அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இஸ்லாம் மத தூதர் முகம்மது நபியை அவதூறாக பேசிவிட்டார் என்பதற்கான எதிர்வினைகள். கூடவே, தில்லி பாஜக விலுள்ள நவீன் குமார் ஜிந்தால் என்பவரும் இதே போல் தூதருக்கு எதிராக துவிட்டரில் கீச்சு ஒன்றை வெளியிட்டாராம்.
இவைகளெல்லாம் வழக்கமாக இங்கு நடந்து கொண்டிருப்பவை தானே. பாஜகவினர் வாயிலிருந்து வருவதெல்லாம் இஸ்லாமிய வெறுப்பு தானே. பார்ப்பன அரசியலே இஸ்லாமியர்களை எதிரிகளாக சித்தரித்து அதன் மூலம் இந்து என கருதப்படுவோரை தங்கள் நோக்கத்துக்காக ஒருங்கிணைப்பது தானே. அண்மையில் ஒரு மாநாடே நடத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக நச்சை கக்கினார்களே. மாட்டுக்கறி வைத்திருந்தார் எனக் கூறி அடித்துக் கொல்வது, முஸ்லீம் போல இருந்தார் என்று அடித்துக் கொல்வது தொடங்கி பள்ளிவாசல்களை கைப்பற்றிக் கொள்வது வரை பாஜகவின் அரசியல் நடவடிக்கைகள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதை நோக்கித் தானே இருக்கிறது.
சிஏஏ சட்ட வரைவு கொண்டு வந்த போது, இஸ்லாமிய மண விலக்கு சட்ட திருத்தத்தின் போது, அடித்துக் கொல்வது தொடர்கதை ஆனபோது, பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு சட்ட அங்கீகரம் பெற்ற போது, முகத்திரை சிக்கலின் போது, கலவரம் செய்த போது, கலவரத்தை எதிர்த்தவர்கள் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தரை மட்டமாக்கிய போது, இன்னும் இஸ்லாம் குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் அவதூறாக பேசி இழிவுபடுத்திய போது, இன்னும் என்னவெல்லாமோ நடந்த போது, வெளிப்படாத போபமும் கலவரமும் இந்த முறை தொலைக்காட்சியில் பேசியவுடன் வந்துவிட்டதா? மறுநாளே உபி கான்பூரில் கலவரம் வெடித்தது. அதையும் காவல் துறை உடனே அடக்கியும் விட்டது. இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது .. ..?
அது மட்டுமா? முஸ்லீம்களுக்கு எதிராக கொடூரங்கள் இழைக்கப்படும் போதெல்லாம் கடப்பாறையை முழுங்கிய கள்ளனைப் போல் கமுக்கமாக இருக்கும் அரசும், பாஜகவும் இந்த முறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறதே எப்படி? தொடர்புடைய இரண்டு பேரையும் கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறது. அரபு நாட்டு இந்தியத் தூதர்கள் விளக்கத்துக்கு மேல் விளக்கமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து மத நம்பிக்கைகளையும் நாங்கள் சமமாகவே மதிக்கிறோம் என்று அரசு பசப்புகிறது. என்ன நடக்கிறது இங்கு?
உலகில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பல கொடூரங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. எண்ணெய் வணிகம் டாலருக்கு எதிராக திரும்பும் என்றதும் ஈரான், ஈராக் எனும் இரண்டு நாடுகளையும் சிதைத்து முஸ்லீம்களை கொத்துக் கொத்தாக கொன்று போட்ட போது, சிரியாவை சின்னாபின்னப்படுத்தி முஸ்லீம்களை கொன்ற போது, லிபியாவில் குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் கொன்றொழித்த போது, எந்த எதிர்வினையையும் செய்யாத அரபு உலகம், இப்போது இந்திய பொருட்களை வாங்க மாட்டோம் என்று புறக்கணிக்கும் அளவுக்கு சென்றது எப்படி?
எதிர்வரும் தேர்தலில் முஸ்லீம்களின் மீதான, இஸ்லாத்தின் மீதான தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவது தான் தங்களின் தேர்தல் உத்தி என்பதை தன் நடவடிக்கைகள் மூலம் பாஜக முன்பே வெளிப்படுத்தி விட்டது. இதற்கு அரபு நாடுகளின் ஆசியும் உண்டு. ஒரு பக்கம் முஸ்லீகளும் இஸ்லாமும் தாக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அதே வேளையில் மறுபக்கம் இந்தியாவுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தங்கள் எந்த உறுத்தலும் இல்லாமல் கையெழுத்திடப்பட்டன. அரபு ஆட்சியாளர்களுக்கு இஸ்லாம் என்பதை விட வணிக நலன் என்பதே முதன்மையானது. இல்லயென்றால் இஸ்ரேலுடனேயே ஒப்பந்தங்கள் போடுவார்களா?
எனவே, தற்போது, அரபு நாடுகள் செய்திருக்கும் எதிர்வினைகளும், இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகளும் அறியாத ஏதோ ஒரு நாடகத்தின் வெவ்வேறு இரண்டு காட்சிகள் எனக் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும். ஆனால் சமூக ஊடகங்களில் முஸ்லீம்கள் வெளிப்படுத்தி வரும் உணர்வுகளை மகிழ்வை கண்டு பரிதாபமாக இருக்கிறது. இந்தியாவின் இஸ்லாமிய விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அரபு உலகம் வெகுண்டு எழுந்து விட்டது என்றும், அதற்கு பாஜக அரசு பணிந்து விட்டது என்றும் முஸ்லீம்கள் விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.
இது இரண்டுவித விளைவுகளை ஏற்படுத்தும். நம்முடைய உள்நாட்டு விவகாரத்தில் இஸ்லாமிய நாடுகள் அளவுக்கு மீறி தலையிடுகின்றன எனும் எண்ணத்தை, – இந்து என்பதனாலேயே இலேசான இந்துதுவ சாயலைக் கொண்டிருக்கும் – மக்களிடம் இது அழுத்தமாக ஏற்படுத்தும். பாஜக அரசு முஸ்லீம்களுக்கு எதிராக அடுத்த பயங்கரவாத தாக்குதலை தொடுக்கும் போது, அரபு நாடுகள் தலையிட்டால் தடுத்துவிடலாம் என்று அரபு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கும் எண்ணத்தை இது முஸ்லீகளிடம் ஏற்படுத்தும். அதாவது எதிர்ப்புத் தெரிவிப்பது, போராடுவது போன்றவைகளை விட அரபு நாடுகளிடம் லாபி செய்வது எளிதானது எனும் எண்ணத்தை முஸ்லீம்களிடம் ஏற்படுத்தும். இரண்டுமே ஆபத்தானவை.
இந்தியாவின் பன்மைத் தன்மை இதுவரை கொஞ்சமேனும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால் அது போராட்டங்களினால் தான். ஒரு சிக்கலை அரசியல் ரீதியாக புரிந்து கொண்டு ஒன்றிணைவதும், பொருத்தமான வடிவங்களில் எதிர்த்துப் போராடுவதும் தான் அந்த சிக்கலை தீர்ப்பதற்கான வழி. அதற்கு பொருத்தமானவர்கள் முற்போக்காளர்களும் இடதுசாரிகளும் தானே தவிர ஒருபோதும் இன்னொரு நாட்டு ஆட்சியாளர்கள் (அரபு நாட்டு ஆட்சியாளர்கள்) அல்லர். இது போன்ற பல கொடூரங்களை தங்களின் வணிக நலனுக்காக கடந்து சென்றவர்கள் அவர்கள். மட்டுமல்லாமல் இந்தோனேசியா, நஜ்ரான் (சௌதி அரேபியா) என்று தங்களை அரசியல் ரீதியாக எதிர்க்கிறார்கள் என்பதற்காகவே தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்கத் தயங்காதவர்கள். புரிந்து கொள்வதே முஸ்லீம்களுக்கு பயன் தரும்.