியமானவை, அவற்றை நாம் எவ்வளவு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? பொதுவாக, கடன்–திறன் மதிப்பீட்டு முகமைகளின் அரசியல் பற்றியும், பொருளாதாரக் கொள்கை முடிவுகளில் அவற்றின் தாக்கம் பற்றியும் உங்கள் கருத்து என்ன?

அகிலன்: மதிப்பீட்டு முகமைகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், உலகளாவிய நிதியளிப்பாளர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள்; குறிப்பாக கடந்த நான்கு தசாப்தங்களில் உலகளாவிய நிதி மூலதனம் மேலாதிக்கம் செலுத்திவரும் வேளையில் இதுதான் நிலைமை. எனவே, மதிப்பீட்டு முகமைகள் நடுநிலையானவை அல்ல; உலகளாவிய மூலதனத்தின் ஓட்டத்தை வழிநடத்தும் வகையில் கணிசமான தாக்கத்தை அவை செலுத்துகின்றன. அவர்களின் மதிப்பீடுகள் தன்னல தீர்க்கதரிசனங்கள். எனவே, இலங்கை போதுமான அந்நியச் செலாவணியைப் பெற முடியாது எனக் கூறிவிட்டால், கடன் பத்திரச் சந்தைகயில் இலங்கை கடன் பத்திரங்களுக்கு அதிக வட்டி செலுத்த நேரிடும், இதனால் வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவது கடினமாகிவிடும்.

இறுதியாக, தற்போதைய பொருளாதார நிலைமையை சீர்செய்வதற்கு இலங்கையின் சிறந்த தெரிவுகள் யாவை? சிக்கனத்தை நோக்கிச் சாய்ந்திருக்கும் கொள்கைகளின் விளைவாக வறுமையை எதிர்கொள்ளும் மக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில் நாட்டின் நிதி நிலையை மேம்படுத்த அரசாங்கத்திற்கு வழிகள் உள்ளதா?

அகிலன்: இலங்கையின் வர்த்தக நிலைமையில், ஏற்றுமதியைவிட 80 சதவீதம் அதிகமாக இறக்குமதி உள்ளது; அரசு தன் சொந்த சாதனங்களைக் கொண்டு வெளிசந்தையைக் கட்டுப்படுத்தாவிட்டால், வளர்ச்சிக் கொள்கைகளைப் பொருட்படுத்தாவிட்டால், ஏற்றுமதி-இறக்குமதியைச் சமன்படுத்த நீண்ட காலம் ஆகும். உற்பத்தி, உள்நாட்டு நுகர்வு, ஏற்றுமதிக்கு தேவையான எரிபொருள் உட்பட, இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதைத் தவிர; உணவு, மருந்துகள், இடைநிலைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு முன்னுரிமை அளிப்பதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை. அத்தகைய இறக்குமதிகளுக்கு முன்னுரிமை அளிக்க, அரசு பொது-விநியோக முறையை நிறுவ வேண்டும். அரசு இறக்குமதிக்கு பொறுப்பெடுக்க வேண்டும். இல்லையெனில், இறக்குமதி செய்யும் தனியார் வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுக்க மாட்டார்கள்; கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்தது போல், அதிக வரம்பு இருந்தால், அவர்கள் தொடர்ந்து ஆடம்பர பொருட்களை இறக்குமதி செய்வார்கள்.

2019 தேர்தலுக்குப் பிறகு வரிகளைக் குறைக்கும் ஜனாதிபதி ராஜபக்சாவின் நடவடிக்கையின் அர்த்தம், அரசாங்க வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகிதம் என்ற அளவுக்கு பெரும் வீழ்ச்சியடைந்தது. இதன் விளைவாக, இந்த அழிவுகரமான நெருக்கடியின்போது மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கத்தால் முடியவில்லை. பொருளாதாரம் சுருங்கி, வருமானம் குறைந்து, வாழ்க்கைச் செலவு அதிகரித்து வரும் இக்காலத்தில், மறைமுக வரிகளால் பொதுமக்களுக்குச் சுமையை ஏற்படுத்துவது கடினம் என்பதாலும், பெருஞ்சொத்துகளின் நேரடி வருமான வரிகளையே அமல்படுத்த வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காகவும்; பொருளாதாரத்தை நெருக்கடியிலிருந்து மீட்டல், உள்ளூர் உற்பத்தியைத் தூண்டுவதற்கான தேவைப்பாட்டை அதிகரித்தல் முதலானவற்றுக்கு அரசு முதலீடு செய்யவும் நாட்டுச் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் வேண்டும்.

இது மிகமிக மோசமான காலம்; உலக வரலாற்றில் நிலவிய, 1920கள், 1930களில் நிலவிய பெருமந்தங்களைப் போன்ற ஒரு சூழ்நிலை. அப்போது உலகின் முன் கம்யூனிசப் புரட்சி, அல்லது பாசிசம் என்கிற இரு தெரிவுகள் இருந்தன. அந்த நெருக்கடிக்கு மத்தியில், ஜான் மேனார்ட் கீன்ஸ் மக்கள்நல ஆட்சி என்கிற மிகவும் மாறுபட்ட பொருளாதார அணுகுமுறையை முன்வைத்தார்; அது உண்மையில் முதலாளித்துவத்தை காப்பாற்றியது. காலங்கள் ஒரே மாதிரியானவையாக உள்ளன. கேள்வி என்னவென்றால், இலங்கையர்கள் பொருளாதாரம் பற்றிய பழைய தந்திரங்களைத் திரும்பத் திரும்பக் கையாள்வதற்குப் பதிலாக சுதந்திரமாகச் சிந்திக்கத் தயாராக இருக்கிறார்களா? நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெரும் மாற்றங்கள் நிகழப் போகின்றன. அவை 1930களின் நெருக்கடிக்குப் பிறகு தோன்றிய உணவு மானியங்கள், இலவசக் கல்வி, அனைவருக்கும் சுகாதார அமைப்புகள்  போன்றவையாக இருக்கலாம்; அல்லது 1970களின் நெருக்கடிக்குப் பிறகு அரசும்  சமூகமும் நவதாராளவாத மறுசீரமைப்பு உட்படுத்தப்பட்டதைப் போன்றதாக இருக்கலாம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களத்தில் பல்வேறு தரப்பினர் போராடுவதை நாங்கள் ஏற்கனவே காண்கிறோம்; தொழிற்சங்கங்களின் போராட்டங்களும், விவசாயிகள் போராட்டங்களும் பெருகிவருகின்றன. உழைக்கும் மக்கள் எவ்வாறு சவால்களை கையாளுகின்றனர்,  மேட்டுக்குடிகளும் ஆளும் வர்க்கங்களும் நெருக்கடியை எவ்வாறு கையாள முயல்கின்றன என்பதைப் பொறுத்தே எதிர்காலப் பாதை அமையப் போகிறது. இலங்கையில் கடந்த நான்கு தசாப்தங்களாக, மேட்டுகுடிகளின் அநியாயமான அளவு சொத்துக் குவிப்பு உள்ளிட்ட அத்துமீறல்களுக்கும் வெளிப்படையான பெருநுகர்வு வெறிக்கும் ஆடைத் தொழிற்சாலைகளிலும், தேயிலைத் தோட்டங்களிலும் உழைக்கும் மக்களும், புலம்பெயர்ந்த  தொழிலாளர்களும் முறைசாரா தொழிலாளர்களும் பெரும் துன்ப வாழ்வையே விலையாகக் கொடுத்துள்ளனர். ஆனால் இந்த பாதை அதன் எல்லையை எட்டியுள்ளது. மேலும் நமது எதிர்காலத்தின் பொருட்டு, பெருந்தொற்றுப் பேரழிவுக்குப் பின்னர், பொருளாதார நெருக்கடியினால் கொதித்தெழுந்துள்ள வர்க்கப் போராட்டம் நடந்து வருகிறது.

முதற்பதிவு: ஊடாட்டம்

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s