செய்தி:
கடந்த 10 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் வாங்கி விட்டு திரும்பச் செலுத்தாத கடன்களின் தொகை 2,40,000 கோடியை தாண்டி இருக்கிறது. 2012ல் 23,000 கோடியாக இருந்த வாராக்கடன் தொகை 2022ல் 2,40,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாற்றியவர்கள் 36 பேர். இந்த 36 பேரில் பெரும்பாலானோர் இன்று இந்தியாவில் இல்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி
செய்தியின் பின்னே:
இந்த 2,40,000 கோடி என்பது நேரடியாக இந்தியாவின் கொடூரங்களோடு, இந்தியாவின் வறுமையோடு தொடர்பு கொண்டது. ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான சுகாதாரத்துறை ஒதுக்கீடு 80,000 கோடி தான் என்பதோடு இந்த தொகையை இணைத்துப் பாருங்கள். அல்லது, அலைக்கற்றை ஊழல் என்று ஊடகங்கள் தொடங்கி அனைத்தும் நீட்டி முழக்கிய 2G யைப் போல் இரண்டு மடங்கு தொகை என்பதோடு இணைத்துப் பாருங்கள். அப்போது தான் இந்தத் தொகையின் மதிப்பு புரியும்.
இந்த தொகையில் பெரும்பாலானவை ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டு விட்டவை. மீதம் இருப்பவை தள்ளுபடி செய்வதற்காக காத்திருப்பவை. திடீரென சில நாட்களில் ஊடகங்களில் 200 கோடி வாராக்கடன் திரும்ப வசூலிக்கப்பட்டிருக்கிறது, இது கடந்த ஆண்டை விட அதிகம் என்றொரு செய்தி வரும். ஆனால் இதில் முழுமையான சேதி இருக்காது. 20,000 கோடி கடனில் 200 கோடி வாங்கி விட்டு மீதமுள்ள 19,800 கோடியை தள்ளுபடி செய்து விட்டார்கள் என்று பொருள். இப்போதும் கூட இந்த 2,40,000 கோடி கடனை வாங்கியவர்கள் யார்யார் எனும் விவரத்தை வெளியிட மாட்டோம் என்கிறது அரசு.
இலவசங்கள் கொடுக்கப்படும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்று அண்மையில் மோடி கூறியிருக்கிறார், எதை இலவசம் என்று மோடி கூறுகிறார்? நியாவிலைக் கடைகளில் மானிய விலையில் அரிசி கொடுப்பது, அரசு பேரூந்துகளில் மாணவர்களுக்கும் பெண்களுக்கும் இலவச பயணம் வழங்கியிருப்பது, மடிக்கணிணி, தொலைக்காட்சி உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் கொடுப்பது உள்ளிட்டவைகளை இலவசம் என்று கூறி இவைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைகிறது என்கிறார் மோடி. ஆனால், இந்த 2,40,000 கோடி, வாராக்கடன் தள்ளுபடி, பெரு நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், முழுக்க முழுக்க பெருநிறுவனங்களுக்காகவே செய்யப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் இவைகள் எல்லாம் மோடி கூறும் இலவசங்கள் பட்டியலில் வராது.
வாராக்கடன் என்று அறிவிக்கப்பட்டவை எல்லாம் பசியும் பட்டினியுமாய் இருந்து திரும்பச் செலுத்த முடியாதவர்களால் பெறப்பட்டவை அல்ல. எலோருடைய சொத்து மதிப்பும் ஆயிரக் கணக்கான கோடிகளில் இருக்கும். ஆனாலும் அரசோ, நீதிமன்றங்களோ கேள்வி கேட்காது, காவல்துறையோ, தொடர்புடைய வருவாய்த் துறையோ வழக்கு பதியவோ கைது செய்யவோ எந்த முயற்சியும் எடுக்காது. அவர்கள் ஏதாவது ஒரு வெளிநாட்டில் பெரும் பங்களாக்களில் வேறு நிறுவங்களை நடத்திக் கொண்டும், உலக அழகிகளை திருமணம் செய்யப் போவதாக பேசிக் கொண்டும் சொகுசாக இருப்பார்கள். அதேநேரம் பாஜக எனும் கட்சிக்கு ஒவ்வொரு ஆண்டும் நன்கொடை என்ற பெயரில் ஆயிரக் கணக்கான கோடிகளை இதே நிறுவனங்கள் வாரி வழங்கும்.
மறுபக்கம், விவசாயக் கடனாக, கல்விக் கடனாக ஓரிரு லட்சங்களை வாங்கிய உழைக்கும் மக்கள் பெயரை படத்துடன் வெளியிட்டு அசிங்கப்படுத்துவார்கள். பல்லாயிரம் கோடிகளை வாராக்கடனாக பெற்றிருக்கும் நிறுவனங்களுக்கே இந்த ஓரிரு லட்சங்கள் பெற்ரிருக்கும் கடனை திரும்பி வசூலிக்கும் பொறுப்பையும் ஒப்படைப்பார்கள். அப்படி திரும்ப வசூலிக்கும் பணத்தில் 20 விழுக்காடு மட்டும் வங்கிகளில் திரும்பச் செலுத்தினால் போதும் என்று கூட சொல்வார்கள். (இந்த சலுகை நேரடியாக விவசாயக் கடன், கல்விக் கடன் பெற்றவர்களுக்கு கொடுக்கப்படாது) வசூலிக்கும் நிறுவனங்கள் வசூலிக்க கைக் கொள்ளும் உத்திகளால் பலர் தற்கொலை செய்து மாண்டு கூட போவார்கள். ஆனாலும் வாரிசுகளிடம் வசூலித்து விடுவார்கள்.
வாராக்கடன் தள்ளுபடி எனும் சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வக்கிரங்கள் இவை.
அதாகப்பட்டது, “ராசா வூட்டு கோழி முட்ட குடியானவன் வீட்டு அம்மிக் கல்லையும் உடைக்கும்னு சும்மாவாலே சொன்னான்” அம்புட்டுதேன்.