இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு

இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இது விசயத்தில் அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதுபோல் அறிக்கை வெளியிடுவது வாடிக்கையாகியிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தமிழர்கள் யாரும் செல்லக்கூடாது என இலங்கை ராணுவம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. தமிழர்களின் குடியிருப்புகளும் விளை நிலங்களும் ராணுவத்தாலும் சிங்களவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை பாரளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். புத்த சிலைகள் நிறுவப்பட்டு, வைசாக் தினம் பொதுப்பண்டிகையாக முன்னிருத்தப்படுகிறது. இவைகளெல்லாம் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னே மீதமிருக்கும் தமிழர்களை நிரந்தரமாக அச்சத்திலேயே இருத்திவைக்கும் விதத்தில் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.

மறுபுறம், பிரபாகரன் இறக்கவில்லை. அவர் மீண்டும் வந்து போராட்டத்தை தொடர்வார் என்பது தொடங்கி நாடுகடந்த தமிழீழம் என்பது வரை கடந்த காலங்களிலிருந்து எந்தப் படிப்பினையையும் பெறாமல், பெறவிடாமல் மக்களை ஒரு மோன நிலையில் ஆழ்த்தி வைத்திருக்கும் தமிழீழக்குழுக்கள். தமிழ் மக்களை தங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் முனைப்பை மழுங்கடித்து அனுதாப உணர்விலேயே காலத்தைக் கடத்தும் கருவிகளாக இவை செயல் படுகின்றன. பிரபாகரன் முடிந்துவிட்ட கதை என்பதை உணர்வதே மாற்றத்தின்முதல் அறிகுறியாக இருக்கும். ஆனால் உயிர்த்தெழும் ஏசு குறித்த நம்பிக்கையைப் போல் பிரபாகரன் குறித்த நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. புலம் பெயர் தமிழர்களிடையே ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும் சவுதி போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தமிழர்களிடையே தங்களின் போராட்டம் ஏன் தோற்றது என்பதைவிட சுறா (விஜயின் அன்மை திரைப்படம்) வெற்றியா தோல்வியா என்பதில் இருக்கும் ஈடுபாடு கண்டு மனம் அயற்சியுறுகிறது.

கடந்த ஓராண்டாகவே இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அவ்வப்போது சர்வதேச அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா இப்போது போர்க்குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்போகிறதாம். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் நாங்களே விசாரித்துக்கொள்கிறோம் என்கிறது இலங்கை அரசு. இலங்கை விராரணை செய்தால் அது போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவருமா இல்லை புதைந்து போகச்செய்யுமா? ஐ.நா விசாரித்தால் அப்போதும் உண்மைகள் வெளிவந்து விடுமா? இலங்கையை மிரட்டி காரியம் சாதிப்பதற்குத்தான் அவை பயன்படுத்தப்படும் என்பதற்கு கடந்த காலங்களில் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்களோ தொடந்து அம்பலமாகி வருகிறது. குற்றம் செய்த யாரையும் மறைக்கவேண்டிய தேவை எனக்கில்லை என்று சவடால் அடிக்கிறார் பொன்சேகா. ஆனால் மே 16, 18, 19 என்று மாற்றி மாற்றி தேதிகளை அறிவிப்பதிலேயே இவர்களின் நாடகம் அரங்கப்பட்டு விடுகிறது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இதை பூசி மெழுகவே விரும்புகின்றனர். ஏனென்றால் புலித்தலைவர்கள் சரணடைந்தனர் என்பதே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும், உருவாக்க விரும்பும் தோற்றத்திற்கு எதிராக இருக்கிறது.

நாச்சிகுடா புதை குழிகள் இலங்கை அரசின் கொடூரத்தன்மைக்கும், இனப்படுகொலைக்கும் சாட்சியாய் அமைந்திருக்கிறது. ஆனால் இவைகளை வெறுமனே அனுதாபத்துடன் அணுகுவதும், கோபப்படுவதும் எதிர்காலத்தேவைகளுக்கு உதவாது. ஜனநாயகமற்ற புலிகளின் ஆயுத ஆராதனை இயக்கங்களும், குழுக்களும் இலக்கை அடைய உதவாது என்பது தெளிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், புரட்சிகர இயக்கங்களின் பின்னே மக்கள் அமைப்பாய் திரள்வது அவசியமும் அவசரமுமான தேவையாய் இருக்கிறது என்பதையே கடந்த ஓராண்டு உணர்த்துகிறது.

பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை

அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச ரூபாய் என்று அறிவித்து தன்னுடைய பங்களிப்பை செலுத்தியிருக்கிறார். இதே முத்தாலிக் முகத்தை சிலர் கரியால் பூசிய போது அதை இந்தியா முழுவதும் எடுத்துச்சென்ற ஊடகங்கள் இப்போது அடக்கி வாசிக்கின்றன.

பாரத பண்பாடு, கலாச்சாரம் என்று பேசிக்கொண்டு ரவுடித்தனம் செய்துகொண்டிருந்த இந்த ராம்சேனா நல்லதைத்தான் செய்கிறது என்று ஆசி வழங்கிக்கொண்டிருந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் 60 லட்ச ரூபாயை வைத்துக்கொண்டு ஏழை இந்துக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டத்துடன் இருந்தார் என்று கூறுவார்களா?

கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே கிருஸ்தவர்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட கலவரங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக வின் ஓட்டுவங்கி கலவரங்களை அடிப்படையாக கொண்டது. அதில் இருந்து தேர்தல் சீட்டு கேட்டு முட்டிப்பார்த்த முத்தாலிக் வெளியில் வந்து அதையே தன்னை வெளிக்காட்டுவதற்கான உத்தியாக பயன்படுத்திக்கொண்டார். இன்று அதையே நிறுவனமயமாக்கி அறிவிப்புப் பலகை வைத்திருக்கிறார். தன் முகத்தில் கரி பூசப்பட்ட போது அதை குண்டாயிசம் என்றவருக்கு பப்களில் பெண்களை உதைத்தது குண்டாயிசமாய் தெரியவில்லை. அதே போல 60 லட்சத்திற்கு பேரம் பேசும் போது உண்மையாய் இருந்தது அதுவே தெஹல்காவாகி வெளிவந்த போது உண்மையாக தெரியவில்லை.

இதை ஒரு அமைப்பின் சீரழிவு என்று புரிந்து கொள்ளவேண்டுமா? அப்படி புரிந்துகொள்ளச் சொல்லித்தான் பாடம் நடத்துகிறார்கள். இதில் கடவுள் ராமனுக்கு தொடர்பில்லை முத்தாலிக்கின் முரட்டுப்புத்தி என்று. அந்த கடவுள் ராமனே சுக்ரீவனிடம் பொட்டி வாங்கிக் கொண்டு வாலியை போட்டுத்தள்ளியவன் தானே. எனவே அந்தக்கால முத்தாலிக் படை உதவிக்காக வாலிவதம் செய்ததுபோல் இந்தக்கால ராமன்களின் ஒருவன் பண உதவிக்காக கலவரம் செய்கிறான். இதில் அந்த ஸ்ரீராமனை எப்படி தள்ளிவைப்பது? கல்கி போதைப்பொடியிலிருந்து நித்யானந்தனின் பேதைப்பள்ளி வரை இந்து மதத்திற்கு தொடர்பில்லை என்கிறார்கள். பிறன் மனையை புணர்வதையே புனிதமாய் சொல்லிவைத்திருக்கும் ஒரு மதத்தை இவைகளிலிருந்து விலக்குவது எப்படி?

ஆனால் இவைகளிலிருக்கும் புராணத்தொடர்புகளை கவனிப்பதை விட அரசியல் தொடர்புகளை கவனிப்பதே முக்கியமானது. தெஹல்கா பதிவுகளில் கவனித்தால் கலவரம் செய்யவிருக்கும் ஓவியக் கண்காட்சிக்கு ஒரு முஸ்லீம் மதத்தலைவரை அழைக்கவேண்டும் என்று கூறுகிறான். ஏன்? அன்றிலிருந்து இன்றுவரை ஒரு எதிரியை சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்து மதம் வளர்ந்திருக்கிறது. அது செரித்துக் கழித்த மதங்களும் கொள்கைகளும் ஏராளம். அதன் இப்போதையை எதிரி இஸ்லாம். கோட்ஸே தன் கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக்கொண்டது தொடங்கி கோத்ரா வரை அதற்கு சான்றுகள் ஏராளம். இந்த எதிரியை காட்டித்தான் புழுவிலும் கீழாக தாழ்த்தி வைத்திருக்கும் மக்களை இந்து எனும் கூடாரத்திற்குள் அடைக்கிறார்கள். அவர்களுக்கு மதம் வளர்க்க வேண்டுமென்றாலும், பணம் வளர்க்க வேண்டுமென்றாலும், முஸ்லீம் எனும் எதிரி தேவைப்படுகிறது. தங்களை இந்து என அழைத்துக்கொள்வோர் கவனம் பெறுவது எப்போது?

இதை நேரடியாக சொல்லிக்கொள்ள முடியுமா? மக்களில் பெரும்பாலானோர் இந்துத்துவ வெறி பிடித்தவர்களல்லவே. அவர்களிடம் ஓட்டும் வாங்கவேண்டும், பாதந்தாங்கிக்கொண்டு இழி நிலையிலும் இருக்கவேண்டும், தேவைப்படும் போது கலவரம் செய்யவும் வரவேண்டும். அதற்குத்தான் பாரதப் பண்பாடு, கலாச்சாரம் என்று பகல்வேசம் போடுகிறார்கள். பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் பற்றி இவர்களுக்கு என்ன அக்கரை? அல்லது ஏழை இந்துக்கள் பற்றித்தான் கவலையா? ஆண்கள் குடிப்பதைக் கண்டு கவலைப்படாதவர்கள் பெண்கள் குடிப்பதால் கலாச்சாரம் கெட்டுவிட்டதாய் உதைப்பவர்கள் நட்சத்திர விடுதிகளை என்ன செய்திருக்கிறார்கள்? அந்த குடி கலாச்சாரத்தை மக்கள் மீது திணிக்கும் உலகமயத்தை எதிர்த்து என்ன செய்திருக்கிறார்கள்? உழைக்கும் மக்களை வாழ்விடங்களிலிருந்தும் வாழ்நிலைகளிலிருந்தும் விரட்டியடிக்கிறது உலகமயம். மக்களின் வாழ்வில் நேரடியாக குறுக்கீடு செய்து அவர்களை சிதைத்துக்கொண்டிருக்கும் உலகமயத்தை எதிர்க்காமல் கலாச்சாரத்தை காத்து என்ன பயன்?

தொடர்ந்து இவர்கள் அம்பலப்பட்டுக்கொண்டிருப்பதை காண்போர், அந்த அம்பலங்களிலிருந்து படித்துக்கொள்ளவேண்டிய பாடம் இது தான். மாறாக இது ஒரு நாள் கூத்தாக பொழுதுபோக்கி மறந்து விடுவதற்கல்ல.

கண்டு களிப்பதற்கு மட்டுமல்ல; கண்டு தெளிவதற்கும் கூட.


உயிரைப் பறித்தாலும் நிலத்தைப் பறிக்க முடியாது

போஸ்கோ நிறுவனத்திற்கு எதிரான ஒரிசா மக்களின் போராட்டம் எஃகுறுதியுடன் முன்னேறுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அன்னிய முதலீட்டுத்திட்டமான தென்கொரியாவின் போஸ்கோ எஃகு ஆலைத்திட்டத்திற்கு எதிஎராக, போஸ்கோ பிரதிரோத் சங்கராம் சமிதி (பி பி எஸ் எஸ்) என்ற அமைப்பின் தலைமையில் ஒரிஸ்ஸாவின் ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாகப் போராடிவருகின்றனர். கடந்த ஜனவரி 26 முதலாக போஸ்கோ திட்டத்திற்கு எதிராக காலவரையற்ற தர்ணா போராட்டத்தை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

தென்கொரிய அதிபர் லீ மையூங் பாக் டெல்லியில் கடந்த ஜனவரி 26 அன்று நடந்த ‘குடியரசு’ தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் வருகைக்கு முன்னதாக 3566 ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எஞ்சிய நிலங்களை விரைவில் கையகப்படுத்தி விரைவில் திட்டத்தை செயல்படுத்தப்போவதாகவும் அரசு அறிவித்துள்ளது. அதாவது 2006ஆம் ஆண்டில் கலிங்கா நகரில் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 14பேரை கொன்றதைப்போல, மிகக்கொடிய தாக்குதலை கட்டவிழ்த்துவிடத்  துடிக்கிறது.

ஏறத்தாள 52,000 கோடி ரூபாய் மதிப்புள்ள போஸ்கோ திட்டத்தினால் 30,000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாழ்விற்கும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரிசாவின் உயர்தரமான இரும்புக்கனிமத்தில் 60 கோடி டன் அளவிற்கு அளிச்செல்வதோடு, ஆண்டுக்கு 12 கோடி டன் எஃகு உற்பத்தி செய்யும் உருக்காலையும் மின்நிலையமும் தனியார் துறைமுகமும் கொண்ட இத்திட்டம், கடந்த 2005ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்தால் 11 கிராமங்களிலுள்ள 5,000 குடும்பங்கள் ஏறத்தாள 30,000 பேர் வெளியேற்றப்படவுள்ளனர். இதுதவிர ஜடாதாரி ஆற்றையும் அது கடலில் கலக்கும் கழிமுகப்பகுதியையும் போஸ்கோ நிறுவனம் ஆக்கிரமிக்கப்போவதால் 52000 மீனவர்களின் எதிர்கால வாழ்வும் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எஃகு உருக்காலை மற்றும் மின்னிலையத்திற்கு 4004 ஏக்கர் நிலம் தேவை. இதில் 3566 ஏக்கர் புறம்போக்கு மற்றும் காட்டுப்பகுதிகள் அரசால் இன்னிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. காட்டு நிலங்களையும் காட்டின் விளை பொருட்களையும் பயன்படுத்திவந்த மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். எஞ்சிய 438 ஏக்கர் நிலம் உள்ளூர் சிறு விவசாயிகளுடையது. இவற்றில் வெற்றிலை, முந்திரி சாகுபடியும் முக்கியமாக நெல் சாகுபடியும் செய்துவருகின்றனர். இந்த நிலங்களை பறிப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஒடுக்க 25 பிளாட்டூன்  துணை ராணூவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் மூலம் கிராமப்பஞ்சாயத்துகளில் ஒப்புதல் பெறுவதற்கான கூட்டங்கள் நடத்தப்பட்ட போது, தங்கள் வாழ்வுறிமையை பறிக்கும் போஸ்கோ திட்டத்தை எதிர்த்து அனைத்து விவசாயிகளும் ஏகமனதாக தீர்மானம் நிறைவெற்றியுள்ளனர். ஆனால் அரசோ 15 நாட்களுக்குள் நிவாரணத்தொகையை பெற்றுக்கொள்ளாவிட்டால் பின்னர் எவ்வித நிவாரணமும் தரப்படமாட்டாது என்று கடந்த பிப்ரவரி முதல் நாளன்று அறிவித்து, நிலங்களை பறிக்க கிளம்பியுள்ளது. பாதிக்கப்படும் விவசாயிகளுக்கான மறுகுடியமர்த்தல் மற்றும் நிவாரணத்திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுதான் மிகச்சிறந்த நிவாரணத்திட்டம் என்கிறார் போஸ்கோ இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளரான மொகந்தி. ஆனாலும் இன்றுவரை எந்த விவசாயியும் நிவாரணத்தொகையை வாங்கவில்லை.

ஜெகத்சிங்புர் மாவட்டத்தின் பட்னா, கொவிந்புர், தின்கியா ஆகிய கிராமங்கள் போராட்டத்தின் முன்னணியில் நிற்கின்றன. விவசாயிகள் போஸ்கோ திட்டம் அமையவுள்ள 4004 ஏக்கர் நிலத்தை சுற்றிவளைத்து 17 இடங்களில் மட்டும் நுழைவு வாயில்களை அமைத்துள்ளனர். அவர்களின் அனுமதி இல்லாமல் அந்த மூங்கில் தடுப்பரண்களை திறக்கமுடியாது. அரசு அதிகாரிகளோ போஸ்கோ நிறுவனத்தினரோ இன்னமும் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியவில்லை. ஒவ்வொறு கிராமத்திலும் மூங்கில் வேலி போடப்பட்டு அன்னியர்கள் எவரும் நுழைய முடியாதபடி தடுத்துக்கண்காணித்து வருகின்றனர்.

ஏற்கனவே பாரதீப் துறைமுகப்பகுதியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இதேபோல விளை நிலங்களைப் பறித்துக்கொண்டு மறுவாழ்வு நிவாரணத்திட்டங்களை அறிவித்தது. அதை அன்று விவசாயிகள் நம்பினர். “அந்த இடத்தை இன்று யார் வெண்டுமானாலும் சென்று பார்க்கட்டும். வெறும் காங்கிரீட் தூண்கள் தான் நிற்கின்றன. அதற்கு மேல் நிவாரணத்திட்டம் நகரவேயில்லை அரசாங்கமே எங்களை வஞ்சித்து விட்ட நிலையில், அன்னியத் தனியார் ஏகபோக நிறுவனமான போஸ்கோ, நிவாரணத் திட்டத்தை நிறைவேற்றும் என்று நம்புவதற்கு நாங்கள் முட்டாள்கள் இல்லை” என்கிறார் தின்கியா கிராமப் பஞ்சாயத்து தலைவரான சிசிரா மகாபத்ரா.

நருசிங்க பெஹரா மற்றும் தேவேந்திர வாய்ன் ஆகியோர் “போஸ்கோவிற்கு மக்களின் எதிர்ப்பு” எனும் ஏழு நிமிடக் காணொளியை தயாரித்து, அதை நாட்டு மக்கள் அனைவரும் காணுமாறும், விவசாயிகளின் நியாயமான இப்போராட்டத்தை ஆதரிக்குமாறும் கோரியுள்ளனர்.

போஸ்கோவை எதிர்த்து வலது கம்யூனிஸ்டு கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் விவசாயிகளோடு இணைந்து போராடி வருகின்றன.  தர்ணா போராட்டம் நடத்தியவர்கள் மீது போஸ்கோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள குண்டர் படையினர் தாக்குதல் நடத்தியதோடு, குண்டுகளையும் வீசியுள்ளனர். இதில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர போலீஸ் பலமுறை தடியடித்தாக்குதல் நடத்தி இப்போராட்டத்தை நசுக்க முயற்சிக்கிறது. இத்துணை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு ஒரிசா மக்களை போஸ்கோ எதிர்ப்புப் போராட்டம்  பற்றிப்படர்ந்து வருகிறது.

ஒரிசா மக்களின் போஸ்கோ எதிர்ப்புப் போராட்டத்தை ஆதரிப்பதும், அதை மறு காலணியாக்கத்திற்கு எதிரான போராட்டமாக வளர்த்தெடுப்பதும் புரட்சிகர ஜனனாயக சக்திகளின் உடனடிக்கடமை; நம் கடமை.


புதிய ஜனநாயகம் மார்ச் 2010 இதழிலிருந்து.

புரிந்தவர்களுக்கு ஆபரேசன் கிரீன்ஹன்ட் புரியாதவர்களுக்கு குடியரசு தினம்.

இன்று ஜனவரி 26.

குடியரசுதினம் என்று வெகுகாலமாய் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். குடியரசு என்றால் குடிகளுக்கான அரசு என்று பொருள், அதாவது குடிமக்களுக்கான அரசு. ஆனால் தங்களின் செயல்களால் இது குடிமக்களுக்கான அரசல்ல என அறிவித்துக்கொண்டு குடியரசுதினம் எப்படி கொண்டாடமுடியும்?

90களில் பாராளுமன்றத்திற்கு தெரியாமல் கொல்லைப்புற வழியில் திணிக்கப்பட்ட ஒப்பந்தங்களுக்கு பிறகு லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள். உயிருடன் இருக்கும் விவசாயிகள் இடுபொருள் விலையை குறையுங்கள், தண்ணீர் கிடைக்கச்செய்யுங்கள், விளை பொருளுக்கு உரிய விலை தாருங்கள் அல்லது நிர்ணயம் செய்ய அனுமதியுங்கள் என்று பலகாலமாய் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த உதவியும் செய்யாத அரசு; கவர்ச்சியான திட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்கள் நிலங்களை தரிசாகப் போடவும், வந்தவிலைக்கு விற்றுவிட்டு வெளியேறவும், இப்படியான நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களும் தரகுமுதலாளிகளும் சூறையாடுவதற்கும் வேண்டிய அனைத்தையும் செய்துவருகிறது.

பன்னாட்டு ஆழ்கடல் மீன்பிடிநிறுவனங்களுக்கு ஆதரவாக சொந்தநாட்டு மீனவர்களை கடற்புற மேலாண்மை திட்டத்தின் மூலம் கடற்கரையிலிருந்து அப்புறப்படுத்தி அங்கு கேளிக்கை விடுதிகளையும் நட்சத்திர ஓட்டல்களையும் கட்ட முதலாளிகளை அனுமதித்திருக்கிறது.

கைத்தறிகளுக்கும், எளிய விசத்தறிகளுக்குமான ரகங்களின் கட்டுப்பாட்டை நீக்கியதால் அவர்களின் வாழ்வை கேள்விக்குறியாக மாற்றியிருக்கிறது.

பன்னாட்டு நிறுவனங்களை சிறுவணிகத்தில் அனுமத்தித்ததன் மூலம் கோடிக்கணக்கான சிறுவணிகர்களை வீதிக்கு விரட்டியிருக்கிறது.

எல்லாத்தரப்பு மக்களையும் ஓட்டாண்டியாக்கும் திட்டங்களை சில முதலாளிக்களுக்கு ஆதரவாக செயல்படுத்தி பெரும்பான்மை மக்களை வதைக்கும் அரசை குடிகளுக்கான அரசு என்று எப்படி சொல்வது?

நாட்டின் மிகப்பெரிய அமைப்பான ராணுவமும், காவல்துறையும்  யாரைப் பாதுகாக்கிறது? தண்ணீர் இல்லை என்பதிலிருந்து வேலையில்லை என்பது வரை யார் எதற்காக போராடினாலும் காவல்துறைதான் குண்டாந்தடியோடு வருகிறது. தீவிரவாதம் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் போலிமோதல் கொலைகளையும், பாலியல் கொடுமைகளையும் அரங்கேற்றுகிறது ராணுவம். காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நிரந்தரமாக தங்கியிருந்து மக்களை சிதைத்து வருகிறது. ராணுவத்தின் மக்களை காக்கும் அரும்பணிக்கு எடுத்துக்காட்டுகள் கீழே,

ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்ற பெயரை செவியுற்றிருக்கிறீர்களா?

7300 கோடி செலவில் சட்டிஸ்கார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களிலும் மகாராட்டிரம், ம.பி, ஆந்திர மாநிலங்களில் எல்லைப்புறங்களிலும் செயல்படுத்தப்படவிருக்கும் ராணுவ நடவடிக்கைக்கு தான் ஆபரேசன் கிரீன்ஹன்ட் என்று பெயர். ராணுவ நடவடிக்கை என்பது அரசு சொல்லும் பெயர் ஆனால் எதார்த்தத்தில் இது மக்களுக்கு எதிரான போர். இதற்கு அரசு சொல்லும் காரணம் மாவோயிஸ்டுகளின், நக்ஸல்களின் தீவிரவாதம் பெருகிவிட்டது என்பது. ஆனால் மெய்யான காரணம் அதுவல்ல. இந்தப்பகுதிகளில் கடந்த நாற்பது ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறார்கள் நக்ஸல்கள், இப்போது பல படைப்பிரிவுகளையும், போர்விமானம், எழுவூர்திகளையும், செயற்கைக்கோள் கண்காணிப்பையும் கொண்டு நக்ஸல்களையும் மாவோயிஸ்டுகளையும் அழிக்கப் புறப்பட்டிருப்பதன் காரணம் அந்தப்பகுதியின் கனிமவளங்கள். உயர்தரமான இரும்புத்தாது, செம்பு, தங்கம், வைரம், அலுமினியத்தின் மூலப்பொருளான பாக்சைட், சிமென்டு உற்பத்திக்குத் தேவையான சுண்ணாம்புக் கற்கள், நிலக்கரி, பளிங்கு, கிரானைட், சிலிகா, குவார்ட்சைட் போன்ற 28 வகைக் கனிவளங்களும் காட்டு வளங்களும் நீர்வளமும் நிறைந்திருக்கும் அந்த வனப்பகுதியை பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் கூறுகட்டி விற்க அந்தப்பகுதியிலிருக்கும் பழங்குடிகளை விரட்டியடிக்க வேண்டும். இதற்கு எதிராக அம்மக்களை விழிப்புணர்வூட்டி போராடத்தூண்டி வருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இதற்காகத்தான் அவர்களை வேட்டையாடத்துடிக்கிறது அரசு.

இது குடியரசு என்று கூறிக்கொண்டே தன் சொந்த குடிமக்கள் மீது போர் தொடுத்திருக்கிறது. இதை எப்படி புரிந்து கொள்வது? குடியரசு, ஜனநாயகம் என்ற போர்வையில் முதலாளிகளுக்கான அரசாக நடந்துகொண்டு மக்களை வதைப்பது. அவர்களின் உழைப்பையும், வாழ்வையும் வாழ்விடத்தையும் அபகரிப்பவர்களுக்கு எல்லாவிதத்திலும் உதவுவது. இதை புரிந்துகொண்டு போராடினால் அவர்களை கிரீன்ஹன்ட் என்றபெயரில் அழிப்பது; இதை புரியாமல் இருந்தால் குடியரசு என்ற பெயரில் அல்வா கொடுப்பது.

அல்வாவை ருசித்து புறங்கை நக்க நாம் என்ன அஃறினைகளா?

ஆபரேசன் கிரீன்ஹன்ட் குறித்து விரிவாக அறிந்து கொள்ள

பழங்குடிகள்-மீனவர்கள் விவசாயிகள் மீது இந்திய அரசு தொடுத்துள்ள போர்!

  • நக்சல் வேட்டை என்ற பெயரில் நடத்தப்படும் நரவேட்டைப் போரைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
  • பன்னாட்டுக் கம்பெனிகள், தரகு முதலாளிகளுடன் போடப்பட்டிருக்கும் அனைத்து தேசத்துரோக ஒப்பந்தங்களையும் கிழித்தெறிவோம்!
  • போராடும் பழங்குடி மக்களுக்குத் துணை நிற்போம்!
  • மறுகாலனியாக்க எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!

தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம்

ஜன. 30,2010 சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

தொடர்புக்கு: அ.முகுந்தன், 110,2- வது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை-24. செல்பேசி 94448 34519

காக்கையும் கடவுளும்

பகுத்தறிவு, சிந்தனை என்பன போன்ற சிக்கலான செயல்களெல்லாம் மனிதனுக்கு கடவுள் தந்த கொடை. எத்தனை கோடி ஆண்டுகள் வாழ்ந்தாலும் மனிதனைப்போல் விலங்குகளால் சிந்திக்க முடியவில்லையே ஏன்? மனிதனின் இருப்பு சில லட்சம் ஆண்டுகள் தான் ஆனால் டினோசரஸ் போன்றவைகள் 300 கோடி ஆண்டுகள் பூமியில் இருந்தன. ஆனால் அவைகளால் சிந்தனைத்திறன் பெறமுடியவில்லை. என்றெல்லாம் கடவுட்கோட்பாட்டுவாதிகள் கேள்விகள் எழுப்புவதுண்டு. எத்தனை முறை அவற்றிற்கு அறிவியல் ரீதியில் விடையளித்தாலும், மீண்டும் மீண்டும் புறியாததுபோல் அதேகேள்வியை வேறு சொற்களில் கேட்டுக்கொண்டிருக்கும் மதவாதிகளுக்கு, இதோ ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்பட்ட ஒரு காகம் பாடம் நடத்துகிறது.

இங்கே சொடுக்கவும்

அணு ஆயுத‌ம் போட‌ப்ப‌ட்டால் எப்ப‌டி இருக்கும்?

இந்த‌ அசைப‌டத்தை பாருங்க‌ள்
இதில் நீங்க‌ள் பார்ப்ப‌து கொஞ்ச‌ம் தான்
மீதி உங்க‌ள் சிந்த‌னைக்கு.
பூமியின் ம‌டியில் ஆயிர‌க்க‌ண‌க்கில்
இருக்கின்ற‌ன‌ இந்த‌ ஆயுத‌ங்க‌ள்
ம‌னித‌ இன‌த்தையே மொத்த‌மாக‌
அழிக்கும் திற‌ன் பெற்ற‌ இவைக‌ளை
உருவாக்க‌வும் பாதுகாக்க‌வும்
கொட்ட‌ப்ப‌டும் ப‌ண‌ம்
ம‌க்க‌ள் ப‌சி தீர்க்க‌ ப‌ய‌ன்ப‌ட்டால்……

அசை படத்தை பார்க்க இங்கு சொடுக்கவும்

%d bloggers like this: