பாஜகவின் அதிகார போதை சட்டங்கள்

எதிர்வரும் அக்டோபர் 30ம் தேதியுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவின் மீது உங்கள் கருத்தைக் கூறும் நாள் முடிவடைகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது அப்படி ஒரு சட்ட வரைவு அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது என்றாவது தெரியுமா?

இந்தியாவில் ஊடகங்கள் என்று சொன்னாலே, அது எந்த வித நெறிகளும் இல்லாத, ஒழிவு மறைவின்றி பார்ப்பன மேலாதிக்க ஆதரவு கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். பார்ப்பன மேலாதிக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பாஜக, ஆர்.எஸ்.எஸ் க்காக பாடுபடுவதில் சளைக்காதவை என்பதும் அனைவருக்கும் தெரியும்.

அண்மையில் ஆக்ஸ்ஃபார்ம், நியூஸ் லாண்ட்ரி ஆகிய செய்தி நிறுவனங்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இந்திய ஊடகங்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன? என்ன மாதிரியான தலைப்புகளை முதன்மையாக எடுத்துக் கொண்டு பரப்புகின்றன? உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் அலசி அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இதில் யாருக்கும் தெரியாத கமுக்கச் சேதி என்று ஒன்றுமில்லை. ஆனால் அனைவருக்கும் தெரிந்ததை தரவுகளுடன், கணக்கீடுகளுடன் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், 2023 டிசம்பருக்குள் மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கும் ஒளிபரப்புகள், கேபிள் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனி அவைகளை ஒன்றிய அரசின் பிரசார் பாரதி நிறுவனமே கண்காணிக்கும் என்று கூறுகிறது ஒன்றிய அரசின் அந்த சுற்றறிக்கை.

இவை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு ஊடக அதிபர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட கமுக்கக் கூட்டம் நடந்ததாகவும், அதில் பாஜகவுக்கு ஆதரவான செய்திகளுக்கு முன்னிலை வழங்கவும், எதிரான செய்திகளுக்கு எந்த முதன்மையும் வழங்கி விடாமல் தவிர்க்குமாறும் பேசப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன. இதெல்லாம் ஏற்கனவே நடப்பவை தானே என்று நீங்கள் கருதினால் அது உண்மை தான். ஆனாலும் அதில் இன்னும் அதிகமாக உப்பு, புளி, காரம் சேர்க்கப்பட இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சேதிகள் அனைத்தையும் தொகுத்து புரிந்து கொண்டு அதனுடன் செய்தி தொடர்பு சட்ட வரைவை பார்க்க வேண்டும். இதில் பல பகுதிகள் இருந்தாலும் முதன்மையானதாக மூன்று விதயங்களைப் பார்க்கலாம். 1. இணைய பயன்பாடு நிறுத்தம். 2. குறுஞ்செய்தி செயலிகளுக்கான அனுமதி அளிக்கும் முறை. 3. ட்ராயின் அதிகாரங்கள் குறைக்கப்படுவது.  இந்த சட்ட வரைவுவில், மேற்கண்ட விதிகள் உட்பட செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள் அனைத்தும் நாட்டின் பாதுகாப்பையும் குடி மக்களின் பாதுகாப்பையும் உறுதிப் படுத்துவதற்காக கொண்டுவரப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு நாட்டின் எந்தப் பகுதியிலும், எந்த நேரத்திலும், எவ்வளவு காலத்துக்கும் இணைய வழங்கலை துண்டிக்கும் அனுமதியை அரசுக்கு வழங்குகிறது இந்த வரைவு.  ஏற்கனவே இது ஓரளவு நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. காஷ்மீரில் இணைய இணைப்பு முறையாக வழங்கப்படுவதே இல்லை. ஏதாவது காரணத்தைச் சொல்லி துண்டிப்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு மதிப்பு சட்டத்தை நீக்கிய போது மிக நீண்ட நாட்களுக்கு இணையத் தொடர்பு இல்லாமலேயே மாநிலம் வைக்கப்பட்டிருந்தது.  இதை எப்படி நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் ரபேல் மாதிரியான ஒரு ஊழல் செய்தி அரசுக்கு எதிராக (அதாவது பாஜகவுக்கு எதிராக) பரவுகிறது என்றால் அந்தப் பகுதியின் இணைய இணைப்பைத் துண்டித்து விடலாம்.

குருஞ்செய்திச் செயலிகள் எனப்படும் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் தற்போது இணையம் வழியாக செய்திகளை பரிமாற்றிக் கொள்கின்றன. இனி இவ்வாறான செயலிகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களைப் போல் (ஜியோ, ஏர்டெல் போல்) முறைப்படியான லைசென்ஸ் பெற்றுத் தான் இயங்க முடியும். அதாவது அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். இரண்டு கட்டுப்பாடுகளை பார்ப்போம். எண்ட் டூ எண்ட் என்ஸ்கிரிப்ஷன் எனப்படும் மறையாக்கம் நீக்கப்பட வேண்டும். அனுப்பப்படும் எந்தச் செய்தியையும் அரசு நினைத்தால் (பாஜக நினைத்தால்) திறந்து பார்க்கலாம். பயனாளர்கள் அனைவரின் தன்விவரங்களை (ஆதார் போன்ற விவரங்கள்) சேகரித்து வைத்திருக்கவும் அரசுக்கு (பாஜகவுக்கு) தேவைப்பட்டால் வழங்கவும் வேண்டும். அதாவது அரசுக்கு (பாஜகவுக்கு) எதிராக யாரேனும் செயலிகளில் இயங்கினால் அவர்களை கண்காணிக்கவும் முடக்கவும் இது பயன்படும்.

இந்திய தகவல் தொடர்பை கண்காணித்து ஒழுங்குபடுத்தும் அமைப்பான ட்ராய், இனி அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பாக மட்டுமே இருக்கும். கண்காணித்து ஒழுங்குபடுத்தும் வேலையை பிரசார் பாரதியோ அல்லது அதைப் போல வேறு புதிய அமைப்போ ஏற்படுத்தப்படும். ட்ராய் தற்போது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கிறது. இது மாற்றியமைத்து முழுமையாக அரசின் (பாஜகவின்) கட்டுப்பாட்டில் இருக்கும் அமைப்பாக மாற்றி அமைக்கப்படும்.

மேற்கண்ட மூன்று முதன்மையான விதிகளும் ஏற்கனவே அப்படித்தானே இருக்கிறது என்பவர்கள், சட்ட அனுமதி என்பதை புதிதாக சேர்க்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இதுவரை தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி இதை செய்து கொண்டிருந்தவர்கள் இனி சட்டப்படியே செய்யப் போகிறார்கள் என்பது தான்.

தகவல் ஒளிபரப்பு உரிமை அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாடில் இருக்கிறது. இதை மாற்றி இனி எந்த மாநிலமும் தனியாக தொலைக்காட்சி நிறுவனங்களோ, கேபிள் நிறுவனங்களோ நடத்தக் கூடாது. கல்வி போன்ற தேவை எழுந்தால் ஒன்றிய அரசுக்கு தெரிவித்தால் மாநிலங்களுக்கு தேவைபடும் விதத்தில் ஒன்றிய அரசே ஒளிபரப்பும். எந்தச் சேனல் முதலில் வர வேண்டும், எந்தச் சேனல் தெளிவாக தெரிய வேண்டும் என்றெல்லாம் இனி ஒன்றிய அரசு தான் தீர்மானிக்கும். இதை 2023க்குள் செய்து முடித்து விட வேண்டும். ஏனென்றால் 2024ல் தேர்தல் வருகிறது. அப்போது பாஜக மட்டுமே செய்தி பரப்பும் உரிமை கொண்ட கட்சியாக இருக்க முடியும்.

அண்மையில் மோடி, மக்களுக்காக ஆயிரக்கணக்கான சட்டத் திருத்தங்களை இந்த எட்டு ஆண்டுகளில் செய்திருக்கிறோம் என்று பெருமிதத்துடன் பேசினார். அதன் பொருள் என்ன? ஆளுனர்கள் மூலம் மாநில நிர்வாகங்களில் தலையிட்டு குழப்படிகள் செய்வது,  மாநில உரிமைகளை இல்லாமலாக்கும் விதங்களில் சட்டங்களை இயற்றுவது, குற்ற புலனாய்வு துறைகளை பயன்படுத்தி பிற கட்சிகளை மிரட்டி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறச் செய்து ஆட்சியை கைப்பற்றுவது என்று பாஜக செய்யாத அட்டூழியங்களே இல்லை எனலாம். இவை அனைத்துக்கும் சட்டப் போர்வையைப் போர்த்தும் செயல் தான் சட்டத் திருத்தங்கள். இது போன்ற சட்டத் திருத்தங்களின் முதன்மையான நோக்கம் ஏகாதிபத்தியங்களின் ஆணையை நிறைவேற்றுவது தான் என்றாலும், பாஜகவின் நோக்கங்களும் அதனுடன் இணைந்திருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

ஒன்றியத்தைத் தவிர வேறு மாநில நிர்வாகங்கள் இருக்கக் கூடாது என்றும், பாஜக வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இருக்கக் கூடாது என்றும் இலக்கு வைத்துக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. எனவே, எல்லாக் கட்சிகளையும் போல் பாஜகவும் ஒரு தேர்தல் கட்சி என்று பார்க்கும் பார்வையை மாற்ற வேண்டும். அதையும் பாஜக அல்லாத பிற கட்சிகள் உடனடியாக அந்தப் பார்வையை மாற்ற வேண்டும். அப்போது தான் பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தேர்தல் கூட்டு வைப்பது எனும் முதல் படியே சாத்தியப்படும்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s