நேற்று உள்துறை அமைச்சர் அமித்சா – தான் இந்தியா எனும் பல்தேசிய நாட்டின், பலநூறு மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து – “இந்தி பேசாத மாநிலங்கள், தங்களின் இணைப்பு மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும். இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கும் நேரம் வந்து விட்டது” என்று பேசி இருக்கிறார். அவர் இவ்வாறு பேசக் கூடியவர் தான், ஏற்கனவே பலமுறை இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது, பாஜக அரசங்கத்தின் அனைவரும் தங்கள் பொறுப்பின் தன்மையை மறந்து, மறுத்து இந்தி குறித்து மட்டுமல்லாது எல்லா விதயங்களிலும் இவ்வாறு பேசக் கூடியவர்கள் தாம். என்றாலும் ஏன் மீண்டும் மீண்டும் இந்த இந்தித் திணிப்பு முயற்சி செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது?
பாஜக, ஆர்.எஸ்.எஸ் என்பது பார்ப்பன மேலாதிக்கத்துக்கான கட்சி அமைப்பு. இந்த அடிப்படையில் பார்ப்பனியத்துக்கு இந்தி எனும் மொழியின் மேல் அப்படி என்ன பற்று? அப்படி தனிச் சிறப்பான பற்று என்று எதுவும் இல்லை. தங்கள் மேலாதிக்கத்துக்கு பயன்படும் எதையும் ஏற்றுக் கொள்வதிலும், அவ்வாறு பயன்படாத எதையும் குப்பைக் கூடைக்கு அனுப்புவதிலும் தயக்கமே காட்டாதவர்கள் அவர்கள். மறந்து விட வேண்டாம், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஹிட்லர் வென்று கொண்டிருக்கிறார், சென்னையில் குண்டு போட்டு விட்டார் என்று தெரிந்ததும் மிக விரைவாய் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கியவர்கள் அவர்கள். கடல் தாண்டக் கூடாது என்ற விதியை தூக்கி கடலில் போட்டு விட்டு அமெரிக்கா சென்றவர்கள் அவர்கள். எனவே, இந்தி எனும் மொழிக்காக அவர்கள் செயல்படவில்லை.
இந்தியா எனும் சொல்லை எங்கும் அவர்கள் பயன்படுத்துவதில்லை, பாரதம் எனும் சொல்லையே பயன்படுத்துவார்கள். காரணம், இந்தியா என்பது மொகலாயர்கள் தந்த பெயர் என்பதால். அப்படியானால் இந்தியும் மொகலாயர்கள் தந்தது தான். என்றால் ஏன் அதை மட்டும் பிடித்துக் கொண்டு விட்டார்கள்? மொகலாயர்கள் தந்ததா என்பதை விட, தங்கள் ஆதிக்கத்துக்கு பயன்படுகிறதா என்பது தான் அவர்களுக்கு முதன்மையானது.
அகண்ட பாரதம் அதாவது ஆப்கான் தொடங்கி இலங்கை வரை தங்களுடைய ஆளுமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது அவர்கள் தங்களுக்குள் கமுக்கமாய் கொண்டிருக்கும் இலக்கு. அப்படியான அகண்ட பாரதத்தில் சாதிய படிநிலையை அலகாகக் கொண்ட சமூகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது அந்த இலக்கின் நோக்கம். இது ஆகக்கூடியது அல்ல என்பது அவர்களுக்கே புரிந்தது தான். ஆனாலும் குறைந்தளவாக தற்போதையை எல்லைக்குள் சாதியப் படிநிலையை ஒட்டிய ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த நீண்டகால இலக்கை அடைய அவர்கள் கண்டெடுத்திருக்கும் வழி கார்ப்பரேட் அடிமைத் தனம்.
பாஜக மீது, இது போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் எண்ணெய், எரிவாயு விலை உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பது, நிர்வாகத் தோல்விகளை மறைப்பது போன்றவைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மொழி, மதம் போன்ற உணர்ச்சிவயப்படக் கூடிய சிக்கல்களைக் கிளப்புகிறார்கள் என்றொரு விமர்சனம் வைக்கப்படுகிறது. இதில் உண்மை இல்லாமல் இல்லை என்றாலும், இதை அப்படியே முழு உண்மையாகவும் எடுத்துக் கொள்ள முடியாது.
இந்தியாவின் உற்பத்தி முறை என்ன என்பது ஆய்வுக்குறிய ஒன்று என்றாலும் அரைக்காலனிய நாடு எனும் வரையறையை மீளாய்வு செய்ய வேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். இந்திய தரகு முதலாளிகள் ஏகாதிபத்தியமாய் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கான எல்லா வாய்ப்பு வசதிகளையும் இந்திய அரசு செய்து கொண்டிருக்கிறது. இதில் பாஜக அரசாங்கம் தனி வேகம் காட்டுகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஒரே’ திட்டங்கள் அனைத்தும் (ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே அடையாள அட்டை, ஒரே நாடு வரி போன்ற திட்டங்கள் அனைத்தும்) இந்திய முதலாளிகள் ஏகாதிபத்திய முதலாளிகளாய் வளர்வதற்கான ஏற்பாடுகள் தாம். அவர்களின் இன்னும் வேகமான வளர்ச்சிக்கு ‘ஒரே மொழியும்’ தேவைப்படுகிறது. மாநில மொழிகள் என்பவை பகுதி அளவில் மக்கள் பேசிக் கொள்வதற்கு மட்டுமே பயன்பட வேண்டும். அலுவல் மொழி என்றால் அது ஒரே மொழியாக இருக்க வேண்டும் என்பது தான் இதன் பின்னிருக்கும் திட்டம். இதற்கு ஏற்கனவே சில மாநிலங்களின் மொழியாக இருப்பதும், எல்லா மாநிலங்களுக்கும் அறிமுகமான மொழியாக இருப்பதும், ஏற்கனவே பல மாநிலங்களில் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மொழியாக இருப்பதும் இந்தியை முன் தள்ளுகிறதே தவிர இந்திக்கு தனிச்சிறப்பு என்பதால் அல்ல. எனவே, தற்போது எழுப்பப்படும் சிக்கலின் மையம் ஆங்கிலமா, இந்தியா என்பதல்ல காரப்பரேட்டுகளின் வளர்ச்சிக்கு ஒரே மொழி தேவை என்பதே. அது தமிழாக இருந்தாலும் ஏற்க முடியாது.
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு போராட்ட வரலாறு கொண்டது. பிற மொழி மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக இருக்கும். இந்தி திணிக்கப்படாது என்பது ஒன்றிய அரசின் உறுதிமொழி. அரசியல் சாசனத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் பேசப்படும் ஆயிரத்துக்கும் அதிகமான மொழிகளில் தமிழ் உட்பட 22 மொழிகள் எட்டாவது அட்டவணையில் ஏற்கப்பட்டு அலுவல் மொழிகளாக இருக்கின்றன. அரசின் மொழி என்றோ, அலுவல் மொழி என்றோ ஒற்றை மொழி ஏற்கப்பட்டதில்லை. மரபு வழியாகவும், சட்ட வழியாகவும் இது தான் நிலை எனும் போது இந்தியை எப்படி திணிக்க முடியும்?
சட்டம் குறித்தோ, மரபு குறித்தோ என்றும் பாஜகவோ பார்ப்பனியமோ அக்கரை கொண்டதில்லை. வரலாறு நெடுக பார்ப்பனியத்தின் வரலாறு சதித்தனங்களாலும், இரக்கமற்ற நிகழ்வுகளாலும், கொடூரங்களாலும் நிரம்பி இருக்கிறது. அது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அரசின் எல்லாத் துறைகளையும் பார்ப்பனியம் தன் கொடுங்கைகளுக்குள் அடக்கிக் கொண்டு விட்டது. நீதித்துறை தொடங்கி ஊட்கங்கள் ஈறாக அனைத்து துறைகளுமே பார்ப்பனியத்துக்கு ஆதரவாக இயங்குவதே இயல்பு என்பதாக மாற்றப்பட்டு நீண்ட காலம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சட்டம் மரபின் நிலை ஒரே அலுவல் மொழிக்கு எதிராக இருக்கிறது என்பது பாஜகவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்திவிட முடியும்?
பாஜக இருப்பதும், தன்னுடைய நிலையை உறுதிப்படுத்துவதும் உழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்தான ஒன்று. மொழித் திணிப்பில் மட்டுமல்ல, பாஜக செயல்படுத்தும் ஒவ்வொன்றுமே உழைக்கும் மக்களுக்கு எதிரானது தான். எனவே, மொழித் திணிப்பு எதிராக, நீட்டுக்கு எதிராக, மதவெறிக்கு எதிராக, தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, விவசாய கொள்கைகளுக்கு எதிராக என்று தனித்தனியாக நிலைப்படு எடுக்க முடியாது. அதுவும் கூட பாஜகவுக்கு ஆதரவானதாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. பாஜகவுக்கு எதிராக, இன்னும் தெளிவாகச் சொன்னால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக அவர்களின் பலவீனமான இடத்தில் தாக்குதல் தொடுக்க வேண்டும்.
பாஜகவை பொருத்தவரை அவர்களுக்கு அரசியல் அடித்தளமோ, தத்துவ பின்னிலமோ கிடையாது. அவர்களின் ஒரே பலம் பார்ப்பனிய நலனை சதித்தனங்களால் இந்துக்களின் நலனாக மாற்றுவது தான். இந்த இடத்தில் தான் தாக்குதல் தொடுக்க வேண்டும். கடவுள் மறுப்பு பணிகள் இதற்கு கை கொடுக்காது. ஏனென்றால் அதையும் இந்துக்களை ஒன்றிணைக்க பார்ப்பனியத்தால் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்துக்கள் எனப்படுவோருக்கும் இந்துத்துவா என்று சொல்லப்படுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்துக்கள் வேறு இந்துத்துவா வேறு. இந்து எனும் மதம் பார்ப்பன நலனில் இருந்து மட்டுமே கட்டியமைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்து நலன் என்ற ஒன்று கிடையாது. என்பதை இந்து என தன்னை நம்பும் ஒவ்வொருவருக்கும் புரிய வைப்பது தான் நம்முன் நிற்கும் மிகப் பெரிய பணி. இந்தப் பணியைச் செய்யாது பாஜக எதிர்ப்பு என்பதற்கு எந்தப் பொருளும் இருக்க முடியாது.