உதைப்பூர் கொலையில் பாஜக

நுபுர் சர்மாவின் அவதூறு பேச்சு பெருங் குழப்பத்தை ஏற்படுத்திய அந்த நேரத்தில், “பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தேன். அதில் உள்ள ஒரு பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.

சிஏஏ சட்ட வரைவு கொண்டு வந்த போது, இஸ்லாமிய மண விலக்கு சட்ட திருத்தத்தின் போது, அடித்துக் கொல்வது தொடர்கதை ஆனபோது, பள்ளிவாசல்கள் ஆக்கிரமிப்பு சட்ட அங்கீகரம் பெற்ற போது, முகத்திரை சிக்கலின் போது, கலவரம் செய்த போது, கலவரத்தை எதிர்த்தவர்கள் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு தரை மட்டமாக்கிய போது, இன்னும் இஸ்லாம் குறித்து வாய்க்கு வந்ததை எல்லாம் அவதூறாக பேசி இழிவுபடுத்திய போது, இன்னும் என்னவெல்லாமோ நடந்த போது, வெளிப்படாத போபமும் கலவரமும் இந்த முறை தொலைக்காட்சியில் பேசியவுடன் வந்துவிட்டதா? மறுநாளே உபி கான்பூரில் கலவரம் வெடித்தது. அதையும் காவல் துறை உடனே அடக்கியும் விட்டது. இதெல்லாம் நம்பும்படியா இருக்கிறது .. ..?

நுபுர்சர்மா அவதூறுப் பேச்சு, அரபு நாடுகளின் கண்டனம், ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் என ஒருவாறு அந்த சிக்கல் முடிவுக்கு வந்தது. ஆனால் இதை தொடங்கியவர்களுக்கு அவ்வளவு எளிதில் இது முடிவுக்கு வருவதில் உடன்பாடு இல்லை. அதற்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் உதைப்பூர் நகரில் ஒரு தையலர் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக துவிட்டரில் எழுதினார் என்பதற்காக அவரை இரண்டு முஸ்லீம்கள் கொன்று விட்டார்கள் என்று செய்தி பரவியது. கொலை செய்தவர்களே நாங்கள் இதற்காக கொன்றோம் என்று பேசி காணொளியாக வெளியிட்டார்கள். உடனே சட்டம் தன் கடமையை செய்தது. முன்பு கொதித்தெழுந்த அரபு நாடுகளில் சில இந்த கொலையையும் கண்டித்தன. இஸ்லாமிய அடிப்படைவாதம் குறித்த பேச்சுகள் மீண்டும் நிரலுக்கு வந்தது.

ஓரிரு நாட்களிலேயே இந்த நாடகம் முடிவுக்கு வந்தது. கொலை செய்தவர்கள் பாஜகவின் சிறுபான்மை பிரிவின் உறுப்பினர்கள் என்பதும், கொலைகாரர்களில் ஒருவரான ரியாஸ் அட்டாரி உள்ளூர் பாஜக தலைவரான செயின்வாலாவுடனும், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவரும் முன்னாள் மாநில உள்துறை அமைச்சருமான குலாம் சந்த் கட்டாரியாவுடனும் இருக்கும் படங்கள் வெளியாயின. மட்டுமல்லாது, இந்தியா டுடே ஒரு கட்டுரையும் எழுதியிருந்தது. அதில் கொலைகாரர்களுக்கும் பாஜகவுக்குமான தொடர்பு உறுதிப்படுத்தப் பட்டது.

உள்ளூர் பாஜக தலைவர் செயின்வாலாவுடன்

தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும் தக்க வைக்கவும் பார்ப்பனியம், ஆர்.எஸ்.எஸ், பாஜக எந்த எல்லைக்கும் செல்லும், எவ்வளவு கீழ்த்தரமான, மனிதத்தன்மையற்ற செயல்களிலும் இறங்கும் எனும் அதன் குணம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல பலரும் இது போல் களம் இறக்கி விடப்பட்டிருக்கிறார்கள் என்பதை கீழ்காணும் இரண்டு காணொளித் துணுக்குகள் மெய்ப்படுத்துகின்றன.

இந்துக்கள் என்று தங்களை நம்பிக் கொண்டிருப்போர் இதற்கு பதில் கூற முன்வர வேண்டும். பாஜக தங்களை இந்துக்கள் கட்சி, இந்துக்களின் முன்னேற்றத்துக்காக அவர்களின் சார்பாக களமாடும் கட்சி என்று கூறிக் கொண்டு தான் இவைகளைச் செய்கிறது. தங்களைத் தவிர ஏனைய கட்சிகளெல்லாம் வாக்கு வங்கிக்காக இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றன என்றும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இந்துக்களின் பெயரால் செய்யப்படும் இழி செயல்களை சதித்திட்டங்களை எதிர்த்து இந்துக்கள் என்று சொல்லப் படுவோர் குரல் கொடுக்க வேண்டாமா?

இந்த உதைப்பூர் படுகொலையை கண்டிப்பதாக அடையாளப்படுத்தி தமிழ்நாட்டில் இரண்டு வகையான எதிர்ப்புகள் வெளிப்பட்டிருக்கின்றன. ஒன்று சிரிதர் சுப்ரமணியம் வகைப்பட்ட எதிர்ப்புகள். இதில் பல வெளி நாட்டில் செய்யப்பட்ட கொலைச் செயல்கள் பட்டியலிடப்பட்டு இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் செய்யாமல் அந்தந்த நாட்டு அரசுகள் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டிருக்கின்றனவா? என்று கேள்வி எழுப்புகிறார்கள். இரண்டு, முன்னாள் முஸ்லீம்கள் என கூறிக் கொள்ளும் சிலர். இவர்கள் முஸ்லீகளை குற்றப்படுத்தக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் தவறவிடுவதில்லை.

இன்றைய களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இவர்கள் சிந்திப்பதே இல்லை. இஸ்லாமியர்களின் வேதங்களில், உபநிடதங்களில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறது? இந்தியாவில், வெளிநாடுகளில் எத்தனை கொலைச் செயல்கள் முஸ்லீம்களால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன? அவர்கள் எப்படி வெறியூட்டப்பட்டவர்களாக இருக்கிறார்கள் போன்ற விவரங்களையெல்லாம் மதவாதிகள் கைக் கொள்ளட்டும். இந்திய நிலமை என்ன? இந்தியாவில் இஸ்லாமியர்கள் அரசுகளால் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள்? என்பவை மதவாதிகள் அல்லாதவர்களுக்கு முதன்மையானவை.

நூற்றாண்டுகள் பழமையான ஒரு பள்ளிவாசலை பொய்களை, அவதூறுகளை விதைத்து சட்டவிரோதமாக இடித்து, பின் சட்டபூர்வமாகவே அதற்கு ஆணையும் வழங்கி விட்ட ஒரு நாட்டில், முஸ்லீம்கள் பெயரால் குண்டு வெடிப்புகளை நடத்தி, அது சதித்தனமாக முஸ்லீம்கள் மீது சாட்டப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் அவர்களை பயங்கரவாதிகளாக உருக்காட்டப்படும் ஒரு நாட்டில், திட்டமிட்டு, பலநாட்களாக கொலைக் கருவிகளையும், தேவையான துணைப் பொருட்களையும் சேர்த்து, அரசோடு இணைந்து கொத்துக் கொத்தாக கொடூரமாக கொன்று விட்டு அதை கலவரம் என்று சமப்படுத்தி, சட்ட ரீதியாகவே கொடூரர்கள் பலரை விடுதலையும் செய்திருக்கும் நாட்டில், இஸ்லாமியர்கள் எப்படி இருக்க முடியுமோ, அதற்கும் கீழாகத் தானே இந்தியாவில் முஸ்லீம்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

மறுபக்கம், குறைந்த அளவிலான முதலாளித்துவ ஜனநாயகம் கூட மறுக்கப்படும் சூழல் திட்டமிட்டு உருவாக்கப் பட்டிருக்கிறது. பசுக் குண்டர்கள் தொடங்கி மாநாடுகளில் அப்பட்டமாக மதவெறியூட்டுபவர்கள் வரை எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் ஆளாகாமல் இயல்பாக வாழ்ந்து கொண்டிருக்கையில், கல்லெறிந்ததை காரணமாக காட்டி எந்த சான்றும் இல்லாமல் வீடுகள் இடிக்கப்படுவதைக் காண்கிறோம். எந்தக் குற்றமும் செய்யாமலேயே பல பத்தாண்டுகள் சிறையில் கிடந்து விட்டு கடைசியில் குற்றம் நிகத்தப்பட்டதற்கான சான்று இல்லை என்று கூறி விடுதலை செய்யப்படுவதைக் காண்கிறோம். மணவிலக்கு உட்பட முகத்துணி போடுவது வரை மத உள்விவரங்களில் அரசும் சட்டமும் நீதிமன்றங்களும் குறுக்கீடு செய்வதை பார்க்கிறோம். (அந்த மதச்சட்டங்கள் சரியா தவறா என்பது வேறு. இந்த இந்துத்துவத்தை தூக்கிப்பிடிக்கும் அரசுக்கு அதை செய்வதற்கான தகுதி இருக்கிறதா என்பதே கேள்வி) அனைத்து அரசு நிறுவனங்களும் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோரை வேறு கண்ணோட்டத்தில் பார்ப்பதைக் காண்கிறோம். உடனுறை மக்கள் கூட கொஞ்சம் கொஞ்சமாக பண்பாட்டு அடிப்படையில் பிளவுபடுத்தப்படுவதைக் காண்கிறோம். இந்த சூழலை புரிந்து கொள்ள வேண்டாமா?

இவைகளைப் புரிந்து கொள்ளாமல் வேத உபனிடதங்களை புரட்டிக் கொண்டு அரசியல் நிகழ்வுகளை விமர்சிப்பதும், வெளிநாட்டில் இருக்கும் சில பயங்கரவாத இயக்கங்களின் செயல்களையும், இந்திய முஸ்லீம்களையும் ஒரே தட்டில் வைத்து நிறுத்துப் பார்ப்பதும் ஆபத்தை விளைவிப்பவை. இதை தொடர்புடையவர்கள் உணர்ந்து கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் மதத்தை ஒதுக்கி வைத்து விட்டு பாதிக்கப்பட்டவர்கள் உடன் நிற்பதும், அவர்களை அரசியல் படுத்துவதுமே இந்தக் களத்தில் இன்றியமையாத நடவடிக்கைகளாய் இருக்கும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s