தீஸ்தா செதல்வாட், முகம்மது சுபைர் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கைது ஐ.நா வரை பேசு பொருளாகி இருக்கிறது. அறிவுத் துறையினர் தொடங்கி முற்போக்காளர்கள் வரை அனைவரும் கண்டித்து விட்டனர். அரசு வாய் திறக்கவில்லை. பதில் கூறும் என்று எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் இது முதல் முறையும் அல்ல. ஆனந்த் டெல்தும்ப்டே தொடங்கி வரவரராவ் ஊடாக ஸ்டென்சாமி வரை கைது செய்திருக்கிறார்கள். வரவரராவ் பிணையில் வெளி வருவதற்கு தலை கீழாக நின்று தண்ணீர் குடித்துக் காட்ட வேண்டியிருந்தது. நடுக்கு நோய் கொண்ட ஸ்டென்சாமியோ ஒரு உருஞ்சு குழல் தாருங்கள் என்று நீதி மன்றக் கதவை தட்டித் தட்டியே மரித்துப் போனார். எழுத்தாளர்கள், கலைஞர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பிக் கொடுத்தார்கள். ஆயினும் என்ன? ஏதாவது நடந்திருக்கிறதா? 90 விழுக்காடு மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபா இன்னும் சிறைக்குள் தான் இருக்கிறார். ஆனாலும் மோடியும், அமித்ஷாவும் குற்றமற்றவர்கள்.
கடந்த வாரம் 2002ல் நடத்தப்பட்ட குஜராத் வன்முறை வெறியாட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் குற்றமற்றவர்கள் என்று உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது. அரசு, வன்முறையாளர்களுக்கு திட்டமிட்டு உதவியும், வாய்ப்புகளும் வழங்கியிருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட போதிலும் அந்த நேரத்தில் முதலமைச்சராக இருந்த மோடியும், உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவும் -இர்ஷத் ஜஹான் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா எந்தக் காரணமும் இல்லாமல் புதிரான வகையில் இறந்து போனதை நினைவில் கொள்ளவும்- குற்றமற்றவர்கள் என்று குஜராத் உயர்நீதி மன்றம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட வழக்கில் தான் அவ்வாறு அறிவித்திருந்தது உச்சநீதி மன்றம். இதற்கு மறுநாள் தீஸ்தா செதல்வாட் கைது செய்யப்பட்டார். அவர் மீது புனையப்பட்ட வழக்கு நீதி மன்றத்துக்கு அவதூறான உண்மைக்கு மாறான தகவல்களைத் தந்தார் என்பது.
உண்மையில் தீஸ்தா செதல்வாட்டும், திருமதி ஜாப்ரியும், தெகல்கா இணைய தளமும் இல்லையென்றால், 2002ல் குஜராத்தில் கலவரம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பெருங்கொடுமை இந்த அளவுக்கு வெளிப்படுத்தப்படாமல் ஒரு கலவரம் என்ற அளவில் முடிந்து போயிருக்கும். தன்னுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினரையே கொன்று போட்ட பிறகும் காங்கிரஸ் கட்சி எந்த அசைவும் இல்லாமல் இன்று வரை உறங்கிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் கட்சிக்கு அப்பாற்பட்டு திருமதி ஜாப்ரி சளைக்காமல் போராடினார். ஒவ்வொரு நீதி மன்றத்தின் கதவுகளையும் விடாமல் மோதினார். அதேபோல் தெகல்கா, தன்னுடைய கமுக்க விசாரணை (ஸ்டிரிங் ஆபரேஷன்) மூலம், கொலையாளர்கள் ஒவ்வொருவரையும் எப்படி கொன்றார்கள், வன்புணர்ந்தார்கள், அரசு அதற்கு எப்படியெல்லாம் உதவி செய்தது என்று சொந்த வாக்குமூலமாக வெளியில் கொண்டு வந்தது. இதற்கு இணையான பெரும்பங்கு தீஸ்தாவுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்களை திரட்டி ஆவனங்களை சேகரித்து நீதி மன்றங்களில் தொடர்ச்சியாக போராடி, இந்த அளவுக்கு வழக்குகள் நகர்ந்து வருவதற்கு உருளியாக இருந்து உருண்டிருக்கிறார்.
திருமதி ஜாப்ரிக்கு சொந்த காங்கிரஸ் கட்சியினர் கூட எந்த வழக்கிலும் உதவவில்லை. தனியாகவே வழக்குகளை நடத்தினார். தெகல்கா நிறுவனமோ பாலியல் வழக்கில் சிக்கி (சிக்கியா? சிக்க வைக்கப்பட்டா?) சின்னபின்னமாகிப் போனது. இதோ, மோடியும் அமித்ஷாவும் குற்றமற்றவர்கள் என தீர்ப்பு வந்த மறுநாள் தீஸ்தா கைது செய்யப்பட்டிருக்கிறார். வழக்கு என்ன ஆகும்? பிணை கிடைக்குமா? யாருக்கும் தெரியாது.
இதேபோலத் தான் முகம்மது சுபைரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அண்மையில் பாஜகவின் நுபுர்சர்மா அவதூறு பெரும் பிரச்சனை ஆனது. பன்னாட்டளவில் கவனம் ஈர்த்தது. இந்தியா கண்டனத்துக்கு ஆளானது. இந்த விதயத்தை வெளியில் கொண்டு வந்து பெரும் விவாதமாக மாற்றியதில் ஆல்ட் நியூஸ் எனும் இணைய செய்தி நிறுவனத்துக்கு பெரும் பங்கு உண்டு. இந்த செய்தி நிறுவனத்தை மின்பொருள் பொறியாளரான பிரதிக் சின்ஹா என்பவருடன் இணைந்து முகமது சுபைர் நடத்தி வருகிறார். நுபுர் சர்மா விதயம் மட்டுமல்ல, பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பரிவாரங்கள் வெளியிடும் செய்திகளின் பொய்களை அம்பலப்படுத்துவதில் மிகப்பெரும் பங்கை ஆற்றி வருகிறது ஆல்ட் நியூஸ் நிறுவனம். பாஜகவின் பல்வேறு விதமான பொய்களில் நூறு பொய்களை எடுத்து, அவற்றை அம்பலப்படுத்தி ஆல்ட் நியூஸ் வெளியிட்ட கட்டுரைகளை தொகுத்து “India Misinformed” என்ற பெயரில் நூலாக கொண்டு வந்தார்கள் (இந்த நூல் தோழர் சிந்தன் மொழி பெயர்ப்பில், “இந்தியா ஏமாற்றப்படுகிறது” என்ற பெயரில் தமிழிலும் வெளிவந்திருக்கிறது) கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் பாஜக வுக்கு விளக்கு பிடித்து நடத்திக் கொண்டிருக்கையில், ஆல்ட் நியூஸ் போல வெகு சில ஊடகங்கள் தான் பாஜகவின் பொய்களை அம்பலப்படுத்தும் பெருங்கடமையை தங்கள் தோளில் சுமக்கின்றன. பொறுக்குமா அவர்களுக்கு?
ஏற்கனவே, சுபைர் மீது பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்கூட, ‘வெறுப்பு வேட்டைக்காரர்கள்’ என்றொரு சொல்லை பயன்படுத்தியதற்காக உபியில் சுபைர் மீது இன்னொரு வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆனால் இது போன்ற வழக்குகளில் சுபைரைக் கைது செய்யக் கூடாது என்று ஏற்கனவே தில்லி நீதி மன்றம் உத்தரவிட்டிருக்கிறது. எனவே, விசாரணை என்று தில்லிக்கு அழைத்து, கடந்த 2018ம் ஆண்டு சுபைர் பதிவிட்டிருந்த ஒரு துவிட்டை காரணமாக காட்டி மதவெறியை தூண்டினார் என்று வழக்குப் பதிந்து கைது செய்திருக்கிறார்கள்.
உலகம் முழுவதிலும் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் போன்றோருக்கு அரசு செய்யும் கைதுகள் பொருட்டே அல்ல. அரசுக்கு எதிராக செயல்படும் யாரையும் அது கைது செய்து முடக்கவே எண்ணும். வழக்கின் உண்மைத்தன்மை, தீவிரத்தனமையைப் பொருத்து விடுதலை செய்யப்படுவதும், தண்டனை அடைவதையும் கூட அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஏனென்றால் அவர்களின் இலக்கை நோக்கிய பயணத்தில் அது ஒரு திருப்பம் அவ்வளவே. விதி மீறல்களும் உண்டு. ஆனால், இந்தியாவைப் பொருத்தவரை பொய் வழக்குகளுக்கு இங்கு பற்றாக்குறையே ஏற்பட்டதில்லை. ஒரு கோணத்தில் இந்தியாவில் இதுவரை பதியப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் பொய் வழக்குகளே. தவிரவும் காவல் துறையும் நீதி மன்றமும் வேட்டை விலங்குகள் போலவே நடந்து கொள்ளும். காவல் நிலையத்தில் அடித்தே கொல்லப்பட்டவர்களின் கணக்கை எடுத்தால், இமைய மலையே சின்னதாகத் தோன்றும். பழங்குடிகளுக்காக பாடுபட்ட நடுக்கு நோய் தக்கிய ஸ்டேன்சாமி எனும் முதியவருக்கு ஒரு உருஞ்சு குழல் (ஸ்ட்ரா) கொடுப்பதற்கு பல நாட்களாக விவாதம் நடத்தியது நீதி மன்றம். நீதி மன்றம் தன் முடிவைச் சொல்வதற்கு முன் அவர் தன் மூச்சையே முடித்துக் கொண்டார். கழிப்பறைக்கு செல்வதற்குகு கூட இன்னொருவரின் துணை இருந்தால் மட்டுமே இயலும் எனும் அளவுக்கு 90 விழுக்காடு பாதிக்கப்பட்டிருக்கும் மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவுக்கு பிணை வழங்க ஆண்டுக்கணக்காக விசாரித்துக் கொண்டிருக்கிறது நீதி மன்றம். யார் கண்டது நீதி மன்றம் தன் தீர்ப்பைச் சொல்லுமுன் சாய்பாபா தீர்ந்து போய் விடலாம். இது தான் நீதி மன்றங்களின், காவல் துறையின் நிலை.
இது போன்ற கைதுகளின் துல்லியமான நோக்கம் அரசின் பாசிச செயல்பாடுகளை மக்களின் கண்களிலிருந்து மறைப்பது தான். வளரும் தலைமுறையினரை அடிமைகளாய் ஏவல் நாய்களாய் வளர்த்தெடுப்பது தான். அரசு நினைத்தால், யாருடைய திறன்பேசியையும் கண்காணிக்கலாம். மக்கள் எவரையும் உளவு பார்க்கலாம். மக்களின் கணிணிகளில் ஊடுறுவல் செய்து தனக்கு தேவைப்படும் சான்றுகளை மறைத்து வைக்கலாம். என்ன வேண்டுமானாலும் அரசினால் செய்ய முடியும். குவியல் குவியலான பொய்ச் செய்திகளின் மூலம் இளையவர்களின் மூளைகளுக்குள் தங்களுக்கான இடத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அரசின் அத்தனை உறுப்புகளையும் தங்களுடன் உடன்படாதர்களுக்கு எதிராக பாய்ச்சுகிறார்கள்.
எனவே, இந்தியாவைப் பொருத்தவரை கைது செய்யப்படுவதன் பொருள் கைது செய்யப்படுவது மட்டுமே அல்ல. புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் மிகத் தீவிரமாக போராட்ட வடிவங்கள் குறித்து சிந்திக்க வேண்டிய காலம் இது. ஆர்ப்பாட்டம், அடையாள சாலை மறியல் போன்றவைகளெல்லாம் காலாவதியாகி மிக நீண்ட நாட்களாகின்றன. கண்ணில் விழுந்த கண்ணாடித் துகளைப் போன்று போராட்ட வடிவங்கள் அரசுக்கு நெருக்கடியை அளிக்க வேண்டும். இதுபோன்ற அரசுக்கு நெருக்கடியும், மக்களுக்கு பாதுகாப்பு உணர்வையும் அளிக்கக்கூடிய போராட்ட வடிவங்களை கண்டுபிடிப்பது தான் புரட்சிகர இயக்கங்களின் பெரும் பணியாக இருக்கிறது. அப்போது தான் போகிற போக்கில் செய்யப்படும் கைதின் மூலம் மக்கள பணிகளை முடக்குவதையும், சட்டபூர்வமாகவே எதிர்ப்புக் குரலை நசுக்குவதையும், சட்டபூர்வமாகவே கொலைகள் செய்வதையும் தடுக்க முடியும்.