நோக்கம் மறக்கும் அறநிலையத் துறை

செய்தி:

அண்மையில் ஆடிப் பதினெட்டு விழா என்ற பெயரில் அறநிலையத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கொஞ்சமும் வெட்கமின்றி  இந்து மத புராண கதைகளை அப்படியே வெளியிடப்பட்டிருந்தது.

செய்தியின் பின்னே:

அறநிலையத் துறை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன?

தொடக்க காலங்களில் கோவில்கள் வங்கிகளைப் போல் செயல்பட்டன, கருவூலங்களாக இருந்தன, நிலங்களை மையப்படுத்தியும், வரியைப் பெற்றும் மன்னனுக்கு வழங்கும் ஏற்பாடாக இருந்தன, கடவுளர்களோடு தொடர்புபடுத்தி மத வழிபாட்டு மையங்களாகவும் இருந்தன. காலப் போக்கில் மன்னர்களிடமிருந்த அதாவது அரசிடம் இருந்த கோவில்களின் நிர்வாகம் படிப்படியாக கடவுளை மட்டுமே முன்னிருத்தி தனியார்களிடம் அதாவது பார்ப்பனர்களிடம் கொண்டுவரப்பட்டது. அப்போது, வரி வாங்கும் நிர்வாக முறை மட்டுமே அரசுக்கு மாற்றப்பட்டது. நிலங்கள், சொத்துகள், வரியினால் கிடைத்த உபரி தானியங்கள் மூலம் தங்கமாக மாற்றப்பட்ட நகைகள் உள்ளிட்ட அனைத்தும் கோவில்களிலேயே தங்கி விட்டன. இவைகளை கைப்பற்றிய பார்ப்பனர்கள் முறைகேடாக தாங்களே உரிமை கொண்டாடினர். பெயர் மாற்றி விற்பது தொடங்கி அனைத்து விதமான பித்தலாட்டங்களும் நடந்தன. இந்த பித்தலாட்டங்கள், திருட்டு, கடவுள் பெயரால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் அனைத்துக்கும் முடிவு கட்டுவதற்காகத் தான் 1925 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் ஆட்சியில் பனகல் அரசரால் அறநிலையத் துறை வாரியம் அமைக்கப்பட்டது. அதுவே பின்னர் தனித்துறையாக அமைச்சர் ஒருவரின் தலைமையில் அறநிலையத் துறையாக மாற்றம் கண்டது.

கோவில் சொத்துகளை திருடி வயிறு வளர்த்த பார்ப்பனர்கள் சிவன் சொத்து குல நாசம் என்று பிறரிடம் பாடம் நடத்துவார்கள். கோவில்களை நிர்வகிப்பதற்கு தாங்கள் மட்டுமே என்று ஒதுக்கீடு செய்து கொண்டவர்கள் பிற வேலைகளுக்கு தகுதி திறமை ஒதுக்கீடு கூடாது என்று கூப்பாடு போடுவார்கள். இவர்களின் இந்த இரட்டை அளவுகோலை ஒடுக்குவது தான் அறநிலையத் துறையின் நோக்கம். இன்னொரு வழியில் பார்த்தால், திருட்டைத் தடுப்பது மட்டுமல்ல, அந்த திருட்டை என்ன சொல்லி நியாயப்படுத்துகிறார்களோ அதையும் சேர்த்து தடுப்பது தான் அறநிலையத் துறையின் பணி.

ஆடிப் பெருக்கு விழா என்பது திரண்டு வரும் வெள்ளத்தை வேளாண் குடிகளாக வரவேற்கும் ஒரு விழா. காவிரி வற்றாத ஆறல்ல. உலகின் நாகரீகங்கள் வற்றாத ஆறுகளின் கரைகளிலேயே தோன்றி இருக்க, தமிழர் நாகரீகம் குறிப்பிட்ட காலங்களில் வற்றும் ஆற்றங்கரைகளில் தோன்றியது. தொடர்ச்சியாக நீரூளிகளால் வாழ்வழிந்த தமிழர்கள் பட்டறிவு அது. அதனால் தான் வறண்டு கிடந்த ஆற்றில் வெள்ளம் வரும்போது அதை கொண்டாடி மகிழ்ந்தான். இந்த வரலாற்றை அழித்துத் தான் பார்ப்பனியம் புராணக் கதைகளை கட்டி உலவ விட்டது.

அந்த புராண பொய்புரட்டுக் கதைகளை அறநிலையத் துறையும் ஏற்று வெளியிடுவதும் பரப்புவதும்

அயோக்கியத் தனம்,

அறிவு நாணயமற்ற செயல்,

வெட்கக் கேடு.

இரண்டகம்.

இதை ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்திருப்பது, தாங்கள் நீதிக் கட்சியின் வழிவந்தவர்கள் அல்ல எனக் கூறுவதாகப் பொருள்படும்.

அதாகப்பட்டது, “கொம்பிருந்தா மட்டும் பத்தாதுலே, முட்டவும் செய்யணும்” அம்புட்டுதேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s