பதின்ம வயது தொடங்கி, மரணம் வரை பொதுமை மெய்யியலை உயர்த்திப் பிடித்து,
அதற்காகவே இயல்பாக இருந்த வாழ்விலிருந்து விலகி நின்று,
திருமணம் உள்ளிட்ட எந்த சட்டகங்களுக்குள்ளும் சிக்காமல்,
உழைத்த ஒரு தோழரை இழந்திருக்கின்றோம்.
தோழருடன் நேரடியாக எனக்கு எந்தப் பழக்கமும் இல்லை. சில முறைகளைத் தவிர சந்தித்ததும் இல்லை. இரண்டைத் தவிர மற்ற அனைத்தும் பொதுச் சந்திப்புகள் தாம். வகுப்புகளில், தலைப்புகளில். இரண்டு முறை மட்டுமே தனியாக சந்தித்து உரையாடியிருக்கிறேன். என்ன சொன்னாலும், அதை எப்படிச் சொன்னாலும் சொல்லி முடிக்கும் வரை அமைதியாக இருந்து கேட்பதே, தலையாட்டிக் கொண்டு புன்னகைப்பதே, நம் செருக்கை அறுக்கும்.
கடைசி வரை தோழரை இலக்கமிட்டே அழைத்திருக்கிறோம். பெயர் தெரியாது. அந்த அளவுக்கு தன்னை கரைத்தவர், கலைத்தவர்.
இணையத்தின் பல அஞ்சலி உரைகளில், ‘கடைசிக் கால தவறுகள்’ என்று சில குறிப்புகள் தவறாமல் இடம்பெற்றிருக்கின்றன. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை. அதேநேரம் ‘அவர் மட்டுமே’ என்று சுட்டுவது இயங்கியலுக்கு எதிரானது என்பதையும் கவனத்தில் கொண்டு .. ..
மனதில் வழியும் கண்ணீருடன் .. ..
வீரவணக்கம்.