வலிக்கிறது தம்பீ

துபாய் ஜெபல் அலி பகுதியில் வேலை செய்து வந்த என் தம்பி சிந்தா மதார் கடந்த ஜூலை 11 திங்கட் கிழமை மாலையில் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். அவரின் உடல் நேற்று துபாய் நேரப்படி மாலை ஐந்து மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. சரியாகச் சொன்னால் மரணமடைந்த பிறகு ஏழு நாட்கள் கடந்து எட்டாவது நாள் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவமனையின் மரண அறிக்கை போதிய விவரங்களின்றி இதயம் செயலிழந்ததால் மரணம் நேர்ந்திருக்கிறது என பொதுவாக குறிப்பிடுகிறது. எங்களுக்கு தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் காவல் துறையினால் தான் இவ்வளவு கால தாமதம் ஆகியிருக்கிறது.

கடந்த திங்கட் கிழமை இரவிலேயே காவல் துறையிலிருந்து வந்து கதவை உடைத்து உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். எல்லா திசைகளிலிருந்தும் இப்படி ஒரு தாமதம் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் ஒரு வாரம் கடந்திருக்கிறது. மேலும் நேரில் பார்க்க இயன்ற தம்பி ஒருவர் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு பொலிவிழந்து இருந்தது எனக் குறிப்பிட்டிருக்கிறார். மரணிக்க கூடாத இந்த 48 வயதில் இறந்தது ஒரு வலி என்றால், இந்த தாமதமும் கிடைத்த செய்திகளும் அவரின் மரணத்தை விட வலி மிக்கதாய் இருந்தது.

இதற்கிடையில் உடற்கூராய்வு செய்யப்படவில்லை என்றும் அறிகிறோம். பொதுவாக இஸ்லாமிய நாடுகளின் வழக்கம் இது. மரணத்தில் ஐயம் ஏதும் இல்லை என்றால் அவர்கள் உடற்கூராய்வு செய்வதில்லை. எனவே, பொதுவான அறிகுறிகளைக் கொண்டும் விசாரணையைக் கொண்டுமே இதயம் செயலிழந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். என்றால் இத்தனை நாள் தாமதம் ஏன்?

பலருக்கும் இது போல் நேர்ந்திருக்கிறது. பல மரணங்களின் போது இவ்வாறான தாமதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு இது ஒரு வேலை. ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை, வார விடுமுறை என்று நாட்கள் கடந்தது அவர்களுக்கு வேலையிலிருந்து ஒழிவு. ஆனால், தன் மகனோ, கணவனோ, அண்ணனோ, தம்பியோ குடும்பத்தை, பெற்றோரை, பெற்றவர்களை, உற்றவர்களை துறந்து பொருள் ஈட்டி தங்களை காப்பான் என்ற நம்பிக்கையில் பிரிவை ஏற்று தூரம் அனுப்பி வைக்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்கள் மரணித்து விட்டார்கள் எனும் செய்தியே பேரிடியாய் அவர்களுக்குள் இறங்கும். அந்தக் கணத்திலிருந்து அவர்களின் நினைவுகளில் ஓயாது அலையடித்துக் கொண்டே இருக்கும். இந்த நிலையில் நல்லடக்கத்துக்கு ஏற்படும் கால தாமதம் என்பது, பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாள் வெட்டிய காயத்தில் வேல் கொண்டு குத்துவது போன்றது. அவர்களின் வேலையும் விடுமுறையும் எனும் இயல்பான கண்ணோட்டம் எங்களுக்கு வலியையும், வேதனையையும் ஏற்றுகிறது எனும் உணர்வு அவர்களுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

இஸ்லாத்தைப் பொருத்தவரை இறந்த உடலை எவ்வளவு விரைவாக இயலுமோ அவ்வளவு விரைவாக அடக்கம் செய்து விட வேண்டும் என்பது வேத நிலைப்பாடு. எனவே, விரைந்து அடக்குவதற்கு அவர்கள் முதன்மை தருவது மெய்தான் என்றாலும், வெளிநாடு என்று வரும் போது தாமதங்கள் சில நிகழ்வுகளில் தவிர்க்க இயலாததாகிறது. துபாயில் உள்ள இந்திய தூதரகத்தில் எந்தச் சுணக்கமும் இல்லாமல் உடனேயே வேலையை முடித்து விட்டர்கள். என்றாலும் ஒரு வாரம் கடந்து விட்டது. இனியொரு மரணத்தில் இது போன்று தாமதங்கள் நேராமலிருக்க இயன்றவரை இன்னும் அந்த நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என இதன் வாயிலாக கோரிக்கை விடுகிறேன். வாய்ப்பிருப்பவர்கள் உரிய இடங்களில் கொண்டு சேர்ப்பர் என நம்புகிறேன்.

என தம்பிக்கு சில விரும்பத்தகாத பழக்கங்கள் இருந்தன என்றாலும் அவை இவ்வலவு குறுகிய காலத்தில் வாழ்கையை முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு தீவிரத் தன்மை கொண்டவையல்ல. அவருக்கு நீரிழிவோ, உயர் அழுத்தமோ இருந்ததில்லை. இறந்து போவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு தான் (கடந்த ஜூலை நான்காம் தேதி) தான் நலமுடன் இருப்பதாக வாட்ஸ்ஆப் வழியாக குரல் பதிவும், ஒரு புகைப்படமும் அனுப்பி இருந்தான். அதன் பிறகு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை. ஆனால் பொதுவாக பலரையும் போன்றே தம்பியும் உடல்நலனில் அக்கரையற்றும், உடலின் மீது அசட்டையாகவும் இருந்தவர் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தம்பிகளுக்கு என் வேண்டுகோள் இது தான். உடலையும் மனதையும் காத்துக் கொள்வதற்கு முதன்மை அளியுங்கள். நாகரீகம், புத்தாசை (டிரெண்ட்) என்ற பெயரில் உடலையும் மனதையும் கவனிக்கவும், கண்காணிக்கவும் மறுப்பது உள்ளிட்டவற்றை நாம் செய்து கொண்டிருக்கிறோம். பசித்து உண்பது, சரியாக ஓய்வெடுப்பது, இரவில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது போன்றவற்றை சரியாக கடைப்பிடிப்பதற்காகத் தான் நாம் உழைக்கிறோம். ஆனால், உழைப்பை காரணம் காட்டி உண்ணவும் உறங்கவும் பொருத்தமற்ற நேரத்தை தேர்ந்தெடுக்கிறோம், இவை முழுமையாக நம்முடைய கட்டுப்பாட்டில் மட்டுமே இல்லை என்பது உண்மை. சமூகம் இதில் கணிசமான பங்கு வகிக்கிறது. சமூகம் குறித்து எந்த சிந்தனையுமே இல்லாமல் தான், தன்னுடைய எனும் குறுகிய வட்டத்தில் இருப்பவர்களால் இதை விளங்கிக் கொள்ள முடியாது.

அன்றாடம் வாழ் பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் போது மன அமைதியுடன் உண்ண முடியுமா? வீசும் காற்றில் மாசு உயர்ந்து கொண்டே இருக்கையில் உடல் அமைதியுடன் சிந்திக்க முடியுமா? எதிர்காலம் குறித்த அச்சம் நுரை ததும்ப விரட்டிக் கொண்டிருக்கும் போது சமூகத்தைப் பார்க்க நேரம் தான் கிடைக்குமா? ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும் என்று பழைய சித்தாந்தங்களை புறந்தள்ளி விட்டு நமக்கு என்ன தேவை, அதற்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது, அவைகளை எவ்வாறு அடைவது? என திட்டமிடலோடு கூடிய சிந்தனை முறையை கைக் கொள்ள வேண்டும். மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை. நமக்கு அமைதி வேண்டுமென்றால் சமூகம் அமைதியாக இருக்க வேண்டும். சமூகத்திற்கு எது அமைதி தரும் என்பதை கண்டுணர்ந்து, அதற்காக போராட முன்வராத வரையில் அமைதி என்பது கானல் தான். சமூகத்தின் சரியான அமைதிக்காக நாம் சத்தமிடத் தொடங்குவோம்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s