
கடந்த வெள்ளியன்று (03.062022) கடையநல்லூரில் சிறப்புத் தொழுகை (ஜும்ஆ) முடிந்த பிறகு நோட்டீஸ் ஒன்று கடையநல்லூர் இஸ்லாமிய இளைஞர்கள் என்ற பெயரில் விளம்பப்பட்டது. (அந்த அறிவித்தாள்(நோட்டீசு) கீழே இணைக்கப்பட்டுள்ளது) இது போன்ற பரப்புதல்கள் செய்யப்படுவது இது முதல் முறையல்ல. பலமுறை இது போல் விளம்பப்படுவதும் விவாதிக்கப்படுவதும் நடந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. புரிதலற்று, சமூகக் காரணங்களை ஆராயாமல், மேலெழுந்தவாரியாக பிதற்றுவது தான் இது போன்ற அறிவித்தாள்களின் உள்ளடக்கமாக இருந்திருக்கிறது. இந்த அறிவித்தாளிலும் அதுவே வெளிப்படுகிறது.
கடையநல்லூர் நகரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் இது போன்ற விதயங்கள் எப்போதுமே பேசு பொருளாகவே இருக்கிறது. மதம் சார்ந்த பேச்சுகளையும், பெண்களின் ஒழுக்கத்தையும் தவிர வேறு எதுவும் இல்லை என்ற கண்ணோட்டம் இங்கு வெகுவாக ஊறி இருக்கிறது. தவிரவும் சமூக, அரசியல் விவரங்களைக் கூட மதத்தின் வழியாக, மதவாத அமைப்புகள் வழியாக முன்வைப்பதே இங்கு வழக்கமாகவும், பழக்கமாகவும் இருக்கிறது. இந்த அறிவித்தாளிலும் கூட பெண்களின் ஒழுக்கக்கேடு என அவர்கள் கருதுவதை மதத்தின் வழியாகவே கூறியிருக்கிறார்கள்.
முன்பு இது போன்று வெளியிடப்பட்ட ஓர் அறிவித்தாளில், பெண்களுக்கு திறன்பேசி(ஸ்மார்ட் போன்) கொடுக்கக் கூடாது, கல்லூரிகளுக்கு அனுப்பக் கூடாது என்றெல்லாம் கண்டிப்புகள் அறிவிக்கப்பட அது விவாதத்தைக் கிளப்பியது. நல்வாய்ப்பாக யாரும் அதை பின்பற்றவில்லை. என்றாலும், இது போன்ற முடிவுகளை பொது வெளியில் அறிவிக்கும் அளவுக்கு அவர்கள் சமூகத் துணிவைக் கொண்டிருக்கிறார்களே, அது கவனிக்கத் தக்கது.
பெண்கள் காதலிக்கிறார்கள், அந்தக் காதலை ஏற்றுக் கொள்ளவோ, குறைந்தளவாக அதை மீளாய்வு செய்யவோ கூட குடும்பத்தில் யாரும் ஆயத்தமாக இல்லாத போது தங்கள் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி மண வாழ்வை அமைத்துக் கொள்கிறார்கள். பெண்களிடம் எந்த அனுமதியும் கோராமல் கட்டாயத் திருமணம் செய்து வைத்து, வாய்த்த கணவனும் புரிந்து கொள்ளாமலும், ஆணாதிக்கத் திணிப்புகளுடனும் அமைந்து விடும் சூழலில் தவிர்க்கவே முடியாத போது மணவாழ்வை உதறிவிட்டுச் செல்கிறார்கள். இவைகளை பெண்களின் ஒழுக்க மீறல்களாகவும், மானக் கேடானவைகளாகவும் வகைப்படுத்துகிறார்கள் அந்த இஸ்லாமிய இளைஞர்கள்(!). மட்டுமல்லாமல் அணமையில் கலப்பு மணத்தை அதாவது முஸ்லீமும் மாற்று மதத்தினரும் இணையும் திருமணத்தை வெகு சிலர் அனுமதித்து நடத்தியும் வைக்கிறார்கள். இதையும் ஒழுக்கக் கேடாகவும், பெரும் ஆபத்தானதாகவும் பார்க்கிறார்கள் அந்த இளைஞர்கள்(!).
மேற்கண்டவைகள் போன்ற பெண்களின் செயல்பாடுகளில் சில தவறுகளும் நடந்திருக்கின்றன. அதை மறுப்பதற்கில்லை. அந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி காதலிப்பதே தவறு என்று கூறுவதை நாகரீக சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? பெற்றோர்கள் நிச்சயம் செய்து நடத்தி வைக்கும் திருமணங்களில் கூட நிறைய தவறுகள் நடக்கின்றன. அதனால் திருமணமே தவறு என்று கூறுவார்களா? இந்த இளைஞர்கள்(!).
பெண்களின் ஒழுக்கக் கேடு, மானக் கேடு என்று எகிறிக் குதிக்கும் இந்த இளஞர்கள்(!) இந்த ஒவ்வொரு கேட்டிலும் தொடர்புடைய ஆண்கள் குறித்து என்ன கூறுவார்கள்? இதுவரை என்ன கூறியிருக்கிறார்கள்? ஆண்கள் பலதார வேட்கையுடன் ஓநாய்கள் போல் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதில் பல பெண்கள் குதறப்பட்டு வேட்டையாடப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து இந்த இஸ்லாஆஆஆமிய இளஞர்கள்(!) எத்தனை அறிவித்தாள்களை வெளியிட்டிருக்கிறார்கள்?
கடையநல்லூரின் இஸ்லாமிய மக்கட்தொகை என்ன? அந்த மக்கட்தொகையில் எத்தனை விழுக்காடு திருமணங்கள் இது போன்று கலப்பு மணங்களாக நடக்கின்றன? ஓரிரு திருமணங்கள் நடக்கும் போதே வயிறு எரிகிறது என்றால் அந்த அளவுக்கு சமூக மாற்றத்தை உள்வாங்குவதில் பிற்போக்கானவர்களாக இருக்கிறார்கள் அந்த இளைஞர்கள்(!).
பொருளாதார சிக்கல்கள் என்று வரும் போது யாரும் இங்கு மதம் பார்ப்பதில்லை. கடையநல்லூரில் படிக்க முடியாமல், பணம் இல்லாமல் எத்தனையோ இளைஞர்களும், இளைஞிகளும் தங்கள் கனவுகளை குறுக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்களே, அவர்களுக்காக இந்த மதம் பேசும் இளஞர்கள்(!) செய்தது என்ன? இஸ்லாமிய கல்லூரிகளை நடத்தும் எவராவது இவர்களை கட்டணம் இல்லாமல் சேர்த்துக் கொள்கிறோம் எனக் கூறியிருக்கிறார்களா?
அண்டை வீட்டில் பசித்திருக்கும் போது நீங்கள் வயிறார உண்ண எண்ணாதீர்கள் என்று இஸ்லாம் கூறுகிறது என்பதற்காக எத்தனை பேர் பசித்தவர்களின் பசி போக்க சிந்தித்திருக்கிறார்கள்? ஒரு பக்கம் பல லட்சங்கள் செலவு செய்து திருமணம் நடக்கிறது. மறுபக்கமோ பணம் இல்லை என்பதால் ஆண்டுக்கணக்கில் மணம் தள்ளிப் போகிறது. இதை சமன் செய்வதற்கு மதம் உதவுமா? ஆண்டவன் சித்தப்படியே அனைத்தும் நடக்கின்றன என்று உதார் விடுவீர்கள் தானே. பின் கலப்பு மணங்கள் மட்டும் அந்த ஆண்டவனின் சித்தத்தை மீறி நடக்கிறதா?
பெண்கள் ஓடிப் போகிறார்கள் என்று கைசேதப் படுகிறீர்களே, அவ்வாறு ஓடிப் போவதற்கான காரணம் என்ன என்று சிந்தித்திருக்கிறீர்களா? ஊர்க் கூட்டம், மொட்டையடித்தல் தண்டனை என்று பழைய ஊர் கட்டுப்பாடு குறித்து புளகமடைந்திருக்கிறீர்களே, முன்பு ஏன் அவை இருந்தன இன்று ஏன் அவை வழக்கொழிந்து போயின என்று சிந்தித்திருக்கிறீர்களா?
இஸ்லாமிய இளைஞர்களே(!), நீங்கள் கூறும் ஒழுக்கக் கேடு, மானக் கேடு எல்லாம் எப்போது தொடங்கின? இடுப்பெலும்பு வலியெடுக்கும் அளவுக்கு கைத்தறிகளில் நெய்து முடித்து தரகன் வீடுகளுக்கு சென்றால் ஐம்பதோ, நூறோ சிட்டையில் வைத்து தூக்கி எறிவார்களே. நினைவுபடுத்திப் பாருங்கள் அல்லது பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். அந்த உழைப்புச் சுரண்டலை போராட்டங்களின் மூலம் எதிர் கொண்டார்கள் கடையநல்லூர் மக்கள். பீஸ் ஓணம் என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். மந்தையை அடைத்த உண்ணாவிரதம் என்றால் என்னவென்று கேட்டுப் பாருங்கள். அன்று கடையநல்லூரின் உற்பத்தி முறை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு உட்பட்ட கைவினைஞர்களைக் கொண்ட உற்பத்தி முறையாக இருந்தது. நீங்கள் புழகமடையும் ஊர் கட்டுப்பாடு, நீங்கள் கைசேதப்படும் மானக் கேடு இல்லாத நிலை எல்லாம் அந்த நேரத்தின் நிலை.
இந்த நிலையை எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒன்றிய அரசு ஒற்றைக் கையெழுத்தில் மாற்றியது. கைத்தறிகளுக்கு என்றிருந்த சிறப்பு ரகங்கள் நீக்கப்பட்டன. அதுவரை கைத்தறி ரகங்களை விசைத்தறியில் நெய்யக் கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. அந்தக் கட்டுப்பாடு நீங்கியதால் கைத்தறிகள் நலிவடைந்தன. பெரும் போராட்டங்கள் மூலம் இதை எதிர்கொண்டிருக்க வேண்டும். கடையநல்லூரின் தரகர்கள் அரசின் உதவியுடன் விசைத்தறி தொழிற்கூடங்களை உருவாக்கி இருக்க வேண்டும். நவீன நெசவுத் தொழிற்சாலைகள் கடையநல்லூரில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரபு நாடுகளின் உட்கட்டமைப்பு போதாமை கடையநல்லூரையும் அது போன்ற பல ஊர்களையும் கைநீட்டி வரவேற்றது. பர்மா, பினாங்கு என்று வெளிநாடுகளுக்கு சென்றிருந்த முஸ்லீம்களின் பட்டறிவு அந்த வரவேற்பை அணைத்துக் கொண்டது.
இந்த மாற்றங்களுக்கு நீங்கள் இறும்பூறெய்தும் மதம் எந்த வகையிலாவது பொறுப்பேற்குமா? பொறுப்பேற்காது என்றால் இந்த மாற்றத்தினால் உண்டான வாழ்நிலை மாற்றத்தை மட்டும் மதத்தை காரணம் காட்டி பழைய முறைக்கு மாறச் சொல்வது எந்த விதத்தில் நியாயம்? அதற்கு தேவைப்படாத மதம் இதற்கு மட்டும் தேவைப்படுகிறதா?
நீங்கள் கூறும் ஒழுக்கக்கேடுகளுக்கு, ஒவ்வொரு நிகழ்வுகளின் பின்னாலும் ஓர் ஆணும் இருக்கிறான். எனவே, இதை பெண்களின் ஒழுக்கக் கேடு என்று கூறாதீர்கள். இளைஞர்களே(!), காதலிப்பது என்ன அவ்வளவு பாவமா? காதலித்தல் பாவம் என்று உங்கள் மதம் கூறுகிறதா? தனக்கு மூன்றாவது கணவராக முகம்மது தான் வரவேண்டும் என்று விருப்பப்பட்டாரே கதீஜா. அந்த விருப்பம் காதலில்லையா? அந்த காதலுக்காக தன்னுடைய தந்தையையும் எதிர்த்து நின்றாரே கதீஜா, அவர்களை நீங்கள் எப்படி மதிப்பிடுவீர்கள்? இந்த உரிமையை இன்றைய கதீஜாக்களுக்கு கொடுக்க மாட்டீர்களா?
தன்னுடைய நண்பர் அபூபக்கரின் மகள் தனக்கு மனைவியாக வேண்டும் என்று முகம்மது நபி விருப்பப்பட்டார்களே, அதற்காக மூன்று ஆண்டுகள் காத்திருந்தார்களே, அது காதல் இல்லையா? அன்றைய காதலை ஏற்கும் நீங்கள் இன்றைய காதலை ஏற்க மறுப்பது ஏன்?
முகம்மது நபி சில பெண்களை தானாகவே அவர்களின் பெயர் மாற்றப்படுவதாக அறிவித்துவிட்டு திருமணம் செய்து கொண்டார்களே, அதெல்லாம் கணப்பு மணத்தில் சேர்த்தி இல்லையா? அதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் இன்றைய கலப்பு மணங்களை, அதுவும் பெற்றோர்களின் ஒப்புதல்களுடனேயே நடக்கும் திருமணங்களை ஏற்க மறுக்கிறீர்களே ஏன்?
ஏற்க மாட்டோம். அதனால் பல தவறுகள் நிகழ்கின்றன என்கிறீர்களா? ஆம். சில தவறுகள் நிகழ்ந்துள்ளன. சிலர் நினைத்தபடி வாழ முடியாமல் தோல்வியடைந்திருக்கலாம். சிலர் சரியான காதலனை தேர்தெடுக்கத் தெரியாமல் போயிருக்கலாம். இவைகளெல்லாம் காதலின் தவறுகள் அல்ல. இதுகாறும் நீங்கள் பெண்களை பூட்டி வைத்து உலகம் தெரியாமல் முடக்கி வைத்திருந்தீர்களே அதன் விளைவு. அவர்கள் சிறகடிக்கட்டும். வழிமாறிப் போவதாக நீங்கள் கருதினால் சுட்டிக் காட்டி புரியவைத்திடுங்கள், காதலுக்கு சரியான திசை காட்டுங்கள்.
காதலை ஏற்றுக் கொள்ளுங்கள். அது புனிதமானது என்றல்ல. இன்றைய ஆணாதிக்க உலகில் பெண்களுக்கு குறைந்தளவான மதிப்புகளையாவது உருவாக்குவதால். ஆண்களுக்கு இருக்கும் பலதார வேட்கையில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் கருவியை வழங்குவதால். காதலை ஏற்று ஒப்புதலளியுங்கள். நீங்கள் ஒழுக்கக்கேடு என்று புலம்பும் பலவற்றை அது இல்லாமல் ஆக்கும்.
ஆகவே, இஸ்லாமிய இளைஞர்களே(!), இன்னும் நீங்கள் பழைய கசடுகளை கட்டியணைத்துக் கொண்டிருக்காதீர்கள்.புரிந்து கொள்ள மறுத்தால் காலம் உங்களை மிதித்து விட்டுக் கடந்து செல்லும்.