கடந்த ஒரு வாரமாகவே கோவை கலவர பூமியாக திட்டமிட்டு மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. பாஜக அலுவலகங்களிலும், பாஜகவினரின் வீடுகள் சிலவற்றிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக வந்த செய்திகளைத் தொடர்ந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கோவையில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில்.
வெடிகுண்டு வரலாற்றிலிருந்து பார்ப்பதாக இருந்தால் நட்டின் எந்த மூலையில் வெடிகுண்டு வெடித்தாலும் ஆர்.எஸ்.எஸ் ஐ தான் முதலில் ஐயப்பட வேண்டும். நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ்ன் கை இருக்கிறது என்பது மாலேகான் குண்டு வெடிப்பு தொடங்கி உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அண்மையில் நாண்டெட் வழக்கில் கூட யஸ்வந்த் ஷிண்டே எனும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ்ன் குண்டு வெடிப்பு திட்டம் உட்பட இராணுவமே வெடி குண்டுகளை கையாளவதற்கு பயிற்சி அளித்தது என்றும் குறிப்பிட்டிருந்தார். தமிழ்நாட்டு பாஜகவின் வரலாறும் அது தான். எத்தனை நிகழ்வுகள். கடந்த சில ஆண்டுகளிலேயே பத்துக்கும் மேற்பட்ட நிகழ்வுகளை பட்டியலிட முடியும். அத்தனையும் தன் வீட்டை தானே எரித்த, தன்னுடைய வண்டியை தானே எரித்த நிகழ்வுகள் தான்.
இத்தகைய வரலாற்றின் தொடர்ச்சியாக ஒரு நிகழ்வு நடக்கிறதென்றால் முதலில் ஐயத்துக்கு உரியவர்கள் ஆர்.எஸ்.எஸ், பாஜகவினர் தான், அடுத்த இடத்தில் தான் கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக இஸ்லாமியர்கள் வருகிறார்கள். ஆனால் நிகழ்வு நடந்த உடனேயே எஸ்.டி.பி.ஐ தான் இதனைச் செய்தது பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் யேசு அல்ல ஓரளவுக்குத்தான் அமைதி காப்போம். பாஜக தொண்டர்கள் களத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று மிரட்டுகிறார் பி.ஜே.பி.யின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை. காவல்துறையின் செயல்பாடுகளில் அண்ணாமலையின் மிரட்டலுக்கு அடிபணிந்த தன்மையே வெளிப்படுகிறது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சை பார்த்தாலே புரிகிறது. குண்டு வீச்சு என்று பேசப்பட வேண்டும். ஆனால், ஒரு எறும்புக்குக் கூட காயம் ஏற்படக் கூடாது என்ற தவிப்புடன் குண்டு வீசி இருப்பதாகத் தெரிகிறது. பெட்ரோல் குண்டு என்றால் என்ன? பாட்டில் அல்லது எளிதில் உடையக் கூடிய கண்ணாடிக் புட்டியில் பெட்ரோலை நிரப்பி மூடியில் திரியை வைத்து அதில் தீவைத்து வீசி எறிந்தால் விழும் இடத்தில் புட்டி உடைந்து பெட்ரோல் பரவி தீயும் இருப்பதால் பெட்ரோல் சிதறும் இடமெல்லாம் தீ பரவும். இது தான் பெட்ரோல் குண்டு. இப்போது நாளிதழ்களில் வந்த படத்தைப் பாருங்கள் புட்டியில் உள்ள திரியில் தீ வைக்கவே இல்லை. அடுத்து புட்டியை தூக்கி உடைவது போல் வீசாமல் புல் வெஇயில் தூக்கிப் போட்டது போல் இருக்கிறது. அதாவது புட்டி உடையும் வண்ணம் வீசப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீசி தீப்பிடித்ததாக எந்தப் படமும் வெளியாகவில்லை. இதற்குப் பெயர் தான் பெட்ரோல் குண்டு வீச்சா?
முதலில் இது மதம் சார்ந்த சிக்கல் அல்ல, குற்றம் சார்ந்த நடவடிக்கை. இது ஏன் மதம் சார்ந்த நடவடிக்கையாக காவல்துறை மாற்ற முற்படுகிறது? இந்து வீட்டில் குண்டு வெடித்தால் இஸ்லாமியர் வீடுகளில் தான் தேடுதல் நடத்த வேண்டுமா? இந்து முஸ்லீம் மதத்தலைவர்களை அழைத்து சமாதானக் கூட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன? இது அப்பட்டமாக இஸ்லாமியர்கள் தான் குற்றவாளிகள் என்று ஒப்புதல் வாக்குமூலம் வழங்குவது போல் இல்லையா? தற்போது இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நால்வருமே எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று காவல் துறை அறிவித்துள்ளது. இது மெய்யாகவே குற்றவாளிகளை பிடித்த அறிவிப்பா அல்லது பாஜகவை அமைதி கொள்ள வைக்க செய்யப்பட்ட அறிவிப்பா? என்று ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.
ஆர்.எஸ்.எஸ், பாஜகவின் திட்டங்களைப் பொருத்தவரை, வென்றால் மிகச் சிறப்பு, தோற்றால் சிறப்பு என்ற அளவில் தான் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தும் வேலைகள் நடக்கின்றன. இந்த அடிப்படையில் பார்த்தால், திட்டம் வென்றால் முஸ்லீம்கள் குண்டுவெடிப்பு நடத்துவோர் என்று ஏற்கனவே பரப்பட்டுவருவதற்கு கூடுதல் சான்று கிடைக்கும். அதனைக் கொண்டு இன்னும் வீச்சாக இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் செய்யலாம். திட்டம் தோற்றால் கலவர முயற்சிகளை இன்னும் தீவிரப்படுத்தாலாம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று இன்னும் தீவிரமாக பரப்பலாம். இந்த இரட்டை அணுகுமுறையில் தான் பாஜக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
திமுக அரசாங்கத்துக்கு நிறைய சிக்கல்கள் இருக்கலாம். தங்களுக்கு உவப்பில்லாத அரசாங்கம் என்பதால் ஒன்றிய அரசாங்கம் தமிழ்நாட்டுக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, எந்த விதத்திலெல்லாம் நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்த விதத்திலெல்லாம் நெருக்கடி கொடுக்கிறது. அரசு எந்திரம் ஏற்கனவே பார்ப்பனியமயம் ஆக்கப்பட்டிருக்கிறது. கலைஞர் அடிப்படி ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார். ‘பதவி என்பது தோள் துண்டு போல, கொள்கை என்பது இடுப்பு வேட்டி போல’ என்று. கலைஞருக்கு கிடைக்காத ஒரு அரிய வாய்ப்பு ஸ்டாலினுக்கு கிடைத்திருக்கிறது. அது பலம் வாய்ந்த எதிர்க்கட்சி இல்லாதது. ஸ்டாலின் சிக்சர்களை பறக்கவிட வேண்டிய நேரம் இது.