இந்தியாவின் அரசியல் பொருளாதார பாதை

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா! பகுதி 3

மிகைடாலர் அச்சடிப்பால் ஏற்கனவே எரிந்துகொண்டிருந்த விலைவாசி உயர்வு பிரச்சினையை உக்ரைன் போர் எண்ணெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்திருக்கிறது. அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை ஆயுதமாக்கும் நடவடிக்கையும் அதற்கு எதிரான ரஷ்ய – சீன நாடுகளின் சொந்த நாணய வர்த்தக மாற்று முன்னெடுப்பும் இதுவரையிலான உலக வர்த்தகக் கட்டமைப்பை உலுக்கி உடைக்க ஆரம்பித்திருக்கிறது. இது உலகம் முழுக்க விலைவாசி உயர்வு, டாலர் கடன் கொடுப்பனவுப் பற்றாக்குறை பிரச்சினைகளை ஏற்படுத்தி உள்நாட்டுக் குழப்பங்கள், போராட்டங்களை நோக்கி நகர்த்தி வருகிறது. இலங்கை இவ்வாறான பிரச்சினையில் சிக்கித் தவித்து வருகிறது. அங்கே அவரவர் தங்களது நலனை முன்னிறுத்தி காய்களை நகர்த்தி வருகிறார்கள். பாகிஸ்தானில் நேரடியாகவே அமெரிக்கா தலையிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய ஆட்சி அமெரிக்காவுக்கு அணுக்கமாக நடக்க ஆரம்பித்திருக்கிறது. அது இந்த பிராந்தியம் முழுக்க நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் சாத்தியமிருக்கிறது. சுயசார்பான பிராந்திய நாடுகளை முன்னிறுத்தி நகர்வுகளை செய்த இம்ரான்கான் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். அங்கிருக்கும் அமெரிக்க எதிர்ப்பு மனநிலையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வரவிருக்கும் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் வீதி எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

விட்டுக்கொடுத்து பிடிக்க முனையும் இந்தியா!

இந்தியாவும் இம்ரானைப்போல ரஷ்யாவுடன் சொந்த நாணய வர்த்தகம், தள்ளுபடி விலையில் எண்ணெய் இறக்குமதி எனச் சென்றது. அவரைவிட ஒருபடி மேலே சென்று சீன நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தக மாற்று என்றெல்லாம் பேசி அமெரிக்காவின் எதிர்ப்புக்கு உள்ளானது. இந்த நிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட 2+2 இந்திய – அமெரிக்க வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூட்டம், இது குறித்து விவாதிக்கும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இந்தியா, அமெரிக்காவுடனான வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம், காலநிலை, உற்பத்தி சங்கிலி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என செய்திகள் வந்தது. அது, இந்தியாவின் நோக்கம்… சூரிய மின்னாற்றல் தொழில்நுட்ப உற்பத்தி சங்கிலி என்பதை குறிப்பால் உணர்த்தியது. சீனப் பொருட்களின் மீதான வரிவிலக்கில் சூரிய மின் தகடுகள் இடம்பெறாதது… அது இந்தியாவுக்குக் கொடுக்கப்படுமா? பதிலாக இந்தியா எல்லாவற்றையும் கொடுத்து சரணடையுமா? போன்ற கேள்விகளை எழுப்பியது.

அமெரிக்க ஆயுத நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்பு, வான்வழி இணையக் கூட்டு ஆகியவை ஏற்கப்பட்டதாகச் சொன்னார்கள். அதாவது, ரஷ்ய ஆயுத சந்தை, விண்வெளி கூட்டை அமெரிக்காவுக்குக் கொடுத்து ஜியோவுக்கோ, ஏர்டெல்லுக்கோ வான்வழி இணைய செயற்கைக்கோள் கட்டமைப்பை ஏற்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். எதிர்பார்த்த சூரிய மின்னாற்றல் தொழில்நுட்ப உற்பத்தி சங்கிலி கிடைக்கவில்லை. ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து நிலக்கரி இறக்குமதியை ஒன்றியம் கூட்டி இருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு இல்லாத இந்திய உணவுப்பொருள் ஏற்றுமதிக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஆட்சேபித்த அனைத்தையும் இந்தியா நிறுத்தி இருக்கிறது. ஆனால், ரஷ்யாவை இந்தியா கண்டிக்க மறுத்துவிட்டது. சுருக்கமாக, பொருளாதார பலன்களை விட்டுக்கொடுத்து அரசியல் நிலைப்பாட்டை இந்தியா தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இதைப் பயன்படுத்த இப்போது சேமித்து (Hedging) வைக்கிறது. முழுமையான அடிபணிதலுக்குக் குறைவான எதையும் அமெரிக்கர்கள் ஏற்றதாக அவர்களின் ஆதிக்க அகராதியில் இல்லையே!

இறுகும் இந்தியாவின் மீதான பிடி!

இந்தியாவில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகளை தாங்கள் கவனித்து வருவதாக எதிர்பார்த்தது போலவே பாஜகவை வழிக்குக் கொண்டுவர, இந்த ஆயுதத்தை அமெரிக்கா கையில் எடுத்திருக்கிறது. அதுமட்டுமல்ல… சீனாவின் ஹோவாவெய் நிறுவனத்துக்கு என்ன நடந்தது என்பதை இந்தியா சற்று யோசித்துக் கொள்ளட்டும் என அந்நாட்டு பத்திரிகைகள் மிரட்டல் விடுக்கின்றன. அவர்கள் யாரை குறிவைக்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானது அல்ல. அவர்கள் அம்பானி – அதானி மீது கைவைத்தால் இவர்கள் அமேசான் – வால்மார்ட் மீது கைவைப்பார்கள். இவர்கள் இருவரையும் வழிக்குக் கொண்டுவர எந்த காய்களை நகர்த்தி ஆட வேண்டும் என இந்திய எதிர்க்கட்சிகளுக்கு இதைவிட தெளிவாக புரியவைக்க முடியாது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டு மூலதனம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. டாலர் கையிருப்பும் வேகமாகக் குறைவதாகச் செய்திகள் வருகின்றன. ஒன்றியத்தின் அடுத்த அரசியல் நகர்வு என்ன என்பதை வரவிருக்கும் பிரிக்ஸ், எஸ்சிஒ (SCO) கூட்டங்களின் மூலம் தெரியவரலாம்.

காங்கிரஸின் காரியவாத நிலைப்பாடு!

இந்திய மக்களை பாதிக்கும் இந்த நகர்வுகளை எல்லாம் பெரும்பாலான இந்திய எதிர்க்கட்சிகள் தமது எல்லைக்கு அப்பாற்பட்டது என பார்ப்பதாகவே தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம், ‘ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை இந்தியா கண்டிக்க வேண்டும்’ என்று கட்டுரை எழுதுகிறார். இந்திய – சீன எல்லைப் பிரச்சினையை உக்ரைன் – ரஷ்ய எல்லைப் பிரச்சினையுடனும், விலைவாசி உயர்வை இலங்கையுடனும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசுகிறார். தாங்கள் தேர்தல்களில் வெற்றிபெற முடியாமைக்கு காரணம் ஊடக பலமின்றி இருப்பதுதான் என்றும் கூடுதலாகச் சொல்கிறார். இதன் மூலம் யாருக்கு என்ன செய்தியை இவர்கள் சொல்கிறார்கள்? மற்ற நாடுகள் எல்லாம் நடுநிலை காப்பதன் அரசியல், சிதம்பரம் அறியாததா? இல்லை… நேருகாலம் முதல் இந்தியா சார்பற்ற கொள்கையைக் கொண்டிருப்பது மறந்துவிட்டதா? இல்லை… காங்கிரஸ் அதைக் கைவிடுவதாக அறிவிக்கிறாரா?

இந்திய – சீன எல்லை பிரச்சினையை ரஷ்ய – உக்ரைனியர்களைப் போன்று மற்றவரின் தூண்டுதலின்பேரில் அவர்களின் துணையுடன் இந்திய – சீனர்கள் போரில் உயிரைவிட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்கிறாரா ராகுல்? விலைவாசி பிரச்சினை பாஜகவை பதவியில் இருந்து நீக்கினால் மறைந்து விடுமா? அமெரிக்காவின் Taper Tandrum வந்ததால்தான் 2014இல் தாங்கள் பதவி இழக்க நேரிட்டது என சிதம்பரமே ஒரு கூட்டத்தில் கூறுகிறார். அது உண்மை என்றால் இப்போதைய சூழல் அதிலிருந்து எந்த வகையில் மாறுபட்டது? ஆக, எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பதிலாக பாஜகவைப் போன்று இவர்களும் அதை வைத்து குளிர்காய நினைப்பதாகத்தான் தெரிகிறது. பாஜகவைவிட ஒருபடி மேலே சென்று அவர்கள் சீனாவைத்தான் எதிர்க்கிறார்கள்; நாங்கள் ரஷ்யாவையும் சேர்த்து எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டை அறிவிப்பதாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மாபெரும் மாற்றங்கள் கோருவது மாற்றுப்பாதை!

‘மாற்று அரசியல்’ என்பது ‘அவர்களைவிட நாங்கள் ஒருபடி மேலே சென்று சேவை செய்வோம்’ என்று சொல்வதல்ல. மக்களின் நலனை மானுடத்தை அமைதியை முன்னிறுத்தி எல்லா போர்களையும் நாங்கள் எதிர்க்கிறோம்; இந்திய எல்லைப் பிரச்சினைகள் உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்பட வேண்டும்; இந்தியாவின் குவாடு, ஐரோப்பாவின் நேட்டோ என எந்த நாட்டுக்கும் எதிரான ராணுவக் கூட்டையும் எதிர்க்கிறோம் என தனக்கொன்றும் பிறருக்கு வேறொன்றும் என்றில்லாமல் எல்லோருக்கும் பொதுவாக முரணற்ற நிலைப்பாட்டை முன்வைப்பது. பனிப்போர் காலத்தில்கூட மற்ற நாடுகளின் உதவியை இந்தியா பெற்றதே தவிர, யாருடனும் ராணுவக்கூட்டைக் கட்டிக்கொண்டு மற்ற நாடு நம்மை வழிநடத்த நமது பாதையை நிர்ணயிக்க அனுமதிக்கவில்லை. நாம் இழந்து கொண்டிருக்கும் இறையாண்மையையும் சுயசார்பையும் மீட்கும் பாதையில் செல்வது; நடப்பு பிரச்சினைக்கு மாறும் உலக அரசியல் பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு மாற்று பொருளாதார திட்டத்தை வகுத்துக்கொண்டு அதை முன்னெடுக்க அறைகூவல் விடுப்பதுதான் மாற்று அரசியல்.

சீனாவின் தயவின்றி அமெரிக்காவே இயங்கவியலாது என்ற யதார்த்தம்தான் அவர்களுடன் இணக்கமாகச் செல்ல வைத்திருக்கிறது. அவர்களுடன் முரண்பட்டு நம்மால் எத்தனை நாள் ஓட்ட முடியும். அவர்களுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தால்தான் அங்கிருக்கும் நிறுவனங்கள் இங்கு வரும் என்பது கற்பிதம். அங்கே தொழிலாளர்களின் கூலி உயர்ந்து கொண்டிருக்கிறது. சீன நிறுவனங்களுடன் இவர்களால் போட்டியிட்டு வெல்ல முடியாத யதார்த்தம் முன்பு ஜப்பானில் இருந்து சீனாவுக்கு இடம்பெயர்ந்ததைப்போல இப்போது இந்தியாவுக்கு நகர வைக்கிறது. குறைகூலி தொழிலாளர்களும், மலிவான வளங்களையும் கொண்ட, எந்த போட்டியுமற்ற, எதைச் சொன்னாலும் செய்யும் அரசுகளைக் கொண்ட இந்தியாவுக்கு வராமல் அவர்கள் எங்கு போகப் போகிறார்கள்? தேவையில்லாமல் எதற்கு நாம் சீனர்களுடன் முட்டிமோதிக்கொள்ள வேண்டும்? உற்பத்தியை அவரவர் நாட்டுக்கு கொண்டு செல்லும் இந்தச் சூழலில் ஏற்றுமதியை நம்பிய பொருளாதார கொள்கையில் மேலும் மேலும் நாட்டை செலுத்துவது எந்த வகையில் சரியானது?

மாறும் சூழலுக்கு ஏற்ப காங்கிரஸ் மாறாமல் இன்னும் பழங்கால பண்ணையார்களையும் முதல் மூவர்ணத்தையும் கொண்டு கட்சியை நடத்துவது; கைவிட்டுப்போன ஆதிக்கச் சாதிகளை விடுத்து அதற்கு வெளியில் உள்ளவர்களை அணி திரட்டாமல் தாய் அமைப்புடன் இணைந்து விட்டவர்களை மீண்டும் இழுக்க அரை இந்துத்துவ நடவடிக்கைகளில் ஈடுபடுவது; பன்மைத்துவம், கூட்டாட்சி என வாய்ப்பந்தல் போட்டுவிட்டு இன்னும் டெல்லியில் இருந்து கொண்டு அந்தந்த மாநில தனித்துவத்தைப் புரிந்துகொள்ளாமல் எல்லா மாநிலங்கள் தொடர்பான முடிவுகளையும் எடுப்பது போன்றவற்றை மாற்றாமல், ஊடக பலம் இல்லாததுதான் காரணம் என ராகுல் சொல்வது வெறும் சாக்கு. பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி பகத்சிங், அம்பேத்கர் படத்தை வைக்கப்போவதாக அறிவிக்கிறார். அந்த மாநில மக்களை, சூழலை எந்த அளவுக்கு அவர்கள் புரிந்திருக்கிறார்கள் என்பதை அது காட்டுகிறது. ஆகவே, கால மாற்றம் கோரும் கொள்கை மற்றும் கட்சி மாற்றத்தைச் செய்து மக்கள் ஆதரவுடன் சொந்த பலத்துடன் ஆட்சிக்கு வருவது குறித்து காங்கிரஸ் சிந்திக்க வேண்டும். அதுவல்லாமல் வெளியில் இருந்துவரும் ஆதரவில் அவர்களின் ஊடக பலத்தில் ஆட்சியைப் பிடிக்க நினைப்பது இப்போதோ? எப்போதோ? என இழுத்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இறுதிச் சடங்கு செய்வதோடு இவர்களோடு செல்பவர்களையும் புதைகுழியில் இழுத்துச் செல்லும் ஆபத்தும் இதில் இருக்கிறது.

நிறைவுற்றது

பாஸ்கர் செல்வராஜ்

முதற்பதிவு : மின்னம்பலம்

முந்திய பதிவுகள்:

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா 1

நிலைகுலைக்கப்படும் தெற்காசியா 2

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s