ஃபீலிங்கு

சிறிது காலத்துக்கு முன்பு நானும் கோவையைச் சேர்ந்த ஒரு தோழரும் இணைந்து அதிகளவாக பத்து நிமிடங்களுக்குள் முடிந்து விடுவது போன்ற தலைப்புசார்ந்த காணொளிகளை எடுத்து வெளியிடலாம் என்று திட்டமிட்டோம். அதற்கு சில வரையறைகளையும் ஏற்படுத்திக் கொண்டோம்.

அழகியல், திரைமொழி, காட்சிப்பாட்டை என எதையும் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. கம்யூனிசம் தான் கருவாக இருக்க வேண்டும், ஆனால் கம்யூனிச கலைச் சொற்கள் எதையும் பயன்படுத்தி விடக் கூடாது. எளிமையாக மக்கள் வாழ்வில் இருக்கும் கேள்விகளை எடுத்துக் கொண்டு, அதற்கு விடை சொல்வது போல் இருக்க வேண்டும். என்பன போன்ற சில வரையறைகளை ஏற்படுத்திக் கொண்டோம்.

மாதம் ஒரு காணொளி எனும் கணக்கில் சில தலைப்புகளை முடிவு செய்து கொண்டோம். முதலில் எடுத்துக் கொண்ட கரு, மாற்றம் ஒன்றே மாறாதது, எதுவும் அறுதி உண்மைகளும் கூட மாறக் கூடியவையே எனும் தலைப்பு. இதை இரண்டு நண்பர்கள் பேசிக் கொள்வது போல் எடுக்கலாம் என்று திரைக்கதை எழுதிக் கொண்டோம்.

திரைக்கதை எழுதியதே ஈர்ப்புக் கவர்ச்சியான செய்தி தான். இதை திட்டமிடும் போதே பொருளாதார பங்களிப்பு எதையும் என்னால் செய்ய முடியாதே என்றேன். உடனிருந்த தோழர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டு முறை கோவை செல்ல திட்டமிட்டு மூன்றாவது முறையில் தான் செல்ல முடிந்தது. அதிலும் அன்று எனக்கு காய்ச்சலும் இருந்தது. முதல் ஊரடங்கு முடிந்த நேரம் என்பதால் காய்ச்சலை மறந்தும், மறைத்தும் தான் சென்றேன். தோழர் ஒரு கேமரா மேனை ஏற்பாடு செய்திருந்தார். நாங்கள் இருவருமே நடித்து விடுவதாக ஏற்பாடு. அந்த கேமராமேன் தான் என்ன திரைக்கதை என்று கேட்டார். திரைக்கதை தனியாக ஒன்றும் தேவையில்லை. நாங்கள் அப்படியே பேசிக்கொள்கிறோம். நீங்கள் ஷூட் செய்து எடிட் செய்து காட்டுங்கள், பார்த்து விட்டு தேவைப்பட்டால் கூடுதலாகவோ, ரீஷூட்டோ செய்து கொள்ளலாம் என்றோம்.

அவர் அதை மறுத்தார். முதலில் நீங்கள் உங்கள் மனதில் உள்ளதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். கேமரா முன்னர் நின்றதும் உங்களுக்கு அனைத்தும் மறந்து விடும். அவ்வப்போது எடுத்து பார்த்துக் கொண்டு பேசுவதற்கு எளிதாக இருக்கும். எழுதவில்லை என்றால் உங்களால் பேசவோ நடிக்கவோ முடியாது என்றார். அதன் பிறகுதான் நாங்கள் ஓ .. .. இது தான் திரைக்கதையோ என்று சிரித்துக் கொண்டே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தோம். இதற்கே மதிய உணவு நேரம் ஆகி விட்டது.

என்னுடைய திட்டம் என்னவென்றால் மாலைக்குள் இது முடிந்து விடும். அதன் பிறகு கோவை தோழர்கள் ஃபெரோஸ் உட்பட வாய்ப்புள்ள சிலரை சந்திக்கலாம் என்று எண்ணியிருந்தேன். மதிய உணவுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கியது. என்னைப் பார்க்க வரும் நண்பர் ஒருவர் என்னடா பொறுக்கி என்று கேட்டுக் கொண்டே உள்ளே வருவார். இந்த பொறுக்கியிலிருந்து அன்றைய நேரத்தில் நாளிதழில் வந்திருந்த குறை பிறப்பைத் தொட்டு விவாதம் வளர்ந்து இன்றிருப்பது நாளை இல்லை என்பது சாமியார்கள் சொல்வது போல் இல்லை என்று (சமூக) அறிவியல் விளக்கங்களின் ஊடாக சென்று இந்த பேரண்டம் பொருளால் ஆனது. அதன் இயக்கங்களே அனைத்தையும் தீர்மானிக்கும். மனிதர்கள் அதில் ஒரு உறுப்பு தான். இப்படி ஒவ்வொன்றையும் உற்று நோக்க நோக்க நம்முடைய தினப்படி வாழ்க்கையிலும் ஏற்படும் மாற்றங்களை நாம் கையாள முடியும் என்பதாக முடியும் அந்த உரையாடல். இதை நான்கு டேக்காக எடுத்து முடித்து விடலாம் என எண்ணி ஷூட்டிங்கில் இறங்கினால் .. .. ..

ஒன்றரை வார்த்தையை பேசுவதற்கு ஒரு மணி நேரத்தையும் தாண்டியது. சரியாக மூன்றரை மணிக்கு பவர்கட் ஆகியது. வந்த பின் தொடங்கலாம் என்றெண்ணி பேசிக் கொண்டிருந்தோம். அது கொரோனா அலோபதி மருத்துவம் தொடர்பான நீண்ட விவாதமாக மாறியதே தவிர பவர் வரவில்லை. ஐந்து மணிக்குத் தான் பவர் வந்தது. கேமராமேன் தனக்கு இரவில் வேறு வேலை இருப்பதால் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று முடித்து விட்டோம்.

தலைப்பு வகைப்பட்ட காணொளித் துண்டுகள் என்றால் என்னவென்றே தெரியாமல், நடைமுறை குறித்த எந்த அறிதலும் இல்லாமல் எங்களின் அந்த முயற்சி அப்படியே கைவிடப்பட்டது.

ஆனால் தோழர் ஃபெரோஸ் அப்படியானவர் அல்லர். திரைப்படங்களோடும், திரைத் துறையினரோடும் நெருக்கமும், பிணைப்பும் கொண்டவர். அவரின் முயற்சியில், மொழியில் வந்திருக்கிறது இந்த இரண்டு நிமிடங்கள் ஓடும் ஒரு திரைத் துணுக்கு. கடினமான ஒரு செய்தியை புரிய வைப்பதற்காக மணிக்கணக்கில் பாடம் எடுப்பதை விட, அதை புரிவதற்கான தூண்டுதலை ஏற்படுத்தினால் போதும். இளைஞர்கள் அதை பற்றிக் கொள்வார்கள். இன்னொரு பக்கம் இளைஞர்களின் வேகத்துக்கும் அது ஈடு கொடுப்பதாக இருக்கிறது. இப்படியான தலைப்பு சார்ந்த காணொளித் துணுக்குகள் அதிகமதிகம் எல்லாத் தலைப்புகாளிலும், காற்று புக முடியாத இடத்திலும் கம்யூனிஸ்டுகள் புகுவார்கள் என்பது போல எதையும், எதையும் விட்டுவிடாமல் அனைத்தையும் அலசும் காணொளித் தொகுப்புகள் வந்து கொண்டே இருக்க வேண்டும்.

நேரடியாக பேசுவதை விட வாழ்க்கை அனுபவங்களின் ஊடாக பேசுவது சரியாக இருக்கும் என்பது என் கருத்து. வாழ்த்துகள் ஃபெரோஸ். தொடரட்டும் உங்கள் அடுத்தடுத்த தடங்கள்.

காணொளியைக் காண

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s