பொன்னியின் செல்வன் என்றொரு திரைப்படம் வந்தாலும் வந்தது. ‘இ’னா ‘ஈ’யன்னா தெரியாவிட்டாலும் கூட இராஜராஜனைப் பற்றி பேசுவோம் என்று சமூக வலைதளங்களில் எழுதிக் குவித்துக் கொண்டு இருக்கிறார்கள். தஞ்சை பெரிய கோவிலில் இதுவரை இல்லாத அளவில் அன்றாட நாட்களில் கூட பெருங்கூட்டம் கூடுகிறதாம். வரலாற்றை அறிந்து கொள்வது குறித்த விருப்பம் தற்காலிகமாக சற்று கூடியிருக்கிறது என்பதைத் தவிர இந்த அலப்பல்களில் எந்தப் பயனும் இல்லை. ஆனால் எதையும் தன்னுடைய மேலாதிக்கத்துக்கு ஏற்ப திரிப்பதையே நோக்கமாகக் கொண்ட அதிகாரத்தில் இருக்கும் பயங்கரவாதக் கூட்டம், இதையும் திரிக்கத் தொடங்கி இருக்கிறது.
இராஜராஜன் இந்து அரசனா? எனும் கேள்விக்கு, சிவ பக்தனான இராஜராஜன் இந்து இல்லாமல், வெளியில் இருந்து வந்த அன்னிய மதத்துக்காரனா? என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார் கோவை பாஜக சமஉ வானதி. இதை எச்சு ராஜா வழிமொழிகிறார். இராஜராஜன் கிருஸ்தவனாகவோ, முஸ்லீமாகவோ இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இந்துவாக ஒருபோதும் இருந்திருக்க முடியாது. ஏனென்றால் இந்து என்றொரு மதம் அப்போது கிடையாது. இது பொதுவான பதில் என்பதனால், குறிப்பாக கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு சிலர் மாற்றுக் கேள்வியை முன் வைக்கிறார்கள்.
கிருஸ்தவ மதம் என்றால் அது கத்தோலிக், புரோட்டஸ்டண்ட், பெந்தோகொஸ்தே என்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மதம் என்றால் ஷியா, சன்னி, அஹ்மதியா போன்ற பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. அதுபோல இந்து மதம் சைவம், வைணவம் என்று பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. இதில் ஏன் இந்து மதமா என்றொரு கேள்வியை எழுப்ப வேண்டும்? என்கிறார்கள் அந்த மாற்றுக் கேள்வி புத்திசாலிகள்.
கிருஸ்தவ மதம் என்ற ஒன்று தோன்றி அதன் பிறகு எழுந்த நடைமுறைச் சிக்கல்களினால் அந்த ஒற்றை மதத்தில் பிரிவுகள் தோன்றி பிரிவுகளாகவே நிலைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோலவே இஸ்லாமிய மதம் தோன்றி வளர்ந்த பின் அதன் நடைமுறைச் சிக்கல்களால் அந்த ஒற்றை மதத்தில் பிரிவுகள் தோன்றி பிரிவுகளாகவே நிலைத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஆனால் இந்து மதம் அப்படியானதில்லை. இந்து மதம், கிருஸ்தவம் போன்றோ, இஸ்லாம் போன்றோ ஒற்றை வழிபாட்டு முறையோடும் நெறிகளோடும் தோன்றியதில்லை. மாறாக, மதமாக இல்லாத, வணக்க வழிபாட்டுடன் கூடிய வாழ்நெறியாக, ஒன்றிலிருந்து ஒன்று மாறுபட்டு தனித்து இயங்கிக் கொண்டிருந்த சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம் உள்ளிட்ட வாழ்நெறிகளை ஒன்றிணைத்து சற்றேறக் குறைய இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்களின் நிர்வாக வசதிக்காக வெள்ளைக்காரன் உருவாக்கியது தான் இந்து எனும் மதம். தனித்தனி வாழ்நெறிகளாக இயங்கிக் கொண்டிருந்த எதுவும் தேவை கருதி ஒன்றிணைந்து இந்து மதம் உருவாகவும் இல்லை. அதனுள்ளிருக்கும் வாழ்நெறிகளைக் கொண்டவர்கள் விருப்பத்துடன் ஒன்றிணைந்தவர்களும் அல்லர். இன்றுவரை நாங்கள் இந்து இல்லை எனும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. பழங்குடிகள் தொடர்ச்சியாக நாங்கள் இந்து அல்ல என்று போராடுகிறார்கள். அண்மையில் இந்தியாவின் வடகிழக்கு பழங்குடிகள் தங்களை சாம்னா எனும் மதமாக அழைக்கவும், பதிவு செய்யவும் வேண்டும் என்று தில்லியில் போராடினார்கள். லிங்காயத்துகள் போராடுகிறார்கள். அய்யா வழிபாட்டு முறை, வள்ளாலார் வழிபாட்டு முறை என ஏராளமான எடுத்துக்காட்டுகள் இந்து எனும் போலி மதத்திற்கு எதிராக இருந்து கொண்டிருக்கின்றன.
தற்போதும் இந்து மதத்தை இற்றுவிடாமல் கட்டிப் போடும் வேலையை அரசியல் சாசனமே செய்து கொண்டிருக்கிறது. யார் முஸ்லீம் இல்லையோ, யார் கிருஸ்தவன் இல்லையோ, யார் யூதன் இல்லையோ, யார் ஃபார்சி இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என்கிறது அரசியல் சாசனம். இதை அம்பேத்கர் ஏற்றிருக்கிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இது யாருடைய சிந்தனை எனும் கேள்வி முதன்மையானது. இது சாவர்க்கரின் சிந்தனை. அவர்தான் மதங்களை நிலம் சார்ந்து பிரிக்கிறார். இன்று இந்த பயங்கரவாதிகள் அகண்ட பாரதம் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்களே, அதை தந்தை நாடாகவும் அதற்கு வெளியே உள்ளவற்றை அன்னிய நாடுகளாகவும் பிரிக்கிறார். அதிலிருந்து தான், தந்தை நாட்டில் பிறந்தவைகளெல்லாம் ஒரே மதம் என்றும் ஏனையவை அன்னிய மதங்கள் என்றும் பிரிக்கிறார். இப்போது அரசியல் சாசனம் கூறியிருக்கும் வரையறைகளை பாருங்கள். யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய, பார்சி மதங்கள் சாவர்க்கரின் வரையறைப்படி அன்னிய மதங்கள். ஆனால் பௌத்தம், சமணம், ஆசீவகம் உள்ளிட்டவை இந்த மண்ணில் தோன்றையவை. அதனால் தான் அந்த நான்கு மதங்களைத் தவிர ஏனைய அனைத்தும் இந்து மதம் எனும் வரையறையை கொண்டு வந்திருக்கிறார்கள்.
அசோகர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னால் கேட்படவர்கள் பின் வாயால் சிரிக்க மாட்டார்களா? ஆனால் அரசியல் சாசனப்படி அசோகர் இந்து தான். இது அயோக்கியத் தனம் இல்லையா? இந்த அயோக்கியத் தனத்தைத் தான் இராஜராஜன் தொடர்பிலும் செய்து கொண்டிருக்கிறது அந்த பயங்கரவாதக் கூட்டம்.
இராஜராஜன் தொடர்பாக பல அடிப்படையற்ற செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. அவை எத்தமைமை கொண்டதாயினும் அடிப்படையில் இராஜராஜன் ஒரு மன்னன். அவன் நடத்தியது ஓர் அரசை என்பதால், அந்த நிர்வாகமுறை ஒருபோதும் உழைக்கும் மக்களுக்கு உகந்ததாக இருக்க முடியாது. இதற்கு அவன் எழுப்பிய பெரிய கோவிலே சான்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு பெரிய கோவிலை ஆறே ஆண்டுகளுக்குள் கட்டி முடித்திருக்கிறான். இவ்வளவு விரைந்து கட்டிமுடித்திருக்கிறான் என்றால் எவ்வளவு பெரிய உழைப்புச் சுரண்டலைச் செய்திருக்கிறான் என்றும், அவ்வளவு பேர் நன்கொடை அளித்திருப்பதாக கல்வெட்டுகளில் பொறித்திருக்கிறான் என்றால் எந்த அளவுக்கு மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருப்பார்கள் என்றும் புரிந்து கொள்வதற்கு கல்லூரியில் சென்று பட்டம் பெற்று வர வேண்டுமா?
வரலாற்றை மக்கள் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளாமல், மன்னர்களின் வாளிலிருந்து புரிந்து கொள்ள முயற்சித்தால் கவைக்குதவாத வெற்றுப் பெருமிதங்களே மிஞ்சும். இந்த பெருமிதங்கள் இருக்கும் வரை அதிகாரத்தில் இருக்கும் பயங்கரவாதக் கூட்டம் மதங்களை வைத்து ஏய்த்துக் கொண்டு தான் இருக்கும்.