தீபாவளிக்கு முதல் நாள் கோவையில் ஒரு வண்டியின் எரிவாயு உருளை வெடித்தது. அதில் அந்த வண்டியில் இருந்த முபீன் என்பவர் இறந்து போனார். மட்டுமல்லாது அந்த வெடிப்பில் ஆணிகளும், கோலிக் குண்டுகளும் சிதறின. வெடித்த இடம் ஒரு கோவிலுக்கு முன்னால். இவை எல்லாம் சேர்ந்து ஒருவித ஐயத்தை ஏற்படுத்தவே காவல்துறை விரைந்து செயல்பட்டது. இறந்தது யார் என அடையாளம் காணப்பட்டது. இறந்தவர் ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டவர் என்று தெரிந்ததும் தொடர்புடையவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டார்கள். வீடுகளில் நடந்த தேடுதலில் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குற்றத்தொடர்புகள் மாநில எல்லையையும் தாண்டி விரியக் கூடும் என தெரிந்ததும் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இத்தனையும் வெடிப்பு நடந்த நான்கு நாட்களுக்குள் நடந்து முடிந்து விட்டன.
இப்படி நடப்பது இந்தியாவில் முதல் முறையல்ல. ஏராளமான நிகழ்வுகள் இது போல் நடந்துள்ளன. குண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து இறந்தவர்கள் பலர். பத்துக்கும் மேற்பட்ட இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவே நடந்துள்ளன. இது குற்ற நிகழ்வு. இந்த குற்ற நிகழ்வை தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும், அப்படியான நெருக்கடியின் மூலம் பாஜகவை வளர்க்க வேண்டும் எனும் முயற்சியில் அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். இது தான் மெய்யாகவே அந்த வெடிப்பை விட பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கிறது.
கோவையில் முன்பு நடந்த வன்முறை வெறியாட்டங்களும் குண்டு வெடிப்புகளும் யாராலும் மறந்து விடமுடியாத வடுக்களை கொண்டிருக்கின்றன. தொடக்கத்திலிருந்து அதை பின்னிருந்து இயக்கிய அரசியல் எது என்பதை மக்களை நேசிக்கும் அரசியலாளர்களால் மறந்து விட முடியாது. அதனாலேயே இந்த நிகழ்வின் போக்குகளையும் சில குரங்குகள் செய்யும் வித்தைகளையும் கண்காணிக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.
முதலில் முஸ்லீம்கள், தாங்கள் இஸ்லாமிய மீட்டுருவாக்க சிந்தனைக்குள் சிக்க வைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும். தொடக்கத்திலிருந்தே இடதுசாரிகள் இதை உரைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இஸ்லாமிய மீட்டுருவாக்கம் எனும் சிந்தனை உலக அளவில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கும், இந்திய அளவில் பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கும் உதவும் தன்மை கொண்டது. உலக அளவில் எந்த நாட்டில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு எதிரான அரசு அமைகிறதோ அந்த நாட்டில் இஸ்லாமிய தீவிரவாதம் அழிவு வேலைகளைச் செய்கிறது. அதேபோல் இந்தியாவில் எங்கு பார்ப்பனியத்துக்கு தேவை ஏற்படுகிறதோ அங்கு இஸ்லாத்தின் பெயரால் அழிவு வேலைகள் நடக்கின்றன. இந்தியாவில் எங்கெல்லாம் வன்முறை வெறியாட்டம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டதோ அங்கெல்லாம் பார்ப்பனியம் அதிகாரத்தைக் கைப்பற்றி இருக்கிறது, பாஜக வளர்ந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட இந்துக்கள் என்று சொல்லப்படுவோர், தங்களை ஒடுக்கிய பார்ப்பனியத்துடன் இணைந்திருப்பதற்கு ஒரே காரணம் மத அடிப்படையில் இஸ்லாம் மதத்தை இந்து மதத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருப்பது மட்டுமே. இதை புரிந்து கொண்ட காரணத்தினால் தான் பி.எஃப்.ஐ போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டதும், வஹ்ஹாபிய இயக்கங்கள் வளர்க்கப்படுவதும் நடந்திருக்கிறது.
இந்த அரசியலை புரியாத அப்பாவிகள், தங்களின் எல்லாம்வல்ல ஒரே அல்லா, தூய இஸ்லாம், ஷஹீத் என்று மூளைச் சலவை செய்யப்பட்டு இது போன்ற குற்றச் செயல்களில் இறக்கிவிடப்படுகிறார்கள். விளைவு ஆண்டுக் கணக்கில் சிறையில் வாடுகிறார்கள். இதில் முளைச்சலவை செய்யப்படாத அப்பாவிகளும் அடக்கம் என்பது தான் வேதனையானது. யார் செய்தாலும் குற்றம் குற்றம் தான். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும். இன்று கைது செய்யப்பட்டிருப்பவர்கள் உட்பட.
மறுபக்கம் என்ன நடக்கிறது? மாலேகான், சம்ஜௌதா, நான்டெண்ட் என இந்தியாவில் நடந்த பல குண்டு வெடிப்புகளில் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் தலையிட்டுள்ளது. மாயா கோத்னானி தொடங்கி, பிரக்யா சிங் வரை குற்றவாளிகளாக அறியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சிறைகளில் வாடவில்லை, மாறாக போற்றப் பட்டிருக்கிறார்கள், கொண்டாடப் பட்டிருக்கிறார்கள். அமைச்சர்களாகவும் உயர் பதவிகளிலும் இருக்கிறார்கள். எத்தனை பேர் குண்டுகள் செய்யும் போது இறந்து போயிருக்கிறார்கள்? அப்போதெல்லாம் அது ஒரு குற்ற நிகழ்வாக பார்க்கப்பட்டதே தவிர இது போல் மத அடிப்படையில் பயமூட்டப்படவில்லை. நீதி மன்றத்திலேயே ஒருவர் பிரமாண பத்திரம் கொடுத்தார். பாஜக வெற்றிக்காக ஆர்.எஸ்.எஸ் தான் குண்டு வெடிப்பை நடத்துகிறது என்று. அது தொடர்பாக எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள் என்ன? ஒன்றுமில்லை, செய்திகளாக கடந்து சென்று விட்டன.
கோவை வண்டி வெடிப்பை பொருத்தவரை எல்லா நடவடிக்கைகளும் சரியாக எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனாலும் பாஜக இதில் தங்கள் வளர்ச்சிக்காக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அது எரிவளி உருளை வெடிப்பாக மட்டுமே பார்க்கப்பட்டிருந்த போது தினமலர் நாளிதழும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் மட்டும் இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை என்றார்கள். காவல்துறை அறிவிக்கும் முன்னரே இது எப்படி தெரிந்தது? இது குறித்து தினமலர் நாளிதழும், அண்ணாமலையும் விசாரிக்கப்பட வேண்டும் அல்லவா?
தமிழ்நாட்டை நாசமாக்க ஆயத்த நிலையில் 96 பேர் என்றும், மொத்தம் 200 பேர் களத்தில் இருக்கிறார்கள், அதில் இறந்த முபீன் 199வது இடத்தில் இருந்தவர் என்றும் என்னென்னவெல்லாம் சொல்லி மக்களை பீதியூட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. என்ன ஆதாரங்களின் அடிப்படையில் இவர்கள் இது போன்ற செய்திகளை வெளியிட்டார்கள்? கருத்து சுதந்திரம் ஊடக தர்மம் என்று சில நிகழ்வுகளின் போது கொடி பிடிக்கும் ஊடகங்களின் இத்தகைய பொறுப்பற்ற தன்மை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா இல்லையா?
முபினின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் என்று அண்ணாமலை ஒரு தகவலை காட்டுகிறார். இது எப்படி அவருக்கு கிடைத்தது? ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியாக இருந்தவர் தன்னிடம் இருக்கும் சான்றுகளை காவல்துறையிடம் அளிக்க வேண்டுமா? ஊடகங்களிடம் காட்ட வேண்டுமா?
இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, தமிழ்நாட்டின் ஆளுனராக(!) இருக்கும் ரவி, எனை.ஏ விடம் வழக்கை ஒப்படைப்பதற்கு ஏன் தாமதம் என்று அரசாங்கத்தை சாடுவதாக நினைத்துக் கொண்டு அரசைச் சாடுகிறார். அதாவது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் ரவிக்கும் செயலளவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அரசியல் சாசன அடிப்படையில் இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. பொதுவெளியில் இப்படி பேசும் அதிகாரமும், மரபும் ஆளுனர்களுக்கு இல்லை. எனவே அவர் பாஜக ஆளாக இருக்கிறாரே தவிர ஆளுனராக இல்லை.
பாஜகவின் ஒட்டு மொத்த செயலையும் பார்த்தால் அவர்களின் ஒரே நோக்கம் குண்டு வெடிப்பை தடுப்பதோ குற்றவாளிகளை கண்டுபிடிப்பதோ அல்ல. மாறாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று நிரூபிக்க வேண்டும். இது தான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது.
2019ல் இந்த முபின் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணையில் இருந்தார் என்றால் அதன் பிறகு ஏன் என்.ஐ.ஏ முபீனை கண்காணிக்கவில்லை? அண்ணாமலை சொல்வது போல் ஜூன் மாதமே முபின் பேர் குறிப்பிட்டு உளவுத் தகவல் அனுப்பட்டிருப்பது உண்மையானால் (முதலில், இது எப்படி அண்ணாமலைக்கு தெரிந்தது? இதை எப்படி புரிந்து கொள்ளவது? உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அனுப்பும் குறிப்புகளை தன் கட்சியான பாஜகவை வளர்க்கும் பொருட்டு மாநில பாஜக தலைவர்களுக்கும் அனுப்புகிறது என்று புரிந்து கொள்ளலாமா?) கடந்த நான்கு மாதங்களாக அதன் மீதான நடவடிக்கை அறிக்கையை என்.ஐ.ஏ ஏன் கேட்டு உறுதி செய்யவில்லை. என்.ஐஏ வால் விசாரித்து கண்காணிப்பு பட்டியலில் இருக்கும் ஒருவர் இணையம் மூலம் வெடிபொருட்களை வாங்கும் அளவுக்கா தேசியப் புலனாய்வு முகமை செயல்படாமல் இருக்கிறது?
கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி, ஒரு சாராரின் பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து கோட்டை ஈஸ்வரன் காப்பாற்றியுள்ளார். கடவுள் இல்லை என்றால் கோவை இன்னேரம் சின்னாபின்னம் ஆகியிருக்கும் என்கிறார். அதாவது ஒரு குற்ற நடவடிக்கையை மதப் பிரச்சனையாக முன்னிருத்துகிறார். மறுபக்கம் அண்ணாமலை முதல்வர் ஏன் இதை இன்னும் பயங்கரவாத நடவடிக்கை என்று அறிவிக்கவில்லை என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்.
மறுபக்கம், காவல்துறை அதிகாரிக்கள் கூட்டிய கூட்டத்தில் ஜமாத் தலைவர்கள் 1998 நிலமைக்கு எங்களை கொண்டு வந்து விடாதீர்கள் என்று கண்ணீர் விட்டு மன்றாடுகிறார்கள். இறந்து போன மூபீனின் உடலை மையவாடியில் அடக்கம் செய்ய ஜமாத்தார்கள் அனுமதிக்கவில்லை. இறந்த உடலுக்கு நடத்தப்படும் தொழுகையான ஜனாசா தொழுகையும் நடத்தவில்லை. தனிப்பட்ட சில முஸ்லீம்கள் செய்யும் குற்ற நடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய சமூகத்தை பொறுப்பாக்காதீர்கள் என்று பலமுறை பல தலைவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதே போன்ற வேறு குற்ற நிகழ்வுகளின் போது – குண்டு செய்யும் போது இந்துக்கள் மரணமடைந்த நிகழ்வுகளின் போது, ஆர்.எஸ்.எஸ் குண்டு வெடிப்புகளை நடத்திய போது இன்னும் எவ்வளவோ நிகழ்வுகளின் போது – இந்து சமூகம் இவ்வாறு பதறும் நிலை ஏற்பட்டதுண்டா? காஷ்மீரில் ஒரு முஸ்லீம் சிறுமியை இந்து சாமியார் கோவிலில் வைத்து பாலியல் கொடூரம் செய்து கொன்றார். அதில் சாமியாரை கைது செய்த போது காவல்துறைக்கு எதிராக பாஜக அமைச்சரே வீதியில் இறங்கி போராடினார்.
இது தான் இங்கு இருக்கும் சிக்கலாக இருக்கிறது. காவல் துறை தொடங்கி இந்தியாவின் அனைத்து துறைகளும் மத அடிப்படையில் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. குற்றச் செயல்களின் போது மத அடிப்படையில் விடை தேடுவது அதிகரித்து வருகிறது. இது தான் மெய்யான பயங்கரவாதம். இந்த பயங்கரவாதத்தை முறியடிப்பது தான் மக்களின் முன் சவாலாக நிற்கிறது.