செய்தி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில், உள்ளூர் மக்களுக்கு பணி வழங்கியதை எதிர்த்து வடமாநிலத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .. .. .. நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வடமாநில தொழிவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தனியார் நூற்பாலை நிர்வாகம் உள்ளூர் தொழிலாளர்கள் சிலரைக் கொண்டு ஆலையை தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதன் காரணமாக பல ஆண்டுகளாக இங்கு பணிபுரியும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, வடமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக தமிழ்நாடு நிறுவனங்களில் தமிழர்களுக்கு இடஒதுக்கீடு முறை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், உள்ளூர் மக்களுக்கு எதிராக வடமாநில மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியின் பின்னே:
தமிழ் தேசியம் என்ற பெயரில் சீமான் உள்ளிட்ட பலரும் இங்கு வணிகம் செய்து வருகின்றனர், அதாவது அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், மேற்கண்ட நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்ட சில நிறுவனங்கள் தமிழர்களுக்கு வேலை வழங்கக் கூடாது என்று வட மாநிலத்தவர் போராடுவதாக குறிப்பிட்டன. குறிப்பாக ஒன் இந்தியா செய்தி நிறுவனம். இதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் ஒன் இந்தியாவின் செய்தி அட்டை காடடுத் தீ போல பரவியது. பலரும் கொதித்துப் போய் எழுதினார்கள். இதில் கம்யூனிஸ்டுகளும் அடக்கம்.
முதலில், தமிழர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என்று போராடினால் என்ன தவறு? தொழிலாளர்கள் வழக்கமாக கடைப்பிடிக்கும் உத்தி தானே இது. ஓர் ஆலை நிர்வாகத்தை எதிர்த்து தொழிலாளர்கள் போராடும் போது வேறு தொழிலாளர்களைக் கொண்டு ஆலையை நிர்வாகம் இயக்க முற்பட்டால் வேறு ஆட்களைக் கொண்டு ஆலையை இயக்காதே என்று கோரிக்கை வைப்பதில்லையா? அது போலத் தானே இதுவும். இதில் என்ன தமிழர்கள், வட மாநிலத்தவர் வேறுபாடு?
மெய்யாகவே, அவர்கள் தமிழர்களை வேலைக்கு எடுக்கக் கூடாது என்று போராடவே இல்லை. காணால் போன அல்லது காணமல் போனதாக ஆலை நிர்வாகத்தால் கூறப்படும், தங்களுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளியை கண்டுபிடிப்பதில் நிர்வாகம் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் அவர்கள் நிர்வாகத்துக்கு எதிராக போராடுகிறார்கள். இதை ஒடுக்க உள்ளூர் தமிழர்களை வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கு தமிழர்களை எடுக்காதே என்று அவர்கள் போராடவில்லை, காணாமல் போன தங்களில் ஒருவரை கண்டுபிடிக்கவே அவர்கள் போராடுகிறார்கள். இப்போது உள்ளூர் தமிழர்கள் வேலைக்கு வேண்டும் என்றால் முதலில் ஏன் உள்ளூர் தமிழர்களை வேலைக்கு எடுக்கவில்லை. சம்பளம் குறைவாக கொடுத்து வேலை வாங்க வேண்டுமென்றால் வட மாநிலத் தொழிலாளர்கள் வேண்டும். அவர்கள் போராடினால் போராட்டத்தை ஒடுக்குவதற்கு தமிழர்கள் வேண்டுமா? இது என்ன பித்தலாட்டம்?
இந்த பித்தலாட்டத்தை எதிர்த்தல்லவா சமூக ஊடகங்களில் கொதித்திருக்க வேண்டும்? ஆனால், தமிழ்நாட்டில் பிழைக்க வந்து இருந்து கொண்டு தமிழர்களுக்கு எதிராகவே போராடுவதா? என்று இன வெறியை தூண்டி விடுவது எவ்வளவு ஆபத்தானது? இது பார்ப்பனியத்தின் வேலைத் திட்டம். இன மொழி சாதி அடிப்படையில் மக்களை பிரித்தே வைத்திருப்பது தான் ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவானது, பார்ப்பனியத்துக்கு ஆதாயம் தருவது. வர்க்க அடிப்படையில் மக்களை ஒன்றுபடுத்துவதே மக்களுக்கான அரசியல்.
அதாகப்பட்டது, “வெளஞ்ச சட்டியா இருந்தாலும் கனத்த போடாதலே” அம்புட்டுதேன்.