இந்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை போராட்டமாக மாறியது. அப்போது பலரும் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக நின்றனர், குறிப்பாக இடதுசாரிகள். ஒரு மதப் பழக்கத்தை இடதுசாரிகள் ஆதரிக்கலாமா? என்று அந்த நிலைப்பாடு அப்போது விவாதத்துக்கு உள்ளாகியது.
கர்நாடக கல்விக் கூடங்களில் ஹிஜாப் அணியலாமா கூடாதா அந்த வழக்கில் நீதிமன்றமே இருவேறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. அந்த வழக்கு தற்போது உச்ச நீதி மன்றத்தில் உள்ளது. கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணியலாமா எனும் கேள்வி மதப் பழக்கம் எனும் அடிப்படையில் அணுகப்படவில்லை. பலர் அதனை மதப் பழக்கம், அதற்கான தடை என்று ஒரு சீர்திருத்தம், மதப்பழக்கத்தை ஒழிக்க கிடைத்திருக்கும் வாய்ப்பு எனும் அளவில் இதை ஏற்கலாம் என்று நிலைப்பட்டனர்.
சரியாகப் பார்த்தால், அது அரச ஒடுக்குமுறை. ஹிஜாப் தேவையில்லை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதை யார் செய்வது? எனும் கேள்வி முதன்மையானது. ஒரு பெரும்பான்மை மதம் அதிகாரத்தில் இருக்கும் வாய்ப்பைக் கொண்டு சிறுபான்மை மதத்துக்கு எதிராக செயல்படும் போது, யார் செய்தால் என்ன மத இறுக்கம் தகர்கிறதே என்று பார்ப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
இதே போன்ற ஹிஜாப் சிக்கலால் தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஈரானில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது அந்தப் போராட்டம் ஒடுக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. என்றாலும், அந்தப் போராட்டத்தின் உள்ளடக்கம் நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்.
இந்தியாவின் ஹிஜாப் சிக்கலும் ஈரானின் ஹிஜாப் சிக்கலும் ஒன்றல்ல. இந்தியாவில் ஹிஜாபுக்கு எதிரான நிலைப்பாடு அரசுக்கு ஆதரவான, ஒரு பிற்போக்கு மதத்துக்கு ஆதரவாக இன்னொரு பிற்போக்கு மதத்துக்கு எதிரான நிலைப்பாடு. ஈரானின் ஹிஜாப் என்பது ஒரு கருவி, மற்றப்படி அப் போராட்டம் முழுக்க முழுக்க அரசின் ஒடுக்கு முறைக்கு எதிரானது.
ஈரானின் குர்து மாநிலத்தைச் சேர்ந்த மஹ்சின் அமினி எனும் இளம்பெண் தலைநகர் தெஹ்ரானுக்கு வருகிறார். அவர் தலையை மறைக்கும் ஹிஜாபை சரியான முறையில் இல்லாமல் நெகிழ்வாக அணிந்திருந்தார் என்று அங்கிருந்த அறநெறிக் காவலர்கள் தடுக்கிறார்கள். அபோது நடந்த வாக்குவாதத்தின் முடிவில் மஹ்சின் கைது செய்யப்படுகிறார்.
ஈரான், சௌதி போன்ற மத்திய தரைக்கடல் இஸ்லாமிய நாடுகளில் சட்டம் ஒழுங்கு காவலர்கள் மட்டுமல்லாது அறநெறிக் காவலர்கள் என்றொரு காவல்துறையும் உண்டு. இவர்களின் முதன்மையான பணி இஸ்லாத்தின் தனிமனித ஒழுக்கங்கள், வணக்க வழிபாடுகள் ஒழுங்காக பின்பற்றப்படுகிறதா? எனக் கண்காணிப்பது. சௌதியில் இவர்களுக்கு முத்தவ்வா என்று பெயர். ஈரானில் இவர்களுக்கு பாஸ்ஜி என்று பெயர்.
இந்த அடிப்படையில் கைது செய்யப்பட்ட மஹ்சின் மூன்று நாட்கள் கழித்து இதய அடைப்பால் இறந்து விட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் மஹ்சினின் தந்தை 22 வயதே ஆன தன் மகள் நல்ல உடல்நலம் கொண்டவள், இதயம் உள்ளிட்ட எந்த நோய்களோ குறைபாடுகளோ இல்லாதவள் என கூறுகிறார். இதனைத் தொடர்ந்து தான் அங்கு போராட்டம் வெடிக்கிறது.
70களின் பிற்பகுதியில் அமெரிக்க சார்புடைய ரேசா பஹ்லவி ஷாவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வெற்றியடைந்ததை அடுத்து 79ல் அயத்துல்லா கொமைனி தலைமையின் கீழ் ஈரான் வருகிறது. அதுவரை இஸ்லாத்தின் தனிமனித ஒழுக்கங்கள் அவ்வளவாக கண்டு கொள்ளப்படாத ஈரானில் படிப்படியாக அவை உள்நுழைக்கப் படுகின்றன. புர்கா, ஹிஜாப் இல்லாமல் பெண்கள் பொது வெளியில் வருவது குற்றமாக்கப்படுகிறது. இதற்கு எதிராக அன்றிலிருந்து இன்று வரை ஈரானிய பெண்கள் போராடி வருகிறார்கள்.
பெண்களுக்கான ஆடைக் காட்டுப்பாட்டுக்கு எதிராக 79லேயே பெண்கள் போராடத் தொடங்கி விட்டனர். அப்போது அவர்கள் வைத்த முழக்கம் கவித்துவமானது, “சுதந்திரத்தின் விடியலில் சுதந்திரம் இல்லை” 2017ல் 35 பெண்கள் பாஸ்ஜியினால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 2018 ல் இதே போன்று ஹிஜாப் சரியாக போடவில்லை என்பதற்காக ஒரு பெண்ணை பாஸ்ஜி பெண் கன்னத்தில் அறைய அது வீடியோ எடுக்கப்பட்டு உலகமெங்கும் இருந்து ஈரானுக்கு கடும் எதிர்ப்பை பெற்றுத் தந்தது. இந்தப் போராட்டம் தொடங்குவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பு ஐஸ்கிரீம் விளம்பரத்தில் நடித்த ஒரு நடிகைக்கு நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதற்குக் காரணமும் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்பது தான். இதுவும் மக்களிடம் அரசுக்கு எதிரான பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது.
இது மட்டுமல்ல, அரசின் நிர்வாகத்துக்கு எதிராகவும் ஈரான் தொடர் போராட்டங்களைச் சந்தித்து வருகிறது. 2010 தேர்தல் முறைகேடுகளுக்கு எதிரான போராட்டம். 2015ல் ஆசிரியர்கள் நடத்திய போராட்டங்கள் மற்றும் ஓட்டுனர்கள் நடத்திய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம். 2017ல் குறைந்தபட்ச ஊதியத்துக்கான போராட்டம். 2018ல் விலைவாசி உயர்வுக்கு எதிராக நடந்த நாடு தழுவிய அளவில் நடந்த பெரும் போராட்டங்கள். இந்த போராட்டங்களின் போது மட்டும் அரசினால் 1500 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியாக ஈரான் தொடர்ச்சியாக போராட்டங்களின் களமாகவே திகழ்ந்து வருகிறது. இத்தனைக்கும் ஈரானில் அரசுக்கு எதிராக போராடினால் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் நடப்பில் இருக்கிறது.
இந்த போராட்ட உலையில் தான் மஹ்சினின் கொலை தீப்பொறியை கிளறி விட்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த பெண்கள் ஹிஜாப்பை அவிழ்த்து எறிந்தார்கள், நீண்ட தலைமுடியை கத்தரித்துக் கொண்டார்கள் என்பதற்காக இப்போராட்டத்தை ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் என்று குறுக்க முடியாது. எனவே இந்தியாவில் நடந்த ஹிஜாபுக்கு எதிரான போராட்டமும், ஈரானின் போராட்டமும் ஒன்றல்ல.
இந்திய ஹிஜாப் போராட்டத்துக்கு ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, குறிப்பாக எக்ஸ் முஸ்லீம்கள் என்று அழைக்கப்படும் சிலரால் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்னவென்றால், இந்தியாவில் ஹிஜாபை போடுவது எங்கள் உரிமை என்று சொன்னாலும் ஆதரிக்கிறார்கள், ஈரானில் ஹிஜாபை நீக்குவது எங்களின் உரிமை என்று சொன்னாலும் ஆதிரிக்கிறார்கள். இது முரண்பாடு என்பது தான். ஹிஜாப் அல்ல பிரச்சனை அரசுக்கும் மக்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது? அதில் யாரால் என்ன குறுக்கீடு ஏற்படுகிறது என்று பார்ப்பதே சரியான கண்ணோட்டம். இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.