காயம் மிகவும் முற்றி, சீழ் பிடித்து அழுகத் தொடங்கி விட்டதற்கான அறிகுறி இது. காவல் துறை ஒரு போதும் மக்களின் காவலர்களாய், நண்பர்களாய் இருந்ததே இல்லை. அவர்கள் அப்படி சொல்லிக் கொண்டாலும் கூட. ஒவ்வொரு ‘என்கவுண்டர்’களின் பின்னாலும் ஒரு பகைவெறி இருக்கிறது. கொள்ளைகள், கலவரக் கொலைகள் எதுவும் காவல்துறைக்கு தெரியாமல் நடந்ததில்லை. ‘அடித்து’ விசாரிப்பது தொடங்கி கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகால்களை உடைத்துக் கொள்வது வரை அத்தனையும் சட்ட விரோத, மனித விரோத செயல்களே. இத்தனையையும் எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் செய்து முடிக்கிறார்களே அது தான் காவல் துறை. இப்போது இதன் தொடர்ச்சியாக, இதன் உச்சமாக வீடுகளை இடிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அண்மையில் நுபுன் சர்மா, நவீன் சிந்தால் ஆகிய இருவரும் முகம்மது நபியின் மீது அவதூறுகளைக் கூறினார்கள் என்று இந்தியாவிலும், பன்னாட்டளவிலும் பெரும் விவாதமானது. அரபு நாடுகள் கண்டித்தன, இந்தியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரின. உபி ல் ஒரு இடத்தில் கலவரம் மூண்டதாகக் கூட செய்தி வந்தது. திடீரென இப்படி அரபு நாடுகள் களத்தில் குதிப்பதும், இந்தியாவில் கலவரம் நடப்பதும் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை. அறியப்படாத நாடகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்ற கருத்து இருந்தது.
இந்த விதயத்தில், நுபுன் சர்மா, சிந்தால் ஆகியோர் என்ன கருத்து கூறினார்கள்? எந்த விதத்தில் அது அவதூறு என தெரியாது. அந்த நிகழ்ச்சியும், கீச்சும் அழிக்கப்பட்டன. முகம்மது நபியின் குழந்தைத் திருமணம் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜக வெறுப்பு அரசியலின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் என்பதற்கு சான்று எதுவும் தனியாக தேவைப்பட்டிருக்காது.
அடுத்து இந்த சிக்கலை ஓர் எல்லைக்கு மேல் தொடர்ந்து எடுத்துச் சென்றால் அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், பாஜகவுக்கு பலன் தரக் கூடியதாகவும் மாறும் என்பதில் அரசியலை கூர்ந்து நோக்கும் யாருக்கும் ஐயம் ஏற்படாது. தற்போது இவைகளைக் கடந்து இதன் பலனை பாஜக அறுவடை செய்யத் தொடங்கி விட்டது.
மெய்யாகவே, முகம்மது நபி அவதூறுக்காக இந்தியாவில் கலவரம் நடக்கிறது என்பதே நம்ப முடியாத செய்தியாகத் தான் இருக்கிறது. ஏனென்றால், முஸ்லீம்கள் மிகப் பெரிய இழப்பையும், தாக்குதல்களையும் எதிர் கொண்ட போதிலும் கலவரம் எதையும் செய்திருக்கவில்லை. பாபர் பள்ளி இடிப்பு, குஜராத் இன அழிப்பு படுகொலைகள், சிஏஏ சட்டத்திருத்தம் என எதற்கும் முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபட்டதில்லை. குண்டு வெடிப்பு தொடங்கி, எதிர்வன்முறையில் இறங்கியதான செய்திகள் எல்லாம் ஐயத்திற்குறியவையே. துலக்கமான எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் நாடாளுமன்ற தாக்குதலைக் கொள்ளலாம். தங்கள் குடியுரிமையே கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையிலான சாட்டத்திருத்தத்திற்கு எதிராக சட்டத்துக்கு உட்பட்ட வழியில் போராடத்தான் செய்தார்களே தவிர வன்முறையில் இறங்கவில்லை. ஆகவே இப்போது முகம்மது நபி அவதூறு செய்யப்பாட்டார் எனக் கூறி கலவரம் செய்தார்கள் என்று கூறப்படுவது ஏற்கும்படி இல்லை. மாறாக, திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம். அதில் ஆர்.எஸ்.எஸ் ன் பங்கும் இருக்கலாம். சுன்னத் செய்து கொண்டு கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு கோட்சே காந்தியைக் கொன்றான் என்பதும், காந்தியை முஸ்லீம்கள் தான் கொன்றார்கள் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் வன்முறையில் இறங்கியது என்பதும் வரலாறு. அன்று நேரு உடனடியாக வனொலியில் தோன்றி உண்மையை விளக்காமல் போயிருந்தால் மீப்பெரும் ரத்தக் களறி அன்று நடந்திருக்கும். அதிகாரத்திலும், நிர்வாகத்திலும், ஊடக பலத்திலும், பரவலிலும், பொருளாதாரத்திலும் ஆர்.எஸ்.எஸ் அன்றை விட இன்று பெரும் பலத்துடன் இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம்.
இந்த கலவரத்தை முன்வைத்து, இந்த கலவரத்தை செய்தவர்கள் என்று கூறி 300க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கலவரத்துக்கு காரணமானவர் என்று கூறி முகம்மது ஜாவேத் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவருடைய மகள் ஜேஎன்யூ வில் படிக்கிறார். எனவே ஜேஎன்யூவில் இருந்து தூண்டுதல் வந்திருக்கலாம் எனும் கோணத்தில் காவல்துறையினர் விசாரிக்கிறார்களாம். இவருடைய குடும்பத்தில் பலரைக் காணவில்லை என்று உறவினர்கள் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்ல, முகம்மது ஜாவேத்தின் வீடு புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்ட்மாக்கப்பட்டிருக்கிறது. இது போன்று கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி பலரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன. இதுதான் பாஜகவின் பாசிசக் கொடுக்காக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. வீடுகளை இடிப்பதற்கு காவல்துறைக்கு அதிகாரம் கொடுத்தது யார்? எந்தச் சட்டத்தின் அடிப்படையில் வீடுகள் இடிக்கப்பட்டன? வரலாற்றில் ஹிட்லர், முசோலினி கூட இவ்வளவு கொடூரத்துடன் நடந்திருக்கவில்லை.
வீடு என்பது இந்தியர்களின் ஆகப் பெரும் கனவுகளில் ஒன்று. வாழ்நாள் முழுவதும் உழைத்த உழைப்பின் விளைவு. தலைமுறைகளை கடந்து மாற்றம் பெறும் உயிரோட்டம். எதுவும் இல்லாதிருக்கும் நிலையிலும் பற்றியிருக்கக் கிடைத்த கொழுகொம்பு. அப்படியான வீடு திடீரென ஒரு நாள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசே இடித்துத் தள்ளுமென்றால் அது எவ்வளவு பெரிய வலி. அந்த வலியை இஸ்லாமியர்கள் எனும் ஒரே காரணத்திற்க்காக அவர்களிடம் திணிக்க முடியும் என்றால், இதை சொற்களால் விவரித்துவிட முடியுமா?
மக்களுக்கு எதிரான காவல்துறையின் அத்துமீறல் அதன் எல்லையை அடைந்திருப்பதற்கான சான்று இது. இந்தியாவில் கட்டப்பட்டிருக்கும் எந்த ஒரு கட்டிடமும் அனுமதி பெறப்பட்ட வடிவத்தில் முறையில் கட்டப்பட்டிருக்கவே முடியாது. இதற்காக வீட்டை இடிக்கலாம் என்றால் இந்தியாவில் எந்தக் கட்டிடமும், எந்த வீடும் இருக்க முடியாது. அனைத்தையும் இடிக்க வேண்டியிருக்கும்.
வீடு இடிக்கப்பட்டதை விட பெரும் வலி தரும் ஒன்று இருக்கிறது என்றால், அது, அனைவரும் இதை கடந்து செல்வது தான். உபி யில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை ஒரு அறிக்கையுடன் கடந்து விட்டன. மக்கள் ஒரு சிறு முனுமுனுப்பைக் கூட செய்யவில்லை. உபிக்கு வெளியே உள்ள கட்சிகள் அப்படியான அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. ஸ்டாலின் இதைக் கண்டித்திருக்க வேண்டும். வட இந்திய ஊடகங்கள் இதை சரியான நடவடிக்கை என்று கொண்டாடுகின்றன. மெல்ல மெல்ல இந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில் என்கவுண்டர் செய்த காவலர்களை மலர் தூவி வாழ்த்துப்பாடி வரவேறார்கள் என்ற செய்தி இந்தியாவின் அனைத்து ஊடகங்களிலும் திரும்பத் திரும்ப காட்டப்பட்டது. சென்னையில் ரவுடிகள் கைகால் எலும்புகள் அடித்து நொறுக்கப்பட்டு, கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டார்கள் என்று செய்தியாக்கிய போது ரவுடிகள் தானே என்று சமாதானம் கூறப்பட்டது. இதோ வீடுகளை இடித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது என்ன கலவரம் செய்தவர்கள் தானே என்று சமாதானம் கூற விரும்புகிறார்களா? ஒருவருக்கு கூடவா இது சட்ட விரோதம், காவல்துறை அத்துமீறுகிறது என்று தெரியவில்லை. நீதி மன்றங்களுக்கு தெரியவில்லையா இது சட்டத்தை அப்பட்டமாக மீறும் கொடுஞ்செயல் என்று. சட்டத்தில் சுமோட்டோ என்ற ஒரு பிரிவு இருக்கிறதே. அது எதற்கு?
இதன் பரிணாமம் வேறு. அரசை போராட்டங்கள் அச்சுறுத்துகின்றன. வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம், நாடெங்கிலும் மூண்ட ஷஹீன்பாஹ் போராட்டங்கள் என அரசின் நிர்வாக கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் அரசை அச்சுறுத்துகின்றன. அதிலும் குறிப்பாக அந்த போராட்ட வடிவம், ஜல்லிக்கட்டில் தொடங்கியது. மீளாய்வு செய்யும் வரை விடாது தொடரும் வடிவிலான போராட்டங்கள் அரசை மிகவும் அச்சுறுத்துகின்றன. எனவே, மக்களுக்கு போராட்டம் என்ற சிந்தனையே எழக்கூடாது என்ற திட்டமிடலின் ஒரு பகுதி தான் இந்த வீடு இடிப்பு.
இது முஸ்லீம்களோடு நிற்கப் போவதில்லை. இன்று கலவரம் செய்தார்கள் என்று காரணம் கூறுகிறார்கள். நாளை போராட்டம் செய்தார்கள் என்று காரணம் கூறுவார்கள். அதற்கு அடுத்த நாள் அரசை விமர்சித்தார்கள் என்று காரணம் கூறுவார்கள். என்ன செய்யப் போகிறோம் நாம்?