கள்ளக்குறிச்சி: காவல்துறை வன்முறை

கள்ளக்குறிச்சி கனியமூர் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவி சிரீமதி மரணம் தொடர்பான போராட்டம் கடந்த 17ம் தேதி வன்முறையில் முடிந்தது. இதனால் தற்போது விவாதிக்கப்பட வேண்டிய, தீர்வு காணப்பட வேண்டிய சிரீமதியின் மரணம், அதற்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படும் மரணங்கள் உள்ளிட்டவை பின்னுக்கு தள்ளப்பட்டு, போராட்டத்தில் சிலரால் செய்யப்பட்ட வன்முறை பெரிய அளவில் முன்னிலைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. எது சரி எது தவறு எனும் சமூக நிலைக்கு அப்பாற்பட்டு நீதித் துறையும், காவல் துறையும் வரைமுறையற்ற வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளன.

சிரீமதி மரணம் தமிழ்நாட்டில் முதன்முறையாக நடக்கும் மரணமல்ல. கல்விக் கூடங்களில் ஏற்கனவே பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன, தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. முன்னர் நடந்த மரணங்களில் என்ன தீர்வு எட்டப்பட்டிருக்கிறது? எந்தத் தீர்வும் எட்டப்படாமல், எந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் செயலற்றும், அசட்டையாகவும் இருந்து விட்டு, மக்களின் போராட்டத்தை வன்முறை என்று கூற ஊடகங்களுக்கும், காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் என்ன அறுகதை இருக்கிறது?

கல்வி தனியார்மயம் தொடங்கிய 90களின் முற்பகுதியில் இருந்து மாணவச் செல்வங்களின் மரணங்களும் தொடங்கி விட்டன. தேர்வில் தோற்றுப் போவதினால் மரணமடைவது மிக மிக அரிதான செய்தியாக இருந்தது அதற்கு முன்னால். கல்வி கடைச் சரக்காகிப் போனபின் தேர்வு மரணங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து, அதன் புதிய படியாக்கமாக பாலியல் உள்ளிட்ட வக்கிரக் குற்றங்களும், அது தொடர்பான மரணங்களும், விடை கண்டுபிடிக்கப்படாத மரணங்களும் பெருகிப் போயின. ஒவ்வொரு பள்ளியும் சாதனைகள், வசதிகள் என்று பொய்யாகவும் மெய்யாகவும் செய்யும் விளம்பரங்களும், சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும் வேலையில்லாத் திண்டாட்டமும், எதிர்காலம் குறித்த அச்ச உணர்வும் இணைந்து பெற்றோர்களை தனியார் பள்ளிகள் மீதான உள்ளாசையை கொஞ்சம் கொஞ்சமாகத் தூண்டி பேருருவாகவே மாற்றி விட்டன. பெருமுதலாளிகளுக்கு ஆதரவான கல்விக் கொள்கைகள் எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்படுவதும், மாநில ஆளுமைக்கு அப்பாற்பட்டு அது மறைமுகமாக திணிக்கப்படுவதும் இந்த சூழலை விரைவுபடுத்தவில்லையா? சிரீமதி போன்றோரின் மரணங்கள் இங்கிருந்து தான் தொடங்குகின்றன.

சிரீமதியின் மரணத்தில் பல கேள்விகள் இருக்கின்றன. இரவு பத்து மணி வரை சீருடையுடன் இருந்தது ஏன்? எனத் தொடங்கி பள்ளி நிர்வாகிகளுக்கு படுக்கை வசதிகளுடன் கூடிய அறைகளும், கருத்தடை பொருட்களும் ஏன்? எனும் கேள்வி வரை ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன. சமூக ஊடகங்களில் எழுப்பபடுவன அனைத்தும் உண்மைகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. என்றாலும் இந்த ஐயங்களை முற்றுமுழுதாக ஒதுக்கிவிட முடியாது அல்லவா? இவை எவற்றுக்கும் சரியான பொருத்தமான விடை இல்லை. பள்ளி உரிமையாளரின் பார்ப்பனியத் தொடர்பு இதில் எந்த அளவுக்கு பங்காற்றி இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் பசு மாட்டைத் திருடி விட்டார்கள், மடியை அறுத்து விட்டார்கள் என்றெல்லாம் போலிச் செய்திகள் உலவதினாலும், தலைவர் பிளானுன்னா சும்மாவா என்பன போன்ற கீச்சுகளும் தொடர்பு இருக்குமோ எனும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலும் போராட்டங்களின் போது கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போவதும், சுற்றுச் சுவர் மீதேறி நின்று படம் பிடித்துக் கொள்வதும் பார்ப்பனிய போராட்டத் தன்மையின் தொடர்ச்சியும், வரலாறும் என்பதை மறுக்க முடியுமா?

ஊடகங்கள் இதில் செயல்பட்ட விதம் வழக்கம் போலவே அறுவெறுக்கத் தக்கது. போராட்டம் வன்முறையை தீண்டாதவரை எந்த ஊடகமும் இதற்கு போதிய முதன்மை கொடுத்து செய்தி வெளியிடவில்லை. வன்முறையைத் தொட்டதும் கலவரம், வன்முறை, அடாவடி என்றெல்லாம் எதிர்மறையில் தலைப்புச் செய்திகளாக ஆக்கின. அதிலும் தந்தி தொலைக்காட்சியின் நடவடிக்கை அறுவெறுக்கத் தக்கது மட்டுமல்ல அயோக்கியத் தனமாதும் கூட. பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவி மரணத்தில் எந்தத் தவறும் இல்லை என்று காவல்துறை உயர் அதிகாரி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு செய்தியை வெளியிட்டது. இது பகிரிகளிலும், முகநூல், துவிட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் வெகுவாக பரவியது. இது பொய்ச் செய்தி என்று பலரும் வெளிப்படுத்திய பிறகு சத்தமே இல்லாமல் அந்தச் செய்தியை நீக்கி விட்டது தந்தி. அது குறித்து ஒரு வரி விளக்கமோ, வருத்தமோ கூட தெரிவிக்கவில்லை. இந்தச் செய்தியின் பரவலுக்கும் விளைவுகளுக்கும் யார் பொறுப்பேற்பது?

மாணவியின் மரணம் குறித்த நிகழ்வுகளில் காவல்துறையில் நடவடிக்கை வழக்கம் போலவே அராஜகமானது, அதிகார போதை தலைக்கேறிய செயல்பாடு. மாணவியின் மரணச் செய்தி வெளிவந்த முதல் மூன்று நாட்களில் காவல் துறை செய்தது என்ன? பெற்றோர்களை விரட்டியடித்திருக்கிறது. பள்ளியின் மீது முறையீடு பெறப்பட்ட பின்பும் நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் விடாப்பிடியாக மூன்று நாட்கள் போடிக் கொண்டிருக்கும் போதும், அந்த பள்ளியில் இதற்கு முன்பே பல ஐயத்துக்கிடமான மரணங்கள் நடந்திருக்கின்றன என்று செய்திகள் வந்த போதும் காவல் துறை பள்ளிக்கும் நிர்வாகத்துக்கும் காவலனாக செயல்பட்டதே தவிர மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவே இல்லை.

நான்காவது நாள் போராட்டம் வன்முறையில் சேர்கிறது என்று தெரிந்தது காவல்துறை எடுத்த தடுப்பு நடவடிக்கை என்ன? கூட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு போதிய காவலர்களோ அவர்களுக்கு தேவையான ஆணைகளோ இடப்படவே இல்லை. வன்முறை தொடங்கும் போது காவல் பணியில் இருந்த கீழ்நிலை காவலர்களிடம் கம்பு கூட இருந்திருக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன. வெளியூர்களில் இருந்து பெரும் என்ணிக்கையிலானவர்கள் பள்ளியை நோக்கி வருவார்கள் என்பதை காவல்துறை கணிக்கவே இல்லை அல்லது, போகட்டும் என விட்டு விட்டது.

எல்லாவற்றுக்கும் பிறகு, காணொளிக் காட்சிகளை வைத்துக் கொண்டு தேடித் தேடி கைது செய்து கொண்டிருக்கிறது காவல்துறை. இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. முகநூலில், துவிட்டரில் செய்தி பரப்பியவர்களை எல்லாம் கூட தேடித் தேடி கைது செய்து கொண்டிருக்கிறது. இது வன்முறை இல்லையா? செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்து விட்டு, எல்லாம் முடிந்த பிறகு மக்களை மிரட்டுவதற்கு தங்கள் அதிகாரத்தை எல்லை மீறி பயன்படுத்துவோம் என்பது தான் மெய்யாகவே கொடூரமான வன்முறை. இந்த கணிணி தொழில்நுட்ப காலத்தில் சமூக ஊடகங்களில் செய்தி பரப்புவது, போராட்டத்துக்கு அறைகூவல் விடுப்பது எல்லாம் குற்ற நடவடிக்கை என்று எந்தச் சட்டம் சொல்கிறது? அனைத்துக் கட்சிகளுமே சமூக ஊடகங்களைக் கையாள்வதற்கென்றே தனி அணிகளை வைத்துள்ளன, தங்கள் செய்திகளை பரப்புகின்றன, தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றன. இது குற்ற நடவடிக்கையா? பரப்படும் செய்தி பொய்யாக இருந்தால், மோதல்களை தூண்டும் விதத்தில் இருந்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம். செய்தி பரப்பியிருந்தாலே கைது என்பதெல்லாம் வன்முறையின் உச்சம். தந்தி தொலைக்காட்சி அப்பட்டமாக பொய்ச் செய்தியை பரப்பியது அதுவும் காவல் துறை மீது. இதற்கு எதிராக யாரைக் கைது செய்தது காவல் துறை.

தற்போது கைது செய்யப்பட்டிப்பவர்கள் எல்லோரும் வன்முறை செய்தவர்களா? போராட்டத்தில் கலந்து கொண்டதாக காணொளிப் பதிவு இருந்தாலே கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வன்முறையில் ஈடுபடவில்லை என்றால் வழக்கு நடத்தி விடுதலையாகி வெளியே வரட்டும் என்று எளிதாக சொல்கிறார்களே. இதே நடைமுறையில் முதல் மூன்று நாட்களாக பள்ளியில் மாணவி ஐயத்துக்கு இடமான வகையில் மரணமடைந்திருக்கிறார். இதற்கு முன்னரும் இது போன்ற பல மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்று மக்கள் முன் வைக்கும் போது இதை பள்ளி நிர்வாகிகள் மீது ஏன் செய்ய மறுத்தீர்கள். குற்றமற்றவர்கள் என்றால் வழக்கு நடத்தி விடுதலையாகி வெளியே வரட்டுமே.

இது மட்டுமா? கைது செய்யப்பட்டவர்களில் சிலர் காவல் நிலைய கழிப்பறைகளில் வழுக்கி விழுந்து கைகால்களை முறித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மை ஆண்டுகளில் காவல்துறை இதை ஒரு நடைமுறையாக வைத்திருக்கிறது. காவல்துறைக்கு, காவல் நிலையத்தில் ஒருவரை அடிக்கும் அதிகாரமே கிடையாது. ஆனால் அரசியல் கைதிகளைத் தவிர சிறுசிறு குற்றங்களில் கைதாகும் அனைவரையுமே வரைமுறை இல்லாமல் அடித்து நொறுக்குவது காவல் துறையின் வாடிக்கை. பொழுது போகாமல், வேலைக்கு வரும் போதும், வேலை முடிந்து போகும் போதும், புதிய காவலர்கள் யார் வந்தாலும் அடித்துப் பார்த்து பழகுவது என்பதாகத் தான் குற்றம் சாட்டப்பட்டவர்களை பார்க்கிறது காவல் துறை. இதில் நீதி வழங்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு என்கவுண்டர் என்ற பெயரில் மரண தண்டனை விதிப்பதும், தாங்கள் நினைப்பவர்களை அல்லது தங்களின் அத்துமீறிய செயல்பாடுகளை எதிர்த்துப் பேசுவோரை கண்டபடி தாக்குவதும், காவல்நிலையத்திலேயே கொலைகள் செய்வதும் இங்கு வாடிக்கையாக நடந்து கொண்டிருக்கிறது. இதில் புதிதாக சேர்ந்திருப்பது தான் கழிப்பறையில் வழுக்கி விழுவது. அப்பட்டமாக சட்டத்தை மீறும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது இதுவரை? இந்த வன்முறைகளெல்லாம் யாருக்கும் தெரியவே தெரியாதா?

இதற்கெல்லாம் மேலாக இருக்கிறது நீதி மன்றங்களின் வன்முறை. காவல் துறை யாரை பிடித்துக் கொண்டு வந்து நிறுத்தினாலும் என்ன குற்றம் என்ன சாத்தியம் என்று எதையும் பார்க்காமல் பதினைந்து நாட்கள் நீதி மன்றக் காவல் என்பது தான் நீதி மன்றங்களின் முதல் வன்முறை. கைது சட்டப்படி செய்யப்பட்டிருக்கிறதா என துளியும் ஆராயாமல் காவல் துறையின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொள்வது அடுத்த வன்முறை. ஐயா இவன் சாலையில் சென்று கொண்டிருந்தான் என்று பிடித்துவந்து நிறுத்தினாலும் பதினைந்து நாள் நீதி மன்றக் காவல் தான். குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாமுக்கே பதினைந்து நாள் நீதி மன்றக் காவல் விதித்த நீதிபதிகளும் இங்கே உண்டு. என்கவுண்டர் செய்வதற்கோ, அடிப்பதற்கோ கைகால்களை உடைப்பதற்கோ என்ன அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது என்று நீதிபதிகள் கேட்டதே இல்லை.

இந்த மாணவி வழக்கில் கூட பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும் உடற்கூராய்வில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. பொய்யாக அறிக்கை கொடுக்கக் கூடும், தடயங்களை அழிக்கக் கூடும் எனவே உடற்கூராய்வின் போது நாங்களும் எங்கள் மருத்துவரை நியமிக்க அனுமதி வேண்டும் என்று பெற்றோர்கள் கோருகிறார்கள். அப்படிப்பட்ட வரலாறு இல்லையா இங்கே. என்ன அடிப்படையில் இது மறுக்கப்படுகிறது? அல்லது இப்படிக் கேட்பது சட்டப்படி தவறா? எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த வாய்ப்பும் கிடைக்க விடாமல் மறுத்து விட்டு, அவதூறு வழக்கு எனும் ஆயுதத்தை கையில் வைத்திருப்பது வன்முறை இல்லையா? பள்ளிக்கு ஏற்பட்ட சேதத்தை கணக்கிட்டு வன்முறையில் ஈடுபட்டவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்கிறார் நீதிபதி. இறந்த மாணவியின் உயிரையும், இதற்குன் முன்னர் இறந்ததாக கூறப்படும் உயிர்களையும் யாரிடமிருந்து வசூலிக்க வேண்டும்? வசூலிக்க முடியுமா என்பதையும் சேர்த்து கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அரசுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லையா? போராட்டம் நடந்து கொண்டிருந்த முதல் மூன்று நாட்களில் திமுக அரசு என்ன செய்து கொண்டிருந்தது? உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்த போராட்டம் வன்முறைக்கு திரும்பி இருக்காது. இந்த வன்முறைக்கு காரணம், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மட்டும் தானே தவிர மக்கள் அல்லர். அரசும் அதன் உறுப்புகளும் செயல்படாமல் இருந்ததை ஏன் என்று கேட்டதற்காக மக்கள் மீது அரசு வன்முறையை ஏவி விட்டிருக்கிறது என்பதே நிகழ்ந்தவற்றுக்கான பொருள். திமுக அரசு தங்கள் மீது விழுந்த இந்த களங்கத்தை துடைக்க வேண்டும் என்றால் தொடக்கத்திலிருந்து அந்தப் பள்ளியின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிக்க உரிய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். வெள்ளை அறிக்கை போல் அதை வெளியிட வேண்டும். தவறு செய்தவர்கள் ஒருவர் விடாமல் – அவர்கள் யாராக இருந்தாலும் – அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

இது எல்லாவற்றையும் விட இதில் கவனிக்க வேண்டிய சேதி என்னவென்றால், இந்த வன்முறையை காரணம் காட்டி, இனி தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவித்ததையும், உடனே திமுக அரசு அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையும் தான். அரசு என்றால் அது எந்த அரசாக இருந்தாலும் முதலாளிகளின் பக்கம் தான் இருக்குமே தவிர ஒருபோதும் மக்களின் பக்கம் நிற்காது என்பதே மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது. என்றால் மக்கள் யார் பக்கம் எப்படி நிற்க வேண்டும் என்பதை முடிவு செய்ய இதைவிட பொருத்தமான நிகழ்வு வேறு கிடைக்குமா எனத் தெரியவில்லை.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s