சில நாட்களுக்கு முன்னர் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடந்தது. இதில் நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கு கொண்டன. மொத்த அலைக்கற்றை பயன்பாட்டு உரிமையில் 71 விழுக்காடு கலந்து கொண்ட நான்கு நிறுவனங்களும் பெற்றுக் கொண்டன. மீதமிருக்கும் அலவை எதிர்வரும் ஆகஸ்ட் பத்தாம் தேதிக்குள் ஏலம் கோரி பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த 5ஜி ஏலத்தில் 4.3 லட்சம் கோடிகள் கிடைக்கும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் கிடைத்திருப்பதோ 1.5 லட்சம் கோடிகள் தான்.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது 2ஜி ஏலம் நடந்தது. அப்போது அரசு எதிர்பார்த்ததை விட குறைவன தொகைக்கு ஏலம் போனது. அரசு எதிர்பார்த்த தொகைக்கும், ஏலம் போன தொகைக்கும் இடையிலான வித்தியாசமான 1.76 லட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பு என்று தணிக்கை அதிகாரியாக இருந்த வினோத் ராய் குற்றம் சாட்டினார். இதன் முழுச் சுமையும் அன்றைய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த அ.ராசாவின் மீது சுமத்தப்பட்டது. ராசா கைது செய்யப்பட்டார். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ட்ராய் பரிந்துரையை மீறி முதலில் வருவோருக்கு முதலில் என ஏல விதியை மாற்றினார் என்பது தான். அன்றைக்கு இதை ஊழல் என எழுதாத ஊடகங்களே இல்லை எனலாம். அன்று ஊழல் என்ற சொல்லை வைத்துக்கொண்டு என்னென்னவெல்லாமோ நடந்தன. ஒன்றியத்தில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவும் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டன.
வழக்குகள் நடந்தன. எல்லாம் விதிப்படியும், வெளிப்படையாகவும் தான் நடந்திருக்கிறது என்று தொடக்கம் முதலே ராசா சொல்லி வந்தார். இறுதியில் 1.76 லட்சம் கோடி இழப்பு என்று கூறிய வினோத்ராய் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். விதி மீறலோ, அரசுக்கு இழப்போ நேர்ந்ததற்கான ஆதாரம் ஒன்றும் இல்லை என்று கூறி நீதி மன்றம் ராசாவை விடுதலை செய்தது. ஆனால் இன்றும் காங்கிரஸ், திமுக, 2ஜி ஊழல் என்று தான் பேசியும் எழுதியும் வருகிறார்கள்.
இப்போது நடந்த 5ஜி ஏலத்தில் அரசு எதிர்பார்த்த தொகைக்கும், ஏலம் போன தொகைக்கும் இடையிலான வித்தியாசமான 2.8 லட்சம் கோடிகள் அரசுக்கு இழப்பா? ஊழலா? என்றொரு கேள்வி முன் வைக்கப்பட்டிருக்கிறது. 2ஜி ஏலத்தைப் போன்று தற்போதைய 5ஜி ஏலத்தில் வெளிப்படைத் தன்மை இருந்ததா? என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்று தான் விடை கிடைக்கும். எத்தனை நிறுவனங்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி கோரின? ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி தவிர ஏனையோர் எந்த அடிப்படையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை? தொலைத் தொடார்பு அலைவரிசை நுட்பத்தில் எந்த பட்டறிவும் இல்லாத அதானி எந்த அடிப்படையில் ஏலத்தில் அனுமதிக்கப்பட்டது? எந்த அடிப்படையில் விலை முடிவு செய்யப்பட்டது? என்பன போன்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை.
5ஜி ஏலத்தில் அலைக்கறை அளவு 72 ஜிகா ஹெர்ட்ஸ். இதன் அடிப்படை விலையாக அரசு முடிவு செய்திருந்தது 4.3 லட்சம் கோடி. என்றால் ஒரு ஜிகா ஹெர்ட்ஸின் அடிப்படை விலை 5972 கோடி. நான்கு நிறுவனங்களும் எடுத்திருக்கும் அளவு 51 ஜிகா ஹெர்ட்ஸ் கிடைத்திருக்கும் தொகை 1.5 லட்சம் கோடி. இதன்படியான அடிப்படை விலை 2986 கோடி. அதாவது அரசு முடிவு செய்த விலையில் பாதி விலைக்கு ஏலம் முடிக்கப்பட்டிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது? நீங்கள் ரூ 500 மதிப்புள்ள பொருளை ஏலம் விடுகிறீர்கள் என்றால், உங்களது தேவை, எவ்வளவு இழப்பை நீங்கள் தாங்கிக் கொள்வீர்கள் எனும் சூழலிலிருந்து அந்தப் பொருளுக்கான அடிப்படை விலையை முடிவு செய்வீர்கள். எ.கா ரூ 300. நான்கு பேர் ஏலம் கேட்க வந்திருக்கிறார்கள் என்றால், ஏலம் அடிப்படை விலையிலிருந்து தானே தொடங்க வேண்டும், 310, 320 என்று ஏலம் உயர்ந்து கொண்டே போகும். எது அதிகளவு விலையோ அது அந்தப் பொருளுக்கான விலையாக முடிவாகும். ஆனால் 5ஜி ஏலத்தில் அடிப்படை விலையாக அரசு முடிவு செய்ததலிருந்து பாதி விலைக்கு ஏலம் முடிவடைந்திருக்கிறதே எப்படி? சரி கட்டுபடியாகாத விலை என்றால் ஏலத்தை நிறுத்தி வைக்க வேண்டியது தானே.
கடந்த 2ஜி வழக்கில், தொலைத் தொடர்பு அமைச்சகம், ட்ராய், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இடையே நடந்த கடிதப் போக்குவரத்து ஆவணங்களாக இருக்கும் நிலையிலேயே, இது தொடர்பாக எந்த தகவல் பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று தொடக்கத்தில் கூசாமல் பொய் சொன்னது அரசு அமைப்பான ட்ராய். இன்று 5ஜி ஏலம் குறித்து இத்தனை கேள்விகள் இருந்தும் இதுவரை ட்ராய் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறதே ஏன்?
கடந்த 2ஜி வழக்கில், வினோத்ராய் அறிக்கை வந்ததிலிருந்து தேர்தல் நடந்து முடியும் வரை 1.76 லட்சம் கோடிகள் ஊழல் எனும் மாய உருவை மிகப் பெரிய அளவில் கட்டியமைத்த ஊடகங்கள் தற்போது அமைதியாக இருப்பது ஏன்?
கடந்த 2ஜி வழக்கில், ஆளும் கூட்டணி எதிர்க் கூட்டணி என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், தேசிய மாநில வித்தியாசம் இல்லாமல், அனைத்து அரசியல் கட்சிகளும் ஊழல் என்பதை அதுவரை அறியாத சொல் போலும், ஒட்டு மொத்து இந்திய பொருளாதாரமும் இதனால் சரிந்து விட்டது போலவும் தொடர்ந்து கூக்குரலிட்டன. தற்போது திமுக தவிர காங்கிரஸ் அடக்கம் 5ஜி ஊழல் குறித்து எந்தவித அறிக்கையோ எதிர்ப்போ தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?
மேற்கண்ட கேள்விகளை, ‘அன்று 2ஜி ஊழல் என்று சொன்னீர்களே, இப்போது ஏன் 5ஜி ஊழல் என்று சொல்லவில்லை’ என்று கேட்பதாக பொருள் கொள்ளக் கூடாது. அன்று 2ஜியில் எல்லாம் வெளிப்படையாக, ஆவணங்களாக இருந்தன. இன்று அவ்வாறு வெளிப்படையாக இல்லாமல் கேள்விகளும் ஐயங்களும் மலிந்து கிடக்கின்றன. ஆன பொதிலும் அமைதியாக இருக்கிறார்களே ஏன்? என்பது தான் கேள்வி. இதே போன்று தான் ரபேல் விமானங்கள் வழக்கிலும் அவ்வளவு ஐயங்களும் கேள்விகளும் இருந்தும் ஊடகங்களும் கட்சிகளும் ரபேலுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பார்வைக் குவிப்பை வழங்காமல் விட்டதால் மக்களின் நினைவிலிருந்து ரபேல் அகன்று விட்டது. அதே போல் 5ஜி யும் போய்விட வேண்டுமா என்பது தான் கேள்வி.
எல்லாம் இருக்கட்டும், அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஏன் இந்த 5ஜி ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை. அல்லது பி.எஸ்.என்.எல் க்கு 5ஜி அலைக்கற்றை எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அப்பாவியாக கேட்போர் பி.எஸ்.என்.எல்க்கு 4ஜி யே இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். புதிதாக தொடங்கப்பட்ட ஜியோ நிறுவனம் மக்களிடையே செல்வாக்கு பெற வேண்டும் என்பதற்காக பி.எஸ்.என்.எல் முடக்கப்பட்டது. ஜியோ விளம்பரத்துக்கு பிரதமாக இருந்த மோடியே மாடலாக நடித்தார் என்பதை மறந்து விடாதீர்கள். பல முறை பி.எஸ்.என்.எல் கேட்டுக் கொண்ட பிறகும், அதன் ஊழியர்கள் போராடிய பிறகும் கூட பி.எஸ்.என்.எல் க்கு 4ஜி சேவை வழங்கப்படவே இல்லை. இன்றுவரை பி.எஸ்.என்.எல் 3ஜி சேவையை மட்டும் வைத்துக் கொண்டே தனியார் நிறுவனங்களை சமாளித்துக் கொண்டிருக்கிறது.
இன்று 4ஜி சேவை வழங்கிக் கொண்டிருக்கும் எந்த நிறுவனத்திடமும் செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை. அவை பி.எஸ்.என்.எல்லிடமிருந்தே கோபுரங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை வாடகை கொடுத்து பயன்படுத்திக் கொள்கின்றன. இதை மனதில் வைத்துக் கொண்டு பின்வரும் செய்தியைப் பாருங்கள். 5ஜி ஏலம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னால் ஒன்றிய அரசு பி.எஸ்.என்.எல் க்கு 1.64 கோடியை அதன் வசதிகளை மேம்படுத்துவதற்காகவும், 5ஜிக்கு தரம் உயர்த்துவதற்காகவும் அளிப்பதாக அறிவித்திருக்கிறது. தற்போது ஏலம் நடந்து 1.50 லட்சம் கோடி வந்திருக்கிறது. அதாவது பி.எஸ்.என்.எல் க்கு அளிப்பதாக கூறிய தொகைக்கு சற்று குறைவு. இந்த 1.64 லட்சம் கோடியை கொண்டு பி.எஸ்.என்.எல் தன் கட்டமைப்பை மேலும் மேம்படுத்திக் கொண்டால், பி.எஸ்.என்.எல்லால் 5ஜி சேவை வழங்க முடியுமா? இதுவரை அப்படியான அறிவிப்பு எதையும் அரசு வெளியிடவில்லை. அப்படியென்றால் 5ஜி ஏலம் எடுத்த நான்கு நிறுவனங்களும் பி.எஸ்.என்.எல் லின் வசதிகளையே பயன்படுத்திக் கொள்ளப் போகின்றன. அதை மேலும் வசதிப்படுத்தவே இந்த 1.64 லட்சம் கோடி. அப்படியென்றால் ஏலத்தின் மூலம் நான்கு நிறுவனங்களும் வழங்கியிருக்கும் தொகை பி.எஸ்.என்.எல்லை மேம்படுத்தி தாங்கள் பயன்படுத்துவதற்காகவே வழங்கியிருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாமா? அப்படி எடுத்துக் கொண்டால் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மேற்கண்ட நான்கு நிறுவனங்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டிருக்கிறது என்பது பொருளாகும்.
ஏலத்தின் மூலம் கிடைத்திருக்கும் இந்த 1.5 லட்சம் கோடியும் அரசுக்கு அந்த நான்கு நிறுவனங்கள் மூலம் நேரடியாக வழங்கப்படுமா? என்றால் இல்லை. வங்கிகளிடம் கடனாக பெறப்படும். அதாவது இந்தத் தொகையை கடன் என்ற பெயரில் வங்கிகள் வழங்கும். சில ஆண்டுகள் கழித்து அந்தக் கடன்களை வாராக் கடன் என்று அரசு தள்ளுபடியும் செய்யும். பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த எட்டு ஆண்டுகளில் பத்து லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன் தள்ளுபடி நடந்திருக்கிறது. இந்தியாவில் தற்போது 130 கோடி அலைக்கற்றை பயன்பாட்டாளர்கள் இருக்கிறார்கள். 5ஜி பயன்பாட்டுக்கு வரும் போது இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். ஆண்டு தோறும் மாதந்தோறும் இந்த வாடிக்கையாளர்கள் செலுத்தும் கட்டணமாக பல லட்சம் கோடிகள் அம்பானி அதானியின் கைகளில் சொத்துகளாக சென்று சேரும். அலைக்கற்றை இலவசக அரசு கொடுக்கிறது, கட்டமைப்பு வசதிகளை இலவசமாக அரசு கொடுக்கிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் கட்டணம் மட்டும் அம்பானி அதானி சொத்து.
இப்படிச் செய்தால் என்ன? பி.எஸ்.என்.எல்லுக்கு அரசு கொடுப்பதாக அறிவித்துள்ள 1.64 லட்சம் கோடிக்குப் பதிலாக 5ஜி அலைக்கற்றையை பி.எஸ்.என்.எல் க்கு கொடுத்து விட்டு மீதமுள்ள 14 ஆயிரம் கோடியை மட்டும் பணமாக கொடுக்கட்டும். மீதமிருக்கும் 21 ஜிகா ஹெர்ட்ஸை மட்டும் மீண்டும் ஒரு ஏலம் நடத்தி வேண்டுவோருக்கு கொடுத்து விடலாம். இதன் மூலம் கட்டணம் என்ற பெயரில் மக்களிடமிருந்து தனியார் கொள்ளையடிப்பது தடுக்கப்படும். அரசுக்கும் தாராளமாக நிதி கிடைக்கும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் செழித்து வளரும். அரசு செய்யுமா? மோடி அரசு மட்டுமல்ல எந்த அரசு வந்தாலும் இதைச் செய்யாது. ஏனென்றால் பெரு முதலாளிகளுக்கான வசதி வாய்ப்புகளை செய்து தருவதும், அவர்களை எதிர்க்கும் மக்களை தாக்கித் தண்டிப்பதற்கும் தான் அரசு உருவாக்கப்பட்டிருக்கிறதேயன்றி வேறெதற்காகவும் இல்லை.
சோசலிச ஆட்சி வந்தால் பெரு நிறுவனங்கள் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்யப்படும் என்பதைக் கேட்டவுடன், ஐயோ சர்வாதிகாரம், உழைத்த சொத்து என்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கட்டும். இப்போதைய அரசு செய்வது சரியா? கம்யூனிஸ்டுகள் சொல்வது சரியா? என்று.
ஸிறப்பு தோழர்
ஆம் உண்மைதான்- இதுதான் BJPயின் மோடி ஆட்சி குஜராத்தி பணியாக்களின் ஆட்சிதான்- பணியா என்றால் பெருமுதலாளி என்று இந்தியில் பெயர்