தேனீர் விருந்தில் புறக்கணிப்பு சர்க்கரை

கடந்த சித்திரை முதல் தேதியன்று ஆளுனர் தமிழ்நாட்டு அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் தேனிர் விருந்து ஒன்றை அளித்தார். அந்தத் தேனீர் விருந்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் கிடக்கையை வெளிப்படுத்தும் குறியீடாக அமைந்தது. பொதுவாக ஆளுனர் எனும் பதவியின் அதிகார வரம்பு என்ன? என்பது இங்கு எப்போதும் பேசு பொருளாக இருந்து கொண்டிருக்கிறது. ஆட்டுக்கு தாடி எதற்கு? எனும் கேள்வி மக்களை ஈர்த்த கேள்வியாக இங்கு உலவியதுண்டு.

அண்மையில் மத்திய அரசா? ஒன்றிய அரசா? எது சரியான சொல் என்றொரு விவாதம் ஓடிக் கொண்டிருந்தது. அதன் பொருள் பொருத்தமான சொல்லைக் கண்டறிவதல்ல. ஒன்றிய அரசாக அரசியல் சாசனத்தில் குறிக்கப்பட்டிருக்கும் அதேநேரம் மத்திய அரசாக அறியப்பட்டிருக்கும் அரசு, மாநில உரிமைகளில் அதிகம் தலையிட்டு பறித்து வருவதன் எதிர்ப்பாக அந்த சொல் மாற்றம் குறிப்பாக உணர்த்தியது.

பாஜக ஒன்றிய அரசாக பொறுப்பேற்றதில் இருந்து மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக ஒன்றிய அரசுக்கானதாக எடுத்துக் கொண்டிருக்கிறது. கல்வி தொடங்கி மின் பகிர்மானம் வரை மாநில அட்டவணையில் இருப்பதை ஒன்றிய அட்டவணைக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது. இது வெறுமனே மாநில உரிமைகளை ஒன்றியம் பறிக்கிறது ஒன்பதாக முடித்து விட முடியாது. மாறாக, ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே இவை செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் எனும் நிலையை மாற்றி ஒற்றை தேசிய அரசாக இந்தியாவை மாற்றுவது என்பது ஆர்.எஸ்.எஸின் கனவுகளில் ஒன்று.

விளக்கமாகச் சொன்னால், இந்தியா என்பது பல கலாச்சாரங்களை, பல பண்பாட்டு பழக்க வழக்கங்களை, பல மொழிகளை, அதற்கியைந்த பல வரலாறுகளைக் கொண்டது. அந்தந்த பகுதிகளுக்கான வேர் அந்தந்தப் பகுதிகளிலேயே ஊன்றி இருக்கிறது. இதை மாற்றி, இந்தியா என்பது ஒற்றை இந்துக் கலாச்சாரத்தைக் கொண்ட, சாதிய படிநிலைகளை ஏற்று ஒழுகும் ஒற்றை பண்பாட்டைக் கொண்ட, சமஸ்கிருதத்தின் புதிய வடிவமாக இந்தி எனும் ஒற்றை மொழியைக் கொண்ட, புராண, இதிகாசங்களின் வரலாற்றை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு ஒற்றை நாடாக இந்தியாவை வடிவமைக்கும் திட்டத்துடன் இருக்கிறது ஆர்.எஸ்.எஸ். இதனுடைய தொடர்ச்சியாகத் தான் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக ஒன்றிய அரசு பறித்துக் கொண்டிருக்கிறது.

இந்த அடிப்படையில் தான் மாநில ஆளுனர்களை ஒன்றிய அரசு தனக்கு இசைவானவர்களைக் கொண்டு நிரப்பி, மாநில அரசுகளுக்கு தனித்த உரிமைகள் எதுவும் கிடையாது, ஒன்றிய அரசுக்கு கட்டுப்பட்டது தான் மாநில அரசுகள் எனும் தோற்றத்தை உருவாக்கி வருகிறது. இன்று பல மாநிலங்களில் குறிப்பாக பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுனர்களுக்கும் மாநில அரசுகளுக்குமான முரண்பாடு முற்றிக் கொண்டே இருக்கிறது. கேரளா, தெலுங்கானா, பாண்டிச்சேரி, மராத்தியம், மேற்கு வங்கம் என பல மாநிலங்களின் இதன் சுவடுகளைப் பார்க்கலாம். இதன் ஒரு பகுதியாகத் தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஆளுனராக ஆர்.என்.ரவி கொண்டு வரப்பட்டார்.

கடந்த முறை அதிமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது ஆளுனரின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது என்பதையும், தற்போது திமுக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது ஆளுனரின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும் யாருக்கும் இரண்டுக்குமான வேறுபாடு எளிதாகப் புரியும். இந்த வேறுபாடு ஆளுனருக்கும் தெரியும், திமுகவுக்கும் தெரியும். என்றாலும், தற்போது ஆளுனர் அளித்த தேனீர் விருந்தை புறக்கணித்ததன் மூலம் இந்த வேறுபாட்டை திமுக அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டிருக்கிறது.

ஒரு மரபாக ஆளுனர் அளிக்கும் தேனீர் விருந்தை மாநில அரசு புறக்கணித்ததில்லை என்றாலும், இதை வெளிப்படையாக ஆளுனருக்கும் மக்களுக்கும் நேரடியாக இன்ன காரணத்துக்காக தேனிர் விருந்தை புறக்கணிக்கிறோம் என்று அறிவித்திருப்பது மிகவும் சரியான, பொருத்தமான செயல். பத்துக்கும் மேற்பட்ட சட்ட வரைவுகள் (சிலர் 11 என்றும் சிலர் 19 என்றும் கூறுகிறார்கள்) எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்பட்டிருக்கும் சட்ட வரைவுகளை, நியமிக்கப்பட்டிருக்கும் பதிவியில் இருக்கும் நீங்கள் தடுத்து நிறுத்தி வைத்திருக்கிறீர்கள். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் செயல். எனவே, நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள இயலாது என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது திமுக.

பத்துக்கும் மேற்பட்ட சட்ட வரைவுகள் என்னென்ன என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், நீட், கூட்டுறவு, தமிழ் புத்தாண்டு உள்ளிட்டவை என்று தெரிகிறது. இவைகளில் நீட் தேர்வு குறித்த விவரங்கள் மட்டுமே வெளியில் தெரிந்திருக்கிறது. நீட் தேர்வு சரியா தவறா எனும் விவாதம் இந்த தலைப்புக்கு தேவையற்றது. ஆனால் மாநில சட்டமன்றத்தில் இயற்றி அனுப்பும் சட்ட வரைவை கையாளுவதில் ஆளுனருக்கு இருக்கும் அதிகாரம் என்ன? எனும் கேள்வி தவிர்க்க முடியாதது. மாநில சட்டமன்றம் ஒரு சட்ட வரைவை அனுப்புகிறது, அது பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது. பல நினைவூட்டல்கள், அழுத்தங்களுக்குப் பிறகு, ஆளுனர் தன்னுடைய ஐயங்களைக் குறிப்பிட்டு திருப்பி அனுப்புகிறார். பின்னர் அதையும் சட்டமன்றத்தில் விவாதித்து விளக்கங்களுடன் மீண்டும் ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்போது அந்த சட்ட வரைவை தனக்கு மேலே அதாவது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று மரபும், சட்ட வல்லுனர்களும் சொல்கிறார்கள். ஆனால் ஆளுனரோ எனக்கு இன்னும் ஐயம் தீரவில்லை, மட்டுமல்லாமல் எவ்வளவு நாளில் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்படாததால், நான் எப்போது அனுப்ப நினைக்கிறோனோ அப்போது அனுப்புவேன் என்று கூறுவது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஒரு குற்றவாளி சட்டத்தின் சந்து பொந்துகளை பயன்படுத்தி தப்பிக்க எண்ணும் உத்திக்கு இணையானது இது.

நீட் தேர்வு விதயத்தில் ஐயம் இருக்கிறது என்பதை ஒப்புக்கு சரி காணலாம், கூட்டுவு, தமிழ் புத்தாண்டு குறித்து வரைவுகளுக்கும் இன்னும் பிற வரைவுகளுக்கும் என்ன பிரச்சனை? அவைகள் ஏன் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன? இதை வெளிப்படையா சொல்ல வேண்டிய அவசியம் ஆளுனருக்கு இல்லை என்று யாரேனும் பதில் கூறுவார்களா? அப்படிக் கூறினால் தமிழ்நாட்டின் நிர்வாகத்துக்கு ஆளுனரின் அவசியம் என்ன எனும் கேள்வி எழாதா? ஆக இங்கு சிக்கல், ஆளுனருக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதில் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை ஆளுனர் மூலம் எங்களால் செயல்பட விடாமல் முடக்க முடியும் என்று காட்டுவதில் இருக்கிறது.

இதனால் திமுக அமைச்சரவை ஆளுனர் அளித்த தேனீர் விருந்தை புறக்கணித்தது சரியானது. ஆனால் அதிமுக, பாமக, போன்றவை கலந்து கொண்டது சரியா? என்றொரு கேள்வி இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின் பிற்பகுதியில் இந்தி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல விதயங்களில் அதிமுக அரசு ஒன்றிய அரசின் மனங்கோணாமல் நடந்து கொண்டது என்பது வெளிப்படை. ஏனென்றால் ஒன்றிய அரசின் உதவியின்றி ஒரு கணம் கூட அதிமுக அரசு தாக்குப் பிடித்திருந்திருக்க முடியாது.

இதை இன்னொரு கோணத்தில் கூறினால், அதிமுகவில் இருக்கும் மேல் மட்ட, இரண்டாம் கட்ட தலைவர்கள் யாருக்கும் அரசியல் தெளிவோ, தங்கள் அரசியலின் களம் குறித்த தெளிவோ இருக்கவில்லை. அதிகாரத்தை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தவிர வேறு எது குறித்தும் கவலைப் படாத கூட்டமாக அதிமுக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் 35 விழுக்காட்டுக்கு மேல் வாக்கு வங்கியை வைத்திருக்கும் ஒரு கட்சி, அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சி அரசியல் தெளிவும், தங்கள் அடித்தளம் குறித்த தெளிவும் இருந்திருந்தால், ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் ஒரு கட்சிக்கு இந்த அளவுக்கு பணிந்திருக்கத் தேவையில்லை. இதை அதிமுகவின் தோற்றத்தோடும் தொடர்புபடுத்திப் பார்க்கலாம்.

மாநில உரிமைகள் குறித்து பேசும் போது, மாநில அரசுகளுக்கோ, ஒன்றிய அரசுக்கோ தனித்த இறையாண்மையுள்ள உரிமைகள் இருக்கின்றன என்று மயக்கம் கொள்ளத் தேவையில்லை. இங்கு பேசப்படும் மாநில, ஒன்றிய உரிமைகள் அனைத்தும் இரட்டை ஆட்சி முறைக்கு உட்பட்ட அதிகாரங்களே. எனவே, திமுக எனும் கட்சி மாநில உரிமைகளுக்கு முதன்மை கொடுக்கிறது என்பதன் பொருள், தங்களின் அரசியல் களம் எனும் புரிதலுடன் அதில் நின்று களமாடுகிறது என்பது தான். மாறாக, மக்கள் நலனில் இருந்து தனித்த இறையாண்மையுள்ள மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறது என்பது அல்ல.

இந்த புரிதலுடன், ஆளுனர் மூலம் குறுக்கீடு செய்யும் ஒன்றிய அரசின் சதித்தனமான பார்ப்பனியத்துக்கு எதிராக நிற்கும் திமுகவின் புறக்கணிப்பை வரவேற்கலாம். தேர்தல் அதிகாரங்கள் இறுதியானதல்ல என்றாலும் கூட தேர்தல் அரசியலிலிருந்தும் பாஜகவை அப்புறப்படுத்துவது மக்களின் நலனோடு தொடர்புடையது என்பதில் ஐயமொன்றும் இல்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s