பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பணி முடிவுக்கு வந்தது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராகவும், தமிழ் இலக்கியத் துறையின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்ற எழுத்தாளர் க.நெடுஞ்செழியன் இன்று முடிவெய்தியிருக்கிறார்.
திராவிட கழக மேடைகளில் முழங்கி வந்தவர் பேராசிரியர். திருக்குறளுக்கு வலதுசாரி முத்திரையை ஒருவர் (நாகராஜனோ, ராமசாமியோ ஏதோ ஒரு பெயர் வரும் நினைவில் இல்லை) குத்திய போது முதன் முதலில் பொங்கி எழுந்து சினத்துடன் உரையாற்றியதை கேட்ட போது சிலிர்த்துப் போனேன்.
பேராசிரியரின் உரைகளிலிருந்து தான் ஆசீவகம் குறித்து தெரிந்து கொண்டேன். ஆசீவகம் குறித்தும், தமிழ் குறித்தும் பல நூல்களை எழுதியிருக்கிறார்.
வாய்ப்பு கிடைக்கும் போது நேரில் சந்தித்து உரையாட வேண்டும் என எண்ணியிருந்தேன். என் தள்ளிப் போடல்களின் மீது நானே உமிழ்ந்து கொள்கிறேன்.
பேராசிரியரின் நூல்களில் சில,
1 உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
2 சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும்
3சங்ககாலத் தமிழர் சமயம்
4 இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
5 தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
6 தமிழர் தருக்கவியல்
7 ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்
8 தமிழர் இயங்கியல்
9 தமிழரின் அடையாளங்கள்
10 சமூக நீதி
11 மரப்பாச்சி
12. தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும்.
13. சித்தண்ணவாயில்
14. ஆசிவகமும் ஐயனார் வரலாறும்
திருச்சி அருகே படுகை கிராமத்தில் பிறந்த பேராசிரியர். திருச்சி கே.கே. நகரில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இருந்துவந்த உடல்நிலை குறைவு காரணமாக சென்னை ராஜிவ்காந்தி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி, இன்று காலையில் காலமானார்.
பேராசிரியரின் வழி நின்று ஆசீவகத்தை இன்னும் ஆழமாய் எடுத்துச் செல்வோம்.
பேராசிரியர் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு…
நாத்திகர்கள் எதற்காக ஆசிவகம் முன் எடுக்க வேண்டும்
? அறிவியல் அவசியம்
பேராசிரியருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் இந்த நூல்கள் எல்லாம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தோழர் உதவி செய்யுங்கள் நன்றி ஜான்சன்
நண்பர் ஜான்சன்,
பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் நூல்களை பனுவலில் பெற்றுக் கொள்ளலாம்.
https://www.panuval.com/7553
நண்பர் ரச்சின்,
1. சமணம், பௌத்தம் ஆகியவை எப்படி பிற மதங்களிலிருந்து கடவுட் கொள்கை இல்லாமையால் மாறுபடுகிறதோ, அதேபோல சமணம், பௌத்தம் ஆகியவைகளிலிருந்து தன் அறிவியல் பார்வையால் மாறுபடுகிறது ஆசீவகம். ஒரு மதம் என்பதற்கான எந்த உள்ளீடும் ஆசீவகத்தில் இல்லை.
2. இந்து மதம் எனும் கட்டமைப்புக்கு எதிராக ஆசீவகத்தைப் பயன்படுத்த முடியும்.
தேடல் விரும்பி ஆசீவக உள்ளீடு என்ன? ஊழ்வினை தானே…
நண்பர் ரச்சின்,
ஆம் ஊழ்வினை தான். ஆனால், இன்றைய மதங்கள் கூறும் ஊழ்வினை அல்ல. ஆசீவகம் கூறும் ஆகூழ், போகூழ், பாழூழ் ஆகியவற்றுக்கு வேறு பொருளுண்டு.
அந்த பொருள் என்னவோ?
நண்பர் ரச்சின்,
ஆகூழ் என்றால் வினை இன்னும் முற்றுப் பெறவில்லை என்று பொருள். போகூழ் என்றால் வினை முற்றுப் பெற்று விட்டது எனப் பொருள். பாழூழ் என்றால் வினை நடைபெற இனி வாய்ப்பில்லை என்று பொருள்.
ஒரு மூலக்கூறு உருவாகிறது என்றால், இரண்டு அணுக்கள் பிணைகின்றன என்றால் அணு உட்கூறுகளை பெறும் அணு ஆகூழ் என்றும், உட்கூறுகளை வழங்கும் அணு போகூழ் என்றும், இரண்டும் பிணைந்து மூலக் கூறாக அல்லது பொருளாக ஆன பிறகு மீண்டும் வினை நடைபெற வாய்ப்பில்லாமல் முற்றுப் பெற்று விட்டால் அதை பாழூழ் என்றும் கூறலாம். இதன்படி ஒவ்வொரு வினையையும் பகுக்கலாம். மற்றப்படி மதங்கள் கூறும் ஊழ்வினை, கடந்த பிறவியின் நற்கருமங்கள் போன்ற எவற்றுக்கும் ஆசீவகத்தில் இடமில்லை.
மதங்கள் இன்று கூறும் ஏழ் பிறவி என்பதும் ஆசீவக கருத்தாக்கம் தான். ஆனால் அது இன்று வழங்கும் பொருளில் இல்லை. ஒரு பரம்பரை என்பது ஏழு பிறங்கடைகளைக் கொண்டது என்பது தான் ஆசீவகத்தின் கருத்து. அதாவது மகன், அவனுடைய அப்பா, அம்மா, பாட்டன், பாட்டி, பூட்டன் பூட்டி .. .. .. இப்படி ஏழாவது முற்கடையாக வருவது தான் பரன், பரை இதைத்தான் நாம் பரம்பரை என்கிறோம். இது தான் ஆசீவகம் கூறும் ஒரு பரம்பரை என்பது ஏழு பிறப்பு. இதை இன்றுள்ள மதங்கள் ஒருவனின் இறப்புக்கு பிறகு அவனே மற்றொரு முறை பிறந்தால் அதை இரண்டாவது பிறப்பு என்று, தொடர்ச்சியாக ஒருவனே ஏழு முறை பிறப்பெடுப்பான். அதுவே ஏழ்பிறப்பு என்கின்றன. இதற்கும் ஆசீவகத்துக்கும் தொடர்பில்லை.