நெருப்புப் பாதை எனும் அக்னிபாத்தை அறிவிக்கும் போது, கொரோனாவுக்கு எதிராக விளக்கு ஏற்றச் சொன்ன அதே மனநிலையில் தான் மோடி அறிவித்திருப்பார் என எண்ணுகிறேன். எந்த எதிர்ப்பும் இன்றி அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றாக விளக்கு ஏற்றுவதைப் போல் அக்னிபாத்தும் நடப்பு வந்து விடும் என மோடி எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் இந்தி பேசும் மாநிலங்களில் இந்த திட்டம் கடும் எதிர்ப்பை கண்டிருப்பதுடன், ரயில் எரிப்புப் போராட்டங்களும் தீவிரப்படுத்தப்பட்டன. காவல் நிலையங்களும், பாஜக அலுவலகமும், ஒன்றிய அரசு அலுவலகங்களும் கூட போராட்டக் காரர்களிடமிருந்து தப்பவில்லை. இந்தி பேசும் மாநிலங்களில் மோடிக்கு எதிர்ப்பா? என்று ஒருவித மகிழ்வோடு இதை அணுகாமல் அதன் பின்னிருக்கும் காரணங்களை அலசலாம்.
இது போன்ற இராணுவத் திட்டங்கள் பல நாடுகளில் நடப்பில் இருக்கின்றன. அது போல் இந்தியாவிலும் கொண்டுவரப்படுகிறது இதில் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று தோன்றலாம். இது போன்ற ராணுவத் திட்டங்களுக்கு மக்கட்தொகை குறைவு, பொருளாதார பலமின்மை என இரண்டு காரணங்கள் முதன்மையாக இருக்கின்றன. இந்தியாவுக்கு இந்த இரண்டு காரணங்களுமே பொருந்தாது எனும் போது ஏன் இப்படி ஓர் இராணுவத் திட்டம்? பல மேனாள் இராணுவ அதிகாரிகள் இந்த திட்டத்தை எதிர்த்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் இராணுவத்தின் திறன் குறைந்து விடும், தியாக மனப்பான்மை இல்லாமல் போய்விடும், ஒற்றுமை குலைந்து விடும், தீவிரவாத ஆபத்து அதிகரித்து விடும் என்றெல்லாம் காரணங்களைக் கூறுகிறார்கள். இது போன்ற காரணங்களை விட இதை எதிர்ப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன.
முதலில் இந்த இராணுவத் திட்டத்தைக் கொண்டு வரும் நோக்கம் என்ன?, இந்த இராணுவத் திட்டத்தைக் கொண்டு வர வேண்டிய தேவை என்ன? என்பது குறித்த எந்த விளக்கத்தையும் ஒன்றிய அரசு தெரிவிக்கவில்லை. மாறாக, வேலை வாய்ப்பு என்ற அடிப்படையிலும், இதனால் கிடைக்கப் போகும் பலன்கள், சலுகைகள் குறித்த விளக்கங்களைத் தான் தெரிவித்திருக்கிறது. அந்த வகையில் பார்த்தாலும் ஓர் இராணுவ வீரருக்குறிய எந்த சலுகைகளும், வாய்ப்புகளும், ஓய்வூதிய பலன்களும், ஒதுக்கீடுகளும் இந்த நெருப்பு வீரர்களுக்கு இல்லை.
ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்பு என்று பாஜக 2014 தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதெல்லாம் வாயிலேயே பக்கோடா சுடும் பாஜகவுக்கு தேவையில்லாதவைகள். எனவே, வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் பாஜகவுக்கு வந்திருக்கவே வாய்ப்பில்லை. அப்படியென்றால் கார்ப்பரேட்டுகளின் நலன் தவிர வேறெதுவும் இதில் ஊடாடி இருக்க முடியாது. இராணுவ தளவாட ஏற்றுமதியில் பிராந்திய வல்லரசு எனும் இடத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணைகள் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. வியட்நாம் போன்ற நாடுகளோடு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ரபேல் விமானங்கள் தொடர்பில் உதிரி பாகங்கள் தயாரிப்பதில் தொடங்கி விமான தொழில்நுட்பம் வரை அம்பானியின் கைகள் நீண்டிருப்பது தெரிந்ததது தான். முப்படைகளின் தனித் தளபதிகளுக்கு மேல் ஒற்றைத் தளபதி நியமிக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகள் எல்லாம் இராணுவத்தில் தனியார்மயம் நோக்கி நகர்த்தப்பட்ட நடவடிக்கைகளே. அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இராணுவ வீரர்கள் தான், அமெரிக்காவுக்காக போரிடுபவர்கள் தான் என்றாலும் அமெரிக்க அரசுக்கும் இந்த வீரர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. சம்பளம் கொடுப்பது தொடங்கி அனைத்தையும் தனியார்களே கவனித்துக் கொள்வார்கள். பிராஜக்ட் அடிப்படையில் தனியாருக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும். இது போன்றதொரு முறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுவதற்கான முன்னோட்டம் தான் இந்த நெருப்புப் பாதை திட்டம். இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் தனியார் இராணுவம் செயல்பட முடியாது. முறைப்படியான இராணுவ வீரருக்கு கிடைக்கும் சலுகைகளும் பலன்களும் ஒதுக்கீடுகளும் மிக அதிகம். சொல்லப்போனால் இவை தான் இராணுவத்தில் சேர்வதற்கான ஊக்கியாக செயல்படுகிறதேயன்றி நாட்டுப்பற்று என்று தனியாக ஒன்றுமில்லை.
தற்போது நெருப்புப் பாதை திட்டம் வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மானிலங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. ரயில் பெட்டிகளை எரித்து இளைஞர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். போராட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே ரயில் பெட்டி எரித்து போராடும் அளவுக்கு போராட்டம் தீவிரமடைந்ததற்கு இரண்டு காரணங்களைக் கூறலாம்.
இராணுவ வேலை வாய்ப்பு பீஹார், உபி போன்ற இந்தி பேசும் பின்தங்கிய மாநிலங்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். கல்வியறிவோ, பெருந்தொழில்களோ, தகவல் தொழில்நுட்ப சேவைத்துறை வேலை வாய்ப்புகளோ மிகவும் குறைந்த அளவில் இருக்கும் இந்த மாநிலங்களில் இராணுவத்தில் சேர்வது என்பது தான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. கடந்த இரண்டு ஆண்டுகளாக இராவத்திற்கு ஆளெடுக்கப்படவில்லை. இது இராணுவக் கனவுடன் இருந்த இளைஞர்களுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தக் கூடியது. இதற்காக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காத்துக் கொண்டிருந்தவர்கள் தலையில் இடியைப் போல இறங்கியது தான் நெருப்புப் பாதை அறிவிப்பு. இராணுவ வேலை, வெறுமனே வேலை வாய்ப்பு மட்டுமல்ல, அது எதிர்காலத்தை உறுதி செய்வது. இந்த சலுகைகளை கவனியுங்கள். இராணுவ வீரர் ஒருவர் பணியில் இருந்து விருப்ப ஓய்வோ அல்லது ஓய்வோ பெற்று செல்லும் போது, தோராயமாக ஒரு கோடி வரை அவருக்கு கிடைக்கும். மட்டுமல்லாது, ஓய்வூதியப் பலன்களும் அவருக்கு உண்டு. தவிரவும், இரயில் பயணம் தொடங்கி மளிகைப் பொருட்கள் வரை, உயர்தர மதுவகைகள் உட்பட சலுகை விலையில் கிடைக்கும். ஓர் இராணுவ வீரர் பணியில் இருக்கும் போது உயிரிழந்தால் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் அவரது குடும்பத்தினருக்கு குறைந்தபட்சம் ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை கிடைக்கும். இதுவே போர் சூழலில் எதிரி நாட்டு வீரர்களிடம் சண்டையிட்டு, நமது ராணுவ வீரர் உயிரிழந்தால் ரூ.5 கோடி வரையிலான தொகையும் ஓய்வூதியமும் அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் கிடைக்கும். விருப்ப ஓய்வு பெற்று வெளி வருபவர்களுக்கு முன்னாள் ராணுவத்தினர் இடஒதுக்கீட்டில் வங்கி உள்ளிட்ட துறைகளில் எளிதில் பணி கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பணியின் போது உயிரிழந்த ராணுவ வீரரின் மனைவிக்கு விதவை ஒதுக்கீடும் வழங்கப்படும். இந்த ஒதுக்கீட்டை பெற்றிருக்கும் பெண்ணுக்கு, அரசுத் துறைகள் நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் அதிக முக்கியத்துவம் தரப்படும். இன்னும் கூறப்போனால், அவர் தேர்வுகளை எழுதினாலே போதுமானது. வேலை உறுதி. இது போல இன்னும் பல சலுகைகளும், பலன்களும், ஒதுக்கீடுகளும் உண்டு.
கல்லூரிகளுக்கு செல்ல விரும்பாமல், தங்களை வளர்த்துக் கொள்ள விரும்பாமல் ஒப்பீட்டளவில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் இராணுவத்துக்காகவே தயாரிக்கப்பட்டவர்கள் போல் காத்துக் கிடப்பதற்கு மேலே குறிப்பிட்ட சலுகைகள் (எதிர்காலம் உறுதிப்படுத்தப்படுவது) முதன்மையான காரணம். இந்த காரணத்தை ஒரே நொடியில் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது நெருப்புப் பாதை. அதனால் தான் பொங்கித் தீர்த்திருக்கிறார்கள்.
இதற்கு இணையான இன்னொரு காரணம் சாதி. உபி, பீஹார் போன்ற பிந்தங்கிய மாநிலங்களில் சாதியப் படிநிலை மிகவும் மேலோங்கிய நிலையில் ஆதிக்கத்தை சற்றும் விட்டுக் கொடுக்காத நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தாங்கள் வறுமையில் உழல்வதைக் கூட பொறுத்துக் கொள்வார்கள், தனக்கு கீழுள்ளவன் பொருளாதார வளத்துடன் இருப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இந்த மனநிலை தான் ஆதிக்க சாதிகளின் பொதுவான குணம். இந்த மாநிலங்களில் இராணுவத்தில் சேர்ந்து மேற்கண்ட சலுகைகள் பலன்களை பெற்று வேலைவாய்ப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் உறுதி செய்து கொள்வது ஒடுக்கப்பட்டவர்களில் மேல்நிலை சாதியில் இருப்பவர்களே. கீழ்நிலையில் இருப்பவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ இராணுவத்தில் சேர முடியாது, சேர வந்தாலும் இந்த சாதிகள் அதை அனுமதிப்பதும் இல்லை, இராணுவ அதிகாரிகளும் அது போன்றவர்களை தட்டிக் கழித்து விடுவார்கள். நடப்பில் இருக்கும் நிரந்தர இராணுவ ஆளெடுப்போ, அல்லது வேறு வேலை வாய்ப்புகளோ சாதிய பாகுபாட்டை ஏற்காமல் பொதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், அதன் வாய்ப்புகள் பொதுவாக அனைவருக்கும் கிடைப்பதில்லை. இப்போது வந்திருக்கும் நெருப்புப் பாதையோ சலுகைகள் இல்லாததாலும், குறைந்த ஊதியம், குறைந்த காலம் போன்றவை ஆதிக்க சாதிகளுக்கு ஒருபக்கம் கசக்கிறது, மறுபக்கமோ கீழ் நிலையில் இருத்தப்பட்டிருப்பவர்களுக்கு இது இனிக்குமே எனும் பொச்சரிப்பும் சேர்ந்து கொள்கிறது. இது ஆதிக்க சாதிகளின் கோபத்தை மேலும் விசிரி விட்டிருக்கிறது.
இந்த இராணுவத் திட்டத்தை வேலை வாய்ப்பு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான வாய்ப்பு என்பதால் ஏற்க முடியுமா? அல்லது இராணுவ மேனாள் உயரதிகாரிகள் கூறுவது போல் இராணுவத்தின் தரம், ஒற்றுமை, தியாக மனப்பன்மை குலையும் என்பதால் மறுக்க முடியுமா? இராணுவம் என்றும் எப்போதும் மக்களுக்காக இருந்ததில்லை இருக்கப்போவதில்லை. கார்ப்பரேட்டுகளை பாதுகாக்கவே அவை இருக்கின்றன. தற்போது தளவாட ஏற்றுமதி மூலமும், தனியார் இராணுவ பங்களிப்பு என்ற வகையிலும் அவர்கள் மேலும், மேலும் அதிக பலன்களை அடைய தீட்டப்படும் திட்டம் என்பதே முதன்மையான செய்தியாக இருக்கிறது.
17 வயதிலிருந்து 22 வயது வரையிலான காலம் தான் இளைஞர்கள், கல்லூரிகளில் படித்து தங்கள் தனித்தன்மையை வெளிக்காட்டி நிரூபிக்கும் காலம். மிகத் துல்லியமாக இந்த காலத்தை குறி வைக்கிறது நெருப்புப் பாதை திட்டம். அன்று வில்லையே தொட முடியாதபடி ஏகலைவனின் கட்டை விரலை கேட்ட துரோணர் போல, இன்று மிகத் துல்லியமாக இளைஞர்களின் முன்னேற்ற காலத்தைக் கேட்கிறார்கள் பார்ப்பனியர்கள். 22 வது வயதில் இராணுவத்திலிருந்து வெளியேறும் இளைஞர்கள் அதன் பிறகு என்ன செய்வார்கள்? அவர்களின் எதிர்காலம் என்னவாகும்?
இதில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு கோணமும் இருக்கிறது. பார்ப்பனியம் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த செய்த வன்முறை வெறியாட்டங்கள் அனைத்திலும் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைத் தான் பயன்படுத்தி இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை கட்டமைக்க நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் பெரும்பாலானவற்றில் இராணுவத்தின் ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எப்படி இராணுவத்தின் ஆர்.டி.எக்ஸ் அவர்களுக்கு கிடைத்தது எனும் கேள்விக்கு இதுவரை எந்த உருப்படியான பதிலும் கிடைக்கவில்லை. இந்த தகவல்களையும், நெருப்புப் பாதையிலிருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேறுபவர்கள் முறையான இராணுவப் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள் என்பதையும் இணைத்துப் பாருங்கள். நாளை நடக்க இருக்கும் கொடூரம் நம் கண் முன் விரியும்.
நெருப்புப் பாதையில் இருக்கும் சிக்கல்கள், சதித்திட்டங்கள், கார்ப்பரேட் நலம் உள்ளிட்ட அனைத்தையும் புறக்கணித்து விடும் மிடில் கிளாஸ் மாதவன்கள் போராட்டம் என்ற பெயரில் ரயில்களை, பொதுச் சொத்துகளை எரிப்பது சரியா? இது வன்முறை இல்லையா? என்று அறிவுவயப்பட்டு கேட்பதாக நினைத்துக் கொண்டு கேட்கிறார்கள். எது வன்முறை? அரசு தான் திட்டமிட்டு மக்கள் மீது வன்முறையை திணிக்கிறது. பெட்ரோல் விலை, சமையல் எரிவாயு விலையை தீர்மானிப்பது தொடங்கி, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு வரை அத்தனையும் மக்கள் தலையில் இடியாய் இறங்கி இருக்கிறது. இவை வன்முறை இல்லையா? பதக்கம் பெறுவதற்காக பொதுமக்களை சுட்டுக் கொன்று தீவிரவாதிகளாக கணக்கு காட்டியது தொடங்கி அன்றாடம் நடைபெறும் காவல் துறை கொட்டடிக் கொலைகள் வரை எடுத்துக் கொண்டால் இவற்றில் ஈடுபட்டவர்களை காப்பாற்றுவதற்கு எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறது அரசு. இது வன்முறை இல்லையா? உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் என்ற பெயரில் விளை நிலங்களை பறிப்பது தொடங்கி, போராட்டங்களில் ஈடுபட்டார்கள் என்று கூறி வீடுகளை இடிக்கும் புல்டோசர்கள் வரை வன்முறை இல்லாத இடம் ஏது? அரசு எட்டு வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களுக்கு வன்முறையாகத்தான் இருக்கிறது. இவைகளை எதிர்த்து மக்கள் சிறு முணுமுணுப்பை காட்டி விட்டால் கூட வன்முறை! வன்முறை! என்று குதித்துக் கொண்டு இந்த மாதவன்கள் கிளம்பி விடுகிறார்கள். மெய்யாகவே, இந்த மாதவன்கள் தான் வன்முறையாளர்கள். மக்கள் மீது கருத்து வன்முறையை ஏவி விடுபவர்கள். இவர்களை புறக்கணிப்போம். போராட்டங்களைத் தொடர்வோம்.