விவாதம்

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,

 

மீண்டும் ஒரு விவாத அறிவிப்பு.

வழக்கம் போல இதுவும் இஸ்லாமியர்களுடனான விவாதம் தான். இஸ்லாமிய மதவாதிகளுடன் (அனைத்து மதவாதிகளுடனும் தான்) விவாதம் நடத்தி ஒரு பயனும் இல்லை என்பதை அறிந்து தான் இருக்கிறேன். அதனால் தான் கூடுமானவரை இந்த விவாதத்தை தவிர்ப்பதற்கு முயன்றேன். எதிர்த்தரப்பின் தொடர் வற்புறுத்தல்களின் காரணத்தினால் இந்த விவாதத்தை ஏற்றிருக்கிறேன். இது குறித்த உரையாடல்களைக் காண இங்கே சொடுக்கவும்.

 

எங்கு மீளாய்வு இல்லையோ அங்கு விவாதம் நடத்துவது வீணானது. எந்த மதவாதிக்கும் மீளாய்வு என்பது மதவிரோதமானது. எனவே, சமூகம் குறித்தான விவாதங்களின் மூலமே மதங்களை மீளாய்வு செய்யும் அளவுக்கு அவர்களை நகர்த்திக் கொண்டு வர முடியும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு. ஆனால் மதவாதிகள் இதை இப்படி புரிந்து கொள்வதில்லை. விவாதம் எனும் பெயரில் அவர்களால் விளக்கம் கூற மட்டுமே முடியும். குறிப்பாக இஸ்லாம் குறித்து விவாதிக்க முன் வருபவர்களுக்கு இதில் பெருங்குழப்பமே இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் எந்த ஒன்றையும் மாற்றுவதற்கு முகம்மதுவுக்குப் பிறகு எவருக்கும் அனுமதி இல்லையோ, அந்த ஒன்று சரியா தவறா என்று 1400 ஆண்டுகளுக்கு பின் இன்று விவாதிக்கப்படுவதில் என்ன நியாயம் இருந்துவிட முடியும்? ஆக, இங்கு நடக்கவிருக்கும் விவாதம் என்பது வெறுமனே விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியாக இருக்குமேயன்றி வேறொன்றாக இருக்கப்போவதில்லை. இது தான் இந்த விவாதம் குறித்த என்னுடைய கருத்து.

 

அனைத்தையும் தாண்டி ஒருவேளை .. ஒருவேளை .. ஒருவேளை அவர்கள் தங்கள் மதத்தை மீளாய்வு செய்ய முன்வந்தால் .. .. .., வரவேண்டும் என்று விரும்புகிறேன்.

 

இஸ்லாமியப் பொருளாதாரமா? கம்யூனிசப் பொருளாதாரமா? எது சிறந்தது எனும் தலைப்பில் இங்கு விவாதம் நடத்தப்பட விருக்கிறது. இந்த விவாதத்தில் கம்யூனிசப் பொருளாதாரமே சிறந்தது எனும் தலைப்பில் நான் என்னுடைய வாதங்களை எள்ளலில்லாமலும், உள்ளீட்டுடனும், முடிவு காணும் நோக்கத்துடனும், நட்பு ரீதியாகவும் முன்வைப்பேன் என்று ஏற்கனவே உறுதியேற்றுள்ளேன். அவ்வாறே இஸ்லாமியப் பொருளாதாரமே சிறந்தது எனும் தலைப்பில் நண்பர் நிஜாமுத்தினும் உறுதியேற்றுள்ளார்.

 

இந்த விவாதத்தை செங்கொடியாகிய நானும், நிஜாமுத்தினாகிய அவரும் மட்டுமே நடத்துகிறோம். வேறு யாரும் விவாதத்தை நகர்த்த முற்பட வேண்டாம் என வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம். அதேநேரம் தங்களுடைய கருத்துகளை இங்கு பதிவு செய்வதற்கு எந்த தடையும் இல்லை. விரும்பியதை விரும்பியவாறு பதிவு செய்யலாம். ஆனால் அதில் யாரையும் கேலி கிண்டலோ, அவதூறு வசைகளோ இல்லாமல் இருக்க வேண்டும்.

 

முந்திய அனுபவங்களைப் போலன்றி இந்த விவாதம் இறுதிவரை ஒரு முடிவைக் காணும் வரை பயணப்பட வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடுகிறேன்.

 

நன்றி.

 

விதிமுறைகள்.

 

 1. இந்த விவாதத்தின் அனைத்து அம்சங்களும் முடிவைக் காணும் விதத்திலேயே பயணப்பட வேண்டும்.
 1. நாம் எடுத்துக் கொண்டிருக்கும் தலைப்புக்கு வெளியே எதையும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது. தேவைப்படுகிறது எனக் கருதினால் என்ன விதத்தில் இந்த தலைப்புக்கு உதவியாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட வேண்டும்.
 2. இந்த விவாதத்தில் ஒரு கேள்வியை எடுத்துக் கொண்டு அதற்கான பதில், விவாதங்கள் இவைகளிலிருந்து ஒரு முடிவை வந்தடைந்த பின்னர் அடுத்த கேள்வியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் பலவிதமான கேள்விகளை எடுத்துக் கொண்டு விவாதிக்கக் கூடாது.
 3. விவாதத்தில் ஈடுபடும் இருவரும் கேள்வியை முன் வைக்கும் போது எதிர்தரப்பின் நிலைப்பாட்டை எப்படி புரிந்து கொண்டு அந்தக் கேள்வியை முன் வைக்கிறார் என்பதைக் குறிப்பிடுவது சிறந்தது.
 4. வைக்கப்படும் வாதங்கள் தகுந்த உள்ளீட்டுடனும் செரிவுடனும் இருக்க வேண்டும்.
 5. அவரவர் வைக்கும் வாதங்களுக்கு அவரவர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
 6. விவாதிக்கும் இருவர் தவிர ஏனையோர் கூறும் கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஒருவேளை அப்படி வைக்கப்படும் கருத்து சரியானது எனக் கருதினால் அதனை தன்னுடைய வாதத்தில் எடுத்துக் கூறி முன்வைக்க வேண்டும்.
 7. எதிர்த்தரப்பு முன்வைக்கும் வாதங்களை திசைதிருப்புவதோ, கண்டு கொள்ளாமல் நழுவிச் செல்வதோ கூடாது.
 1. குறிப்பிட்ட ஒரு அம்சத்துக்கு பதிலளிக்காமல் இருப்பது, சுட்டிக் காட்டிய பிறகும் அது தொடர்ந்தால் அது குறித்த எதிர்தரப்பின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதாக பொருள் கொள்ளப்படும்.
 2. எதிர்த்தரப்பின் வாதத்துக்கு நான்கு நாட்களுக்குள் பதிலளித்து விட வேண்டும். தவிர்க்கவியலாமல் பதிலளிக்க முடியாதிருந்தால் தகுந்த காரணங்களைக் கூறி எவ்வளவு நாட்களுக்குள் பதிலளிக்க முடியும் என்பதையும் குறிப்பிட வேண்டும். நழுவல் போக்கில் இதைப் பயன்படுத்தக் கூடாது.
Advertisements

21 பதில்கள்

 1. அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

  அனைத்து உலகத்தையும் படைத்துக் காத்து பரிபாலித்து வருவவனாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டுத் தொடங்குகிறோம்.

  இஸ்லாம் என்பது ஒரு மார்க்கம், மற்ற மற்ற மதங்களைப் போல இஸ்லாத்தையும் ஒரு மதமாக எண்ணிக் கொண்டு பேசுவது தப்பானது. ஒரு இஸ்லாமிய பெற்றோருக்கு பிறந்தவரான சகோ. செங்கொடி எப்படி தோற்றுப் போன கமுயூனிச கட்சியில் சென்று சேர்ந்தார் என்பது எங்களுக்கு தெரியாது. அந்த கமுயூனிச கட்சியில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே நம்பிக்கொண்டு கண்ணியமான மார்க்கமான இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக அறிந்து கொண்டு அதை ஒரு வெப்சைட் தொடங்கி எழுதி குவித்துக் கொண்டு இருக்கின்றார். அன்னாருக்கு நல்ல விசயங்களை எத்தி வைக்கலாமே எனும் அவாவினால் தான் இங்கே அவரோடு விவாதம் செய்ய ஒத்துக் கொண்டிருக்கிறோம்.

  நாங்கள் நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து இப்படி முடிவை எடுத்திருக்கின்றோம். நாங்கள் மார்க்கத்தில் கரை கண்ட அறிஞர் பெருமக்கள் அல்ல. சாதாரண இளஞர்கள் தான். ஆனாலும் சகோ. செங்கொடி நீண்ட நாட்களாக இஸ்லாத்துக்கு எதிராக எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று அறிந்ததனால் அவருக்கு நேர்வழியை காட்ட வேண்டும் என்கின்ற ஆசையினால் இப்படி எழுதும் முடிவை எடுத்தோம். இதற்காக நாங்கள் தனியாக இமெயில் ஐடியும், ஃபேஸ்புக் அக்கவுண்டும் ஓபன் பண்ணியிருக்கின்றோம். நாங்கள் எழுதுவதை படித்துக் கொண்டிருக்குவர்கள் நாங்கள் எழுதுவது தப்பு என்று நினைத்தால் உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் யோசனையையும் கேட்டுக் கொண்டு நாங்கள் எழுத தயாராக இருக்கிறோம். நாங்கள் போடும் கமாண்டுகளை சகோ செங்கொடி ஒன்றிரண்டு நாட்கள் கழித்து தான் வெளியிடுவார் என்பதால் எங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் உடனுக்குடன் வெளியிடுவோம். சகோதரர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  இமெயில்: s.nijam786@outlook.com

  ஃபேஸ்புக்: https://www.facebook.com/786nijam.s

  சகோ. செங்கொடி அவர்களே! விவாதத்தை முதலில் எங்களை தொடங்கச் சொல்லி இருக்கின்றீர்கள். இஸ்லாமிய பொருளாதாரம் வட்டியை அறவே தவிர்க்கச் சொல்கின்றது. வட்டி இல்லாத பொருளாதாரமே இஸ்லாமிய பொருளாதாரத்தின் அடிப்படை. வட்டி எவ்வளவு கொடூரமானது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். கமுயூனிஸ்டுகள் எப்போதும் ரசியாவைப் பார், சீனாவைப் பார் என்று தான் சொல்லுவார்கள். அதனால் நாங்களும் உலக நாடுகளையே பார்க்கச் சொல்லுகின்றோம். எத்துனை நாடுகள் கடன் வாங்கி விட்டு வட்டிக்கு என்று பெரும் தொகையை ஒவ்வொறு வருடமும் கட்டிக் கொண்டிருக்கின்றன. இந்தப் பணமெல்லாம் நாட்டு மக்களுக்கு நல்ல திட்டங்களுக்காக செலவு செய்தால் அந்த நாடு எவ்வளவு முன்னேறும். ஆகவே நாட்டு மக்களின் முன்னேற்றத்தை தடுத்துக் கொண்டிருக்கும் வட்டியை இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி வட்டியை ஹராமாக்கியிருக்கிறான். 2:275. ஆனால் கமுயூனிசம் என்ன சொல்கிறது. வட்டியை ஏற்றுக் கொள்கிறது. நாட்டு முன்னேற்றம் பற்றி நிறைய பேசும் நீங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கும் வட்டியை ஆதரிக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். இது சரியா? முன்னுக்குப் பின் முரண்பாடாக தெரியவில்லையா

  நீங்கள் ஒரு கேள்வி கேட்டு அதன் மூலம் விவாதத்தை நடத்த வேண்டும் என்றுச் சொல்லியிருக்கின்றீர்கள். அதனால் நாங்கள் ஒரு கேள்வியிலிருந்து தொடங்கியிருக்கின்றோம். உங்கள் பதிலைக் கண்டபிறகு அடுத்து எழுதுகிறோம். இதை கமாண்ட் செய்த நாள்: 3/02/2017 1.15 p.m

 2. நண்பர் நிஜாமுத்தின்,

  விவாதத்தை தொடங்குமுன் இஸ்லாமிய பொருளாதாரம், கம்யூனிச பொருளாதாரம் என்பன குறித்து என்னுடைய கருத்தை தெரிவித்து விடுவது பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன். பொருளாதாரம் என்பது பண வரவு செலவை மட்டும் உள்ளடக்கிய ஒன்றல்ல, உற்பத்தி முறை வரை விரிந்து செல்லக் கூடியது. பணம் என்றால் சமூகத்தில் அதற்கிருக்கும் மதிப்பு எங்கிருந்து எவ்வாறு உருவாகிறது என்பதை விளக்காமல் பண வரவு செலவை மட்டும் பேசினால் அது பொருளாதாரமாக இருக்காது. அது தனிப்பட்ட கணக்காகத் தான் இருக்கும். தனிப்பட்ட கணக்குகள் குறித்த பொதுவான போதனைகளை விட பொருளாதரம் எனும் சொல்லின் பொருள் விரிவானது. எனவே இஸ்லாமிய பொருளாதாரம் கிருஸ்தவ பொருளாதாரம் என மதங்களின் பெயரிலான பொருளாதாரம் இருக்க முடியாது. ஏனென்றால் உலகில் நிலவும் எந்த மதமும் உற்பத்தி முறை குறித்து பேசியதே இல்லை. தெளிவாகச் சொன்னால் உற்பத்தி முறை குறித்து எந்த மதத்துக்கும் எதுவும் தெரியாது. எது உற்பத்தி முறையை உள்ளாடக்கி விரிவான பார்வை கொண்டிருக்கிறதோ அதற்குத் தான் பொருளாதாரம் எனும் சொல்லினை கையாளும் தகுதி இருக்கும். எனவே, முதலாளித்துவ பொருளாதாரம், கம்யூனிசப் பொருளாதாரம் எனபன போல் இருக்க முடியுமே அன்றி இஸ்லாமிய பொருளாதாரம், கிருஸ்தவ பொருளாதாரம், பார்ப்பனிய பொருளாதாரம் என்பன போன்று இருக்க முடியாது. இது தான் இந்த விவாதத்தின் தலைப்பு குறித்த என்னுடைய கருத்து.

  இந்த என்னுடைய கருத்துக்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தாக வேண்டும் என்பது கட்டாயமல்ல. ஏனென்றால், இதை என்னுடைய வாதமாக வைக்கவில்லை, கருத்தாகத்தான் வைத்துள்ளேன். இதற்கு மறுப்பளிப்பதும், மறுப்பாளிக்காமல் கடந்து செல்வதும் உங்களின் விருப்பத்தின் பாற்பாடானது. அதேநேரம் இஸ்லாமியப் பொருளாதாரம் என்பதை இந்த விவாதத்துக்காக உங்கள் நிலைப்பாடாக ஏற்று என்னுடைய வாதங்களை வைப்பேன். இனி உங்கள் கேள்விக்கு வருகிறேன்.

  வட்டி குறித்த ஒரு தவறான கேள்வியுடன் உங்கள் வாதத்தை தொடங்கியுள்ளீர்கள். கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்று எப்படி நீங்கள் முடிவுக்கு வந்தீர்கள் என்பது தெரியவில்லை. இதை நீங்கள் பின்னூட்டம் அளித்த கட்டுரையிலேயே சற்று விளக்கியிருக்கிறேன். வட்டி என்பது என்ன என்பதை கம்யூனிசம் தன்னுடைய பார்வையில் விளக்கியிருக்கிறது. அந்த விளக்கம் சரியா தவறா என்பதை விவாதிக்கலாம். ஆனால், கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்று கூற முடியாது. வட்டியின் கொடுமைகளை கம்யூனிசமும் விவரிக்கிறது தடுக்கிறது. கூடுதலாக கூறினால், சோவியத் யூனியன் அமைந்தவுடன், முந்தைய ஜார் அரசு பிற நாடுகளுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் கடன் நிலுவைகள் அனைத்தையும் தங்களின் பொறுப்புகளிலிருந்து விலக்கிக் கொண்டது. கவனிக்கவும் வட்டியை மட்டுமல்ல, மக்கள் நலனுக்கு புறம்பானது என்று கூறி வட்டியுடன் சேர்த்து கடனையும், ஒப்பந்தங்களையும் கூட தகுதி நீக்கம் செய்தது. எனவே, கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்று நிலைப்படுவது பிறழ்தலான முடிவு. ஆனால் வட்டி குறித்த இஸ்லாத்தின் பார்வைக்கும், கம்யூனிசத்தின் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசங்களைக் கூட சரியா தவறா என அலசலாம். ஆனால் கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என பொய்யான தகவலைக் கூற முடியாது. ஆக உங்கள் முதல் கேள்வி தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டது என்பதால் இதற்கு மேல் அதனை விளக்குவது தேவையற்றது எனக் கருதுகிறேன்.

  இதற்கான உங்கள் விளக்கத்தை முன்வைப்பதைப் பொறுத்து நான் மேலதிக தவல்களுடன் வருகிறேன்.

 3. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! உங்களின் வார்த்தைகள் மூலம் தந்திரமாக விளையாடி இருக்கின்றீர்கள். விவாதத்தை தொடங்கும் முன்பே உங்கள் தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டதைத்தான் நாங்கள் இதில் காண்கின்றோம். இஸ்லாமியப் பொருளாதாரம் என்று இருக்கக் கூடாதாம். ஆனால் கமுயூனிசப் பொருளாதாரம் இருக்கலாமாம். விவாதத்தில் ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு முதலிலேயே ஸ்டேட்மெண்ட் கொடுத்து விட்டார். வாதத்துக்காத்தான் இஸ்லாமியப் பொருளாதரம் இருப்பதாக ஒப்புக் கொண்டேன் என்று பின்னால் சொல்லிக் கொள்ளலாம் அல்லவா, அதுக்காகத் தான். உற்பத்தி முறை பற்றி இஸ்லாம் ஒன்றும் சொல்லவில்லை என்று சகோ செங்கொடி எப்படி சொல்கிறார். விவசாயத்தில் உற்பத்தி செய்வது குறித்த எத்தனையோ ஹதீஸ்கள் இருக்கின்றன. கனீமத் பொருட்கள், வியாபாரம் எப்படி செய்ய வேண்டும்? என்பது ஆரம்பித்து எப்படி பேரம் பேச வேண்டும் எப்படி பேரம் பேசக் கூடாது என்பது வரை மிக அருமையாக திருக் குர் ஆனும் ஹதீஸ்களும் விளக்கியிருக்கின்றன. இது எதுவுமே தெரியாமல் அறைகுறையாக தெரிந்துக் கொண்டு வந்து உலரக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.

  முந்திய ஜார் அரசு வாங்கிய கடனகளை வட்டிகளை கமுயூனிச அரசு அமைந்தவுடன் ரத்து செய்து விட்டார்களாம். அதனால் கமுயூனிசம் வட்டியை எதிர்க்கிறதாம். இங்கே எப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கருனாநிதி செய்ததை ஜெயலலிதா நீக்குவார், ஜெயலலிதா செய்ததை கருனாநிதி நீக்குவர். இதெல்லாம் கொள்கை முடிவா? வட்டி கூடாது என்று எத்துனை திருக் குர்ஆன் ஆயத்துகள் வேண்டும் உங்களுக்கு? எத்தனை ஹதீஸ்கள் வேண்டும்? அருள்மறையின் போதனைகளைப் போலவோ அல்லது மாநபியின் வழிகாட்டுதலைப் போலவோ உங்கள் காரல் மார்க்சின் ஒரு வாசகத்தை உங்களால் எடுத்துக் காட்ட முடியுமா?

  சகோ செங்கொடி! நீங்கள் நன்றாக யோசித்து எழுதுவது நல்லது. கமுயூனிசம் இஸ்லாம் விவாதம் நடத்தும் போது ஆதாரபூர்வமாக எழுதுவது தான் சரியாகும். அடுத்த முறை போகிற போக்கில் எழுதாமல் ஆதாரபூர்வமாக எழுதுவீர்கள் என நம்புகின்றேன்.

  இதை கமாண்ட் செய்த நாள்: 10/02/2017 8.15 p.m

 4. நண்பர் நிஜாமுத்தின்,

  கம்யூனிசமா? இஸ்லாமா? என விவாதம் செய்வதாக இருந்தால், விவாதம் செய்யும் இரண்டு தரப்பும் கம்யூனிசம் குறித்தும் இஸ்லாம் குறித்தும் அறிந்திருக்க வேண்டியது, குறைந்தபட்சம் அதனதன் அடிப்படைகளையாவது தெரிந்திருக்க வேண்டியது இன்றியமையாதது. ஆனால் உங்களின் பதில் அப்படி இல்லை. உற்பத்தி முறை என்ற சொல்லின் பொருளே உங்களுக்கு புரியவில்லை. என்றால், எந்த அடிப்படையில் உங்களால் கம்யூனிசத்தை விட இஸ்லாம் உயர்ந்தது என்று சொல்ல முடியும்? இஸ்லாம் உங்களின் மதம். எனவே, அதைத் தவிர வேறெதுவும் உயர்ந்ததாக இருக்க முடியாது எனும் அடிப்படையிலிருந்து தான் விவாதிக்க வந்தீர்களா?

  இரண்டு மாறுபட்ட நிலைப்பாடுகளையும் அறிந்து கொண்டு எது சிறந்தது என உரசிப் பார்ப்பதற்குப் பெயர் தான் விவாதம் என நான் அப்பாவியாக நான் நம்பிக் கொண்டிருக்கிறேன் போலும். ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டு அதைதவிர வேறெதையும் தெரிந்து கொள்ளாமல் வரட்டுத்தனம் செய்பவர்களிடம் பொருதிக் கொண்டிருப்பதற்கு எனக்கு நேரம் இல்லை. மன்னிக்கவும், தயவு செய்து இந்த விவாதம் தொடர வேண்டுமா என்பதை மீளாய்வு செய்யவும்.

  விவாதித்தே தீர வேண்டும் என்றால், நான் காத்திருக்கிறேன். கம்யூனிசம் குறித்து கொஞ்சமாவது கற்று வாருங்கள்.

  நன்றி.

 5. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! உங்களுடைய நினைப்பு, நீங்கள் பெரிய அறிவாளி நாங்கள் அத்துனை பேரும் அறிவில்லாத முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? கமுயூனிசம் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியும். முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள். நாங்கள் ஆரம்பத்திலிருந்து சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் கண்ணியமாக விவாதம் செய்ய வந்து இருக்கின்றோம். அதை மறந்து உசுப்பேற்றுவது போல் விவாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். உங்களுக்குக் கூடத்தான் இறைவேதமாம் திருக்குர்ஆன் குறித்து ஒன்றுமே தெரியவில்லை. அதுக்காக நாங்கள் இப்படி எழுதினோமா? எல்லோரும் எல்லாவற்றையும் தெரிந்துக் கொண்டிருக்க முடியாது. உங்களுக்கு கம்யூனிசம் பற்றி 100 சதவீதம் தெரியுமா? எனவே சகோ. இளக்காரமாய் பார்ப்பதை விட்டுவிட்டு கண்ணியமான முறையில் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். நாங்கள் எழுதியதில் ஏதாவது தப்பு இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அதை விட்டுவிட்டு உங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள வேண்டாம். நாங்கள் கேட்ட கேள்விக்கு பதில் எழுதுங்கள். நாங்கள் விவாதத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தயாராக நிறைய கேள்விகளை ரெடி பண்ணி வைத்துள்ளோம். தப்பித்து ஓட நினைக்க வேண்டாம். இன்ஷா அல்லாஹ் நாங்கள் உங்களை வென்றுக் காட்டுவோம்.
  இதை கமாண்ட் செய்த நாள்: 13/02/2017 3.15 p.m

 6. நண்பர் நிஜாமுத்தின்,

  உணர்ச்சிவயப்படாமல் இந்த விடயத்தை அணுகவேண்டும் என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். பொருளாதார விவகாரங்களில் இஸ்லாமிய நிலைப்பாடா, கம்யூனிச நிலைப்பாடா எது சரியானது என்பது நம்முடைய விவாதம். இதில் என்னுடைய வாதம் உங்களுக்கு புரியாது எனும் போது இந்த விவாதமே கேள்விக்குறியாகி விடுகிறது அல்லவா? இதை எப்படி சரி செய்வது?

  இஸ்லாம் குறித்தும், குரான் குறித்தும் எனக்குத் தெரியவில்லை என நீங்கள் குறிப்பிடுவது உங்களுடைய யூகம். இந்தத் தளத்தில் இஸ்லாம் குறித்து பல தலைப்புகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளேன். இஸ்லாம் குறித்தும், குரான் குறித்து தெரியாமல் அவ்வாறு எழுத முடியாது. கம்யூனிசம் குறித்து நீங்கள் தெரியாமல் எழுதியிருக்கிறீர்கள் என்று நான் கூறுவது யூகமல்ல. நீங்கள் எழுதியிருப்பதன் அடிப்படையிலேயே அவ்வாறு கூறியுள்ளேன். உற்பத்தி முறை என்பது கம்யூனிசத்தின் அடிப்படையான ஒன்று. கம்யூனிசத்தின் அடிப்படையான கோட்பாட்டை கூட தெரிந்திருக்காமல் கம்யூனிசத்தைவிட இஸ்லாம் சிறந்தது என நீங்கள் கூறினால் அது வறட்டுவாதமாகத் தான் இருக்கும்.

  இப்படி வறட்டுவாதம் புரிவாதால் என்ன பலன் என்பது தான் என்னுடைய கேள்வி. ஆனால் நீங்களோ நான் தப்பித்து ஓடுவதாய் பாவித்துக் கொண்டு பேசுகிறீர்கள்.

  ஆகவே, உணர்ச்சிவயப்படாமல், அறிவுவயப்பட்டு இதை மீளாய்வு செய்து கூறுங்கள். இந்த விவாதம் தொடர வேண்டுமா? தொடரவேண்டும் என்றால் இஸ்லாம் குறித்து உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ கம்யூனிசம் குறித்து குறைந்த பட்சம் நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

  நன்றி

 7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! எங்களுக்கு அறிவுறை சொல்லும் முன் கொஞ்சம் உங்கள் முதுகை திரும்பிப் பாருங்கள். ஆரம்பத்திலிருந்தே விவாதம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இழுத்துப் பிடித்து விவாதம் செய்ய வைத்திருக்கின்றோம். இப்போது உற்பத்தி முறை என்று சொல்லி எங்களிடம் கமுயுனிசம் கற்றுவிட்டு வாருங்கள் என்று சொல்லுகின்றீர்கள். எந்த யுனிவர்சிட்டியில் சட்டிபிகேட் வாங்கி வந்தால் ஒப்புக் கொள்வீர்கள். எங்களுடைய விவாதத்தில் என்ன குறை இருந்திருக்கிறது என்பது இன்னும் சொல்லவில்லை நீங்கள். ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் என்று பழமொழி சொல்லுவார்கள் எங்கள் ஊரில். நீங்கள் சொல்லுவதும் அது போலத்தான் இருக்கிறது. ஒழுங்காக விவாதம் செய்வதாக இருந்தால் செய்யுங்கள், இல்லையென்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு எங்கள் மார்க்கத்துக்கு எதிராக நீங்கள் கிருக்கி வைத்துள்ள குப்பை போஸ்ட்களை அழித்து விடுங்கள். அதை விட்டுவிட்டு அறிவுறை சொல்ல வேண்டாம்.
  இதை கமாண்ட் செய்த நாள்: 18/02/2017 4.30 p.m

 8. நண்பர் நிஜாமுத்தின்,

  இந்த விடயத்தில் உணர்ச்சிவயப்படாமல் அறிவுவயப்பட்டு அணுக வேண்டும் என மீண்டும் மீண்டும் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

  நான் விவாதம் வேண்டாம் என்று சொல்லவில்லை. விவாதம் நடத்தினால் அதில் பலன் வேண்டுமா வேண்டாமா என்று கேட்கிறேன். உற்பத்தி முறை என்பது கம்யூனிசத்தின் அடிப்படையான ஒன்று. எடுத்துக்காட்டுக்காக இப்படி வைத்துக் கொள்வோம். ஓரிறை என்பது இஸ்லாத்தின் அடிப்படையான ஒன்று. ஓரிறை என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாமிருவரும் விவாதம் நடத்த முடியுமா? நடத்தினால் அது விவாதமாக இருக்குமா? உங்களுடைய நிலைப்பாட்டை உறுதிபட எடுத்து வைக்க வேண்டும் எனும் உங்கள் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். அதேநேரம் விவாதம் நடத்துவதற்கு ஆர்வம் மட்டும் போதாது என்பதையும் நீங்கள் உணர வேண்டும்.

  கம்யூனிசம் பற்றி கொஞ்சமேனும் தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் கூறுவதன் பொருள். நம்முடைய விவாதம் பொருள் செரிந்ததாக இருக்க வேண்டுமே எனும் விருப்பத்தின் விளைவு தான். கேள்வி பதில் பகுதியில் இதை நீங்கள் கேட்டால் உங்களுக்கு விளங்கும் எல்லை வரை வந்து விளக்க ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால் அதை விவாதம் என்ற பெயரில் செய்ய வேண்டாம் என்று தான் கூறுகிறேன்.

  இங்கு வெற்றி தோல்வி எனும் பிரச்சனையே எழவில்லை. நீங்கள் மீளாய்வு செய்வதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா என்பது தான் பிரச்சனை. நாம் தரவுகளுடன் தான் விவாதம் செய்ய வேண்டும். தரவுகளுடன் கூடிய தர்க்கம் இருக்கலாம். ஆனால் தர்க்கத்தை மட்டுமே கொண்டு விவாதிக்க முடியாது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

  கண்ணியத்துடன் விவாதிக்க விரும்புவதாக கூறிக் கொண்டிருக்கிறீர்கள். தொடக்கத்திலிருந்து நீங்கள் பயன்படுத்தி வந்திருக்கும் சொற்களையும், நான் பயன்படுத்தியிருக்கும் சொற்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நீங்கள் கூறுவது சரியானதாக இருக்கிறது என்றால் உங்கள் சொற்கள் இப்படி வெளிப்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லை.

  இதற்கு மேலும் நீங்கள் விவாதம் நடத்தியே தீர வேண்டும் என பிடிவாதம் செய்தால், நான் இணங்குகிறேன். ஆனால் அந்த இணக்கம் நேரம் வீணாவதை தடுக்கவியலாத ஆற்றாமையிலிருந்தே பிறந்திருக்கும். மீளாய்வு செய்யுங்கள்.

  நன்றி.

 9. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! நீங்கள் என்ன தமிழ் லிட்டரேச்சர் படித்தவரா. இப்படி மடக்கி மடக்கி எழுதி விட்டால் உங்கள் பக்கம் நியாயம் இருக்கின்றது என்று ஆகி விடுமா? ஆரம்பத்தில் இருந்தே நீங்கள் விவாதம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு இருந்திருக்கின்றீர்கள். இப்போது ஒரு சாக்கு கிடைத்தவுடன் அதைப் பிடித்துக் கொண்டு கமுயுனிசம் படித்துக் கொண்டு வா என்று எங்களுக்கு ஆர்டர் போடுக்கின்றீர்கள். பிரச்சனை பண்ணுவது நீங்கள் தான். விவாதம் ஆரம்பித்து விட்டால் கேட்கப்பட்ட கேள்விக்குத்தானே பதில் கூற வேண்டும். அப்படிச் செய்யாமல் இஸ்லாமிய பொருளாதாரமே கிடையாது என்று ஏன் சொல்ல வேண்டும். உங்களைப் போல் மீளாய்வு கீளாய்வு என்றெல்லாம் எங்களுக்கு எழுதத் தெரியாது. அதற்காக எங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும் முடிவு கட்டி விடாதீர்கள். நேர்மையான முறையில் நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நாங்கள் எழுதுகிறோம். உங்களுக்கு வேண்டுமானால் யாருக்கும் பதில் சொல்லும் கடமை இல்லை என நினைக்கலாம். ஆனால் எங்களுக்கு நாங்கள் வாழ்ந்த ஒவ்வொரு நொடிக்கும் மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் கண்ணியமாகவே வாதம் செய்ய விரும்புகின்றோம். உங்கள் வாதங்கள் தான் எரிச்சல்பட வைக்கின்றன. உங்களை பெரிய அறிவாளி போல மற்றவர்கள் எல்லோரும் முட்டாள் போல நினைத்துக் கொள்வதை நிறுத்திவிட்டு முதலில் விவாதம் செய்ய ஆரப்பியுங்கள். மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளலாம். இதை கமாண்ட் செய்த நாள்: 27/02/2017 8.10 p.m

 10. நண்பர் நிஜாமுத்தின்,

  உங்கள் கோணத்தை பரிசீலித்துப் பார்ப்பதற்கோ, என்னுடைய கோணத்தை புரிந்து கொள்வதற்கோ நீங்கள் எந்த முய்ற்சியும் எடுக்கப் போவதில்லை என்பது உங்கள் எழுத்தின் மூலமே தெரிகிறது. மதத்தை அட்டியின்றி ஏற்கும் யாரும் இந்த நிலையை விட்டு மாற முடியாது என்பதை புரிந்து கொள்கிறேன். போகட்டும். நாளை உங்களுக்கு பதிலளிக்கிறேன்.

 11. நண்பர் நிஜாமுத்தின்,

  என்னுடைய கோரிக்கை பரிசீலிக்கப்படாத நிலையிலும், உங்களின் வற்புறுத்தல் காரணமாகவே நான் விவாதத்தை தொடர்கிறேன்.

  \\\முந்திய ஜார் அரசு வாங்கிய கடனகளை வட்டிகளை கமுயூனிச அரசு அமைந்தவுடன் ரத்து செய்து விட்டார்களாம். அதனால் கமுயூனிசம் வட்டியை எதிர்க்கிறதாம். இங்கே எப்போதும் அது தான் நடந்து கொண்டிருக்கின்றது. கருனாநிதி செய்ததை ஜெயலலிதா நீக்குவார், ஜெயலலிதா செய்ததை கருனாநிதி நீக்குவர். இதெல்லாம் கொள்கை முடிவா? வட்டி கூடாது என்று எத்துனை திருக் குர்ஆன் ஆயத்துகள் வேண்டும் உங்களுக்கு? எத்தனை ஹதீஸ்கள் வேண்டும்? அருள்மறையின் போதனைகளைப் போலவோ அல்லது மாநபியின் வழிகாட்டுதலைப் போலவோ உங்கள் காரல் மார்க்சின் ஒரு வாசகத்தை உங்களால் எடுத்துக் காட்ட முடியுமா?/// இது தான் உங்களின் வாதம். ஆனால் நான் கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என்று கேட்டிருந்தேன்.

  மூலதனமோ அல்லது மார்க்சிய ஆசான்களின் நூல்களோ கம்யூனிஸ்டுகளான எங்களுக்கு வேதமல்ல. அதாவது உங்களுக்கு குரானைப் போன்றதல்ல. குரான் நீதிபோதனைகள் சட்டங்களைக் கொண்ட ஒரு நூல். ஆனால் கம்யூனிச நூல்கள் நடப்பு முதலாளித்துவ உலகில் மனிதர்களின் பிரச்சனைகளை அலசி அதற்கான தீர்வுகளை நோக்கி செயல்படச் சொல்பவை. குரானில் வட்டி கூடாது என்று அனேக இடங்களில் கூறப்பட்டுள்ளது. இதே போல் கம்யூனிச நூல்களிலும் எழுதப்பட்டிருந்தால் மட்டுமே வட்டியை கம்யூனிசம் எதிர்க்கிறது என்பதாக புரிந்து கொண்டால் அது தட்டையான புரிதல்.

  கம்யூனிசம் வட்டியை விட லாபக் கோட்பாட்டை முதனமையாகக் கருதுகிறது. அதாவது லாபம் இருக்கும் வரை வ்ட்டியை விலக்கிவிட முடியாது. வட்டியை அறவே நீக்க வேண்டும் என குரான் கூறியிருந்த போதிலும் எந்த இஸ்லாமிய நாட்டிலும் வட்டியை ஒழிக்க முடியவில்லை என்பதே கம்யூனிசத்தின் கூற்று தான் உண்மையானது என்பதற்கு நிரூபணம். தனியுடமை ஒழியும் வரை லாபத்தை ஒழிக்க முடியாது. லாபத்தை ஒழிக்கும் வரை வட்டியை ஒழிக்க முடியாது. எனவே தான் கம்யூனிசம் தனியுடமை ஒழிப்பை முதன்மையாகக் கொண்டிருக்கிறது. இஸ்லாம் விளைவை கண்டித்து விட்டு வினைய ஆதரிக்கிறது. அதனால் தான் இஸ்லாத்தால் வட்டியை ஒழிக்க முடியவில்லை.

  இதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வட்டி கொடுமையானது தான். மறுக்கவில்லை. ஆனால் கொடுமையான அந்த வட்டியை சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றால் தனியுடமையையும் லாபத்தையும் ஒழிக்க வேண்டும். அதைத்தான் கம்யூனிசம் செய்திருக்கிறது. ஆனால் குரான் வட்டியை கூடாது என்று சொல்கிறதே தவிர அதை ஒழிக்கும் எந்த நடவடிக்கையையும் குரானோ இஸ்லாமோ மேற்கொள்ளவில்லை.

  ஆகவே குரானில் கூறப்பட்டிருக்கும் நீதி போதனையை மட்டும் வைத்துக் கொண்டு இஸ்லாம் வட்டியை எதிர்க்கிறது என்று கூறுவது தவறு. அதேபோல் குரானைப் போல் கம்யூனிச நூல்களில் நேரடியாக கூறவில்லை என்பதால் கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்று கூறுவதும் தவறு.

 12. நண்பர் நிஜாமுத்தின்,

  இருக்கிறீர்களா? 10 நாட்களைக் கடந்து விட்டன.

 13. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! முதலில் பதில் எழுத லேட்டானதுக்கு எங்களுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். சகோ செங்கொடிக்கு மட்டுமல்ல, இதை படித்துக் கொண்டிருந்த அத்துனை பேருக்கும் எங்களுடைய மன்னிப்பை தெரியப்படுத்திக் கொள்ளுகின்றோம். எங்களுடைய ஜமாஅத்தில் சிலர் இப்படி விவாதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். இப்படி பதிலுக்கு பதில் எழுதுவதினால் இஸ்லாத்தைப் பற்றி புரியாமல் தப்பும் தவறுமாய் எழுதுகிறவர்களுக்கு விளம்பரம் செய்து அவர்களை வளர்த்து விட வேண்டாம் என்று கூறினார்கள். நாங்கள் நிதானமாய் எடுத்துச் சொல்லி அவர்களை சம்மதிக்க வைத்திருக்கின்றோம். அது தான் இத்துனை காலதாமதம் ஆகி விட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் எங்களின் பதில் போஸ்ட் செய்கிறோம். வஸ்ஸலாம்.

 14. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! இஸ்லாமிய பொருளாதாரமா கமுயுனிச பொருளாதாரமா என்று சொல்லக்கூடிய இந்த விவாதத்தில் வட்டி பற்றி விவாதம் செய்துக் கொண்டிருக்கின்றோம். இஸ்லாம் வட்டியை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பதை திருக்குர்ஆன் மூலமாகவும், ஹதீஸ் கிதாபுகள் ,மூலமும் தெரிந்து கொள்ளலாம். இதை யார் வேண்டுமென்றாலும் படித்துப் பார்த்து செக் செய்து கொள்ள முடியும். கமுயுனிசம் வட்டியை எதிக்கின்றது என்பதை எப்படி செக் செய்வது. நீங்கள் கூறுவது போலத்தான் கம்யூனிசமும் கூறுகிறது என்பதற்கு என்ன ஆதாரம்? எந்த ஒரு கமுயுனிச நாட்டிலும் வட்டி தடை செய்யப்படவில்லை. வட்டி பற்றி கமுயுனிச நூல்களில் ஒன்றுமே கூறவில்லை என்றும் நீங்கள் கூறியிருக்கின்றீர்கள். ஆனால் கமுயுனிசம் வட்டியை எதிர்க்கிறது என்றும் கூறுகின்றீர்கள். இது உங்களுக்கே சரியாகப் படுகின்றதா? நீங்கள் தான் கம்யூனிசத்துக்கு அத்தாரிட்டியா? நீங்கள் சொல்வது போல் தான் கமுயுனிசம் சொல்கிறது என்றால் அதற்கான ஆதாரத்தை எடுத்து வையுங்கள். போகிற போக்கில் இஸ்லாத்தால் வட்டியை ஒழிக்க முடியவில்லை என்று சொல்லியிருக்கின்றீர்கள். உங்கள் அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இடம் இது தான். எம்பெருமானார் (ஸல்) அவர்களின் ஆட்சியிலும் அதற்குப் பின் வந்த சஹாபாக்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி) ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் வட்டி இருந்தது என்று உங்களால சுட்டிக் காட்ட முடியுமா? பின் எதை வைத்து இஸ்லாத்தால் வட்டியை ஒழிக்க முடியவில்லை என்று கூறுகின்றீர்கள். நீங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் தவறுகள் இஸ்லாத்தின் தவறுகள் ஆகாது. காழ்ப்புணர்ச்சியோடு எழுதுவதை விட்டுவிட்டு ஆதாரபூர்வமாக எழுதுங்கள். இதை கமாண்ட் செய்த நாள்: 21/04/2017 5.50 p.m

 15. நண்பர் நிஜாமுத்தின்,

  கம்யூனிசம் குறித்து அதன் அடிப்படைகளை மட்டிலுமாவது தெரிந்து கொள்ளுங்கள் என்று கோரினால் அதனை உங்களின் மீதான தனிப்பட்ட தாக்குதலாக எடுத்துக் கொள்கிறீர்கள். இப்போது நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் கம்யூனிசம் குறித்து உங்களுக்கு கொஞ்சமும் தெரியாது என்பதை உறுதிப்படுத்துகிறது. அப்படி கொஞ்சமும் தெரியாத ஒன்றைப் பற்றி நான் உங்களோடு விவாதித்துக் கொண்டிருக்கிறேன். என்னை எவ்வளவு கடினமான பணிக்குள் தள்ளியிருக்கிறீகள் என்பது புரிகிறதா?

  கம்யூனிசத்துக்கு ஒரு இலக்கு இருக்கிறது. மக்களை அனைத்து வித சுரண்டல்களிலும் இருந்து விடுவித்து இதுவரை மனித குலம் பயணித்திராத மகோன்னதமான நிலையில் வாழவைப்பது என்பது தான் அந்த இலக்கு. இந்த இலக்கை அடைவதற்கு உற்பத்தி முறையை மாற்றியமைப்பது எனும் திட்டத்தை கொண்டிருக்கிறது, இந்த உற்பத்தி முறையை மாற்றியமைப்பது என்பது வரலாற்று வழியில் ஆராய்ந்து அறியப்பட்ட புதிய கண்டுபிடிப்பாகும். அதனால் தான் கம்யூனிசம் என்பது சமூக அறிவியல் எனப்படுகிறது. ஆக, கம்யூனிசம் எனும் சமூக அறிவியல் ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி பொதுவுடமை எனும் ராஜபாட்டையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த இலக்கோடு, அதன் ராஜபாட்டையோடு ஒப்பிடுகையில் வட்டி என்பது ஒப்பிடத்தக்க அளவுடையதல்ல. வட்டியை விட அதிக உயரத்திலுள்ள தனியுடமை, லாபக் கோட்பாடு ஆகியவற்றுடன் கம்யூனிசம் பொருதிக் கொண்டிருக்கிறது. எனவே, வட்டி குறித்து குரானில் எந்தப்படியான நீதிபோதனைகளை செய்யப்பட்டிருக்கிறதோ அதே மாதிரியான நீதி போதனைகள் செய்திருந்தால் மட்டுமே கம்யூனிசம் வட்டியை ஒழிக்க விரும்புவதாய் பொருள்படும் என எண்ணுவது அறியாமை.

  மட்டுமல்லாது இன்னொரு கோணமும் இதில் இருக்கிறது. கம்யூனிசம் உயர்ந்த இலக்கை வைத்திருக்கிறது அதனால் வட்டியை தடை செய்வது குறித்து நேரடியாக விவாதிக்கவில்லை எனக் கருதி விடக் கூடாது. வட்டியை தவிர்க்க முடியாது என்றும் கம்யூனிசம் முன்வைக்கிறது. லாபக் கோட்பாடும், தனியுடமையும் நீடிக்கும் வரை வட்டியை ஒழிக்க முடியாது என்று உறுதியாக நிலைப்படுகிறது. தனியுடமையையும் லாபக் கோட்பாட்டையும் பாதுகாத்து வைத்துக் கொண்டு வட்டியை மட்டும் ஒழிக்க முயல்வது அநீதியானதும் கூட. கம்யூனிசம் எந்த மக்களை கைதூக்கி விட எண்ணுகிறதோ அந்த உழைக்கும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்று தான் தனியுடமையை தக்கவைத்துக் கொண்டு வட்டியை ஒழிப்பது என்பது. எனவே தான் குரானைப் போல் கம்யூனிசம் வறட்டு நீதி போதனைகள் செய்யவில்லை. நீங்களும் அந்த வறட்டு நீதிபோதனைகளை விட்டு வெளியே வாருங்கள்.

  இன்னொரு கேள்வியையும் உங்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கம்யூனிசம் வட்டியை ஆதரிக்கிறது என்பதை எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்? இதையும் சேர்த்துக் கூறினால் தான் உங்களின் வட்டி குறித்த கருத்துகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.

  இஸ்லாம் வட்டியை ஒழித்து விட்டதா? முடியவில்லை என்பதற்குத்தான் ஏற்கனவே சௌதி அரேபிய எடுத்துக்காட்டை கூறியிருந்தேன். உடனே அதை தனி மனித தவறு இஸ்லாத்தில் தவறு இல்லை என கூற முற்படாதீர்கள். நான் இரண்டு முனைகளையுமே எடுத்துக் காட்ட விரும்புகிறேன். சௌதி அரேபியா என்பது இஸ்லாத்தை விட்டு விலகி நிற்கும் நாடல்ல. முகம்மது அறிவித்ததிலிருந்து இன்று வரை இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாடு. 1400 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டினால் வட்டியை தவிர்க்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன? அல்லது வட்டியை அறவே ஒழித்துக்கட்டி விட்ட ஒற்றை இஸ்லாமிய நாட்டை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா? இன்று எத்தனையோ இஸ்லாமியர்கள் வட்டித் தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை உங்களாலும் மறுக்க முடியாது. அது மட்டுமல்ல நீங்கள் விதந்தோதும் முகம்மது கூட தன்னுடைய கவச ஆடைகளை யூதர் ஒருவரிடம் அடைமானம் வைத்து கடன் வாங்கியவர் தான். அடைமானக் கடன் வட்டியில் சேராது என்பீர்களோ! பண்டமாற்றுக் காலத்தின் வட்டி தான் அடைமானம், பணமாற்று காலத்தின் அடைமானம் தான் வட்டி.

  இஸ்லாம் கூறும் வட்டிக் கொள்கை முரண்பாடானது என்பதை தொடக்கத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கிறேன். இஸ்லாத்தின் வட்டி குறித்து எனக்கு தீர்க்கமான ஒரு பார்வை உண்டு. உங்களுக்கு இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. இஸ்லாத்தில் கூறப்படும் வட்டி குறித்த சொல்லாடல்கள் வெற்றுக் கூச்சல்கள் தானேயன்றி செயல்பாட்டுக்குறியன அல்ல. ஏனென்றால் அது முழுமையில்லாதது. இஸ்லாமிய வங்கி, வட்டியில்லாத வங்கி என விதந்தோதப்படும் வங்கி முறையின் இயக்கமே, கார்ல் மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிட்டிருக்கும் வட்டி பற்றிய வரையறையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது.

  ஆகவே, இஸ்லாத்தால் வட்டியை ஒழிக்க முடியாது என்று கூறியிருப்பது போகிற போக்கில் கூறப்பட்டதல்ல. இஸ்லாம் அதன் தத்துவம் நடைமுறை ஆகிய இரண்டு முனைகளிலும் தோல்வியடைந்திருக்கிறது என்பதை உணர்ந்து கூறப்பட்டிருக்கிறது.

  நண்பரே, மீண்டும் குரானில் கூறப்பட்டிருப்பது போல் கூறவில்லை என்று வாதிடாமல் என்ன வாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்கி உங்கள் வாதங்களை எடுத்து வைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

 16. பதில் எழுத தாமதமானதற்கு வருந்துகிறேன். வெளிப்படையாகச் சொன்னால் எழுத வேண்டுமா என யோசித்தேன். புறக்கணித்தது போல் ஆகக் கூடாது என்பதால் பதில் எழுதி இருக்கிறேன். ஏற்கனவே கூறியிருந்தபடி இனி மூன்று நாட்களுக்குள் உங்களுக்கான பதில் கிடைக்கும்.
  நன்றி.

 17. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

  சகோதரர் செங்கொடி அவர்களே! எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரியே எழுதியிருக்கின்றீர்கள். கமுயுனிசத்தைப் பத்தி உங்களுக்கு எத்துனை தெரியும் என்று எங்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் எங்கள் மார்க்கம் குறித்து உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிகின்றது. அடமானமும் வட்டியும் ஒன்று என்று சொல்லியிருக்கின்றீர்களே அது ஒன்றே போதும் உங்களுக்கு எந்த அளவுக்கு உலக ஞானம் இருக்கின்றது என்று எங்களுக்கு புரிந்து விட்டது. இப்படி ஸீரோ வாக இருக்கும் நீங்கள் தான் எங்களைப் பார்த்து ஒன்றும் தெரியாது என்று சொல்லியிருக்கின்றீர்கள். கமூயுனிசம் உயர்ந்த லட்சியங்களுக்காக போராடுகின்றதாம். இருந்து விட்டுப் போகட்டும் அதனால் என்ன? இங்கு நாம் வட்டி பத்தி விவாதம் நடத்திக் கொண்டு இருக்கின்றோம். நாங்கள் கேட்டது ஒரே ஒரு கேள்வி, கமூயுனிசம் வட்டியை தடுக்கிறதா இல்லையா? ஒரே வரியில் பதில் சொல்லி விடலாம். ஆனால் அப்படி சொல்ல முடியாது என்பதற்காக காதைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் என்னவெல்லாமோ எழுதியிருக்கின்றீர்கள். ஒரே ஒரு கேள்வியிலேயே கமுயுனிசம் மண்ணைக் கவ்வி விட்டது. அடுத்ததாக வட்டியை ஒழிக்க முடியாது, இஸ்லாம் தோற்றுவிட்டது (நவூதுபில்லாஹ்) என்றெல்லாம் பிதற்றி இருக்கிறீர்கள். சௌதி அரேபியா தான் இஸ்லாத்தின் அத்தாரிட்டி என்று யாராவது உங்களிடம் கூறினார்களா? இஸ்லாத்தின் அத்தாரிடி திருக்குர்ஆனும் சுன்னாவும் தான். திருக்குர்ஆனிலும், சஹீஹான ஹதீஸ் கிரந்தங்களிலும் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அது தான் இஸ்லாத்தின் அடையாளம். சௌதி அரேபியாவால் வட்டியை ஒழிக்க முடியவில்லை என்றால் அது இஸ்லாத்தின் குறைபாடு இல்லை. அடுத்ததாக திருக்குர்ஆனில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் வெற்றுக் கூச்சல்கள் (எல்லாம் வல்ல நாயனிடம் பிழை பொருக்க வேண்டுகிறேன்) என்று எழுதியிருக்கின்றீர்கள் (ஆண்டவன் உங்களை மன்னிப்பானாக) திருக்குர்ஆனின் வசனங்கள் செயல்பாட்டுக்கு தூண்டவில்லை என்றால் வேறு எதுவாவது ஒரு மனிதனை செயல்பாட்டுக்குத் தூண்ட முடியுமா. இறைவேதம் அனைத்தையும் பிரித்தறிவிக்கின்றது. ஏற்றுக் கொள்பவர்கள் சுவனாதிபதிகளாக திளைப்பார்கள், மறுப்பவர்கள் நரகத்தில் எரியும் நெருப்புக்கு விறகாக்கப்படுவார்கள். நீங்கள் நரக நெருப்புக்கு விறகாகாமல் இருக்க வேண்டுமென்றால் இவ்வுலகில் செயல்பட்டே ஆகவேண்டும். வட்டி வாங்காதே என்றால் வாங்கக் கூடாது. அப்படித்தான் இஸ்லாம் எங்களை பண்படுத்தியிருக்கின்றது. அதை மீறி செயல்படுகின்றவர்களை எல்லாம் முஸ்லீம் எனும் கண்ணியத்துக்குள் அடங்க மாட்டார்கள். அவர்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள். அடுத்ததாக அடமானமும் வட்டியும் ஒன்று என்று எழுதியிருக்கின்றீர்கள். நீங்களா இப்படி எழுதியிருக்கின்றீர்கள் என்று ஆச்சரியமாக இருக்கின்றது. அடமானமும் வட்டியும் ஒன்றல்ல. கோடி கோடியாய் குவித்து வைத்திருந்தாலும் சோற்றைத்தான் சாப்பிட முடியும் பணத்தை சாப்பிட முடியாது. அது போலத்தான் பணத்தை சாப்பிடாதீர்கள் என்று எங்கள் வேதம் சொல்கிறது. ஆனால் அடமானத்துக்கு அனுமதி இருக்கிறது. நீங்கள் அடமானமாக பெற்ற ஆட்டின் பாலை அருந்தலாம் என எம்பெருமானார் எங்களுக்கு வழிகாட்டி இருக்கின்றார்கள். வட்டிக்கும் அடமானத்துக்கும் உள்ள இந்த முக்கியமான வித்தியாசத்தை நீங்கள் உணரவில்லையா? வட்டி என்பது வெறும் பணம், அடமானம் என்பது பொருள். பொருள் என்றால் அதற்கு உள்ளே உழைப்பு அடங்கி இருக்கின்றது என்று அர்த்தம். மூச்சுக்கு முன்னூரு தரம் உழைப்பு உழைப்பு என்று கூவும் கமூயுனிஸ்டான உங்களுக்கு இஸ்லாம் உழைப்பை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி இருக்கிறது என்பது புரியவில்லையா? அல்லது புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறீர்களா? விஷயங்களை நீங்கள் இன்னும் ஆழமாக விளங்கிக் கொள்ள வேண்டும். வட்டி என்பது எவ்வளவு கொடுமையானது என்பதை நீங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அவ்வளவு கொடுமையான வட்டியை தடுக்க வேண்டுமா வேண்டாமா. தடுக்க வேண்டும் என்றால் அதை வாங்காதீர்கள் என்று சொல்ல வேண்டுமா வேண்டாமா. அதை விட்டுவிட்டு நாங்கள் தனி உடமையை ஒழிக்கப் போகிறோம் அது தான் உயர்ந்த லட்சியம், அந்த உயர்ந்த லட்சியத்தை அடையும் வரை வட்டி எனும் கொடுமையை நீங்கள் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்றால் அது போகாத ஊருக்கு இல்லாத வழியை காட்டுவது மாதிரியானது. எனவே நேர்வழியான இஸ்லாத்தின் பக்கம் வாருங்கள். உங்களைப் போல குறைகூற முயற்சி செய்தவர்கள் எல்லோரும் கடைசியில் உண்மை மார்க்கத்தில் வந்து தான் அடைக்கலம் தேடி இருக்கிறார்கள். இன்ஷா அல்லாஹ் நீங்களும் வருவீர்கள். இதை கமாண்ட் செய்த நாள்: 08/05/2017 4.10 p.m

 18. செங்கொடிக்கு,
  தற்போதைய விவாதத்தை படித்தேன். விவாதப் பொருளை முதலில் தேர்ந்தெடுத்தது யார்? என்று தெரியவில்லை. விவாதப் பொருளே தவறு என்பதை, தாங்கள் பின்னால் தெரிந்துக் கொண்டு சரி செய்ய முயன்றீர்கள். அதற்கு அவர்கள் இடமளிக்கவில்லை. இது முதல் கோணல்.
  எனக்குத் தெரிந்து, இஸ்லாமிய பொருளாதாரம் என்ற ஒன்று ஒரு பொருளாதாரக் கோட்பாட்டளவில் இன்னும் உருவாகவில்லை. நிலப்பிரபுத்துவமும், முலாளித்துவமும், புதிய பேராதிக்கமும் (உங்கள் வார்த்தைகளில் நவ காலனியாதிக்கம்) கலந்து, இஸ்லாமிய நாடுகளில் நிலவும் பொருளாதார முறையை, இஸ்லாமிய பொருளாதாரம் என்று சிலர் கூறலாம். அதற்கு பொதுவான வரையறை எதுவும் இல்லை. வரையறை இல்லாத விசயம் பற்றி விவாதம் நடத்தினால் அது வழவழா, கொழ கொழாவாகத்தான் இருக்கும்.
  இது போலவே கம்யூனிசப் பொருளாதாரம் என்பதும், அதன் அர்த்தத்தில் இப்போது வரையறை செய்ய முடியாதது. இப்பாது மார்க்சியர்களால்/கம்யூனிஸ்ட்களால் வரையறக்கப் பட்டு மாறி வருவது மார்க்சீய சோசலிசப் பொருளாதாரமே. அதுவும் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துக்குப் பின் ஒரு தெளிவான வரையறையில் இல்லை.
  இந்நிலையில் மேற்கண்ட தலைப்பில் நடத்தப் படும் விவாதம், எந்த சிறந்த பயனையும் தரப்போவதில்லை. இருதரப்பினரிடமும் சிறந்த புதிய சிந்தனை வரப்போவதில்லை. சில சிந்தனையாளர்களுக்கு பயனுள்ள பொழுதுப் போக்காக அமையலாம்.
  இவ்விவாதம் சிறிதாவது பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், வட்டி பற்றிய விசயத்தை அடுத்த ஒரே வாய்ப்பில் முடித்து விட்டு, மக்களை வேகமாக முன்னேற்றுவது இஸ்லாமியமா? மார்க்சீயமா? என்ற தலைப்பில் விவாதியுங்கள்.
  இத்தலைப்பிலான விவாதமும் வழவழாவாக அமையாமல் இருக்க வேண்டுமானால், முன்று முக்கிய உப தலப்புகளாக பிரித்துக் கொண்டு விவாதிக்க வேண்டும்.
  1. மக்களின் பொருளாதார
  முன்னேற்றம்.
  2. மக்களின் அதிகாரப் பங்கெடுப்பில்
  முன்னேற்றம்.
  3. மக்களின் உரிமைகள், கல்வி,
  கலாச்சாரம் மற்றும் சமூக
  அமைதியில் முன்னேற்றம்.
  மேற்கண்டவற்றைத் தான் பெரும் பான்மை மக்கள் உடனடியாக விரும்புவது, எதிர் பார்ப்பது. இவற்றில் முன்னேற்றத்தை இராமரோ, இராவணரோ, மார்க்சோ, நபிகளோ யார் கொடுத்தால் என்ன?. யாருடைய சிந்தனைகளால் மக்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்க முடியும் என்பதை பாமரனுக்கும் புரியும் வண்ணம் விளக்க பயனுள்ள விவாதம் நடத்துங்கள்.
  இத்தகைய விவாதம் நடத்துபவர்களில் ஒப்பீட்டளவில் திரு. நிஜாமுத்தீன் சிறந்த நாகரீகம் மிக்கவராகவே தெரிகிறார். எனவே இந்த விவாதத்தால் எந்தக் கெடுதலும் வரப்போவதில்லை. எனினும் இருதரப்பினரிடமும் பெரிய மாறுதலும் ஏற்படப் போவதில்லை. ஆனால் எத்தரப்போடும் அமைப்பு ரீதியாக ஆழ்ந்த பிணைப்பு இல்லாதவர்களிடம், இவ்விவாதம் நல்ல சிறந்த, புரிதல்களை ஏற்படுத்தலாம்.

 19. அன்பர் நிஜாமுத்தீனுக்கு,
  தாங்கள் இந்த வாதத்தில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டலாம் என்றுக் கூறியுள்ளதால் எனதுக் கருத்தினை தெரிவிக்கிறேன்.
  பண்டமாற்றுக் காலத்தில் அடமானம் தான் வட்டி என்ற செங்கொடியின் கருத்து ஏற்புடயதல்ல. ஏனெனில் அது விதிவிலக்கான ஒன்று. விதி விலக்கான ஒன்றை விதி போன்று குறிப்பிடுவது விவாதத்தில் குழப்பத்தையே ஏற்படுத்தும். அடமானம் பெரும்பாலும் வட்டியாகாது. செங்கொடி கவனக் குறைவாக குறிப்பிட்டு இருக்கலாம். அதாவது அடமானப் பொருளின் பயன் மதிப்பே வட்டி என்பதே சரியானது. இவ்விசயத்தில் நீங்கள் குறிப்பிட்டது சரிதான்.
  அதேசமயம் ஒரு அடமானப் பொருளை மீட்கப் முடியாாமல் அடமானம் வைத்தவர் விட்டுவிடும் போது, அடமானம் பெற்றவர், அடமானப் பொருளின் மதிப்பில் இருந்து, அவர் கொடுத்த கடன் தொகையை கழித்துக் கொண்டு, மீதி மதிப்பை திருப்பிக் கொடுக்காத போது, அங்கு அடமானப் பொருளின் ஒரு பகுதியை வட்டியாகவே கருத முடியும்.
  நபிகள் நாயகம் அடமானமாகப் பெறும் ஆட்டின் பாலை குடிக்கலாம் என்று கூறியது சரிதான், அதுதான் நடைமுறையில் நடக்கும். ஆட்டை பட்டினி போட்டு பால் சுரக்காமல் தடுக்க முடியாது. நீங்கள் பாலை வட்டியாக பார்க்கவில்லை பொருளாக பார்க்கிறீர்கள், அதில் உழைப்பு இருக்கிறது என்கிறீர்கள். அருமையான வாதம். ஆனால் பொருளாதார விதிகளின் படி பார்த்தால் அல்லது தர்க்க அறிவியல் படி புதிய விதிகளை வகுத்துப் பார்த்தால், பாலின் மதிப்பில், அதைப் பெற செலுத்திய உழைப்பு மற்றும் ஆட்டுக்கு கொடுத்த உணவின் மதிப்பைக் கழித்து மீதம் வருவதை வட்டி என்றே கருத வேண்டும்.
  நீங்கள் இருவரும் இது போன்ற விசயங்கள் பற்றி தெளிவாக புரிந்துக் கொள்ளவும், பிறருக்கு விளக்கவும் வேண்டுமானால், முதலில் வட்டி என்றால் என்ன? என்ற வட்டி பற்றிய அரிச்சுவடியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.
  அடுத்து வட்டியைப் போன்றே கொடுமையான, சுரண்டலின் கிளைகளான, மறைமுக வடிவங்களான வாடகை, வாரம், வரி, கிஸ்தி, தண்டம் போன்ற எல்லா சமூகத் தீமைகளையும் ஒழிப்பது பற்றி ஒவ்வொன்றாக அடிப்படையில் இருந்தே விவாதிக்க வேண்டியது வரும்.
  நீங்கள் இருவரும் நவீன பொருளாதார நிபுணராக இருக்க வாய்ப்பில்லை. நானும் நிபுணனல்ல. படிக்கும் பலரும் அப்படித்தான் இருப்பார்கள். எனவே இவ்விசயத்திலேயே இருவரும் உழன்றுக் கொண்டிருப்பது விவேகமான விவாதமாகாது.
  ஏனெனில் இருவருமே வட்டி கெடுதலானது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் அதனை ஒழிப்பது பற்றிய நடவடிக்கைகள் சம்பந்தமாக வேறுபடுகிறீர்கள். அவ்வளவுதான்.
  இஸ்லாம் குரானில் வெளிப்படையாக, திட்ட வட்டமாக வட்டியை தடை செய்கிறது. இதனால் மக்களுக்கு பொருளாதார நன்மை கிடைக்கிறது இது இஸ்லாமியத்தின் சிறப்பு என்பதே வாதம். இது இஸ்லாமியத்தின் சிறப்புகளில் ஒன்று என்று கருதுவதில் கருத்து வேறு பாடு எதற்கு? அதனால் என்ன பயன்?. செங்கொடி இதனை சமரசம் என்று கருதுவாரானால் அது தவறான கருத்தாகும். மார்க்சீயர்களும், நபிகளும் தற்கால/இடைக்கால சமரசங்களை செய்துள்ளனர், அது தவிர்க்க முடியாதது, சரியானது. அடிப்படை விசயங்களில் நிரந்தரமாக சமரசம் செய்து கொள்வதே தவறாகும்.
  மார்க்சீயம் வட்டி, வாடகை, வாரம், வரி போன்றவை எல்லாம் சுரண்டல் எனும் ஆணி வேரிலிருந்து முளைத்த மரத்தின் சிறு சிறு கிளைகள் என்று கருதுகிறது. ஆணி வேரை அறுத்து விட்டால் வட்டி வாடகை போன்ற எல்லா கிளைகளும் தானாக வாடி வதங்கி விடும் அல்லது எளிதாக வெட்டி வீழ்த்தி விடலாம் என்று கருதுகிறது. எனவே வட்டி குறித்து அதிக அக்கரை செலுத்தவில்லை, செலுத்தினாலும் வெற்றி பெற முடியாது என்பதே மார்க்சீயர்களின் நிலை என்றே கருதுகிறேன்.
  நீங்கள் இருவரும் எங்கு சுற்றி சுற்றி வந்தாலும், இவ்விசயத்தில் இறுதிவரை இதே நிலையிலேயே இருப்பீர்கள். இறுதியில் நான் மேற்சொன்ன நிலை பாட்டுக்குத்தான் வருவீர்கள் என்றே கணிக்கிறேன்.
  எனவே இது சம்பந்தமாக இருவரும் தங்கள் இறுதி கருத்தை தெரிவித்து விட்டு, இதைவிட முக்கிய விசயங்களில் ஆரோக்கியமான விவாதத்துக்கு செல்லுங்கள். முடிவுகளை படிப்பவர்கள் எடுக்கட்டும். உங்கள் கருத்துக்களை படித்து பொறுமையிழந்து, விவாதம் ஆரோக்கியமாக செல்ல வேண்டுமென்றே கருத்து தெரிவித்தேன். இனி உங்கள் விவாதம் முடியும் வரை கருத்து தெரிவிக்க மாட்டேன். குறுக்கீட்டுக்கு வருந்துகிறேன்.

 20. நண்பர் நிஜாமுத்தின்,

  மீண்டும் மீண்டும் நான் உங்களிடம் கோருவது, என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை உள்வாங்குங்கள் என்பதைத் தான். நான் எளிமையாக மீண்டும் கூறுகிறேன்.

  கம்யூனிசம் வட்டியை தடை செய்யச் சொல்லியிருக்கிறதா? இல்லை. குரான் கூறுவது போல் கம்யூனிசம் கூறவில்லை. ஏனென்றால் கம்யூனிசம் தனியுடமை ஒழியும் வரை வட்டி ஒழியாது என தெளிவாக சுட்டிக் காட்டுகிறது. இதில் உங்களுக்கு மறுப்பு இருக்கிறதா? இருந்தால் கூறுங்கள் அதை விவாதிக்கலாம். வட்டி கொடுமையாதா? என்றால் ஆம் கொடுமையானது தான். மறுக்கவில்லை. ஆனால் லாபக் கோட்பாடு கொடுமையானது இல்லையா? அது குறித்த உங்கள் கருத்து என்ன? அதையும் கூறினால் தானே அது விவாத நேர்மையாய் இருக்கும். வட்டி கொடுமையானது தான். அதை விட லாபக் கோட்பாடு கொடூரமானது. அதைவிட தனிச் சொத்துடமை மனித இனத்தையே அழிப்பது. இந்த மூன்றில் எதற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பது? எதற்கு இரண்டாம் முக்கியத்துவம் கொடுப்பது? எதற்கு மூன்றாம் முக்கியத்துவம் கொடுப்பது? கம்யூனிசம் முதலில் தனிச் சொத்துடமையையும், இரண்டாவதாக லாபத்தையும், மூன்றாவதாக வட்டியையும் கொள்கிறது. இந்த வரிசைமுறைதான் அறிவியல்பூர்வமாக சரியானது என்கிறேன். இதில் உங்கள் பார்வை என்ன? அதைக் கூறுங்கள். அப்போது தான் எது சரியானது என்று பார்க்க முடியும். மாறாக, வட்டி கொடுமையானது, வட்டி கொடுமையானது, குரானைப் போல் கம்யூனிசம் கூறவில்லை என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருந்தால் அதனால் யாருக்கும் பயனில்லை. எனவே, தெளிவாகக் கூறுங்கள். வட்டி குறித்த உங்களின் ஒட்டு மொத்தப் பார்வையை விவரியுங்கள். அப்போது தான் சரியான புரிதலுக்கு வர முடியும். ஒரு பகுதியை மட்டும் கூறிக் கொண்டிருந்தால் அது முழுமையடையாது.

  வட்டியும் அடைமானமும் வெவ்வேறா? வரலாற்று ரீதியான புரிதல் இதில் வேண்டும். பணம் புழக்கத்துக்கு வருவதற்கு முன்பு பண்ட மாற்று முறை நடைமுறையில் இருந்தது. பண்ட மாற்றுக்கு பொருள் எதுவும் இல்லாத போது, வேறொரு மதிப்புமிக்க பொருளைக் கொடுத்து தேவையானதை வாங்கிக் கொண்டு அதற்கு ஈடான மதிப்பை திருப்பித் தரும் வரை இந்த மதிப்புமிக்க பொருளை நீங்கள் பயன்படுத்த அனுமதிக்கிறேன் என்பது தான் அடைமானம் என்பது. கவனியுங்கள், ஒரு பொருள் அதற்கான விலையாக மாற்றுப் பொருள் இல்லாமல் பெறப்படுகிறது. பின்னர் ஒரு காலத்தில் அதற்கான விலையான மாற்றுப் பொருள் கொடுக்கப்படுகிறது. பொருளை வாங்குவதற்கும், அதற்குறிய விலையான மாற்றுப் பொருளை அடைப்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் வேறொரு மதிப்புமிக்க பொருளின் பயன்பாடு கூடுதலாக தரப்படுகிறது. இந்த கூடுதலாக தரப்படும் பயன்பாட்டுக்கு விலை உண்டா இல்லையா? இதை கூடுதலாக கொடுப்பதற்குப் பெயர் என்ன? இதுவே தான் வட்டியிலும் நடக்கிறது. அடைமானத்தில் பொருளின் பயன்பாடாக இருப்பது வட்டியில் நேரடியாக பணமாக இருக்கிறது அவ்வளவு தான் வித்தியாசம். பொருளில் உழைப்பு கலந்திருக்கிறது அதை இஸ்லாம் கண்ணியப்படுத்தி இருக்கிறது என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள். வேடிக்கை தான். பணத்தில் உழைப்பு இல்லையா? பொருளில் உழைப்பு இருக்கிறது எனவே அதை அடைமானமாக ஏற்றுக் கொள்ளலாம் என இஸ்லாம் கண்ணியப்படுத்தி இருக்கிறது என்றால், பணத்திலும் உழைப்பு இருக்கத்தானே செய்கிறது அதை ஏன் இஸ்லாம் கண்ணியப்படுத்தவில்லை? பொருளாகக் கொடுத்தால் தப்பில்லை. அதையே பணமாக கொடுத்தால் தப்பு என்றால் அதில் என்ன கோட்பாடு இருக்கிறது? தெளிவுபடுத்துங்கள். ஆகவே, மீண்டும் கூறுகிறேன். பண்டமாற்றுக் காலத்தின் வட்டி தான் அடைமானம், பணமாற்று காலத்தின் அடைமானம் தான் வட்டி.

  சௌதி அரேபியா இஸ்லாத்தின் அடையாளமா? இது என்னுடைய கேள்வியை குறுக்குவது போல தெரிகிறது. நான் இப்படி கேட்கவில்லை, \\\சௌதி அரேபியா என்பது இஸ்லாத்தை விட்டு விலகி நிற்கும் நாடல்ல. முகம்மது அறிவித்ததிலிருந்து இன்று வரை இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாடு. 1400 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டால் வட்டியை தவிர்க்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்ன? அல்லது வட்டியை அறவே ஒழித்துக்கட்டி விட்ட ஒற்றை இஸ்லாமிய நாட்டை உங்களால் சுட்டிக் காட்ட முடியுமா?/// சௌதி அரேபியா செய்து விட்டது எனவே அது தான் இஸ்லாம் என்று நான் கூறவில்லை. இவ்வளவு நெடுங்காலம் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றி வரும் ஒரு நாட்டால் கூட வட்டியை தவிரக்க முடியவில்லை என்பதைத்தான் நான் கூறியிருக்கிறேன். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

  எது செயல்படத் தூண்டுவது? சொர்க்கம் நரகம் என்று சொல்லிவிட்டால் அது செயல்படத் தூண்டி விடுமா? அடிப்படைகளை அலசி ஏற்றுக் கொள்ளச் செய்வது மட்டுமே மக்களை செயல்பாட்டுக்குத் தூண்டும். வட்டி ஏன் வாங்கக் கூடாது என்பதற்கு குரானில் என்ன விளக்கம் இருக்கிறது? ஆனால் வட்டி ஏன் தவிரக்க முடியாததாய் இருக்கிறது என்பதற்கு கம்யூனிசத்தில் விளக்கம் இருக்கிறது. அப்படி முழுமையானதும், நுணுக்கமானதுமான புரிதலுக்கு நீங்கள் வந்து விட்டால் இந்த விவாதத்தில் நாம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடலாம். இல்லையென்றால் இந்த இடத்திலேயே தான் சுற்றிக் கொண்டிருப்போம்.

 21. தோழர் செங்கொடி அவர்களே,

  நான் என் அறிவைப் பயன்படுத்தி, முழுமையாக நம்பி ஏற்றுக்கொண்டது என் மதம். அதன் அடிப்படையையோ, மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு ஒவ்வாத அதன் கொள்கைகளையோ எக்காலத்திலும் நான் ஆய்வுக்கு உட்படுத்த மாட்டேன் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் மதவாதிகளிடம் விவாதம் செய்வதைவிட நேர விரயம் வேறு எதுவும் இருந்துவிடலாகாது. இந்த விவாதத்தில், நீங்கள் இருவரும் எதிரெதிர் திசையில் போய் கொண்டிருக்கிறீர்கள் என்பது நன்றாகவே தெரிகிறது. நீங்கள் சொல்வ‍தை உங்களின் எதிராளி கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்க தயாரில்லை. எனவே, உங்களின் மதிப்பு வாய்ந்த நேரத்தையும், உழைப்பையும் இ‍துபோன்ற மதவாதிகளிடம் விவாதம் செய்து வீணடித்துக்கொள்ள வேண்டாம் என்பதே நான் நட்பு முறையில் உங்களுக்கு வைக்கும் வேண்டுகோள்.

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: