ஐயப்பன் என்றொரு கடவுள் இருக்கிறார். அதாங்க, பெண்கள் என்னை பார்க்க வரக்கூடாது என்று சொன்னதாக சொல்கிறார்களே அந்தக் கடவுள் தான். அவரைப் போற்றி ‘அரிவராசனம்’ என்றொரு பாடல் எழுதப்பட்டிருந்தது. ஐயப்ப பக்தர்கள் தவறாமல் பாடும் பாடல் அது. அந்தப் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிறதாம். இதை கொண்டாடுவதற்கு, ஐயப்ப சேவா சங்கம் எனும் அமைப்பு சென்னை வானகரத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில் ஆளுனர் ரவி கலந்து கொண்டார். அதாங்க, இந்த திமுக காரங்க ‘ஆட்டுக்கு தாடி எதுக்கு, நாட்டுக்கு கவர்னர் எதுக்கு’ என்று முழக்கம் போடுவாங்களே, அந்த கவர்னர் தாங்க. அதுல அவரு பேசுனாரு பாருங்க ஒரு பேச்சு.
வரலாற்று அறிவோ, சமூக அறிவோ சிறிதும் இல்லாமல், உளறலின் உச்சமாய் அமைந்த பேச்சு அது அது. இந்து மதத்தின் ரிஷிகளும் முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் அரசியலமைப்பு சனாதன தர்மத்தில் கூறப்பட்டு விட்டது. சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து கந்தஹார் பெஷாவர் போன்ற நகரை கஜினிமுகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்காவினால் தகர்க்கப்பட்டது. சனாதன தர்மத்தின் வலிமையை இந்த நிகழ்வுகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். இது தான் அந்த வரலாற்று சிறப்பு மிக்க உரையின் சாரம்.
இது எந்த அளவுக்கு உளறலின் உச்சம் என்று தெரிய வேண்டும் என்றால் இந்து மதம் என்று சொல்லப்படும் பார்ப்பன மதத்தின் வரலாற்றை நாம் தெரிந்திருக்க வேண்டும். இங்கே பலநூறு கடவுளர்கள் உண்டு. ஒவ்வொரு கடவுளின் பின்னாலும் அறுவறுக்கத்தக்க ஆபாச கதைகள் உண்டு. மேலே கூறப்பட்ட அரிவராசனம் புகழ் ஐயப்பனுக்கு பின்னே உள்ள கதையைக் கேட்டால் .. .. .. இதெல்லாம் அந்த மதத்தில் இருப்பவர்களுக்கு தெரியாததல்ல. இருந்தாலும் எதுவும் கேட்க மாட்டார்கள். பெரியார் எவ்வளவு சரியாகச் சொல்லி இருக்கிறார், “பக்தி உள்ளே வந்தால் புத்தி வெளியில் போய் விடும்” என்று. சரி, நாம் அவ்வாறு ஒரு கேள்வியை வைத்தால், “ஏன் கடவுளர்களுக்குப் பின்னால் இவ்வாறான அறுவெறுக்கத்தக்க ஆபாசக் கதைகள் இருக்கின்றன?” ஏனென்றால் இவை எதுவுமே பார்ப்பனியக் கடவுளர்கள் அல்லர். அனைவருமே பார்ப்பனர்கள் இங்கு வருவதற்கு முன்பே இங்கிருந்த மக்களால் வணங்கப்பட்டு வந்த கடவுளர்கள். அவர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான அறுவெறுக்கத்தக்க ஆபாசக் கதைகள் புனையப்பட்டன.
இந்து மதத்தின் வேதம் எது என்று கேட்டால் பகவத் கீதை என்பார்கள். நுணுகிக் கேட்டால் வேதங்கள் நான்கு அவை ரிக், யசுர், சாம, அதர்வண என்பார்கள். என்றால் பகவத் கீதை ஐந்தாவது வேதமா? அந்த நான்கும் அவாக்களுக்கு மட்டுமே உரித்தானது என்பதால் அந்த நான்கையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தது பிறருக்கு தருவது பகவத் கீதை. ஏன் இந்த பாகுபாடு? ஏனென்றால் அவர்கள் வேறு, பிறர் வேறு. இதில் அவர்கள் என்பது வெளியில் இருந்து இந்தப் பகுதிக்கு வந்தவர்கள். பிறர் என்பது இங்கேயே இருந்து கொண்டிருப்பவர்கள். இன்னொரு முதன்மையான விதயம் என்னவென்றால் வேதங்களில் உருவ வழிபாடு கிடையாது. அதாவது, கோவில் கட்டியோ, அதனுள் கடவுளர்களுக்கு சிலை வைத்தோ வழிபடும் முறை கிடையாது. வேதங்களில் இருப்பது வேள்வி முறை. தீயை வளர்த்து அதில் படையல்களை கொட்டி வழிபடுவது தான் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும், வெளியிலிருந்து இந்தப் பகுதிக்குள் வந்த அவர்களின் வழிபாட்டு முறை.
என்றால் கோவில்கள்? ஐயத்திற்கு கொஞ்சமும் இடமில்லாமல், அவர்கள் யாரை பிறர் என்றார்களோ அவர்களுடைய வழிபாட்டு முறை. ஒரு நாடோடிக் குழுவாக, அதுவும் ஆண்களை மட்டுமே கொண்ட குழுவாக இந்தப் பகுதிக்குள் வந்தவர்கள் அவர்கள். இங்கு இருந்தவர்களோ உயர்ந்த நாகரீகத்துடன் நகரியங்களாக அரசமைப்புக்குள் வாழ்ந்தவர்கள். போரினாலோ, நாகரீகத்தினாலோ, அறிவினாலோ இவர்களை வெல்ல முடியாது என்பதை பட்டறிவின் மூலம் உணர்ந்த அவர்கள், கடவுளர்களின் மூலம் கலக்கிறார்கள். ஆறு மதங்கள் இங்கு நடைமுறையில் இருந்தன. (ஆறு மதங்கள் என்பதும் ஆய்வுக்குறியது தான். இவைகளுக்கும், பௌத்தம், சமணத்துக்கும் முன்னரே தென்னிந்தியாவில் ஆசீவகம் எனும் மதம் இருந்தது. அந்த ஆசீவகத்தின் எச்சங்கள் மேற்கண்ட எட்டு மதங்களிலும் இருக்கிறது) சைவம், வைணவம், காணபத்தியம் கௌமாரம், சாங்கியம், சௌரம். இந்த மதங்களுக்கான சிவன், வீட்டினன், வினாயகன், முருகன், சூரியன் என தனித்தனி கடவுளர்கள் இருந்தார்கள். (சாங்கியம் கடவுள் மறுப்பை பேசும் மதம்) இவர்களோடு ஏராளமான துணைக் கடவுளர்களும் உண்டு. இவர்களை ஒருங்கிணைத்து உறவுமுறைகளை ஏற்படுத்தி ஒற்றை மதமாக உருவாக்கினார்கள். இதனுடன் தங்கள் வேள்வி முறைகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.
இதை எவ்வாறு ஏன் செய்தார்கள் என்பது தான் இந்தப் பகுதியின் அதாவது இந்தியப் பகுதியின் வரலாறு. வெளியிலிருந்து வந்தவர்களுக்கு தங்கள் ஆதிக்கத்தை நிறுவ ஒரு முறை தேவைப்பட்டது. இங்கிருந்த மன்னர்களுக்கோ தங்களை எதிர்த்து மக்கள் கலகம் செய்யாமல் அடக்க ஒரு முறை தேவைப்பட்டது. இந்த இரண்டு தேவைகளையும் உள்ளடக்கித் தான் பார்ப்பன மதம் உருவானது. இந்த முறையை ஏற்றுக் கொண்டவர்கள் அந்தந்த வர்ண தர்மத்தின் படி ஊருக்குள் வாழ அனுமதிக்கப்பட்டனர். இந்த முறையை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே எவ்வித வசதி, வாய்ப்புகளும் இல்லாமல் ஏவல் செய்து வாழ்வோராக மாற்றப்பட்டார்கள். பின்னர் வந்த முகலாயர்களும், ஆங்கிலேயர்கள் பரந்த ஆட்சிப் பரப்பை உருவாக்க, அவர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய இந்து, இந்தியா எனும் சொல்லை எடுத்துக் கொண்டு பார்ப்பன மதம் இந்து மதமாக மாறியது.
இப்போது ஆளுனர்(!) ரவியின் உளரல்களை எடுத்துக் கொள்வோம். ரிஷிகளும், முனிகளும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேதங்கள் என்றால் எந்த வேதம்? நான்கு வேதங்களா? அல்லது பகவத் கீதையான ஐந்தாவது வேதமா? எந்த வேதம் என்றாலும் அவர்கள் வாழ்கிறார்கள் என்பதன் பொருள் என்ன? சனாதன தர்மம் என்றழைக்கப்படும் பிறப்பின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வான அடுக்குமுறையை ஏற்றுக் கொண்டு மக்கள் வாழ்வதன் மூலம் அந்த ரிஷிகளும், முனிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தானே. அதாவது, பார்ப்பனன் உயர்ந்தவன் என்றும் மற்றவர்கள் அனைவரும் அந்தந்த படிநிலையின் படி அடிமை ஏவல் செய்வோர்கள் என்றும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே. தங்களை இந்து என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவிகள் பதில் சொல்லட்டும். ரிஷிகளும் முனிகளும் வேதங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா?
சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியதா? இந்தியா என்றொரு நாடு பண்டைய வரலாற்றில் எங்குமே இருந்ததில்லை. இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டு அதிகளவாக இருநூறு ஆண்டுகள் தான் ஆகின்றன. இந்தியா எனும் இன்றைய நிலப்பரப்பில் அன்று நூற்றுக்கணக்கான தனித்தனி தேசங்கள் இருந்தன. இவைகளில் எந்த தேசத்தின் உருவாக்கத்திலாவது சனாதனம் பாங்காற்றி இருக்கிறதா? அது செய்ததெல்லாம் நயவஞ்சகம். மன்னர்களை மயக்கி மங்கலங்களை பெற்றுக் கொண்டது தொடங்கி, சிவாஜிக்கு மகுடம் சூட்டுகிறோம் என்று கூறி அவனுடைய நாட்டின் ஒட்டுமொத்த சொத்துகளையும் சூரையாடியது வழியாக இன்று இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பது வரை அத்தனையும் குறுக்கு வழி, நயவஞ்சகம், அயோக்கியத்தனம், பித்தலாட்டம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் இதிகாசங்கள் எனும் கட்டுக் கதைகளில் கூட வாலியைக் கொல்வதும், அசுவத்தாமனை கொன்றுவிட்டதாக பரப்புவதும் அயோக்கியத்தனத்தின் உச்சமான சான்றுகள் அல்லவா? இந்த சனாதனமா இந்தியாவை உருவாக்கியது.
இன்றைய இந்திய அரசியலமைப்பு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டதாம். இதைக் கேட்பவர்கள் தங்கள் பின்வாயால் சிரித்துக் கொள்ளட்டும். அன்றைய மன்னர்களை அந்தப்புறங்கள் மூலம் கட்டுப்படுத்தி சனாதனத்தை திணித்தார்கள். அன்றிலிருந்து இன்றுவரை அதை எதிர்த்த போராட்டம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்தப் போராட்ட வரலாற்றைத் தொகுத்தாலே தங்களை இந்து என்று கருதிக் கொள்ளும் யாரும் வெட்கித் தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை. அனல்வாதம், புனல்வாதம் என்று அயோக்கியத்தனம் செய்தது, சமணர்கள் என கருதப்படுவோரைக் கழுவிலேற்றிக் கொன்றது, கோவில்களையும் சொத்துகளையும் அபகரித்தது என சனாதன கும்பல் செய்யாத அட்டூழியங்கள் ஏதாவது மிச்சமுண்டா? அது தானே அம்பேத்கர் எழுதிய அரசியலமைப்பிலும் தொடர்ந்தது. அம்பேத்கர் தலைமையில் குழு அமைத்து, அந்தக் குழு இந்திய அரசியல் சாசனத்தை தொகுத்தது என்று பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, அரசியலமைப்பு தொடர்பாக அம்பேத்கருக்கு மேலே இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த இரண்டு குழுக்களிலும் பார்ப்பனரைத் தவிர வேறு எவரும் இல்லை. அந்த இரண்டு குழுக்களும் முன்வைப்பதைத்தான் அம்பேத்கர் தலைமையிலான குழு இந்திய நிலமைகளுக்கு ஏற்ப உருவாக்க வேண்டும். அப்போதும் அம்பேத்கர் தலைமையிலான குழு முன்வைப்பவை அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படாது. நாடாளுமன்றத்தில் விவாதித்து ஓட்டெடுப்புக்கு விடப்பட்டே ஏற்றுக் கொள்ளப்படும். இரட்டை வாக்குரிமை என்ற ஒன்றை நிறைவேற்ற அம்பேத்கர் எடுத்த முயற்சிகளும் அது தோற்கடிக்கப்பட்ட கதையும் இன்றளவும் சான்றுகளாக எஞ்சியிருக்கின்றன. அதனால் தானே அம்பேத்கார் கூறினார், நான் எழுதினேன் என்று கூறாதீர்கள் தேவைப்படும் போது இந்த அரசியல் சாசனத்தை தீ வைத்துக் கொளுத்தும் முதல் ஆளாகவும் நானே இருப்பேன் என்று. இவைகளையெல்லாம் தொகுத்துப் பார்த்து, இந்திய அரசியல் சாசனம், சனாதனத்தால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது என்று கூறப்படுவதை கேட்பவர்கள் முன்வாயால் சிரிக்க முடியுமா?
அடுத்து, சனாதனத்தில் வலிமைக்கு ஒரு எடுத்துக் காட்டு கூறியிருக்கிறார் ஆளுனர்(!). கந்தஹார், பெஷாவர் நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் அழிக்கப்பட்டன. இது சனாதனத்தின் வலிமை, எவ்வாறென்றால் அந்த நகரங்களை சோமநாதபுர ஆலயத்தை கொள்ளையடித்துத் தான் கஜினி உருவாக்கினார். எனவே, அது அழிக்கப்பட்டது சனாதனத்தின் வலிமை. புத்தியுள்ள யாரேனும் இப்படி பேசியிருக்க முடியுமா? கிமு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே கந்தஹார் நகரம் இருந்து கொண்டிருக்கிறது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் கனிஷ்கர் உருவாக்கிய நகரம் பெஷாவர். இதன் பின்னர் நீண்ட காலம் கழித்து தான் கஜினி முகம்மது பிறக்கிறார். கிபி 1020களில் தான் சோமநாதபுரம் மீது படையெடுக்கிறார். தான் பிறப்பதற்கு 15 நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கும் நகரை கஜினி உருவாக்கினார் என்று கூறினால், சோமநாதபுர ஆலயத்தை கொள்ளையடித்ததால் தான் அந்நகர் அமெரிக்காவால் அழிக்கப்பட்டது (அழிக்கப்பட்டது என்றால் அந்த நகர் இப்போது இல்லையா?) என்று கூறினால், அதன் பொருள் கேட்பவர்களை அந்த அளவுக்கு மடையர்களாக எண்ணியிருக்கிறார் என்பது தானே. சனாதனத்தின் வலிமை கொள்ளையடித்த கஜினியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கொள்ளையடிப்பதற்கு துணை நின்ற பார்ப்பனர்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் நகரை அழித்ததாம். நாம் என்ன அந்த அளவுக்கா மடையர்களாக இருக்கிறோம்?
பொய் சொல்வது, வாயால் வடை சுடுவது, மதவெறியை கக்குவது என்பதெல்லாம் பாஜகவினருக்கு கைவந்த கலை தான். ஆனால் ஆளுனர்(!) இப்படி பேசலாமா? என்றெல்லாம் கேட்க முடியாது. ஆளுநர் மட்டுமல்ல நீதிபதிகளும் கூட பேசுவார்கள், பேசி இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் ல் பயிற்சி பெற்றவர்கள். பார்ப்பனியத்தில் ஊறியவர்கள். அப்படித்தான் இருப்பார்கள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் வரலாறும் சமூக அறிவும் தேவைப்படுகிறது.