வினாயகர் ஊர்வலங்கள் என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் என்று பொருள். கடந்த கால வரலாறு இப்படி பொருள் கொள்ளும் படியான கட்டாயத்தைத் தான் ஏற்படுத்தி இருக்கிறது. இதில் ராம நவமியும் இணைந்துள்ளது. வெறுமனே இந்து எனும் மதத்தில் நம்பிக்கையுள்ள அதேநேரம் ஆர்.எஸ்.எஸ் உருவகிக்கும் இந்து எனும் சொல்லில் நம்பிக்கையில்லாத பலருக்கு வினாயகர், ராம நவமி போன்ற மதம் தொடர்பான பெயர்களை எதிர்மறையாக உச்சரிப்பது கோபத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், அந்தக் கோபம் யார் மீது ஏற்படுகிறது என்பதில் தான் இதன் முதன்மையே அடங்கி இருக்கிறது. நீங்கள் அரசியல் லாபம் அடைவதற்காக மதம் சார்ந்த பெயர்களுக்கு ஏன் இழுக்கு ஏற்படுத்துகிறீர்கள் என்று சங்க அமைப்புகள் மீது உங்களுக்கு கேள்வி எழுந்தால் தான், நீங்கள் சமூக நேர்மையுடன் இருக்கிறீர்கள் என்று பொருள்.
இந்த ராம நவமி ஊர்வலங்களுக்கு சில இடங்களில் இஸ்லாமியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்பு அளித்திருக்கிறார்கள். எங்காவது இஸ்லாமியர்கள் குண்டு வைத்து விட்டார்கள் என்று செய்தி பரப்பப்பட்டால், இஸ்லாம் இப்படி குண்டு வைக்கச் சொல்லவில்லை என்று கூறி முஸ்லீம்கள் பதைபதைக்கிறார்கள். எங்காவது துயர நிகழ்வோ, இயற்கைப் பேரிடரோ நிகழ்ந்து விட்டால் ஓடோடிச் சென்று உதவிகள் வழங்குகிறார்கள். இது போன்றவைகளை எல்லாம் மதநல்லிணக்கம் என்று எடுத்துக் கொள்வதை விட எதிர்காலம் மீதான அச்சத்தினால் ஏற்பட்ட மதநல்லிணக்கம் என்றே கொள்ள வேண்டும்.
எதிர்காலம் மீதான அச்சம் மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து உழைக்கும் மக்கள் மீதும் படிந்திருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. அதேநேரம் இஸ்லாமியர்களுக்கு அந்த அச்சம் இரட்டையாக இருக்கிறது. அனைத்து உழைக்கும் மக்களுக்குமான அச்சத்துடன், மத வன்முறைகள் மூலம் ஏற்படும் பொருளாதார வாழ்வாதார அச்சமும் இணைந்திருக்கிறது. இதற்கு இந்த ராம நவமி நாளின் வன்முறைகள் அண்மை எடுத்துக்காட்டாய் நடத்தப்பட்டுள்ளது.
தேர்தலை எதிர்கொண்டிருக்கும் மாநிலங்களில் இந்த திட்டமிட்ட ராம நவமி வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதை குறிப்பாக கொள்ளலாம். எல்லா இடங்களிலுமே அரசு துறைகளின் வெளிப்படையான ஆதரவோடு தான் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பயிற்றுவிக்கப்பட்ட வன்முறையாளர்கள், பள்ளிவாசல்களில் காவிக் கொடியை ஏற்றுகிறார்கள், முஸ்லீம்களின் கடைகளை மட்டும் அடையாளம் கண்டு அடித்து நொறுக்குகிறார்கள், தீ வைக்கிறார்கள், இன்னும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் என்னென்ன நிகழ்த்தப்படுகின்றனவோ அத்தனை இடங்களிலும் காவலர்களும் கண்டும் காணாதது போல் நிற்கிறார்கள். இந்த ஊர்வலங்கள் காவல்துறை அனுமதியுடன் தான் நடந்தன என்றால், இது போன்ற சங்க அமைப்புகள் நடத்தும் ஊர்வலங்கள் வன்முறையில் தான் முடிந்திருக்கின்றன என்பதற்கு ஆயிரம் சான்றுகள் இருக்கும் நிலையில், முஸ்லீம்கள் இருக்கும் பகுதி வழியாக, பள்ளிவாசல்கள் வழியாக ஊர்வலம் செல்வதற்கு அனுமதி வழங்கியது ஏன்? அரசாங்க பொறுப்பில் இருப்பவர்களான அமைச்சர்களோ, முதல்வர்களோ, பிரதமரோ இந்த வன்முறைகள் குறித்து மறந்தும் கூட எதையும் கூற மறுக்கிறார்கள். ஊடகங்களோ ‘இரண்டு தரப்பினரிடையே கலவரம்’ என்கின்றன.
இது மட்டுமா? மத்திய பிரதேசத்தில் கார்கோன் நகரில் ராம நவமி வன்முறையை எதிர்த்து கல்லெடுத்து எறிந்தவர்கள் சிசிடிவி கருவிகள் மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வீடுகள் மறுநாளே புல்டோசர்களைக் கொண்டு காவல்படை துணையுடன் இடிக்கப்பட்டன. தண்டனை கொடுக்கும் அதிகாரம் காவல் துறைக்கோ கார்கோன் நகர நிர்வாகத்துக்கோ உண்டா? என்ன விசாரணை நடந்தது? வழக்கு பதியப்பட்டதா? நீதி மன்றங்களில் நிறுத்தப்பட்டார்களா? எதுவுமே இல்லை. திடீரென கனரக இடிவாகனங்களுடன் வந்து இடித்துப் போட்டு விட்டு சென்று விட்டார்கள். வன்முறையாளர்களுக்கும் இந்த அரசு அதிகாரிகளுக்கும் என்ன வித்தியாசம்? இதேபோல் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் அடையாளம் கண்டு இடிக்கப்பட்டனவா? என்று கேள்வி கேட்பது நாகரீகம் இல்லை என்பதால் விட்டு விடலாம். கல்லெறிந்தார்கள் என்று கூறிக் கொண்டு யார் வீட்டையும் முன் அறிவிப்பு இன்றி இடித்து விடலாமா? ஒருவேளை அவர்கள் கல்லெறிந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். அந்த கல்லெறிந்தவர் பொருட்டு குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான வீட்டை இடிக்கலாமா?
இன்னும், இதே ராம நவமியை முன்னிட்டு ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் ஏபிவிபி குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ராம நவமியன்று அசைவ உணவு உண்ணக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள், மீறி உண்டவர்களை (அவர்களும் இந்துக்கள் தாம்) தாக்கி இருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையில் முறையீடு செய்யப்பட்டதில் இடதுசாரியினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு ராம நவமி விழாவை தடுக்க முனைந்தார்கள் என்று காரணமும் சொல்லப்பட்டிருக்கிறது. ராமரே அசைவம் உண்டவர் தானே பின் ராமர் பிறந்த நாளில் அசைவ உணவு உண்ணக் கூடாது என்பதில் என்ன தர்க்கம் இருக்கிறது? (மட்டுமல்லாது ஜெயின் தினம், காந்தி தினம், வள்ளலார் தினம் என்று அசைவம் உண்ணக் கூடாத நாட்களின் பட்டியல் நீள்கிறது. சைவம் உயர்ந்தது, அசைவம் தாழ்ந்தது என்று அரசே திட்டமிட்டு மக்கள் மனதில் பதியவைக்கும் நிகழ்வுகள் தாம் இவை. பார்ப்பனர்களின் பண்பாட்டை பொதுவில் இருத்தும் தந்திரம்) கர்நாடகாவில் படிக்கும் இடத்தில் மத அடையாளம் எதற்கு என்று நீதி மன்றம் தடை போடுகிறது. ஆனால் ஜேஎன்யூ வில் ஒரு மத விழாவை தடுத்தார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
நிகழ்வுகளை அடுத்தடுத்து விவரித்துக் கொண்டிருப்பது தேவையற்றது, விளைவு என்ன? என்பதே முதன்மையானது. ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனிய மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்ளாத யாரும் இங்கு இருக்க முடியாது எனும் கருத்தை பொதுக் கருத்தாக பதிய வைப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல ஆயத்தமாக இருக்கிறது பார்ப்பனியம். ஒருபக்கம் கார்ப்பரேட் சேவை, மறுபக்கம் பார்ப்பனிய மேலாதிக்கம். பார்ப்பனிய மேலாதிக்கத்துக்காக இன்று நிரலில் இருப்பது தான் இஸ்லாமிய வெறுப்புணர்வை மக்களிடம் வளர்ப்பது எனும் திட்டம். இது இஸ்லாமியர்களோடு நிற்காது. அடுத்தடுத்து சிறுபான்மையினர், இடது சாரிகள் முற்போக்காளர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்று படிப்படியாக விரியும். இஸ்லாமியர்கள் தானே நமக்கென்ன எனும் எண்ணம் இங்கு இந்துக்கள் என தம்மை கருதிக் கொள்வோரிடம் பரவலாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இதை சரியாக அடையாளம் கண்டு எதிர்த்து வீழ்த்தவில்லை என்றால், அதன் தொடர்ச்சியாக இந்துக்களும் இலக்கு வைக்கப்படுவார்கள் என்பதை தவிர்க்கவே முடியாது.