இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு சட்டப் பேரவையில் இரண்டு அறிக்கைகள் முன்வைக்கப்பட்டன. 1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை 2. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகச்சாமி அறிக்கை. இந்த இரண்டு அறிக்கைகளின் மீதும் சட்டமன்றத்திலும் வெளியிலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்து வருகின்றன.
இதுபோன்ற விசாரணை கமிசன்கள் மீது பெரிய மதிப்பு எதுவும் இருப்பதில்லை. காரணம், அவை நிகழ்வுகள் மீதான மக்களின் எதிர்ப்புணர்வு, அரசாங்கங்களின் மீதான எதிர்ப்புணர்வாக மாறிவிடாமல் ஆற்றுப்படுத்துவதற்காக அமைக்கப்படுபவை. மட்டுமல்லாது அந்த அறிக்கைகள் காலம் கடந்து அளிக்கப்படுவதால் அரசாங்கங்கள் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் இந்த இரண்டு அறிக்கைகளும் கடந்த எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் அறிவிக்கப்பட்டு, ஸ்டாலின் காலத்தில் முன்வைக்கப்பட்டிருப்பதாலும், இரண்டு அறிக்கைகளுமே கடந்த அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதாலும் விவாதத்துக்கு உரியவைகளாக ஆகி இருக்கின்றன.
ஜெயலலிதா மரணத்தை எடுத்துக் கொண்டால், அவருக்கு மெல்லக் கொல்லும் நஞ்சு அளிக்கப்பட்டதாகவும், தாக்கி தள்ளிவிடப்பட்டதாகவும், கால்கள் அகற்றப்பட்டதாகவும் இன்னும் பலவாறாக உலவிக் கொண்டிருந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இன்னும் சிறப்பாக கவனித்திருக்கலாம் என்றும், வெளிநாடு அழைத்துச் சென்றிருக்கலாம் என்று ஆஞ்சியோ போன்ற சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் ஆதங்கப்பட்டிருக்கிறது. அன்றைய சுகாதாரத்துறை செயலாளர், அமைச்சர், சிவகுமார் எனும் மருத்துவர், சசிகலா ஆகியோர் மீது குற்றம்சாட்டி இருக்கிறது.
அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் பெரிதாக சாரம் ஒன்றும் இல்லை. இதன் மீது நடவடிக்கை எடுத்தாலோ, வழக்கு தொடர்ந்தாலோ நீதிமன்றங்களில் அதை உடைப்பது எளிது. கமிசன் அமைக்கப்பட்டதன் நோக்கம் ஜெயலலிதா மரணத்தில் ஐயம் ஏதும் இருக்கிறதா என்று பார்ப்பது தான். அவ்வாறு எதுவும் இல்லை என்பதே அறிக்கை தெளிவுபடுத்தி இருக்கும் முடிவு. ஆனால் அதையும் தாண்டி இன்றியமையாத இரண்டு கேள்விகளை இந்த கமிசன் தொடவே இல்லை.
முதல் கேள்வி, ஜெயலலிதா மரணத்தில் ஒன்றிய பாஜக அரசாங்கத்தின் பங்கு என்ன? இந்தக் கேள்வி சதிக் கோட்பாடு போலத் தெரியலாம். ஆனால் முதல்வாராக இருந்த ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது தொடங்கி, மரணமடைந்து வேறொருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவது ஊடாக இன்றுவரை அதிமுக எனும் கட்சியின் செயல்பாடுகளில் தொடர்பு கொண்டிருக்கும் – கட்டுப்படுத்தும் என்றும் சொல்லலாம் – நிலைவரை தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கட்சியை குறித்து எந்த ஒரு விசாரணையும் இன்றி முடித்து வைத்திருப்பது நெருடலாகவே இருக்கிறது. அந்தக் காட்சிகளை நினைவுபடுத்திப் பார்க்கலாம். அதிமுகவினரை விட தூக்கலாக ஜெயலலிதாவின் உடலுக்கு பக்கத்திலேயே நொடியும் விலகாமல் தொடர்ந்து நின்று கொண்டிருந்தார் வெங்கையா நாயுடு. தனிப்பட்ட ஒரு கட்சியின் இரண்டு பிரிவுகளை ஆளுனர் கையைப் பிடித்து இணைத்து வைக்கிறார். இவைகளெல்லாம் களத்தை மீறியவை என்பதால் மட்டுமல்லாமல், ஜெயலலிதாவின் மரணத்தால் அரசியல் பலனை அறுவடை செய்த கட்சி எனும் வகையிலும் கூட கேள்வி எழுப்புவது கமிசனின் எல்லைக்கு அப்பாற்பட்டது என்று கூற முடியாது.
இரண்டாவது, ஜெயலலிதா தன்னினைவற்ற நிலையில் மருத்துவமனையில் இருந்த நாட்களில் நிர்வாகத்தை நடத்தியது யார்? எனும் கேள்வி. ஏனென்றால் தேர்தல் கமிசனுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் கைநாட்டு வைக்கப்பட்டிருந்தது அப்போதே கேள்விகளை எழுப்பி இருந்தது. ஜெயலலிதா தன்னினைவற்று இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, என்றிலிருந்து, எந்த நேரத்திலிருந்து எந்த நேரம் வரை தன்னினைவற்று இருந்தார் என்பதை குறிப்பிடவில்லை. இது அரசியல் வழியிலும், நிர்வாக வழியிலும் சிக்கலை ஏற்படுத்தும் கேள்வி. இப்படி ஒரு கேள்வியை எழுப்பி விசாரித்து பதிலளிக்காமல் விடப்பட்டிருப்பது கமிசனின் நோக்கத்திலேயே குறைவை ஏற்படுத்தி இருக்கிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை எடுத்துக் கொண்டால், அருணா ஜெகதீசன் கமிசன் விசாரணயின் போது கமிசனின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆனால் அறிக்கையைப் பார்க்கும் போது ஒப்பீட்டளவில் கிட்டத்தட்ட சரியான அறிக்கையையே அளித்திருப்பதாக புரிந்து கொள்ள முடிகிறது. காவல்துறை அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்திருக்கிறது கமிசன். ஆனால் மெத்தனம் காட்டப்பட்டிருக்கிறது என்று அறிக்கை ஏற்றுக்கொள்ளும் தூத்துக்குடி ஆட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்காதது ஏன்? எனும் கேள்வி எழுகிறது. அடுத்து அன்றைய முதல்வராக இருந்த பழனிச்சாமி தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொய்யான தகவலை வழங்கி இருக்கிறார் என்றும் உறுதிப்படுத்தி இருக்கும் அறிக்கை முன்னாள் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்காதது ஏன்? எனும் கேள்வியும் எழுகிறது.
ஒட்டுமொத்த நிர்வாகமும் போராட்டத்துக்கு எதிராகவும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் எதையும் எடுக்காமல் மெத்தனமாக இருந்திருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கும் அறிக்கை, இந்த மெத்தனத்தின் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை ஏன் ஆராயவில்லை? நடந்த போராட்டம் முழுக்க முழுக்க அரசால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு தனியார் நிறுவனத்துக்கு எதிரானது எனும் போது, நிர்வாகத்தின் இந்த மெத்தனத்துக்கு அந்த தனியார் நிறுவனம் காரணமா இல்லையா எனும் கோணத்தில் கமிசன் ஏன் இதை அணுகவில்லை?
அரசாங்கம் அமைக்கும் விசாரணை கமிசன்களின் அதிகார எல்லை, அரசாங்கம் என்ன முடிவை விரும்புகிறதோ அதற்கு ஏற்பவே இருக்கும். அந்த வகையில் மேற்கண்ட இரண்டு கமிசன்களின் அதிகார எல்லை எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
திமுக அரசாங்கத்தைப் பொருத்தவரை, இந்த இரண்டு அறிக்கைகளையும் அரசியல் பலன்களுக்காக பயன்படுத்தவே முயலும். பெரும்பாலும், சில நாட்கள் ஊடக விவாதங்களுக்குப் பிறகு இது போன்ற அறிக்கைகள் உயிர் வாழ்ந்ததில்லை. ஆனால் இந்த இரண்டு நிகழ்வுகளும் குறிப்பாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் அத்தனை தன்மைகளையும் ஒருங்கே கொண்டிருக்கும் ஒன்று. எந்த ஒரு அரச பயங்கரவாத நிகழ்வின் போதும் அதிகாரவர்க்கம் தண்டிக்கப்பட்டதே இல்லை. திமுகவும் ஒரு முதலாளித்துவக் கட்சி எனும் அடிப்படையில் அது தண்டித்து விடும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. என்றாலும் ஒரு தொடக்கப் புள்ளியையேனும் வைக்குமா என்று எதிர்பார்ப்பதைத் தவிர வேறு வழியில்லை.