எது பயங்கரவாத இயக்கம்?

நேற்று, இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (SDPI) அலுவலகங்கள், நிர்வாகிகளைக் குறிவைத்து தேசிய புலனாய்வு முகமை (NIA) நாடெங்கிலும் 13 மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது. இது மிகுந்த பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியது. ஊடகங்கள் இதனை பரபரப்புச் செய்தியாக்க, அது முஸ்லீம்களின் மீது மீண்டும் ஒருமுறை தீவிரவாத, பயங்கரவாத முத்திரை குத்த ஏதுவாகியது.

ஏன் இந்த தேடுதல் வேட்டை? இதற்கு கூறப்படும் காரணங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்ன? பன்னாட்டு தீவிரவாத அமைப்பான ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், சட்ட விரோதமான நிதி வரத்தை கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் இந்த தேடுதல் வேட்டை நடந்திருக்கிறது. இந்த வேட்டையின் முடிவில் தமிழ்நாட்டில் 11 பேர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமை.

இந்த தேடுதல் வேட்டையையும் கைது நடவடிக்கைகளையும் இஸ்லாமிய அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருக்கின்றன. இஸ்லாமிய அமைப்புகளில் தவ்ஹீத் ஜமாத் இதை கண்டித்திருப்பது குறிப்பிடத் தக்கது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்பு இதே தவ்ஹீத் ஜமாத், இதே இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் மீது தீவிரவாத முத்திரை குத்தி தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது. தற்போது உள்துறை அமைச்சர் இந்த அமைப்பைத் தடை செய்யலாமா என ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தடை செய்யப்படவும் கூடும். தடை செய்தால் அது புதிய செய்தியாகவும் இருக்காது.

SDPI எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ல் தொடங்கப்பட்டிருந்தாலும் இதன் வரலாறு 1977ல் தொடங்கப்பட்ட சிமியுடன் தொடங்குகிறது. மாணவர் அமைப்பான சிமியின் மீதும் இன்று கூறப்பட்டிருக்கும் இதே போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறி பலரைக் கைது செய்தார்கள். அதை காரணமாகக் காட்டியே சிமியை தடை செய்தார்கள். ஆனால் அன்று கைது செய்யப்பட்ட பலர் பல ஆண்டு சட்டப் போராட்டத்தின் பிறகு குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். சிலர் இன்னும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எவர் மீதும் குற்றம் உறுதி செய்யப்படவில்லை.

சிமி அமைப்பு முதலில் 2001ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. தொடர்ச்சியான சட்ட, சமூக போராட்டங்களின் பிறகு 2003ல் அந்த தடை விலக்கப்பட்டது. பின்னர் மீண்டும் 2006ல் தடை செய்யப்பட்டு இன்று வரை தொடர்கிறது. இன்றுவரை சிமியை தடை செய்ததற்கான காரணங்கள் மெய்ப்பிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட அதன் நிர்வாகிகளில் பலர் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், 2008 ஆகஸ்டில் சிமியின் மீது ஏற்படுத்தியிருந்தத் தடையினை உறுதி செய்வதற்குப் போதுமான சான்றுகள் எதுவும் இல்லை என்று கூறி தில்லி உச்சநீதிமன்ற நீதிபதி கீதா மித்தல் தடையை விலக்கி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பில் நகல் சிமியின் வழக்குறைஞருக்கு வழங்கப்படுவதற்கு முன்பே, அதாவது 5 ஆகஸ்ட் 2008 மாலையில் தீர்ப்பு வெளியாகிறது. 6 ஆகஸ்ட் 2008 காலையில் ஒன்றிய அரசு மறுபடி தடை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை மட்டுமே வைத்துக் கொண்டு மீண்டும் தடை செய்கிறது உச்ச நீதி மன்றம். இன்னும் அந்த வழக்கு தூங்கிக் கொண்டிருக்கிறது.

இதன் பிறகு வேறு வழியில்லாமல் சிமியில் செயல்பட்டவர்கள் கூடி SDPI எனப்படும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியை 2009ல் தொடங்குகிறார்கள். இந்த அமைப்பு பின்னர் 2006லிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா எனும் அமைப்புடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது இந்த அமைப்புகள் மீது தீவிரவாத குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தாலும் எதுவும் மெய்ப்பிக்கப்பட்டதில்லை. ஆண்டுதோறும் சு’தந்திர’தின  கொண்டாட்டங்களைக் குலைக்க தீவிரவாதிகள் சதி என்று சடங்குத் தனமாக செய்தி வரும் அல்லவா. அது போல, அவ்வப்போது பன்னாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு, சட்ட விரோத நிதித் தொடர்புகள் என்று உளவுச் செய்திகள் வந்து கொண்டிருக்கும். இப்போதும் அது போல செய்திகள் வருகின்றன. ஆனால் இந்த முறை இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிலான தேடுதல் வேட்டையாக 13க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தேடுதல் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். அடுத்து என்ன, SDPI மற்றும் அதனைச் சார்ந்த அமைப்புகள் மீது தடை விதிப்பார்கள்.

1920களில் தொடங்கப்பட்ட RSS என்றொரு அமைப்பு உண்டு. ஏற்கனவே மூன்றுமுறை தடை செய்யப்பட்ட இயக்கம். காந்தி கொலை செய்யப்பட்ட போது முதன் முறை, நெருக்கடி நிலையின் போது இரண்டாம் முறை, பாபர் பள்ளி இடிக்கப்பட்ட போது மூன்றாம் முறை. இந்த மூன்று முறைகளில் நெருக்கடி நிலை தவிர ஏனைய இரண்டு முறைகளிலும் பயங்கரவாத செயல்களோடு நேரடியாக தொடர்பு கொண்டு தண்டிக்கப்பட்ட அமைப்பு. மட்டுமல்லாமல் இந்தியாவில் நடந்த பல்வேறு பயங்கரவாத செயல்களோடு, குண்டு வெடிப்புகளோடு, திட்டமிட்ட வன்முறை வெறியாட்டங்களோடு, பல்வேறு படுகொலைகளோடு நேரடியாக தொடர்பு கொண்ட அமைப்பு. எந்தவித மைப்பு விதிகளுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்பு. இதன் கீழ் எத்தனை துணை அமைப்புகள் இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்? அமைப்பு விதிகள் என்ன? என எந்தவித முறையான வரைவுகளும் கிடையாது. எப்படி நிதி வரத்து இருக்கிறது? பன்னாட்டவில் எந்த அமைப்புகள் அல்லது தனியாட்கள் மூலம் நன்கொடை பெறப்படுகிறது? எந்தெந்த அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருக்கிறது? அவைகளோடு எந்த விதமான செயல்பாட்டு ஒழுங்குகள் ஏற்கப்பட்டிருக்கின்றன? என எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. ஆனாலும் அது கலாச்சார அமைப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பரவிக் கொண்டிருக்கிறது. இப்படியான எந்த வரலாறும் இல்லாத சிமி, எஸ்டிபிஐ போன்ற இயக்கங்கள் பயங்கரவாத அமைப்புகளாக மக்களிடம் பதியவைக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களும் அதை ஏற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.

மறுபக்கம், தீவிரவாத இயக்கங்கள் யாரால் எதற்காக உருவாக்கப்படுகின்றன எனும் புரிதலும் இன்றியமையாததாக இருக்கிறது. ஒசாமா பின் லேடனின் அல்காய்தா தொடங்கி இன்றைய ஐஎஸ் இயக்கம் வரை எடுத்துக் கொண்டால் இவைகளின் தொடக்கம், செயல்பாடுகளின் பின்னால் அமெரிக்க அரசும், உளவு நிறுவனங்களும் இருப்பது ஏற்கனவே மெய்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்தியா கூட காஷ்மீரில் சில தீவிரவாத இயங்கங்களை உருவாக்கி நடத்தியது. இன்றும் கூட நாட்டினுள் பல்வேறு அரசியல் அமைப்புகளை இந்திய உளவுத்துறை வழிகாட்டி கட்டுப்படுத்துகிறது.

இந்த மறுக்க முடியாத உண்மைகள் சான்றுகளாக ஏராளம் கொட்டிக் கிடக்க, ஊடகங்கள் பயங்கரவாத தொடர்பு, சட்டவிரோத நிதி வரத்து என்று நான்கு நாட்கள் பொழுது போகாமல் விவாதித்து விட்டால் உடனே அதை அட்டியின்றி ஏற்றுக் கொண்டு, இஸ்லாமிய இயக்கங்கள் தீவிரவாத தன்மை கொண்டவை என்று நம்பத் தலைப்படுவது எவ்வளவு இழிவானது என்று மக்கள் சிந்திக்க வேண்டும், உணர வேண்டும்.

ஏன் சிமியும், எஸ்டிபிஐ யும் குறை வைக்கப்படுகின்றன? இஸ்லாமிய இயக்கங்களாக இன்று இருப்பவை குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலானவை இஸ்லாமிய மீட்டுருவாக்கம் பேசுபவை. இஸ்லாமிய மீட்டுருவாக்கம் என்பது பன்னாட்டளவில் கம்யூனிசத்துக்கு எதிராகவும், இந்திய அளவில் கம்யூனிசத்துக்கு எதிராக மட்டுமல்லாது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவும் இயங்கி வருகிறது. பார்ப்பனியம் தன்னுடைய ஆதிக்கம் சிதையத் தொடங்கியதும், இந்து ஒற்றுமை பேசி தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. பார்ப்பனியம் பேசும் இந்து ஒற்றுமைக்கு ஒரு பொது எதிரி இல்லாமல் முடியாது. அதற்காகத் தான் அது இன்று இஸ்லாமியர்களைப் பயன்படுத்தி வருகிறது. அதற்காகத் தான் இந்திய மக்களை மத அடிப்படையில் பிரித்து இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களை நிறுத்தி வருகிறது. இதற்கு தங்கத் தாம்பாளத்தில் வைத்து கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் இஸ்லாமிய மீட்டுருவாக்கம்.

பார்ப்பனியம் தமிழ்நாட்டில் வேர் விடுவதற்கு மண்டைக்காடு கலவரம் தொடங்கி திட்டமிட்டு வந்த அதே காலத்தில் தான், இங்கு இஸ்லாமிய மீட்டுருவாக்கம் இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் இரத்த உறவு போல் இணைத்து வைத்திருந்த தர்கா கலாச்சாரத்தை தகர்ப்பதற்கு அணி திரள்கிறது. இவர்கள் இஸ்லாமிய தூய்மைவாதம் பேசிப் பேசி இஸ்லாமிய இளைஞர்களை திரட்டத் திரட்ட முஸ்லீம்களிடமிருந்து இந்துக்கள் அன்னியப்பட்டுக் கொண்டே போனார்கள். அன்னியப்பட்டிருந்த இந்துக்களிடம் பார்ப்பனியம் பேசிய இந்து ஒற்றுமை எளிதாக வேலை செய்யத் தொடங்கியது.

எஸ்டிபிஐ போன்றவையும் இஸ்லாமிய தூய்மை வாதம் பேசினாலும், அரசியல் அடிப்படையில் மத சிறுபான்மையினரும் தாழ்த்தப்பட்டோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுக்கிறது. பார்ப்பனியத்துக்கு எதிராக களமாட அமைப்புகளை உருவாக்குகிறது. ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளுக்கு மாற்றாக தேசியப் பேரணி எனும் வடிவத்தில் அணிவகுப்புகளை நடத்துகிறது. தெளிவாகச் சொன்னால் அமெரிக்கா பெற்றுப் போட்ட கள்ளக் குழந்தையான இஸ்லாமிய மீட்டுருவாக்கத்தை அப்படியே பற்றிக் கொள்ளாமல் இந்திய சூழல்களுக்கு ஏற்ப பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மைப் படுத்துகிறது. பார்ப்பனியம் எஸ்டிபிஐ போன்ற அமைப்புகளை இல்லாமலாக்க நினைப்பதற்கு முதன்மையான காரணம் இது தான்.

இந்த அடிப்படைகளிலிருந்து தான் இந்த தேடுதல் வேட்டையையும், கைதுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாமிய மீட்டுருவாக்கக் குழுக்கள் நிதி மோசடிகளாலும், பாலியல் முறைகேடுகளாலும் தகர்ந்து வருவது ஒருவிதத்தில் மகிழ்வளித்தாலும், அது அரசியல் புரிதலின் அடிப்படையில் நிகழ வேண்டும். அந்த வகையில் இந்த தேடுதல் நடவடிக்கைகளுக்கு எதிராக பெரும்பாலான கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது ஆக்கபூர்வமான நடவடிக்கையாகவே பார்க்கிறேன்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s