ஒவ்வொரு ஆண்டும் உலகில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து நாடுகளின் புள்ளிவிவரங்களையும் தொகுத்து உலகளாவிய பட்டினிக் குறியீடு உருவாக்கி வெளியிட்டு வருகிறார்கள். இதில் இந்த ஆண்டுக்கான இந்தியாவின் பட்டினிக் குறியீடு 107 வது இடத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 121 நாடுகளின் பட்டினி, ஊட்டக் குறைப்பாடு தொடர்பானபுள்ளி விவரங்களைத் தொகுத்துப் பார்த்ததில் இந்தியாவின் இடம் 107. இந்தியாவுக்கு முன்னால் 106 நாடுகளும், இந்தியாவுக்குப் பின்னால் 14 நாடுகளும் இருக்கின்றன. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாள் உள்ளிட்ட பல வறிய, பின்தங்கிய, பொருளாதாரத்திலும், இராணுவத்திலும் இந்தியாவுடன் ஒப்பிடவே முடியாத நாடுகளெல்லாம் இந்தியாவை விட மேம்பட்ட இடத்தில் இருக்கின்றன.
இந்தியாவின் இந்த நிலை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்திருக்கும் போதிலும் அரசின் பக்கமிருந்து எந்த விதமான விளக்கமோ, அறிக்கையோ வரவில்லை. ஆனால், இது இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் திட்டமிட்ட செயல் என்பன போன்ற அங்கலாய்ப்புகள் வெளியிடப்படுகின்றன.
பொதுவாக, உலகெங்கும் பல்லாயிரம் தன்னார்வ அமைப்புகள் நாடுகளின் எல்லை கடந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை மக்கள் நலன் எனும் புள்ளியிலிருந்து பல்வேறு தளங்களில், தலைப்புகளில் செயல்படுவதாக கூறப்பட்டாலும், அவை ஏகாதிபத்தியங்களுக்குத் தேவையான தரவுகளை திரட்டித் தரும் அமைப்புகளாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அயர்லாந்தில் செயல்படும் கன்சர்ன் வேர்ல்வைட் என்ற நிறுவனமும் வேர்ல்ட் ஹங்கர் ஹில்ஃப் எனும் ஜெர்மனியில் செயல்படும் நிறுவனமும் இணைந்து ஆண்டுதோறும் இந்த தரவரிசை அட்டவணையை வெளியிட்டு வருகின்றன.
மறுபக்கம், இந்த அமைப்புகள் அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களைக் கொண்டே இந்த தரவரிசையை உண்டாக்குகின்றன. அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள் உண்மைகளை அப்பட்டமாக கூறுபவைகளாக ஒருபோதும் இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. தனக்கு ஏற்புடையவைகளை மிகைப்படுத்தியும், எதிரானவைகளை மட்டுப்படுத்தியுமே வெளியிடும். அந்த வகையில் இந்த பட்டினி மதிப்பீட்டு அட்டவணை மட்டுப்படுத்தப்பட்ட ஒன்று தானே தவிர, கள நிலவரம் இன்னும் தீவிரத் தன்மையுடன் இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். அன்மையில் ஒன்றிய நிதியமைச்சர் ஒரு நேர்காணலில் இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்று கூறியதை இதனுடன் இணைத்துப் பார்க்கலாம்.
ஒன்றிய அதிகாரத்தில் இருக்கும் பாஜக பொருளாதாரக் கொள்கைகளில் ஏகாதிபத்தியத்தையும், பண்பாட்டு அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சாதிப் படிமுறையையும் ஏற்று நடைமுறைப்படுத்தும் ஓர் அமைப்பு. பன்னாட்டு, உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கு நாட்டின் வளங்களையும் வாய்ப்புகளையும் தாரைவார்த்துக் கொடுப்பதில் முன்னணியில் இருக்கும் இந்த அமைப்பு, அதன் விளைவான நிலப்பிரபுத்துவ கட்டுமான உடைவை தடுத்து, பண்பாட்டு அளவில் காப்பாற்ற நினைக்கும் முரண்பட்ட கூறுகளைக் கொண்ட அமைப்பாக இருக்கிறது. சாதியப் படிநிலை மக்களின் வளர்ச்சியை பின்னோக்கி இழுக்கும் என்பதால் இயல்பாகவே மக்கள் வறுமையில் உழல்வது தவிர்க்க முடியாததாகிறது.
இந்தியாவில் பாஜகவோ, காங்கிரசோ அல்லது இந்த இரண்டும் அல்லாத வேறு எந்த அரசாங்கமோ அமைந்தாலும் இந்த நிலை தவிரக்க முடியாதது. ஆனாலும் பாஜக இதை துரிதப்படுத்துகிறது என்பதை மறுப்பதற்கில்லை. காங்கிரஸ் அரசாங்கத்தின் மன்மோகன் சிங்கை ‘அண்டர் அச்சீவர்’ என்று பன்னாட்டு ஊடகங்கள் இழிவுபடுத்தியதை நினைத்துப் பார்த்தால் இந்திய அரசு என்ன திசையில் செல்ல வேண்டும் என்பதை – அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் – பன்னாட்டு நிறுவனங்களே தீர்மானிக்கின்றன. இதற்கு கடன் வழங்கும் போது விதிக்கப்படும் விதிகளே சான்று. ஆனால், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பட்டினிக் குறியீடு குறித்த விவாதம் இந்த ஆண்டு பரந்த அளவில் நடப்பதற்கு காரணம் என்ன? ஒற்றைத் துருவ மேலாதிக்கத்துக்கு ஆதரவாக இந்தியா அமெரிக்காவின் பக்கம் நின்றாலும், இந்திய பெரு முதலாளிகளுக்கு ஏற்ப மாற்று யோசனைகளையும் செயல்படுத்துவதே இதற்கு காரணமாக இருக்கும்.
இந்த உலகளாவிய பொருளாதார அரசியலை ஒதுக்கி விட்டு பட்டினிக் குறியீட்டை பார்ப்பதும், பாஜகவுக்கு எதிராக கிடைத்த இன்னொரு ஆயுதம் என்று பார்ப்பதும் தவறாகவே இருக்கும். ஆனால் இதை பாஜக எப்படி எதிர்கொள்கிறது என்பதில் தான் பாஜகவின் கொடூரத்தனம் அடங்கி இருக்கிறது.
ஒருபுறம், இந்திய பெரு முதலாளிகளான அம்பானி அதானிகளுக்கு ஆதரவாக எல்லாவற்றையும் தாரைவார்த்து, கோவிட் நாடடங்கு காலத்திலும் அவர்களின் லாபம் மீப்பெரும் அளவில் பெருகுவதற்கு வழிவகை செய்து கொடுத்தது. இதன் விளைவாகவே பட்டினிக் குறியீட்டில் மிகமிகப் பின்தங்கியது பாஜக நிர்வாகம். மறுபுறம், இந்திய மக்கள் அசைவம் உண்ண மாட்டார்கள், சைவர்களான இந்தியர்களை இழிவுபடுத்துவதற்காகவே அசைவ உணவுக்கான அளவுகோல்களின் படி சைவ உணவுப் பழக்கத்தைப் பார்த்து மிகவும் பிந்தங்கி இருப்பதாக கூறுகின்றன பன்னாட்டு அமைப்புகள். இது இந்து மதத்தை இழிவுபடுத்துகிறது என்று இந்த பட்டினிக் குறியீட்டை எதிர்கொள்கிறார்கள் பாஜகவினர். இது தான் அவர்களின் கொடூரத் தனம். பார்ப்பன மேலாதிக்கம், அதைத் தக்கவைப்பதற்கு இந்து எனும் சிறைக்கூடம். பார்ப்பன மேலாதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் குறுக்கே எது வந்தாலும் அது இந்து மதம் என்பதற்கு எதிராக கட்டமைப்பதும் தான் பாஜகவின் ஓட்டரசியல் இருப்பை தக்க வைக்கும் எனும் தெளிவான புரிதலோடுதான் ஒவ்வொரு அசைவையும் பாஜக எடுத்து வைக்கிறது.
பாஜகவின் இந்த வாதம் சரியா? இது கடைந்தெடுக்கப்பட்ட புரட்டல் வாதம். முதலில் இந்தியர்களின் உணவு சைவம் என்பதே அப்பட்டமான பொய். பார்ப்பனர்களையும் அவர்களை ஒத்த வெகுசில மேலாதிக்க சாதிகளையும் தவிர ஏனையோர் அனைவரும் அசைவம் உண்பவர்களே. அவர்களும் கூட அசைவ உணவு உண்பதை பெருங்குற்றமாக பார்ப்பதில்லை, இளைய தலைமுறை மாற்றம் கண்டு வருகிறது என்பதே உண்மை. பொய் சொல்வதில் உலகின் உயரிய விருதுகள் அத்தனையையும் பெற்றிருக்கும் பாஜக சொல்கிறது இந்தியர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் என்று.
அடுத்து, சைவ உணவுப் பழக்கத்தால் தான் இந்த பட்டினிக் குறியீட்டில் இந்தியா பின்தங்கி இருக்கிறது என்றால் பாஜக அதிகாரம் பெறுவதற்கு முன்பும் அப்படித் தானே இருந்திருக்க வேண்டும்? ஆனால் 2014 வரை இந்தியா பெற்ற அதிகளவிலான பட்டினி மதிப்பீடே 67 தான். அதிலும் பாஜக அதிகாரத்துக்கு வந்த 2014ல் இந்தியாவின் பட்டினிக் குறியீடு 55 தான். இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான், காங்கிரசின் மன்மோகன் ஏன் ‘அண்டர் அச்சீவர்’ என்று இழிவுபடுத்தப்பட்டார் என்பதும், பாஜக மோடி எந்த அளவுக்கு அம்பானி அதானிகளின் காலில் விழுந்து கிடக்கிறார் என்பதும் புரியவரும்.
இதன் பொருள் காங்கிரசோ மன்மோகனோ மக்களுக்காக ஆட்சி செய்தார்கள் என்பது பொருளல்ல. அவர்களும் பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்காக நின்றவர்களே. ஆனால் அளவுகளில் வித்தியாசம் இருக்கிறது என்பதை சுட்டவே இந்த ஒப்பீடு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்களை இந்துக்களுக்காக பாடுபடுவதாக பீற்றிக் கொள்ளும் பாஜக அதே இந்துக்களை பட்டினிக்குள் தள்ளி இருக்கிறது எனும் உண்மை தான் இதில் வெளிப்படுகிறது. ஆனால் அந்த இந்து எனும் சிறைக்கூடத்தில் அடைபட்டுக் கிடப்பவர்கள் இதை எப்படிப் புரிந்து கொள்கிறார்கள் என்பதே மக்கள் முன் இருக்கும் கேள்விக் குறி.