சர்ணா மதம் காட்டும் வழி

கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தில்லி ஜந்தர் மந்தரில் முதன்மையான போராட்டம் ஒன்று நடந்தது. மிகமிக முதன்மையான இந்தப் போராட்டம் ஒரு நாள் செய்தியோடு முடிந்து போனது. அப்படி முடிந்து போகக் கூடாத இது போன்ற போராட்டங்கள் இந்தியாவெங்கும் நடக்க வேண்டும். ஜார்கண்ட், சத்தீஸ்கர், பிகார், மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடிகள் தங்களை இந்து மதத்தில் சேர்க்காமல் சர்ணா எனும் மதமாக ஏற்க வேண்டும் என்று கோரி போராடியது தான் அந்த போராட்டம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கன்னடத்தில் நாங்கள் இந்துக்கள் அல்ல லிங்காயத்துகள் என்று போராட்டம் நடந்தது. தமிழ்நாட்டில் வைகுந்தர் வழிபாட்டினர் நாங்கள் இந்துக்கள் அல்ல என அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி பல பகுதிகளில் அறிவிப்புகள், போராட்டங்கள் நடப்பதும், அவை அந்தமட்டில் கடந்து செல்லப்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.

சர்ணா மதத்தினர் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 2020ம் ஆண்டு ஜார்கண்ட் அரசு சர்ணாவை தனி மதமாக ஏற்று சட்டவரைவை மாநில ஆளுனருக்கு அனுப்பியது. தங்களுக்கு உவப்பில்லாத எதையும் ஆளுனர்கள் மூலம் செயல்படுத்த முடியாமல் தடுக்கும் நோக்கில் கிடப்பில் போடுவது ஒன்றிய பாஜக அரசின் நடைமுறை எனும் அடிப்படையில், அந்த முன்வரைவு ஆளுனர் மாளிகையில் தூங்கிக் கொண்டிருக்கிறது. சட்டத்தைப் பொருத்தவரையில் சர்ணா என்பது இந்து மதத்தின் ஒரு சிறு பகுதி. இதை மாற்ற பார்ப்பனியம் சம்மதிக்குமா?

இந்திய அரசியல் சாசனத்தில் இந்து எனும் மதத்தின் வரையறை குறித்து அனைவருக்கும் ஒரு செய்தியாக தெரிந்திருக்கும். யார் முஸ்லீம் இல்லையையோ, யார் கிருஸ்துவர் இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள். இது தான் அரசியல் சாசனத்தின் வரையறை. பொதுவாக இதை ஒரு சேதியாக தெரிந்திருக்கும் இந்துக்கள் எனப்படுவோர் இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் என்பதை உணர்ந்திருக்கிறார்களா? இது தான் இன்றைய தேதியில் இன்றியமையாத ஒரு கேள்வி. அவ்வாறு உணராதவர்களுக்கு இந்து எனும் மதத்தின் வரலாறு தேவையாய் இருக்கிறது.

இன்று இந்து எனப்படும் மதம் அடிப்படையில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை நோக்கமாக கொண்டது. அதன் வேதங்களாக சொல்லப்படும் ரிக், யசுர், சாம, அதர்வண ஆகியவற்றில் இருக்கும் எந்த கடவுள்களும் இப்போது அவர்களுக்கு கடவுளர்களாக இல்லை. தெளிவாகச் சொன்னால் தற்போது இந்து மதத்தின் கடவுளர்களாக வழிபடப்படும் எவரும் அவர்களின் வேதங்களில் கடவுளர்களாக இருந்ததில்லை. மட்டுமல்லாது அவர்களின் தற்போதைய வழிபாட்டு முறைகள் எதுவும் அவர்களின் வேதங்களில் சொல்லப்பட்டவை அல்ல. வேதங்களில் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரானவை. எடுத்துக்காட்டாக லிங்க வழிபாட்டையும் பெண் கடவுளர்களையும் வேதங்கள் கடுமையாக சாடுகின்றன. உருவ வழிபாடு, கோவில் வழிபாட்டை கடுமையாக எதிர்க்கின்றன வேதங்கள். ஆனால், இன்றைய இந்துக்களின் வழிபாட்டு முறை கோவில்கள் இல்லாமல் இல்லை. சிவலிங்கம், அம்மன், காளி போன்ற கடவுளர்கள் இல்லாமல் இன்றைய இந்து எனப்படும் மதத்தை நினைத்துப் பார்க்க முடியுமா? ஏன் இந்த வேறுபாடு? அது தான் இந்து எனப்படும் மதத்தின் வரலாறு.

சற்றேறக் குறைய இன்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், – அதுவரை ஏற்கப் பட்டிருந்த, இனப் பெருக்கத்துக்கு பெண்களே காரணம் என்பதிலிருந்து மாறி ஆண்கள் இல்லாமல் பெண்களால் தனித்து இனப்பெருக்கம் செய்ய முடியாது எனும் புதிய கண்டுபிடிப்பால் – பெண்கள் மீது வெறுப்புக் கொண்டிருந்த ஆண்கள் கூட்டம் ஒன்று தங்கள் நீண்ட பயணத்தில் கடைசிக் கட்டமாக கைபர் போலன் கணவாய்கள் வழியாக இந்திய பகுதிகளாக இன்று அறியப்படுகின்ற இந்தியாவில் நுழைந்தது. அவ்வாறு நுழையும் போது அவர்களுக்கென்று வளர்ச்சியடைந்த மொழி கிடையாது. கால்நடை மேய்ப்பை தொழிலாக கொண்டிருந்த நிலையான இடம் இல்லாத நாடோடிக் கூட்டமாக அது இருந்தது. இரும்பைப் பற்றி தெரியாத, விவாசாயம் குறித்து அதிகம் தெரியாத, விவசாயம் செய்ய விரும்பாத கூட்டமாக இருந்தது. ஆனால் அவர்கள் நுழைந்த இந்தியப் பகுதியான இங்கு இரும்பு பயன்பாட்டை அறிந்த, விவசாய உற்பத்தி அதிகம் செய்த, நிலையான இடத்தில் நிலையான கோட்டை கொத்தளங்களோடு, பல்வேறு வேலைப்பிரிவினைகளைக் கொண்ட, வளர்ச்சியடைந்த இலக்கண, இலக்கியங்களை கொண்டிருந்த மொழியோடு கூடிய, முடியாட்சிப் பகுதிகளாக இருந்தன.

பலமுறை இவர்களோடு மோதி தோற்று, இவர்களை வலிமையினால் வெல்ல முடியாது என்று உணர்ந்த அந்தக் கூட்டம், இவர்களோடு கலந்து சதிகளின் வழியாக இங்கிருந்தவர்களை அரிக்கத் தொடங்கியது. ஸ்டெப்பி புல்வெளிப் பகுதியான அந்தக் கூட்டத்தின் தாயகப் பகுதியிலிருந்து அவர்களின் பயணப் பட்டறிவை வாய்ப்பாடலாக தொகுத்து வைத்திருந்தார்கள். பிற்காலத்தில் அவர்களின் வேதமாக உருப்பெறவிருந்த அந்த வாய்ப்பாடல்களில் பெண்கள் குறித்த வெறுப்பு நிரம்பி வழிந்தது. பிரம்மன் போன்ற அவர்களின் கடவுளுக்கு உருவமோ, நிலைத்த வழிபாட்டு இடங்களான கோவில்களோ கிடையாது. நெருப்பே அவர்களின் கடவுள், வேள்வி செய்வதே அவர்களின் வழிபாட்டு முறை. ஏனென்றால் அவர்கள் நிலையான இடம் இல்லாத நாடோடிக் கூட்டம். ஆனால் இங்கு இருந்தது முன்னேறிய சமூகம் என்பதால் இவர்களிடையே வேலைப் பிரிவினை இருந்தது. அதனூடான கசப்புணர்வு இருந்தது. மன்னர்களிடம் ஆதிக்க வேட்கையும், மக்களை அடக்க புதிய புதிய வழி காணும் தேவையும் இருந்தது. அந்தக் கூட்டமோ வேலைப் பிரிவினைகள் ஏதுமற்ற கால்நடை வளர்ப்பை மட்டுமே தொழிலாகக் கொண்டிருந்த கூட்டம் என்பதால் ஒற்றுமை அவர்களின் பலமாக இருந்தது. இந்த சூழல்களிலிருந்து தான் அவர்களின் சதி உருப்பெறுகிறது.

பல இன்னல்கள், முயற்சிகள், வெறியாட்டங்களுக்குப் பிறகு மன்னர்களை அண்மிக்கிறார்கள். மன்னர்களை கடவுளாக ஏற்றி வைக்கவும், மக்களை அரசியல் விவாதங்கள், சரி தவறு பற்றிய உரையாடல்கள், மன்னர்களின் மீதான விமர்சனங்கள் போன்றவற்றிலிருந்து திசை திருப்பி கடவுளர்களின் பெயர் சொல்லி இப்பிறப்பில் கடினங்களை பெற்றாலும் மறுபிறப்பில் அதற்கான பலன் கிடைக்கும் என்று வாழ்வியல் இன்னல்களிலிருந்து ஆற்றுப்படுத்துகிறார்கள். அதன் பயனாக மன்னர்களுக்கு நெருக்கமாக உயர்ந்த இடத்தையும் மதிப்பையும் பெறுகிறார்கள். பொ.மு 1900களில் இந்தியப் பகுதிகளுக்கு வரத் தொடங்கிய அந்தக் கூட்டம், சற்றேறக் குறைய 1500 ஆண்டுகள் கழித்துத்தான் தங்களின் முதல் அரசை நிறுவுகிறது.

அந்தக் கூட்டத்தின் வருகைக்கு முன்னால் இந்தியப் பகுதிகளில் இருந்த மதம் ஆசீவகம். அறிவியலோடு தொடர்பு கொண்ட, கடவுள் எனும் மீப்பெரும் ஆற்றல் மீது நம்பிக்கையற்ற மதமாக ஆசீவகம் இருந்தது. இந்த ஆசீவகத்திலிருந்து பின்னர் கிளைத்தவைகளே பௌத்தமும் சமணமும். ஆசீவகத்தின் வழிபாடு முன்னோர் வழிப்பாடு. இவர்கள் தங்களின் முன்னோர்களாக சிவன், முருகன், திருமால், அய்யனார், பிள்ளையார் போன்றோரை வழிபட்டனர். இந்த வழிபாடுகளின் அடிப்படையில் பல பிரிவுகளாக இருந்தனர்.

அந்தக் கூட்டம் மன்னர்களின் வழியாக தாங்கள் பெற்றிருந்த ஆதிக்கம், செல்வாக்கு ஆகியவற்றின் வழியே இங்கிருந்த அத்தனை பிரிவுகளுக்குள்ளும் தங்களின் சதிகளை திணிக்கிறார்கள். முன்னோர் வழிபாடுகள் மூலம் செல்வாக்குப் பெற்றிருந்தவர்களை எல்லாம் கடவுளர்களாக மாற்றுகிறார்கள். அவ்வாறான கடவுளர்களுக்குள் உறவுகளை ஏற்படுத்தி எல்லோரும் தங்களுக்கு கீழானவர்கள் எனும் நிலையை உருவாக்குகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், தாங்கள் ஏற்பளிக்காவிட்டால் மன்னரே முழுமை பெற முடியாது எனும் அளவுக்கு. தங்களின் செல்வாக்கையும், ஆதிக்கத்தையும் பயன்படுத்தியே வேதங்கள் புராணங்கள் இதிகாசங்களை உருவாக்குகிறார்கள். தங்களை வேத ப்ராமணனாகவும், போர் புரிவோரை சத்ரியனாகவும், வணிகம் செய்வோரை வைசியனாகவும் இவர்களுக்கு உதவியாக இருப்போரை, கைவினைஞர்களை சூத்திரர்களாகவும் உருவகப்படுத்துகிறார்கள். தங்களின் இந்த பிரிவினைகளை (அதாவது, வெருமனே தொழில் பிரிவுகளை அல்ல. அது ஏற்கனவே இங்கு இருந்தது. அதனை ஒழுங்குபடுத்தி சமூகப் பிரிவினைகளுக்கான தொடக்கமாக ஆக்கிய பிரிவினைகளை) எதிர்த்தவர்களை எல்லைக்கு வெளியே விரட்டி வாழவிடாமல் இழிவுபடுத்தினார்கள். இதற்கு தடையாக இருந்த ஆசிவகத்தையும், புத்த சமண மதங்களை அழிப்பதில் முழுமூச்சாக இறங்குகிறார்கள். இந்த மதங்களை அழித்த வரலாறு இந்தியாவெங்கும் இலக்கியங்களில் பல்வேறு வடிவங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையே நீண்ட காலம் நீடிக்கிறது.

பொ.பி 600களில் தான் ஒரு பெரு மதமாக மாற்றுகிறார்கள். சிவ வழிபாட்டை கொண்டிருந்த சைவம், திருமால் வழிபாட்டை கொண்டிருந்த வைணவம், முருக வழிபாட்டைக் கொண்டிருந்த கௌமாரம், பிள்ளையார் வழிபாட்டைக் கொண்டிருந்த காணபத்தியம், பழங்குடிகள் வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் இணைத்து ஒற்றை மதமாக மாற்றுகிறார்கள். ஆனால் அந்த வழிபாட்டு முறைகளில் தங்களின் வழிபாடான வேதிய முறைகளை இணைக்கவில்லை. வேதியம் அதாவது வேள்விகள் மூலம் செய்யும் வழிபாடு அவர்களுக்கு. அவர்களுக்கு கீழே உள்ள அனைவருக்கும் புதிய மதம், அதற்கு தலைமை வேதியர்கள்.

அப்போது அந்த மதத்துக்கு பார்ப்பனிய மதம் என்று தான் பெயர். விவேகானத்தர் சிகாகோ மாநாட்டில் பேசியதை இப்போதும் பெருமையாக குறிப்பிடுவார்கள். அந்த மாநாட்டு அட்டவணையில் பார்ப்பனிய மதம் என்று தான் குறிக்கப்பட்டிருக்கிறதே தவிர இந்து மதம் என்றல்ல. இந்து எனும் சொல்லை முதன் முதலாக பயன்படுத்தியவர்கள் வட இந்தியப் பகுதிகளுக்கு படையெடுத்து வந்த இஸ்லாமியர்கள் தான். சிந்து என்று அழைக்கப்படும் நதியினை அடுத்துள்ள பகுதி எனும் பொருளில் இந்துஸ்தான் என்றும், அந்தப் பகுதியில் உள்ள மக்களை இந்து என்றும் அழைத்தார்கள். மதம் சார்ந்து இந்தச் சொல்லை அவர்கள் பயன்படுத்தவில்லை. எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்து தான். பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் தான் இந்து எனும் சொல்லை மதம் சார்ந்த சொல்லாக மாற்றினார்கள். ஒற்றை மதம், ஒற்றை வேதம், ஓரிரு கடவுளர் எனும் கிருஸ்தவ கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களுக்கு இங்குள்ள ஆயிரக் கணக்கான கடவுளர்களும் பல்வேறு வழிபாட்டு முறைகளும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, யார் இஸ்லாமியர் இல்லையோ, யார் கிரிஸ்துவர்கள் இல்லையோ, யார் பார்சி இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்து என்றொரு வரையறையைக் கொண்டு வந்தார்கள். இது தான் இந்து என்று சொல்லப்படும் மதத்தின் வரலாறு.

பொ.பி 600களின் படிப்படியாக இந்து மதத்தின் தொடக்கம் இருந்தாலும், நிலமானிய முறை தொடங்கி விரிவடைந்து வேரூன்றிய பிறகு; விவசாயக் கூலிகளுக்கும், தங்களை எதிர்த்து போரிட்டதற்காக ஒதுக்கி வைத்து இழிபடுத்தப்பட்டவர்களுக்கும் வேறு எந்த வாய்ப்புகளும் கிடைத்து விடக் கூடாது என்பதற்காக தீண்டாமை படிப்படியாக கொண்டுவரப்படுகிறது. அவர்களுக்கு கல்வி, சொத்து சேர்க்கும் உரிமை உள்ளிட்ட பலவும் மறுக்கப்படுகின்றன. இந்த கட்டுமானத்துக்கு ஆங்கிலேயர்களின் நிர்வாகத்தில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. பெரும்பான்மை மக்களாக இருந்த இந்துக்கள் சமூகத்தில் எந்த உரிமைகளும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக அமிழ்ந்து கிடந்ததினால் நிர்வாகத்தில் எந்தவித பங்கேற்பும் செய்ய முடியாத நிலை இருந்தது. அதேநேரம் சிறுபான்மையினராக இருந்த பார்ப்பனர்கள் நிர்வாகத்தில் பெரும் பரவலாக பங்கேற்க ஆயத்தமான நிலையில் இருந்தார்கள். இந்த சமனற்ற முறை ஆட்சியதிகாரத்தில் தங்களுக்கு எதிராக வரக்கூடும் என உணர்ந்த ஆங்கிலேயர்கள் இதற்காக பல திட்டங்களைக் கொண்டு வந்தார்கள். அவைகளில் முதன்மையானவை கல்வி வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு, இரட்டை ஆட்சி முறையில் அனைவருக்கும் ஆட்சியில் பங்களிப்பது.

இவை தங்களுக்கான முற்றுரிமையாக தாங்கள் கருதிக்கொண்டிருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை கேள்விக் குறியாக்கும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள் இதை உடைத்து தங்களின் ஆதிக்கத்தை தக்க வைப்பதற்காக உருவாக்கியது தான் ஆர்.எஸ்.எஸ் எனும் இயக்கம். இந்த இயக்கம் முறையான ஆவணங்கள் இன்றி நூற்றுக் கணக்கான அமைப்புகளை நடத்தி வருகிறது. அவற்றுள் வாக்கு அரசியலுக்காக உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பாஜக. தற்போது ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பாஜக தான் சர்ணாக்களின் கோரிக்கையை இருட்டடிப்பு செய்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்டவரைவை ஏற்க மறுத்து கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது.

இது இந்து மதத்தின் வரலாறு மட்டுமல்ல, பாஜக எனும் கட்சியானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற் கட்சிகளைப் போல அதுவும் ஒரு கட்சியல்ல. பார்ப்பன ஆதிக்கத்தின் இன்றைய வடிவம் என்பதின் வரலாறும் தான். எப்படி பாஜக எனும் கட்சியை ஓர் அரசியல் கட்சியாக கருத முடியாதோ அதே போலத்தான் இந்து மதம் என்பதையும் ஒரு மதமாக கருத முடியாது. இந்து என்று தங்களைக் கருதிக் கொண்டிருப்போர் அனைவரும் இதைச் சிந்தித்தாக வேண்டும். தான் யார்? தன்னுடைய மதம் என்ன? தன்னுடைய வழிபாட்டு முறை எது? தன்னுடைய எதிரி யார்? என்பதை உணர்ந்தாக வேண்டும்.

ஆகவே இந்துக்கள் என்று தங்களைக் கருதிக் கொள்வோரே, இதோ சர்ணா மதம் வழிகாட்டுகிறது, நாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்து போராட்டத்தை தொடங்குவதற்கு இதை விட பொருத்தமான காலம் வேறு கிடைக்காது.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s