மாநில அரசாங்கங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிப்பதை திட்டமாக கொண்டு செயல்பட்டு வருகிறது ஒன்றிய அரசாங்கம். மாநில நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காவல் துறையை ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருப்பதை தொடர்ந்த நிகழ்வுகள் மூலம் சிந்திப்பவர்கள் கண்டுணரலாம். தமிழ்நாட்டில் இது இன்னும் துலக்கமாக வெளிப்படத் தொடங்கி இருக்கிறது.
ஆளுனராக ரவி நியமிக்கப்பட்டவுடன் காவல்துறை உயரலுவலர்களை அழைத்து கூட்டம் நடத்தியதை அரசியல் உணர்வுள்ளவர்கள் யாரும் மறந்திருக்க முடியாது. அன்றிந்து இன்று வரை காவல்துறை அப்பட்டமான பக்கச் சார்புடன் நடந்து வருகிறது. இதற்கு அண்மை எடுத்துக் காட்டு கள்ளக்குறிச்சி மாணவி கொலையைத் தொடர்ந்த வன்முறை நிகழ்வுகளை காவல் துறை கையாண்ட விதம்.
இடதுசாரி இயக்கங்களோ, முற்போக்கு அமைப்புகளோ கூட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ அனுமதி கேட்டால் கிடைப்பதில்லை. கடும் போராட்டங்களுக்குப் பிறகே நிறைவேற்ற முடியாத விதிகளுடன் கூடிய ஏற்பு தரப்படுகிறது (எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள்? அவர்கள் எந்தெந்தப் பகுதியிலிருந்து வருவார்கள்? என்பன போன்ற கேள்விகள்) சட்டப்படி காவல்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்பதே தேவையில்லாத ஒன்று. சட்டம் ஒழுங்கு, ஒலிபெருக்கி போன்றவற்றுக்காக செய்தி தெரிவித்தால் போதுமானது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதில்லை என்பது ஒருபக்கம் இருக்கட்டும். இடதுசாரி முற்போக்கு இயக்கங்களுக்கு இத்தனை கெடுபுடி காட்டும் காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் நடத்தும் எல்லா நிகழ்வுகளுக்கும் தயக்கமே இல்லாமல் ஏற்பு அளிக்கிறது. பல நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் காவல்துறையினரை தாக்கி இருக்கிறார்கள். எதற்கும் காவல்துறை இயல்பாக காட்டும் எதிர் நடவடிக்கைகள் இல்லை. இந்த வேறுபாடு ஏன்?
இன்று மதுரையில் நிதியமைச்சர் ப.தியாகராஜன் அவர்களின் வண்டியை மறித்து செருப்பு எறிந்த நிகழ்வு இதன் அடுத்த எல்லையை தொட்டதாக பார்க்கலாம். காஷ்மீரில் இறந்த இராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழ்நாட்டு அரசு சார்பில் இறுதி மரியாதை செய்வதற்காக அமைச்சர் வந்திருந்தார். தமிழ்நாட்டு பாஜக தலைவர் அண்ணாமலையும் வரவிருப்பதாக செய்தி. இதனால் பாஜகவினரும் திரண்டிருக்கிறார்கள். அமைச்சருக்கு முன்பு நாங்கள் சென்று இறுதி மரியாதை செலுத்துவோம் என்கிறார்கள். விமான நிலைய காவல் துறை மறுக்கிறது. எனவே, அமைச்சரை, அவரின் வண்டியை மறித்து தகராறு செய்கிறார்கள். செருப்பு வீசப்படுகிறது. வெகு எளிதான நிகழ்வு போல் தெரியும் இதில் பல கேள்விகள் இருக்கின்றன.
விமான நிலைய பாதுகாப்பு ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள காவலர்களால் ஒரு நிகழ்வு மறுக்கப்படுகிறது என்றால், ஒன்றிய அரசாங்கத்துக்கு எதிராக அல்லவா தகராறு செய்ய வேண்டும். ஏன் மாநில அமைச்சருக்கு எதிராக தகராறு செய்கிறார்கள்?
விமான நிலையம் போன்ற பாதுகாப்பு மிக்க இடங்களில் இறுதி மரியாதை போன்ற நிகவுகளில் அரசு சார்பானவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும், கண்டவர்களும் கலந்து கொள்ள முடியாது என்பது பாஜகவினருக்கோ, அதன் தலைவரான அண்ணாமலைக்கோ தெரியாதா? தெரியும் என்றால் இந்த நிகழ்வு முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா?
ஒரு மாநிலத்தின் அமைச்சர் ஒரு நிகழ்வில் கலந்து கொள்கிறார் என்றால், அதை ஒழுங்குபடுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. முன்கூட்டியே இது தொடர்பான பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கின்றனவா என உளவறிய வேண்டியது மாநில உளவுத் துறையின் கடமை. இவ்வளவு பேர் கூடவிருக்கிறார்கள் என்பதும், அமைச்சர் வரும்போது அது இடையூறு ஏற்படுத்தலாம் என்பதும் ஏன் உளவுத் துறையால் கண்டுணரப் படவில்லை?
அமைச்சரின் வழியில் குறுக்கீடு ஏற்படுகிறது என்றால் காவல்துறை உடனடியாக அதை கலைப்பதற்கான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? சில மாதங்களுக்கு முன்பு ஆளுனரின் வழியில் உடன் செல்லும் கடைசி வண்டியில் ஒரு குச்சி வீசப்பட்டது இங்கு பல நாட்கள் விவாதிக்கப்பட்டது என்பதையும், காவல்துறையிடம் அறிக்கை கோரப்பட்டது என்பதையும் நினைவுபடுத்திப் பாருங்கள். குறைந்தளவு தடியடி நடத்தி கலைக்காமல் காவல்துறை பாஜகவினரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தது ஏன்? ஓர் ஒப்பீட்டுக்காக, இதுவே வேறு ஒரு இயக்கத்தினர் என்றாலோ, அல்லது வந்தது ஒன்றிய அமைச்சர் என்றாலோ காவல் துறை இதில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கும்?
இது ஒரு சிறிய நிகழ்வு என்பதற்காகவோ, திமுக அமைச்சர் என்பதற்காகவோ இந்தக் கேள்விகள் எழுப்பப்படவில்லை. காவல்துறையின் கட்டுப்பாடு மாநில நிர்வாகத்தை மீறி ஆளுனரின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப (பாஜகவினரின் என்றும் மொழிபெயர்த்துக் கொள்ளலாம்) செயல்படுகிறதா எனும் ஐயத்தை நோக்கியே எழுப்பபட்டிருக்கிறது.
திமுக இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றப்போகிறது என்பது இங்கு கேள்வியே இல்லை. ஊதிப் பெருக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாஜக எனும் நீர்குமிழியை யார் உடைக்கப் போகிறார்கள் என்பதே கேள்வி.