அண்மையில் நடந்த மூன்று நிகழ்வுகள் எளிதாக கடந்து செல்லப்படுகின்றன. அறிவும், தன்மதிப்பும் கொண்ட யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத, ஏற்றுக் கொள்ளக் கூடாத செய்திகள் அந்த நிகழ்வுகளில் இருக்கின்றன. 1. சிதம்பரம் நடராசர் கோவில் ஆவணங்களை, கணக்குகளை அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழுவுக்கு சரிபார்ப்புக்காக கொடுக்க மறுப்பதுடன் இதை ஒன்றிய பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் கடிதம் எழுதி இருக்கிறோம் என்று இறுமாப்புடன் பேசும் தீச்சிதர்கள். 2. கிட்டத்தட்ட இதே விதயங்களுக்காக கோயில்களிலிருந்து அறநிலையத் துறை விலக வேண்டும். சர்ச்களை பள்ளிவாசல்களை அரசு நிர்வகிக்கிறதா? பின் ஏன் கோவில்களை மட்டும் நிர்வகிக்க வேண்டும்? என்று பேசும் மதுரை ஆதீனம். 3. அதே மதுரை ஆதீனம் தினத்தந்தி செவ்வியில் பெண்கள் தீட்டானவர்கள், எனவே அவர்கள் அர்ச்சகர்களாக ஆகக் கூடாது என்றும் கூறுகிறார்.
சிதம்பரம் நடராசர் கோவில் குறித்து பெரும்பாலானோர் அறிந்தது தான். அங்கு நடக்கும் கொலை, கொள்ளை, மது, அராஜகம், எளியோர்களை, பெண்களை தாக்குவது என அந்தக் கோவிலுக்குள் நடக்காத குற்றங்களே இல்லை. அந்தக் கோவிலை சொத்து எனும் அடிப்படையில் பார்த்தால், அந்தச் சொத்தோடு எந்தத் தொடர்பும் இல்லாத, அந்தக் கோவிலை உருவாக்குவதில் எந்த வித பங்களிப்பையும் செய்யாத தீச்சிதர்களின் கட்டுப்பாடில் அந்தக் கோவில் இருப்பதே தமிழ்நாட்டின் தன்மதிப்புக்கு ஏற்பட்ட இழுக்கு. அவாக்களைக் கொண்டிருக்கும் அநீதி மன்றங்கள் அந்த இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றன, தக்க வைக்கின்றன. தற்போது, கோவில் நிர்வாக முறைகேடுகள் குறித்து தொடர்ந்து முறையீடுகள் வந்து கொண்டிருப்பதால் தணிக்கைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக அலுவலர்கள் குழு அங்கு செல்கிறது. தணிக்கையோ, சோதனையோ செய்ய முடியாமல் திரும்புகிறது. காரணம், தீட்சிதர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. மடியில் கனம் இல்லை என்றால், எல்லா கணக்குகளும் சரியாக இருக்கின்றன என்றால், எந்த தங்க நகைகளும் குறையவில்லை என்றால், எந்த நிலமும் முறைகேடாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால், எல்லா ஆவணங்களையும் எடுத்துக் காட்டி சோதனை செய்து பாருங்கள் என்று கூறுவது தானே யோக்கியர்களின் வேலை. தீட்சிதர்கள் யோக்கியர்களா?
சட்டப்படி அமைக்கப்படும் குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்கிறார்கள் தீச்சிதர்கள். இப்போது அமைக்கப்பட்டிருக்கும் குழு எந்த விதத்தில் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. நீதி மன்றத் தீர்ப்பில் சிதம்பரம் கோவில் தீச்சிதர்களின் தனிச் சொத்து என்று ஏதேனும் குறிப்பிடப்பட்டிருக்கிறதா? அது பொதுக் கோவில் தானே. அந்தப் பொதுக் கோவிலில் நிர்வாக முறைகேடுகள் நடப்பதாக முறையீடு வந்திருப்பது உண்மை தானே. இந்த முறைகேட்டை விசாரித்து முடிவு சொல்வதற்கு அறநிலையத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது தானே. பின் எப்படி இது சட்டப்படியான குழு இல்லை என்கிறார்கள் அந்த தீச்சிதர்கள்?
தனிநபர்களுக்கு முற்றுரிமையாக இருக்கும் சொத்தில் கூட நிர்வாக முறையீடுகள் இருப்பதாக முறையீடு வந்தால் காவல் துறை விசாரிக்க, வழக்கு பதிவு செய்ய, கைது செய்ய அதிகாரம் உண்டு. பொதுக் கோவிலில் அதை செய்ய முடியாதா? அவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் தீச்சிதர்கள் இந்த அழிச்சாட்டியம் செய்கிறார்கள். பார்ப்பனியம் அதைத் தான் எதிர்பார்க்கிறது. சிறுமி லாவண்யா தற்கொலையாகட்டும், பல்லக்கு சுமக்கும் விதயமாகட்டும், இன்னும் பார்ப்பனிய மதம் சார்ந்து எழும் அத்தனை சிக்கல்களிலும் இப்படி அடாவடியாகத் தான் செயல்படுகிறார்கள். அரசு வழக்கு, கைது என்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று அரசியலாக்க வேண்டும் என்று கீழ்தரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (இதை எதிர்கொள்ள முடியாமல் திமுக திணறுகிறது என்பதும் உண்மை தான். பார்ப்பனர்கள் அரசியல் செய்வதற்கும் வாய்ப்பளிக்காமல், பார்பனர்களுக்கு திமுக பயப்படுகிறது என்றும் ஆகாமல், இதை எப்படி தீர்த்துக் கொள்வது என்று உள்ளபடியே திமுக குழப்பிக் கொண்டிருப்பதாகத் தான் தெரிகிறது)
ஆனால், இது அரசுக்கும் தீச்சிதர்களுக்கும் இடையிலான சிக்கல் மட்டும் தானா? இதில் பக்தர்களுக்கு பங்கில்லையா? கனகசபை மேடையில் வழிபட முடியாமல் அவமதிக்கப்பட்ட பக்தர்கள் இல்லையா? தமிழில் பாடி வழிபட வழியில்லாமல் துரத்தப்பட்ட பக்தர்கள் இல்லையா? நடராசரின் நகைகள் கொள்ளையிடப்படுவது பக்தர்களுக்கு ஏற்புடையது தானா? கணக்கு கேட்டால் கொடுக்க மாட்டேன் என்று சொல்ல தீச்சிதர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று பக்தர்கள் சாலையில் இறங்கி இருக்க வேண்டாமா? அப்படி நடந்திருந்தால் செத்த எலியை தூக்கிச் செல்வது போல் காவல்துறையால் தீச்சிதர்கள் தூக்கிச் செல்லப் பட்டிருப்பார்கள் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை.
பொதுமக்களின் உழைப்பால் சேர்ந்த சொத்துகளை, நன்கொடைகளை கோவில்கள் என்றும் ஆதீன மடங்கள் என்றும் வடிவம் மாற்றி இருப்பதால் தங்களை கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை என்று இறுமாந்து கொள்கிறார்கள் பார்ப்பனர்களும், தீச்சிதர்களும், ஆதீனங்களும். இல்லையென்றால், கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்றும், அர்ச்சகர்களாக பெண்கள் வரக்கூடாது, அவர்கள் தீட்டானவர்கள் என்றும் சில பன்னாடைகள் பொதுவெளியில் பேச முடியுமா?
பார்ப்பனியம் என்றுமே பெண்களை தங்களின் சக பிறவிகளாக கருதியதே இல்லை. தங்களை பார்ப்பனர்களுக்கு அடுத்த படியில் இருப்பதாக கருதிக் கொள்வோரும் அதையே வரித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் அர்சகர்கள் ஆகக் கூடாதாம். என்றால் அனைத்து ஆண்களும் அர்சகர் ஆகலாமோ. இதை ஏற்பார்களா இந்த மட அதிபதிகள். தங்கள் பொய்யான உயர்வை தக்க வைக்க பார்ப்பனர்கள் செய்த ஏற்பாடு தான் தாங்கள் மட்டுமே அர்ச்சகர்கள் என்பது. அதில் பார்ப்பனியப் பெண்களுக்கும் உரிமை கிடையாது. இதற்காக அவர்கள் உருவாக்கிய ஆகமங்கள் என்பவையெல்லாம் இன்று குப்பை கூழங்களாகி விட்டன. ஆனாலும், நீதி மன்றங்களில் இருக்கும் பார்ப்பனிய சாதகங்களையும், பெண்களுக்கு இருக்கும் இயற்கை கழிவு வெளியேற்றமான மாதவிலக்கையும் இதற்கு கேடாக பயன்படுத்துகிறார்கள்
மாத விலக்கு தீட்டோ, இழிவான ஒன்றோ அல்ல. அது ஒரு சுழற்சி என்று என்றோ அறிவியல் அறிவித்து விட்டது. குழந்தை உருவாகும் என்பதால் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை கர்ப்பப்பை செய்கிறது. கரு உருவாகவில்லை என்றால் அடுத்த காத்திருப்புக்கு வழி விட்டு அது வெளியேறுகிறது. சிறுநீரோ, மலமோ கழிவாக வெளியேறுவதில்லையா? அதனால் தீட்டாகி விடுகிறதா? ஒருவகையில் வியர்வையும் கழிவு வெளியேற்றம் தான். அந்தக் கழிவு வெளியேற்றம் நடந்து கொண்டிருக்கும் போதே சாமியை தொட்டுத் தடவுவதில்லையா? பெண்களை தடுப்பதற்கு அது காரணமல்ல. அதை சாக்காக கூறுகிறார்கள் அவ்வளவு தான். மெய்யான காரணம் வேறு இருக்கிறது.
ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து கிளம்பி கைபர் போலன் கணவாய்கள் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் கூட்டத்தில் ஆண்கள் மட்டுமே இருந்தார்கள். பெண்கள் இல்லை. இதை மரபணு ஆய்வுகளும் நிரூபித்து விட்டன. இனப்பெருக்கம் செய்வது பெண்களால் மட்டுமே முடியும் எனும் இயற்கை நிலை, தவிர்க்கவே முடியாமல் சமூகத்தில் பெண்களுக்கான உயர்வை கட்டியம் கூறியது. சற்றேறக் குறைய இன்றைக்கு 4500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இனப்பெருக்கத்துக்கு ஆண்களும் காரணம் எனும் உண்மையே ஆண்களுக்கு தெரியவந்தது. பெண்கள் மீதான வெறுப்பு இங்கிருந்து தான் தொடங்குகிறது. ஸ்டெப்பியிலிருந்து கிளம்பி இந்தியா வந்த ஆரியர்கள் ஆண்கள் மட்டுமே என்பதால் தங்கள் இனப்பெருக்கத்துக்கு வழியில் கிடைக்கும் பெண்களை பயன்படுத்திக் கொண்டார்கள். இந்திய பகுதிக்கு வந்த பின்னரும் அதையே தொடர்ந்தார்கள். அதனால் தான் பார்ப்பனர்களே ஆனாலும் பெண்களை தங்களுக்கு சமமாக ஏற்பதில்லை. அவர்களின் வேதங்களும் பெண்கள் உங்களுக்கு சமமானவர்களல்ல என்று எல்லா இடங்களிலும் வலியுறுத்துகிறது. இதை மறைப்பதற்குத் தான் மாதவிலக்கு, தீட்டு என்று கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.
சமூகத்தை வழி நடத்தியவள் பெண். மனித குல வரலாற்றில் மிக நீண்ட காலமாக சமூகத்துக்கு (ஆண்களுக்கும்) தலைமை தாங்கியவள் பெண். சமூகத்தை முன்னேற்றியவள், இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்ட விவசாயம், மருத்துவம், கட்டிடக்கலை என அனைத்தையும் கண்டுபிடித்தவள் பெண். இன்று வரை கடவுள்களாகவும் கொண்டாடப்படுபவள் பெண். பெண்களை இழிபடுத்துபவன் கடவுள் என்றாலும் விடமாட்டோம், மட அதிபதிகள் எம்மாத்திரம் என்று பெண்கள் கிளம்பி இருக்க வேண்டாமா?
இப்படி, உண்மையை மறைக்க மாதவிலக்கை இழுத்து மூடும் மட அதிபதிகள் தான் சர்ச்களையும், பள்ளிவாசல்களையும் காட்டி கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டும் என்கிறார்கள்.
சர்ச்களும், பள்ளிவாசல்களும் முழுக்க முழுக்க மத நிறுவனங்கள். அதன் சொத்துக்களை உருவாக்கியதிலிருந்து, அதை கட்டியதிலிருந்து, அதற்காக உழைத்தவர்கள் என அனைத்தும் அந்தந்த மதம் சார்ந்தவர்கள் மட்டுமே செய்தது. அரசு இதில் எந்தப் பங்களிப்பையும் செய்யவில்லை. ஆனால் கோவில்கள் என்பவை மத நிறுவனங்கள் அல்ல. அவை அரசு நிறுவனங்கள். கோவில்கள் என்பவை பண்டைய காலத்தில் வங்கிகளைப் போலவும், அரசு கருவூலங்களாகவும் இருந்தவை. இருக்கும் அத்தனை கோவில்களும் பொது மக்களின் உழைப்பால் உயர்ந்தவை. கோவில்களின் சொத்துகள் அனைத்தும் மக்களின் உபரியை சுரண்டியதால் ஏற்பட்டவை. எனவே அவை அரசுக்குச் சொந்தம், அனைத்து மக்களுக்கும் சொந்தம். கோவில்களோடு எந்தத் தொடர்பும் இல்லாதவர்கள் பார்ப்பனர்கள் தான். உருவ வழிபாடு, கோவில் கட்டி வழிபடுவது என எதுவும் ஆரியர்களுக்கு சொந்தமானதில்லை. வேள்விகள் செய்வது தான் அவர்களின் வழிபாட்டு முறை. இந்தப் பகுதி மக்களிடையே கோவில் வழிபாட்டு முறைக்கு இருந்த முதன்மைத்தனத்தையும், சொத்துக்களையும் கண்ட பிறகே பார்ப்பனர்கள் தங்கள் வழிபாட்டு முறையை மாற்றிக் கொண்டார்கள், நயவஞ்சகமாக பூசாரிகளாக தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்டு எல்லோரையும் தங்களுக்கு வெளியே நிறுத்தி வைத்தார்கள்.
இதற்கு வெகு பின்னர் வந்த நீதிக் கட்சியினர் தான், பார்ப்பனர்கள் கோவில் சொத்துகளை வறைமுறையின்றி சூரையாடுவதைக் கண்டு, அதைத் தடுப்பதற்காக அறநிலையத் துறையை உருவாக்கி கோவில்களை மீண்டும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இதைத் தான் இந்த மட அதிபதிகள் அரசு கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். வெளியேறினால் யார் அவைகளை எடுத்துக் கொள்வார்கள்? பார்ப்பனர்கள் தானே. சிதம்பரம் நடராசன் கோவிலில் தீச்சிதர்கள் அதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை சும்மா விட்டு விடலாமா?