செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்

கடந்த 29ம் தேதி மதுரையில் செஞ்சட்டைப் பேரனி மீகச் சிறப்பாய் நடந்து முடிந்திருக்கிறது. பல்லாயிரக் கணக்கான மக்கள் சிவப்பு சட்டையணிந்து கலந்து கொண்டது மிகுந்த உவகையூட்டக் கூடியதாக இருந்தது. இது இடதுசாரிகள் நடத்திய பேரணி அல்ல. கருப்புச் சட்டைகள் முன்னின்று நடத்திய செஞ்சட்டைப் பேரணி. சிவப்பு, கருப்பு, நீலம் மூன்றும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பது ஆசையாகவும், கருத்தியலாகவும் இங்கு நீண்ட காலமாக நிலவில் இருக்கிறது. அதற்கு இது பெருந் தொடக்கமாக இருக்க வேண்டும்.

இந்தப் பேரணி குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே சமூக ஊடகங்களில் இதற்கெதிரான நச்சுப் பரப்புரைகள் தொடங்கி விட்டன. ஏற்கனவே இங்கு இருக்கும் மார்க்ஸா? அம்பேத்கரா? எனும் முரண்பாடு கூர்தீட்டப்பட்டது. பெரியார் சீர்திருத்தவாதி தானே என்று வலை விரிக்கப்பட்டது. அனைத்தையும் கடந்து இந்தப் பேரணி வெற்றிகரமாக நடந்திட உழைத்த அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

பார்ப்பன பாசிச அதிகாரம் தன் எல்லைகளை மிக விரைவாக விரிவடையச் செய்து வருகிறது. அது தேர்தல் வழியிலான அதிகாரத்துடன் மட்டுமல்லாமல் பல திசைகளிலும் தன் கொடுங்கைகளை விரித்திருக்கிறது. இதற்கான எதிர்வினைகள் அதற்கு ஈடான பரந்த தளத்திலும், பலத்துடனும் நடப்பதில்லை. இந்த போதாமை மிக நீண்ட காலமாக இருப்பது தான் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளில் பார்ப்பனிய பாசிசம் தன் அதிகாரத்தையும், பலத்தையும், வேகத்தையும், தளங்களையும் பல மடங்கு அதிகப்படுத்தி இருக்கிறது. இதனுடன் ஒப்பிட்டால் அதற்கான எதிர்வினை போதுமான அளவில் இல்லை. தெளிவாகச் சொன்னால் மிகமிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. இது தான் இங்கே கள நிலமை.

மட்டுமல்லாமல், பார்ப்பனியம் தன் முழு பலத்தையும், சாதிய படிநிலையின்படி மக்களை ஒழுகச் செய்வதில் செலவிட்டு வருகிறது. பார்ப்பனியத்துக்கு ஆட்படாத எளிய மக்களையும் தன் கருத்தியலுக்குள் கொண்டுவருவதில் மெல்ல மெல்ல வெற்றியடைந்து வருகிறது. இதற்கு நேரெதிராக தன்னை எதிர்ப்பவர்களை ஒன்றிணைய விடாமல் பிரித்து வைத்து தனித்தனியாக செயல்பட வைப்பதிலும் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டு வருகிறது.

இந்த அடிப்படைகளிலிருந்து தான் நடந்து முடிந்த செஞ்சட்டைப் பேரணியின் முதன்மைத்தனம் துலக்கமாகிறது. ஆனால், இந்த முதன்மைத்தனம் கள புரிதல்களோடும், தேர்தல் அரசியல் தெளிவுகளோடும் மட்டுமே முடிந்து விடுவது இது நீடித்திருக்க உதவாது. மெய்யியல் புரிதல்களோடு இணையும் போது தான் இந்தப் பேரணியின் நோக்கம் உறுதியுடனும், நீடித்தும் இருக்கும்.

முதலில் இந்த பேரணியின் முழக்கமாக, “வர்க்க வருண ஆதிக்க எதிர்ப்பு மாநாடு” என்று இருக்கிறது. இதன் பொருள் என்ன? வருணத்தை ஆதிக்கத்தை எதிர்ப்பது போல் வர்க்கத்தை எதிர்க்கிறார்களா? வர்க்கத்தை எதிர்க்கவில்லை வர்க்க ஆதிக்கத்தைத் தான் எதிர்க்கிறோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் சோசலிசம் என்பது பாட்டாளி வர்க்க ஆதிக்கம் தான். முதலாளி வர்க்க ஆதிக்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்க ஆதிக்கத்தை நிறுவ விழைகிறோம். முதலாளி வர்க்க ஒன்றிணைவை, முதலாளி வர்க்க ஆதிக்கத்தை தான் எதிர்க்கிறோமே தவிர பாட்டாளி வர்க்க ஒன்றிணைவை, பாட்டாளி வர்க்க ஆதிக்கத்தை எதிர்க்கவில்லை. பொதுவாக வர்க்கத்தை எதிர்க்கிறோம் என்று கூறிக் கொண்டு செஞ்சட்டைப் பேரணி நடந்திட முடியாது. தொடர்புடையவர்கள் இதை விளங்கிக் கொள்வதும், விளக்குவதும் தேவையாக இருக்கிறது.

அடுத்து, இந்த பேரணி குறித்த அறிவிப்பு வெளியானதும் அம்பேத்கரையும், பெரியாரையும் மார்க்சுக்கு எதிராக நிறுத்துவது தொடங்கி விரைந்தது. பார்ப்பனிய பாசிசத்துக்கும், நடுநிலை என்று தங்களைக் காட்டிக் கொள்வோருக்கும் இது உவப்பாகவே இருந்தது. இதற்கு அடிப்படைக் காரணம் ஒன்று உண்டு. அடையாள அரசியல் மார்க்சியத்துக்கு எதிரானது எனும் பேருண்மை தான் அந்த அடிப்படை. மார்க்சியம் முரண் வர்க்கங்கள் தங்களுக்குள் கொள்ளும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. அடையாள அரசியலானது வர்க்கங்களை மறுத்து, வர்க்கங்களைக் கடந்த இனம், மொழி, மதம், தேசம் போன்ற அடையாளங்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது. வர்க்க ஒற்றுமை ஏற்படக் கூடாது எனும் அடிப்படையில் தான் அடையாள ஒற்றுமை முன்னிருத்தப்பட்டது. உலக அரங்கில் அடையாள அரசியல் எனும் வகையினம் தோன்றியதும் வளர்ந்ததும் மார்க்சியத்துக்கு எதிராகத் தானே தவிர வேறெதற்காகவும் அல்ல.

உலகம் முழுவதும் அடையாள அரசியல் மார்க்சியத்துக்கு எதிராகத் தான் செயல்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்தியப் பகுதிகள் மட்டும் இதில் விதி விலக்கு. முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில் அடையாள அரசியல் ஒருபோதும் மார்க்சியத்துக்கு அணுக்கமாக இருக்கவே முடியாது. ஏனென்றால் வர்க்க அரசியலில் இளைஞர்கள், மக்கள் ஈர்க்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, அவர்கள் உட்பட்டிருக்கும் ஏதேனும் ஓர் அடையாளத்தை முன்னிருத்தி அரசியல் செய்வது மாற்று அரசியலாக வர்க்க அரசியலின் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. உலகம் முழுவதும் இது தான் நிலை.

ஆனால், இந்தியப் பகுதிகளில் எல்லாவற்றையும் விட துலக்கமாக சாதியப் படிநிலை முதன்மைப்பட்டிருப்பதால் வர்க்க அரசியலும், சாதியப்படிநிலையை எதிர்க்கும் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களின் அடையாளங்களை முன்னிருத்தி செய்யும் அரசியலும் ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இந்த அடிப்படையில் தான் இந்தியாவில் மார்க்சியமும், அம்பேதகரியமும், பெரியாரியமும் தங்களின் அரசியல் எதிரியாக பார்ப்பன பாசிசத்தைக் கொண்டிருக்கின்றன. இது தான் இந்தியாவைப் பொருத்தவரை மார்க்சியமும், அடையாள அரசியலும் ஒன்றிணையும் புள்ளி. அடையாளர அரசியல் கரைந்து கரைந்து வர்க்க அரசியலோடு கலக்க வேண்டும்.

இந்தப் புரிதல் இல்லை என்றால் எண்ணிக்கை பலம், பொருளாதார பலம், அதிகார பலம் சார்ந்து கவனச் சிதறல்களும், குழப்பங்களும் ஏற்படும். எனவே, பேரணி, மாநாடு என ஒரு நாளுடன் இது முடிந்து போய் விடாமல் இருக்க, இந்தக் கூட்டை ஐய்க்கிய முன்னணியாக உருவாக்க வேண்டும். அது தான் பார்ப்பனிய பாசிசத்துக்கு சாவுமணி அடிக்கும்.

One thought on “செஞ்சட்டைப் பேரணியின் பின்னால்

  1. நீங்கள் எவ்வளவுதான் ஆசைப்பட்டாலும் இது பயனற்றதோடு எதிரானது என்பதையும் காலம் காட்டும். அருகருகில் நிற்பதால் அய்க்கியம் வந்துவிடாது. இடைநிலைச் சாதிகளின் ஆதிக்கத்தை பார்ப்னியத்தின் செயல்பாடாக இவர்கள் கருதுவதில்லை. ஐக்கியம் என்ற போர்வையில் மார்க்சியத்தை நீர்த்துப் போகவைக்க முயல்கிறார்கள். கருப்பும் நீலமும் எதுவும் சாதிக்க முடியாது. நாற்பது அமைப்புகளுக்குள்ளேயே கொள்கை மற்றும் சித்தாந்தப் புரிதல்
    எதுவும் கிடையாது. நீங்கள் உணர்ச்சிமயமாகப் பரிசீலிக்கிறீர்கள் தோழர்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s