இந்தியா ஒற்றை தேசியமல்ல என்று சமூக அரசியல் ஆர்வமுள்ள பலரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் பார்ப்பனிய அரசியல் இந்தியாவை ஒற்றை தேசியமாக கட்டமைப்பதில் தான் அடங்கி இருக்கிறது. ஆக, இந்தியாவின் அரசியல் முரண்பாடு என்பது இந்தியா ஒற்றை தேசியமா? பல்தேசியமா? என்று தான் கூர்மைப்படுகிறது. இந்தியா பல்தேசிய நாடு தான் என்றும், அனைத்து பகுதிகளுக்கும் சம வாய்ப்பும் சம உரிமையும் கிடைப்பது உறுதி செய்யப்படும் போது தான் இந்தியா எனும் நாடு இருக்கும். இந்த புரிதலை வெகு மக்களிடம் பரவலாக்குவதற்கும், போராடத் தூண்டுவதற்கும் இந்திய ஒற்றை தேசியம் எனும் கருத்து எவ்வாறு தோன்றியது என அறிவது இன்றியமையாததாக இருக்கிறது. அந்த அறிதலுக்கு முனைவர் கோ.கேசவன் அவர்கள் எழுதி சரவண பாலு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் துணையாக இருக்கும்.
நூலிலிருந்து,
.. .. .. இந்தியப் பகுதிகளில் உபரி உழைப்பு, அரசுக்குறிய நில வாடகையாகவும், நிலப்பிரபுக்களுக்கும் பிராமணர்களுக்கும் கொடுக்கப்படும் பங்காகவும், எவ்வித ஊதியமற்ற உழைப்பாகவும் (வெட்டி எனத் தமிழில் சொல்வர்) அபகரிக்கப்படுகின்றது. திறை என்ற வடிவத்தில் உபரி உழைப்பை உண்மையான உற்பத்தியாளனிடமிருந்து அரசு வரையிலான பல ஊடகங்கள் (Agencies) பிரித்துக் கொண்டதே நமது தனித்தன்மையாகும். உபரி உழைப்பின் அபகரிப்புக்கு ஏற்றாற் போன்றேஇதற்குறிய சமூக உறவு வடிவங்கள் புலப்பட்டன. அவை, 1. சாதி, 2. கிராம சமூக அமைப்பு, 3. கொடுங்கோல் அரசு.
சாதி, வேலைப் பிரிவினையின் வடிவமாகும். இது சமூக உற்பத்தியை ஒழுங்குபடுத்தியது. ஒரு மனிதனின் தொழில், திருமணம், சமூகப்பங்கு ஆகிய அனைத்தையும் முறைப்படுத்தியது. இதைப் போன்றே கிராம சமூக அமைப்பு சாதிய உற்பத்தி உறவின் வடிவமாக இருந்தது. .. .. ..
ஒவ்வொரு கிராம சமூகமும் தன்னளவிலே நிறைவு கொள்வதனால், அடுத்த கிராம சமூகத்துடன் அதற்குத் தொடர்பில்லை. அப்படித் தொடர்பு கொள்வது அவர்களது உற்பத்திக்கு எவ்விதத்தும் பலனளிக்கவில்லை. .. .. ..
ஆனால் கொடுங்கோல் அரசோ அப்படியில்லை, படைபலம் கொண்டது. உற்பத்திக்குத் தேவையானவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிறைவு செய்யக் கூடியது. எனினும் இது ஊர், சபா போன்ற உள்ளூர் அமைப்புகளுடன் அல்லது ரெட்டி, கர்ணம் போன்ற விஜயநகரக் காலத்து அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டது. .. .. ..
படியுங்கள் .. .. புரிந்து கொள்ளுங்கள் .. .. பரப்புங்கள்