செய்தி:
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் 19 மாநில முதலமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹைதராபாத்தை பாக்யா நகர் என்று குறிப்பிட்டு பேசினார். பாக்யநகரில் தான் சர்தார் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்கும் “ஏக் பாரத்” என்ற வார்த்தையை உருவாக்கினார் என்று தெரிவித்தார். இதனால் ஹைதராபாத் நகரின் பெயர் மாற்றப்படுமா என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
செய்தியின் பின்னே:
மாநிலத்தை நிர்வாக வசதிகளுக்காக பிரிப்பது, ஒரு பகுதியின், நகரின் பெயரை மாற்றுவது என்பதெல்லாம் ஒன்றிய மாநிலங்களின் ஆளுமைக்கு உட்பட்டது தான். ஆனால் இவ்வாறு பெயர் மாற்றுவதை என்ன காரணத்துக்காக, என்ன நோக்கத்துக்காக செய்கிறார்கள் என்பதில் தான் சிக்கல் வருகிறது.
பாஜகவினர் இந்த நாட்டின் பெயரை இந்தியா என்று ஒருபோதும் சொல்ல மாட்டார்கள். பாரதம் என்றே குறிப்பிடுவார்கள். காரணம் கேட்டால், முன்னொரு காலத்தில் பரதன் எனும் மன்னன் இந்தியாவை சீறும் சிறப்புமாக ஆட்சி செய்தான். அவனுடைய நினைவாக இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரே சரியானது என்பார்கள்.
பரதன் எனும் மன்னன் எந்த காலத்தில் ஆண்டான் என்று கேட்டால் பதில் கூற மாட்டார்கள். ஏனென்றால் பரதன் என்ற பெயரில் எந்த மன்னரும் இந்தியப் பகுதியை ஆளவில்லை. வரலாற்றில் இல்லாத கற்பனைப் பாத்திரம் அது. இராமாயணத்தில் வரும் பரதனை குறிப்பிடுவார்கள். அது இதிகாசம் தானே தவிர வரலாறு இல்லை.
இந்தியா என்றொரு நாடு முன்பு இருந்ததா? என்றொரு கேள்வியை எழுப்பினால் அப்போதும் அவர்களிடமிருந்து பதில் எதுவும் வராது. முகலாயர்களுக்கு முன்னால் இந்தியா என்றொரு சொல்லே வரலாற்றில் இல்லை. சிந்து நதியின் கரையில் உள்ள நிலப்பகுதி எனும் பொருளில் தான் இந்தியா எனும் சொல் பயன்படுத்தப்பட்டதே தவிர குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்ட நாடு என்ற பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்படவே இல்லை.
ஆனால் திட்டமிட்டு பாரதம் என்ற சொல்லை பயன்படுத்துவதன் நோக்கம் பார்ப்பனிய இந்துத்துவ கொள்கைகளுக்கான குறியீடு என்பதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. பல இடங்களின் நகரங்களின் பெயர்கள் இவ்வாறான இந்துத்துவ குறியீட்டைக் கொண்டிருக்கும் வண்ணம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் குறிப்பாக இஸ்லாமிய குறியீடு கொண்டிருக்கும் பெயர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. இப்படியான மாறுதல்கள் முறையாக அறிவிக்கப்பட்டும் நடந்திருக்கிறது, அறிவிக்கப்படாமலும் நடந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பல பெயர்கள் எந்தவித அறிவிப்பும் இன்றி மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி மாற்றப்பட்ட ஊர்களின் பெரும் பட்டியலே இருக்கிறது. முட்டம் எனும் சிறு கிராமத்தின் பெயரைக் கூட ஸ்ரீமுஷ்ணம் என்று மாற்றி இருக்கிறார்கள்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறு பகுதியின் பெயர் ராமையன் பட்டி. திடீரென்று ஒரு நாள் புது பெயர் பலகை வைக்கிறோம் என்று கூறி, ‘இராமாயண் பட்டி’ என்று பெயர்ப் பலகை வைத்தார்கள். இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதிகாரிகள் உச்சரிப்பு தெரியாமல் பெயர் பலகை வைத்து விட்டார்கள். மாற்றி விடுகிறோம் என்றார்கள். இன்று வரை அந்தப் பலகை இராமாயண் பட்டியாகவே தொடர்கிறது. நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கும் பார்ப்பனர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இவ்வாறான மாற்றங்களைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.
ஊர் பெயரிகளில் மட்டுமல்ல, ரேசன் கார்டு உள்ளிட்ட தனி அடையாள அட்டைகளில் கூட சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர்களின் பெயர்களை தப்பும் தவறுமாக பதிவேற்றி விடுகிறர்கள். பின் அவர்கள் அதை சரி செய்வதற்காக அலுவலகங்களுக்கு நடையாய் நடக்க வேண்டும். சரியான பெயருக்கு ஆதாரங்களை காட்ட வேண்டும். ஆனால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தொடர்புடைய அதிகாரிகள் தவறாக பதிவு செய்தார்கள் என்ற கேள்வி மட்டும் எழும்பாது.
இந்த அடிப்படையில் தான் ஹைதராபாத் எனும் நகரின் பெயரை பாக்யநகர் என்று உச்சரித்திருக்கிறார் மோடி. சதி செய்வதையே மூச்சாக கொண்டிருப்பவர்கள் வேறு என்ன செய்வார்கள்? நேர்மையாளர்களாக இருந்திருந்தால் பெயர் மாற்றத்துக்கான காரணங்களை குறிப்பிட்டு பிரதமர் அலுவலகத்திலுருந்து தெலுங்கானா முதல்வர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பி இருக்கலாமே. மாறாக உபி முதல்வர் தேர்தல் மேடைகளில் பெயர் மாற்ற குரல் கொடுப்பதும். பிரதமர் பெயரை மாற்றி உச்சரிப்பதும் என்ன மாதிரியான நடைமுறை?
பொறுப்பானவர்கள், பதவியில் இருப்பவர்கள், கட்சியில் இருப்பவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள், மதிப்பு மிக்கவர்கள் என்ற வேறுபாடெல்லாம் பார்ப்பனியத்தில் கிடையாது. அவர்களின் ஒரே நோக்கம் மக்களிடம் மதவெறியை தூண்ட வேண்டும். அதற்காக எதையும் செய்வார்கள்.
அதாகப்பட்டது, “மொச புடிக்கிற நாய மூஞ்சிய பார்த்தே கண்டு புடிக்கணும்லே” அம்புட்டுதேன்.