போராட்டக் களத்தில்

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை பகுதி 3

இந்தப் போராட்டத்தின் இலக்கே மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மனு கொடுப்பது தான். இதை போராட்ட நாளுக்கு பல நாட்களுக்கு முன்பே போராட்டக் குழு வெளிப்படையாக அறிவித்து உள்ளது. ‘லட்சம் பேர் கூடுவோம், ஸ்டெர்லைட்டை மூடுவோம்’ என்பது போராட்டத்தின் முழக்கம். ஆனால் போரட்டத்தில் லட்சத்துக்கும் அதிகமானோர் கூடி இருந்தனர். துல்லியமான எண்ணிக்கை தெரியாமல் போனாலும் இவ்வளவு அதிகமானவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள் என்பது முன்கூட்டியே உளவுப் பிரிவு காவலர்கள் மூலம் தெரிந்திருக்கும். அது மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி மாநில முதல்வர் வரை தெரிவிக்கப்பட்டிருக்கும். ஏனென்றால், இது உணர்ச்சிக் கொந்தளிப்பான நிலை என்பதும், வழக்கமான போராட்ட எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகம் என்பதும் நிர்வாக மட்டத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடத்தப்பட்ட போராட்டம் அரசுக்கு பல படிப்பினைகளை வழங்கி இருக்கும். என்றால் அது போன்றதொரு போராட்டத்தை அரசு எப்படி அணுகி இருக்கும்? அல்லது எப்படி அணுகி இருக்க வேண்டும்?

மறுநாள் காலையில் போராட்டம் தொடங்க இருக்கிறது, அதற்கு முதல் நாள் இரவு பத்து மணிக்கு மேல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதாவது சற்றேறக் குறைய போராட்டம் தொடங்குவதற்கு பத்து மணி நேரத்துக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போராட்டத்துக்கு முதல் நாளே ஸ்நைப்பர்கள் எனும் துப்பாகி சுடும் வீரர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்துக்கு அண்டையிலுள்ள விருதுநகர் மாவட்டத்தில் ஒரு சமபந்தி விருந்து நடக்கிறது. போராட்டத்துக்கு முதல் நாள் மதியம் அந்த சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளச் செல்லும் மாவட்ட ஆட்சித் தலைவர், அதன் பின் அலுவலகத்துக்கு திரும்பவே இல்லை. போராட்ட நாளில் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் எவரும், சரியாகச் சொன்னால் கடைநிலை ஊழியர்களைத் தவிர வேறு யாரும் அன்று பணிக்கு வரவில்லை. இவை தான் அன்றைய போராட்டத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகள்.

அன்று அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் இருந்திருந்தால் இரண்டு நிகழ்வுகள் நடந்திருக்கும். மாதாகோவில் தொடங்கி ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பாலம் வரை அமைதியாக வந்த ஊர்வலம் சிக்கல்கள் எதுவும் இல்லாமல் ஆட்சியரிடம் மனு கொடுத்து, ஸ்டெர்லைட்டை மூட வலியுறுத்தி விட்டு அமைதியாக கலைந்திருக்கலாம். அல்லது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஸ்டெர்லைட்டை மூடி உத்தரவிடாமல் கலைந்து செல்ல மாட்டோம் என்று உறுதியாக நின்று போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் 13 உயிர்கள் பறிக்கப்படும் அளவுக்கு நிலமை சிக்கலாகி இருக்காது என்பது மட்டும் உறுதி.

ஆனால், இந்த இரண்டு முடிவுகளையுமே அரசு நிர்வாகம் விரும்பவில்லை என்பது தான் நிகழ்வுகள் மூலம் வெளிப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அன்று அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று முன்பே முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட வேண்டும் என்றும் முன்பே முடிவு செய்யப்பட்ட்டு ஸ்நைப்பர்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள். மிகத் துல்லியமாக துப்பாக்கிச் சூட்டுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இணையத் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. தொலைபேசி சிக்னல்கள் இல்லாமல் போகிறது. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான சட்ட அடிப்படையிலான எந்த விதிமுறைகளும் கடைப்பிடிக்கப் படாமல் நேரடியாக மரணம் ஏற்படும் விதத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. சொல்லி வைத்தாற்போல் அனைத்து காட்சி ஊடகங்களும் ஒரே நேரத்தில் (துப்பாக்கிச் சூடு நடக்கப்போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால்) அது வரை நடத்தி வந்த நேரடி ஒளிபரப்பை நிறுத்தி விட்டு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்குகிறார்கள். பேரணி தொடங்கி பின்னரும் இயங்கிக் கொண்டிருந்த பேரூந்துகள், அதன் பின்னர் நிறுத்தப்பட்டன. இவைகளெல்லாம் இந்தப் போராட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு நிர்வாகம் தெளிவாக திட்டமிட்டிருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள். எனவே, ஆலையை மூடுவது குறித்து எந்த வாக்குறுதியும் கொடுக்கக் கூடாது. போராட்டத்தை அமைதியாக முடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது. போராட்டத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே இந்த இரண்டு முடிவுகளையும் எடுத்து விட்டே அரசு நிர்வாகம் களத்தில் குதித்திருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்.

மாதா கோவிலில் தொடங்கிய பேரணி பாலத்தை அடவதற்கு முன்பு வரை எந்தச் சிக்கலும் இல்லாமல் கடந்து வருகிறது. நான்கு கிலோமீட்டர்களையும், இரண்டு மணி நேரத்தையும் கடந்த அந்த பேரணி இரண்டே இரண்டு சிக்கல்களைத் தவிர வேறெதையும் எதிர் கொள்ளவில்லை. ஒன்று பேரணியில் இடையில் மாடு ஒன்று புகுந்து கொண்டது. அங்குமிங்கும் அது கலைந்து ஓட சிறிது சலசலப்பு ஏற்பட்டது. ஓரிருவரை தூக்கி வீசியது. நல்வாய்ப்பாக யாருக்கும் பெரிய காயம் ஒன்றும் ஏற்படவில்லை. பின்னர் அந்த மாடு ஓரமாக இருந்த சந்துக்குள் விரட்டப்பட்டது. இரண்டு. லட்சக் கணக்கானவர்கள் ஆர்ப்பரித்து வந்த அந்த பேரணியை சில பத்து கீழ்நிலைக் காவலர்கள் தடுக்க முற்பட்டது. அவர்களும் அந்த மாட்டைப் போலவே சந்துக்குள் விரட்டப்படார்கள்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு சற்று முன்னர் இருக்கும் பாலத்தை நெருங்கும் போது ஒரு செய்தி பரவுகிறது. ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உட்பட அதிகாரிகள் எவருமே இல்லை எனும் செய்தி தான் அது. சரியாக அதே நேரத்தில் தான் முன்னறிவிப்பு ஏதும் இன்றி கண்ணீர் புகை குண்டுகள் பாய்கின்றன. கண்ணீர் புகை குண்டுகளால் பாதிக்கப்பட்ட பலர் இருமத் தொடங்கினர். பேரணியில் நூறு இருநூறு பேர் சேர்ந்து ஒரு குழுவாய் முழக்கங்கள் எழுப்பி வருவார்கள். இந்த குழுக்களில் ஒன்றிரண்டு குழுக்கள் இருமலால் முழக்கத்தை நிறுத்தும் அளவிற்கு சென்றது. பலர் ஆங்காங்கே உட்கார்ந்து விட்டார்கள். ஏற்கனவே, இது போன்ற சூழல்களின் பட்டறிவுள்ள சிலர் உடனடியாக செயல்படத் தொடங்கினர். துண்டு, கைக்குட்டை போன்றவற்றை தண்ணீரில் நனைத்து முகத்தை, குறிப்பாக கண்களை மூடினர். சிலர் சட்டையும் கூட கழற்றி நனைத்து மூடி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினர். லட்சத்துக்கும் அதிகமான மக்களின் முன்னே சில குண்டுகள் என்ன செய்து விட முடியும்? பேரணி மிக எளிதாக கண்ணீர் புகை குண்டுகளை கடந்தது. ஆனால் அதைவிட அதிகம் பாதித்தது அலுவலகத்தில் யாரும் இல்லை எனும் செய்தி தான். எங்களை மதிக்காமல் எங்கே சென்றார்கள் எனும் கோபம் அங்கே உருத்திரண்டது. பாலத்தின் கீழே யாருமில்லாமல் தனியே நின்றிருந்த காவல்துறை வண்டி அந்த கோபத்தின் இலக்கானது. அதுவரை எத்தனையோ காவலர்களையும், காவல்துறை வண்டியையும் கடந்து வந்தவர்கள் அந்த ஒற்றை வண்டியை கவிழ்த்துப் போட்டார்கள். சிலர் தீவைக்கவும் செய்தார்கள். கரும்புகையை கக்கிக் கொண்டு எரிந்தது அந்த வண்டி. போராட்டக்காரர்களின் புகைச்சலுக்கு முன்னால் அந்த வண்டி எரிந்த புகை கொஞ்சம் தான்.

அடுத்து என்ன என்பதில் குழப்பம் வருகிறது. ஸ்டெர்லைட் ஆலைக்குச் செல்வோம் என்று சிலர் கத்துகிறார்கள். உடனடியாக அந்த யோசனை முறியடிக்கப்படுகிறது. சாலையில் அப்படியே அமர்வோம் கலெக்டர் வரும் வரை எழுந்திருக்க வேண்டாம் என்கிறார்கள் சிலர். சிலர் சாலையில் உட்கார்ந்தும், சில நின்று கொண்டுமாக அங்கே தேங்கி நிற்கிறது பேரணி. பேரணி திட்டமிட்டிருந்த இடத்தை அடைந்து விட்டது. எனவே, தொடர்ந்து நகர முடியாது. ஆனால், திட்டமிட்ட இலக்கை அடையவில்லை. எனவே, கலையவும் முடியாது.

இந்த நேரத்தில் தான் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சென்ற ஒரு குழு தடியடி நடத்துகிறார்கள் என்று ஓலமிட்டுக் கொண்டே வெளியே ஓடி வந்தது. கண்ணிர் புகை குண்டு, தடியடி என்று காவல் துறை எடுக்கும் ஓவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர்வினை அங்கே நடந்தது. அலுவலகத்துக்கு உள்ளே நடந்து செல்வோரையும், வண்டிகளில் செல்வோரையும் பிரிக்கும் தடுப்புக் கம்பி பிடுங்கி வீசப்பட்டது. மீண்டும் ஒரு குழு அலுவலக வளாகத்துக்குள் சென்றது, மீண்டும் வெளியே ஓடிவந்தது. இப்படியான ஒரு உணர்ச்சிமிக்க கண்ணாமூச்சி ஆட்டம் அங்கே ஆடப்பட்டுக் கொண்டிருந்தது. அதேநேரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு அருகில் இருந்த ஓர் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியின் உள்ளிருந்து கட்டில் மெத்தை போன்ற பெரிய பொருட்கள் தூக்கி வீசப்பட்டன. போராட்டக்காரர்கள் குடியிருப்பு பகுதிக்குள் எப்படி போனார்கள்? என்று யோசித்துக் கொண்டிருந்தோம். உடனே அதற்கு பதிலும் கிடைத்தது அது ஸ்டெர்லைட் அதிகாரிகளின் குடியிருப்பு என்று. அடித்து நொறுக்கி தூக்கி வீசப்பட்ட பொருட்கள் நெருப்பு வைத்தும் எரிக்கப்பட்டன. மெல்ல மெல்ல ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே இருந்த சாலையில் மக்கள் அடர்த்தி கூடிக் கொண்டே இருந்தது.

பாலத்தின் கீழுள்ள கிளைச் சாலையிலிருந்து ஒரு காவல்துறை வண்டி கூட்டத்தை கிழித்துக் கொண்டு உள்ளே வருகிறது. முற்றிலும் இரும்பு வலைகளால் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த வண்டியை மறித்து கிடைத்த கற்களைக் கொண்டு அந்த வண்டியின் மீது வீசுகிறார்கள் போராட்டக்காரர்கள். ஆனாலும் அந்த வண்டியை தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குப் பிறகு தான் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு உள்ளே, வெளியே என்று ஊசலாடிக் கொண்டிருந்த குழுக்கள் இந்த முறை இரத்தக் காயங்களோடு ஓடி வருகிறார்கள். சிலர் ஒருவரை தூக்கிக் கொண்டு ஓடி வருகிறார்கள். துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் தொடர்ச்சியாக கேட்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள் என்று கூறிக் கொண்டே வெளியே ஓடி வருகிறார்கள். உள்ளே சிலர் விழுந்து கிடக்கிறார்கள் என்ன ஆனது என்று தெரியவில்லை என்று பதறுகிறார்கள். அவர்களின் பதட்டம் அனைவரையும் தொற்றிக் கொள்கிறது.

தொடர்ந்தும் விட்டு விட்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நேரம் செல்லச் செல்ல காயம்பட்டவர்களை தூக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். போராளிகள் கிடைத்த ஈருருளிகளை வாங்கி காயம்பட்டவர்களை ஏற்றிக் கொண்டு அரசு மருத்துவமனை நோக்கி பறந்தார்கள். ஒரு இளைஞரை ஓரமாக உட்கார வைத்திருக்கிறார்கள். அவர் அழுது கொண்டிருக்கிறார். ஆடையெங்கும் இரத்தம். பேச முடியவில்லை, கைகால்கள் நடுங்கி உதறும் அளவுக்கு பயமும், பதட்டமும் அடைந்திருக்கிறார். நல்வாய்ப்பாக அவருக்கு காயம் ஏதும் தெரியவில்லை. மூச்சிறைப்பாக அவர் சொல்கிறார். நானும் இன்னொருவரும் அடிபட்ட ஒருவரை தூக்கிக் கொண்டு வந்தோம். என் காதை உரசிச் செல்வது போல் நெருக்கமாக ஒரு குண்டு பறந்து சென்றது. அந்த சத்தத்தினால் காது வலிக்கிறது. தூக்கி வந்தவரை போட்டுவிட்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடி வந்து விட்டோம். அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று சொல்லி தேம்பினார் அந்த இளைஞர். செல்லிடப்பேசிகள் சரியாக வேலை செய்யாததால் குழப்பமும் பதட்டமும் எகிறுகிறது. துப்பாக்கிகள் ஓய்ந்த நேரத்தில் தடியடி நடக்கிறது, தடியடி ஓய்ந்த நேரத்தில் துப்பாக்கிகள் வெடிக்கின்றன. போராளிகள் கிடைத்த வாய்ப்பில் கிடைத்த வழியில் சிதறி ஓடுகிறார்கள். நானும் ஓடினேன்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் சாலையின் மறுபக்கம் மதில் சுவரும் இரும்புக் கதவும் தெரிகிறது பலர் அதை நோக்கி ஓடினார்கள். மதிலும் கதவும் ஆள் உயரத்தை விட அதிகமாக இருந்தது, ஆனாலும் தாவி ஏறினார்கள். எனக்குப் பின்னால் ஏறியவர் என்னிலும் அவசரமாக இருந்தார். அவர் தோள்கள் என் தொடையில் பதிந்து தூக்கிவிட, என் கை பிடிப்பு நழுவ, கதவைக் கடந்து அந்தப் பக்கம் விழுந்தேன். வலது கைப் பக்கமாக விழுந்ததில் தோள்பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனிருந்தவர்கள் தூக்கி விட்டார்கள். தொடர்ந்து ஓடினோம். எந்தப் பக்கம் போகிறோம், எந்த திசையில் செல்கிறோம் என்று எதுவும் தெரியவில்லை. சிறிது தூரத்திற்குப் பிறகு நடக்க ஆரம்பித்தோம். அப்போது தான் உணர்ந்தேன் என் வலது கையை அசைக்க முடியவில்லை. ஏற்கனவே முன்பு ஒரு முறை கை உடைந்து மாவுக்கட்டு போட்ட பட்டறிவு இருந்ததால், எலும்பு முறிந்திருக்கும் என எண்ணினேன். உடன் வந்த ஒருவர் சொன்னார், அப்பா உங்கள் தோள்பகுதி இறங்கி இருக்கிறது என்று. அப்போது தான் நானும் கவனித்தேன். தோள் மூட்டு வழக்கமான இடத்தை விட்டு சற்று இறங்கி இருப்பது போல் தெரிந்தது. கையை மடித்து வயிற்றோடு வைத்துக் கொண்டு தொடர்ந்து நடக்கத் தொடங்கினோம்.

ஊர் பகுதிக்குள் நுழையும் போது, மக்கள் எங்களை தடுத்து நிறுத்தினார்கள். இப்போது போகாதீர்கள். நீங்கள் எங்கும் போக முடியாது. தூத்துக்குடி முழுவதும் பேரூந்து போக்குவரத்தை நிறுத்தி விட்டார்கள். எல்லா இடங்களிலும் போலீஸ் தேடிக் கொண்டிருக்கிறது. வெளியூர் ஆட்கள் என்றாலோ, போராட்டத்தில் கலந்து கொண்டீர்கள் என்று தெரிந்தாலோ உடனடியாக கைது செய்வார்கள். எனவே, இங்கு தங்கி இருங்கள் நிலமை சீரானதும் நானே அழைத்துச் சென்று விடுகிறேன், என்று கூறி ஒரு கடை போன்று இருந்த இடத்தில் உள்ளே எங்களை இருக்கச் சொல்லிவிட்டு வெளியே கதவை அடைத்து விட்டார். சிறிது நேரம் கழித்து கதவைத் திற்ந்து ஒரு வண்டி ஏற்பாடு செய்திருக்கிறேன். அதில் ஏறி தூத்துக்குடிக்கு வெளியே சென்று விடுங்கள் பிறகு கிடைக்கும் பஸ்ஸில் ஏறி ஊர் சென்று சேருங்கள் என்று அனுப்பி வைத்தார். டிரைவராக எங்களை அழைத்துச் சென்ற நண்பரும் எந்தெந்த வழிகளிலெல்லாமோ சுற்றி ஒரு வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையை அடைந்தார். எல்லாக் கடைகளும் அடைக்கப்பட்டிருக்க எங்கெங்கோ அலைந்து கொஞ்சம் வாழைப் பழங்களை கொண்டு வந்து தந்து உண்ணச் செய்தார். பின்னர், திருச்செந்தூர் செல்லும் பேரூந்தை நிருத்தி எங்களை ஏற்றி அனுப்பினார்.

திருச்செந்தூர் வந்து அங்கிருந்து மாலையில் நெல்லை வந்து சேர்ந்தோம். உடனடியாக தோள்பகுதியை கவனிக்க வேண்டும் என்பதால் ஒருவரை மட்டும் எனக்கு துணையாக வைத்துக் கொண்டு ஏனையோரை வீட்டுக்கு அனுப்பி விடுவதென்று முடிவு செய்து அனுப்பி விட்டோம். எங்கு சிகிச்சை எடுத்துக் கொள்வது, தனியாரா? அரசு மருத்துவமனையா? அரசிடமே செல்வோம் என்று முடிவெடுத்து நெல்லை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு உடனடியாக உள்நோயாளியாக அனுமதித்தார்கள்.

இத் தொடரின் முந்தைய பகுதிகள்

ஸ்டெர்லைட் முதல் தே.பா.சட்டம் வரை

போராட்டம் மகிழ்ச்சிகரமானது

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s