பூவரசியை சபிப்பதற்கு முன்னால் நாம் பதில் சொல்லவேண்டிய கேள்விகள் சில இருக்கின்றன நண்பர்களே

இந்த வார தமிழக அதிர்ச்சி சிறுவன் ஆதித்யாவின் கொலை. சாதாரணமாக ஒரு கொலைக்கு தமிழ்நாடு இவ்வளவு தூரம் முக்கியத்துவம் தருவதில்லை, இந்த முறை நமது அதிகப்படியான கோபத்துக்குக் காரணம் கொலை செய்தவர் ஒரு பெண் என்பதால்தான். தனது காதலரின் நான்கு வயது மகனை கழுத்தை நெரித்துக் கொன்று பிறகு சூட்கேசில் வைத்து பஸ் ஒன்றில் வைத்துவிட்டு தப்பிவந்தது அவரது குற்றம். கேள்விப்பட்ட மக்களும் செய்தி வாசித்தவர்களும் கொதித்துப்போய் விவாதிக்கிறார்கள். மக்களின் சிந்தனையை தீர்மானிக்கிற ஊடகங்களும் பூவரசி மீது வசைமாரி பொழிகின்றன. கொலைகாரி, ராட்சசி, கள்ளக்காதலி, கீப் ஆகியன அச்சு ஊடகங்கள் பூவரசியை குறிப்பிடப் பயன்படுத்திய வார்த்தைகளில் சில.

நான் விவாதிக்க விரும்புவது பூவரசி செய்த குற்றம் பற்றியல்ல. ஏனெனில் இதுவரை ஒரு குழந்தையின் கொலைக்காக நாம் இத்தனைதூரம் உணர்ச்சிவயப்பட்டதில்லை என்பதால் குற்றத்தைத் தாண்டி வேறொரு காரணி நம்மை இவ்விடயத்தில் கோபம்கொள்ளவைக்கிறது என்பது தெளிவு. தன் பிள்ளைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் பெற்றோர் பற்றிய செய்திகள் ஏறத்தாழ நாம் தினசரி வாசிப்பவை. பணத்துக்காக குழந்தையைக் கடத்தி கொலைசெய்த சம்பவங்களும் நாமக்கு அவ்வப்போது வாசிக்கக்கிடைப்பவை. தனக்குப் பிறந்ததுதானா என்ற சந்தேகத்திலும் ஜோசியக்காரன் சொன்னதாலும்கூட சொந்தப் பிள்ளையை கொன்ற தந்தைகள் கதையும் நமக்கு புதிதல்ல. எவ்வளவுதான் ஞாபகங்களைக் கசக்கிப் பார்த்தாலும் பூவரசி மீது நமக்கு உண்டான கடுங்கோபம் மற்ற சம்பவங்களின்போது வந்த மாதிரி தெரியவில்லை. ஏன்?

காரணம் மனிதாபிமானமோ அல்லது ஒழுக்கமான வாழ்வின்மீது நமக்குள்ள பிடிப்போ இல்லை, சமூகத்தின் சகல திசைகளிலும் வேரோடியிருக்கும் ஆணாதிக்க சிந்தனையால்தான் நாம் பூவரசியை விசாரணைக்கு முன்னாலேயே வெறுக்கிறோம். அவர் மனநிலை சரியில்லாதவரா அல்லது அவரது காதலர் ஜெயக்குமாரால் மோசமாக ஏமாற்றப்பட்டவரா என்றெல்லாம் நாம் பரிசீலிக்கத் தயாரில்லை (ஒரு தகவல்: மனநிலை பாதிக்கப்பட்டு தன் சொந்தக்குழந்தையைக் கொன்ற தாய்மார்கள் இருந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில்கூட ஒரு பெண் தன் கைக்குழந்தையை அரிவாள்மனையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்). ஏமாற்றப்பட்ட ஒரு கள்ளக்காதலி காதலனின் குழந்தையைக் கொல்வதா என்ற எண்ணம்தான் நம்மை செலுத்துவதாகத் தோண்றுகிறது.

பூவரசி, ஒரு வறிய குடும்பத்தில் பிறந்து முதுகலை பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறார், சிறந்த மாணவி எனும் தகுதியுடன். வேலைக்கு வந்த வங்கியில் ஜெயக்குமாரை சந்தித்து காதல்வயப்பட்டிருக்கிறார். பத்திரிக்கைகள் பிரயோகிக்கும் கள்ளக்காதலி என்ற சொல்லே நியாயமற்றது. ஏனெனில் ஜெயக்குமார் தனக்குத் திருமணமான விசயத்தையே பூவரசியிடம் மறைத்திருக்கிறார். அவரது உடல் இச்சைகளுக்கு  பயன்படுத்தப்பட்டு இருமுறை கருக்கலைப்பு செய்துகொண்டிருக்கிறார் பூவரசி. இதன்பிறகும் அவர் ஜெயக்குமாரிடம் வைத்த கோரிக்கை தன்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொன்னதுதான்.  ஒரு பெண்ணின் சாதாரண கோரிக்கை நிராகரிக்கப்படும்போது அதுக்கு நானென்ன பண்ணுறது என்று சுலபமாக கடந்து போகும் நாம் அவர்கள் அசாதாரண காரியம் ஏதேனும் செய்துவிட்டால் பாய்ந்து பிறாண்ட மட்டும் மறப்பதில்லை.

சித்தீ என்று தலைப்பிட்டு இதுபற்றிய செய்தியை பிரசுரித்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டர் பூவரசி பற்றிய இரண்டு தகவல்களைத் தந்திருக்கிறது.

” பார்ப்பதற்கு சுமார்தான். இருந்தாலும் தன் வசீகரப்பேச்சால் அனைவரையும் கவர்ந்துவிடுவார். ஜெயக்குமாரையும் தன் வசீகர வலையில் வீழ்த்தினார் பூவரசி.”

“பூவரசிக்கு ஏற்கனவே ஒரு காதல் இருந்திருக்கிறது. 2002 ல் ஒரு வாலிபர் தன்னை காதலித்து (உடலுறவுக்குப் பிறகு) ஏமாற்றிவிட்டதாக போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்.”

இவ்விரு செய்திகளின் வாயிலாக குமுதம் சொல்ல வருவது என்ன? ஏற்கனவே இருந்த காதல் வாயிலாக அவரது ஒழுக்கம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. அவர் பேசி மயக்குவார் என்று சொல்வதன் மூலம் மனைவிக்குத் தெரியாமல் பூவரசியுடன் உறவு வைத்திருந்த ஜெயக்குமார் சுலபமாக அப்பாவியாக மாற்றப்பட்டுவிட்டார். இதே குமுதம் பிரகாஷ்ராஜின் புதிய காதல் பற்றிக் குறிப்பிடும் போது ” அவரது ஒரே மகன் இறந்த துக்கத்தில் இருந்தபோது அவருக்கு ஆறுதலாக இருந்த போனி வர்மாவிடம் காதல் கொண்டார்” என்கிறது. கவனியுங்கள் அப்போது லலிதகுமாரி பிரகாஷ்ராஜின் மனைவியாகத்தான் இருந்தார். பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது காதல் வந்தால் அது ஆறுதல் தேடி வருவது. பூவரசிக்கு வந்தால் அது ஆண்களை மயக்கும் சுபாவமா ? படிக்கையிலேயே உங்களுக்கு காறித்துப்பத் தோண்றவில்லை? பூவரசியின் முதல் காதல் பிரச்சனையில் போலீசும் அவரது சுற்றமும் நியாயமாகவும் அனுதாபத்துடனும் நடந்து கொண்டிருந்தால் அவருக்கு இரண்டாவது காதல் வருவதற்கான சாத்தியமே இல்லாது போயிருக்கும். ஏன் இது இந்த மானங்கெட்ட குமுதத்துக்கும் அதன் கருத்துடன் ஒத்துப் போவோருக்கும் தோண்றுவதில்லை? (குறிப்பு : ஒரு ஒப்பீட்டுக்காவே பிரகாஷ்ராஜின் விவகாரம் குறிப்பிடப்பட்டிருக்கிறது, நான் விமர்சிக்க விரும்பியது குமுதத்தைத்தானேயன்றி பிரகாஷ்ராஜை அல்ல)

சூழ்நிலையால் குற்றம் செய்பவர்கள் மீது வெறுப்பை உமிழத்தயாராக இருக்கும் நாம் தன் தனிப்பட்ட தேவைகளுக்காக சூழலையே குற்றத்திற்குத் தக்கதாக மாற்றும் நபர்களை ஏன் கண்டுகொள்வதில்லை? ஈழத்துப் படுகொலைகளுக்குப் பின்னால் சோனியாவின் பழிவெறியும் தனிப்பட்ட தேவைகளும் இல்லையா? அவர் அன்னை சோனியா என்று அழைக்கப்படும்போது அதை சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம் ஆனால் பூவரசியை மட்டும் நீ ஒரு பெண்ணா என்று கேட்கிறோம். அநியாயமில்லையா இது?

காதலன் வீட்டு வாசலில் காதலி உண்ணாவிரதம் என்ற செய்திகளைப் படித்தபோது என்ன செய்தீர்கள்? காதல் தோல்வியில் பெண் தற்கொலை என்ற செய்தி கேட்கையில் என்ன செய்தீர்கள்? உங்கள் பணியிடத்தில் யாரேனும் அவுசாரியென பட்டம் கட்டப்பட்டிருந்த தருணத்தில் (இது ஒன்றுக்கு மேற்பட்ட காதல்களில் தோல்வியடைந்த பெண்களுக்குத் தரப்படுவது) நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? காதலித்த பெண்னை ஏமாற்றிவிட்டு நான் எதையும் இழந்துவிடவில்லை என்று என்று இருபொருள்பட சொன்ன இளைஞனுடனான பழக்கத்தை நான் சொரணையில்லாமல் தொடர்ந்திருக்கிறேன். நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? பிள்ளைகளுடன் உள்ள மனைவியை இழந்தவருக்கு ‘குழந்தை இல்லாத விதவை அல்லது விவாகரத்தான’ மணமகள் தேவை எனும் விளம்பரம் உங்கள் மனதை எப்போதேனும் உறுத்தியிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கு நியாயமாக பதில் தேடினால் நாம் எந்த அளவுக்கு பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறேம் என்பது புரியும்.

சம்பாதிக்கும் பெண்ணாக தேடிவிட்டு அவர் எதிர்த்துப் பேசினால் சம்பாதிக்கிற திமிர் என்று  என்று அடையாளமிடும் சமூகத்தில் வாழ்கிறோம். காதலித்து கர்பமாக்கி ஏமாற்றிய புகார்களில் ஆணின் பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் வழக்கை ‘செட்டில்’ செய்யவே முயற்சிக்கிறார்கள். மனைவியை அடிப்பது தவறில்லை என்றும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி உடலுறவு கொள்வது கற்பழிப்பாகாது என்றும் நீதிமன்றங்களே தீர்ப்பளிக்கும் தேசமிது. பதிவிரதா தர்மம் நம் நாட்டில் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தவறாமல் போதிக்கப்படுகிறது. காதலனுடன் திருமணத்துக்கு முன்னால் உடலுறவு வைத்திருந்த பெண்கள் இங்கு முற்றிலுமாக நண்பர்களாலும் வீட்டாராலும் புறக்கணிக்கப்படுவதை நான் பல சந்தர்பங்களில் பார்த்திருக்கிறேன். இப்படிப்பட்ட புறக்கணிப்பே இப்படிப்பட்ட பெண்களை (அயோக்கியன் என்றாலும்) அந்தக் காதலனின் காலிலேயே விழ வைக்கிறது. அவனும் நிராகரிக்கின்ற வேளை வரும்போது இவர்கள் முற்றிலும் நிலைகுலைந்து போகிறார்கள். தனித்து விடப்படுவதால் முதல் முட்டாள்தனத்தை சரிசெய்ய இன்னொரு முட்டாள்தனத்தை செய்கிறார்கள்.

ஆதித்யாவை கொலை செய்வதற்கு முன்பிருந்த பூவரசியின் நிலைக்கு ஒப்பானவர்கள் நம்மைச் சுற்றியும் நிறைய இருக்கிறார்கள். அவர்களின் எல்லோரும் புலம்புகிறார்கள், அழுகிறார்கள், காவல் நிலையத்தில் புகார் தருகிறார்கள் மீறிப்போனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அவர்களில் பூவரசி மட்டும் காதலனின் மகனை கொலை செய்யும் அளவுக்கு போயிருக்கிறார். நேர்மையாக சொல்வதானால் அவரது குற்றத்தில் நம் எல்லோருக்கும் பங்கிருக்கிறது. இந்த வழக்கிலும் பாருங்கள் இப்போதும்கூட ‘என் கணவர் நல்லவர்’ என்கிறார் ஜெயக்குமாரின் மனைவி, பூவரசியின் தரப்பில் ஒருவர்கூட அவரைக்காண வரவில்லை. ஆணுக்கும் பெண்ணுக்கும் இருவேறு ஒழுக்கவிதிகளையும் நியாயங்களையும் நாம் வைத்திருக்கிறோம் என்பது இவ்வழக்கு விவாதிக்கப்படும் விதத்தில் அப்பட்டமாகத் தெரிகிறது.

பூவரசி தண்டிக்கப்படுவார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை, அவரும்கூட தன்னை தண்டியுங்கள் என்றுதான் சிறையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். ஆகவே இந்தத் தருணத்தில்  இன்னொரு பூவரசி உருவாகாமல் தடுப்பதற்கு நாம் ஏதேனும் செய்திருக்கிறோமா என்பது நாம் நம்மிடம் கேட்டாக வேண்டிய கேள்வி. சீக்கிரம்.. இன்னொரு ஆதித்யா கொல்லப்படும் நாள்வரை நாம் காத்திருக்கலாகாது.

அறிமுகம்


இந்த இடுகையை தந்தது தோழர் வில்லவன். அரசியல் சமூகம் சார்ந்த தனது சிந்தனைகளை வில்லவன் எனும் பெயரில் வலைதளத்தில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

வலைதள முகவரி: http://villavan.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: villavan.r@gmail.com

கொச்சை படுத்தப் பட்ட ராவணன்


வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் “ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் “நமக்கு’ ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்” என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் அடுத்தடுத்து வந்த பம்பாய் உட்பட அவரது  படங்களும் அவர் யாருடைய பிரதிநிதி என்பதை நிருபித்தன. ஆனால் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இராவணனை பார்ப்பது தடைபட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாய் மணிரத்ணத்தின் ராவணனை பார்த்தேன்.
******************

திருடனாக இருந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை காலத்திற்கேற்றார் போல் புதுசு பண்ணி  வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். சரி அன்று திருடனாயிருந்த வால்மீகி ஏன் இரமாயணம் எழுதினான்? என்று தெரியவேண்டுமென்றால் நமக்கு புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பன அரசனை பற்றி தெரியவேண்டும். அதேபோல் மணிரத்னம் ஏன் இரமாயணத்தை புதியதாக ராவணன் என்று ஏன் வெளியிட வேண்டுமென்றால் நாம் புஷ்யமித்திரனின் வாரிசுகளை இனங்காண வேண்டும். சரி படத்திற்குள் கொஞ்சம் போய் பார்ப்போம்.

வீரா என்ற பெயரில் ராவணனனையும். தேவ் என்ற பெயரில் இராமனையும். ராகிணியாக சீத்தா தேவியையும் புதுசு பண்ணியிருக்கிறார்கள். மற்றபடி கார்த்திக்கை குரங்காகவும் வையாபுரி ஐயரை அலியாகவும் காட்டியிருக்கிறார்கள். அது தேவையில்லாத் மேட்டராக இருப்பதால் அவர்களை விட்டு விட்டு கதைக்கு தொடருவோம்.  ராவணன் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலிசால் தேடப்படும் குற்றவாளி அவன் அரசுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்

ராவணன் ஏன் கலகம் செய்கிறான்?


ராவணன் குழுவாக இயங்குவது போல காட்டியிருக்கிறார்கள். சரி அவன் எதற்காக குழுவாக இயங்குகிறான்? அந்த குழுவின் நோக்கம் என்ன? அது போராட்டக் குழுவா? அல்லது கூலிப்படையா? என்று கேள்விகள் கேட்டால் அதற்கான பதில் அங்கு இல்லை. மொத்தத்துல ராவணன் அரசுக்கு எதிரானவன் என்று குழப்புகிறார் மணி. குழப்புபவர் குழம்பி போயிருப்பதாக கருத்க்கூடாது  அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் நம்மதான் தெளிவாக குழப்புகிறார். ராமாயணத்தில் கூட ராவணன் இலங்கையை ஆண்ட அரசன் என்ற செய்திகள் இருக்கும் ஆனால் ராவணனில் அப்படி விவரங்களை காணமுடியவில்லை ஏன்? இராமயணத்தை நவீன படுத்திய மணி ராவணனன் எதற்காக போராடுகிறான் என்பதை நவீன படுத்தாமல் பொத்தாம் பொதுவாக அரசாங்கத்துக்கெதிராக செயல்படுவான் அவ்ளவுதான் என்றளவோடு முடித்துக்கொண்டது ஏன்?

ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் இருக்கும் கானகப் பகுதியை காட்டுகிறார்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களான கல்வி உட்பட் பிற வசதிகள் இல்லாத இடத்தில் ராவணன் அரக்கெதிராக கலகம் செய்கிறான் என்றால் அது வாழ்வாதார பிரச்சனயைல்லவா?  அல்லது விடுதலைப்போர் அல்லவா? அப்படி காட்டினால் என்னாகும் படம் பார்ப்பவர்களுக்கு இந்திய அரசின் காட்டுவேட்டையல்லவா நினைவு வரும் அப்படி காட்டாமல் இருக்க ராவணன் ஒரு காட்டான், பழங்குடியினத்தை சார்ந்தவன் அவன் தேவையில்லாமல் பிரச்சனைகளை வலிய செய்து கொண்டிருந்ததால் அரசு ராமனை (அதுவும் என் கவுன்டர் ஸ்பெலிஸ்ட்) அனுப்புகிறது. அவனுடைய பணி கிளர்ச்சியை ஒடுக்குவது  மட்டுமே அதன் கண்ணியான ராவணனை ஒழிக்க முயல்கிறான், அதன் ஒருகட்டமாக ராவணனின் தங்கை சூர்ப்பநகை திருமணத்திற்கு சென்று என்கவுன்டர் செய்ய முயலுகிறான் குண்டு ராவணனின் தொண்டையில்பட்டு தப்பிக்கிறான். இதற்கிடையே சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போலிசு (இங்கு ராமன் எஸ்கேப்) பாலியல் வன்முறையை ஏவி கொடுமைபடுத்துகிறது. பிறகு சூர்ப்பநகை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதன் மூலம் மணி சொல்லுவது என்ன?  ராவணனின் வீண் வம்பு சண்டையால்தான் அவன் குடும்பத்துக்கும் பிரச்சனை, போலிசு சூர்ப்பநகையை மட்டும் கடத்தி செல்வதாக காட்டுவதே கேப்மாரித்தனம்.  போலிசு இருக்கும் பெண்களையயல்லாம் கடத்தி கொண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து சித்திரவதை செய்வது என்பது  வீரப்பன் பிரச்சனை உட்பட நாம் பார்க்கும் உண்மை. இதை மறைத்து  ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கும் போலிசுக்கும் இடையேயான பிரச்சனையாக காட்டி உண்மையை மறைக்கிறார் மணி, அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையேயானவை தனிப்பட்ட பிரச்சனையாக என்றும் இருந்ததில்லை, அது அடிப்படையில் மக்களின் விடுதலை போராட்டமாகவே இருந்திருக்கிறது இதை குடும்ப பிரச்சனையாக சுருக்கி தான் யாருடைய பிரதிநிதி என்பதை காட்டியிருக்கிறார்.

நல்லவனுக்குள் கெட்டவன், கெட்டவனுக்குள் நல்லவன்.


எஸ்.பியாக வரும் ராமன் நல்லவன் கடவுளை போன்றவன் என்று சீத்தா காட்டில் புகழ்கிறாள் அப்படி பட்ட நல்லவன் ஏன் ராவணனை கொலை செய்கிறான் என்றால் அவன் சூழல் அப்படி என்பதை அவனுடைய பதவி, அரசின் பிரதிநிதி என்பதை தெளிவாக விளக்கும் மணி. சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போது ராமனை எஸ்கேப் ஆக்கிவிடுகிறார். முப்பது போலீசு குண்டர்கள் சூர்ப்பநகையை வன்புணர்ச்சி செய்யும்போது குழுவின் பொறுப்பாளனான ராமன் எங்கே என்றால் அவன் அப்போது மணிரத்தினத்தின் குடுமியில் மறைந்து கொள்கிறான். ராமனை எஸ்கேப் ஆக்கியதன் மூலம் ராமனின் புனிதன்மையையும் கடைநிலை போலிசு மட்டும்தான் பாலியல் வன்புணர்ச்சி செய்வான் அதிகாரிங்க எல்லாம் ரொம்ப டீசண்டு என்கிற கடைந்தெடுத்த பொய்யையும் பாதுகாக்கிறார். ராமன் நல்லவன் அவன் தன் கடமையை செய்கிறான் அவன் நல்லவனுக்குள் கெட்டவன்

ராவணன் ஏன் கிளர்ச்சியாளனாக இருக்கிறான்? அதற்கான அவனுடைய சூழ்நிலை என்ன? என்பதை காட்டாமல் ராவணன் பழங்குடியினத்தை சேர்ந்தவன், அவன் சாதி இயல்பே அப்படித்தான் என்று தனது பார்ப்பன குருரத்தை காட்டுகிறார் மணி. குரங்காக வரும் கார்த்திக்குடன் ராமன் பழங்குடியின மக்களிடம் ராவணன் எப்படி பட்டவன் என்று கேட்கும்போது  “நல்லவன்தான் ஆனா தேவையில்லாம வம்புக்கு போகும்” குடி கூத்தியானு எல்லா பழக்கமும் இருக்கு”  “சிரிக்க சிரிக்க பேசும்’ என்று  பலரும் சொல்லுவது போல்காட்டியிருக்கிறார்கள்.  ராவணன் கெட்டவனுக்குள் நல்லவன்

தூது செல்லும் குரங்கு கார்த்திக் ராவணனிடம் நான் அவிங்க (ராமன்)ஆளுதான் ஆனா என்  ஓட்டு உனக்குத்தான் ஏனா உனக்காக எவ்வளவு பேரு இருக்காங்க பாரு என்கிறான்.
இப்படி காட்சி வைத்திருக்கும் மணி, நெல்லிக்காயும், வெங்காயமும் தின்று வாழும் மக்கள் ஏன் ராவணனுக்காக உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள்?  “சிரிக்க சிரிக்க பேசும்’
ராவணனின் குணத்திற்காகத்தான் உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் குச்சி ஐஸ் திங்கற பாப்பா கூட வேலைய பார்டா என்று சொல்லிவிடும்.


சீத்தா தேவியும், கொச்சை படுத்தபடும் பழங்குடியின தலைவனும்


சீதையை ரொம்ப நல்லவளாக காட்டியிருக்கிறார் மணி . வீரமான மேட்டுகுடி பெண்ணாககாட்டி தனது வர்க்க பாசத்தை கழிந்து வைத்திருக்கிறார் மணி. ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று மேட்டு குடி சீதை பாடும்போது நமக்கு வரும் சிரிப்பை அட்க்க முடியவில்லை.  பஃப்பில் திரிவதும் அரை குறை ஆடைகளோடு ஆணாதிக்கத்தின் பெண் பிரதிநிதிகளாய் வரும் இவர்களின்  வீரத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மேட்டுகுடி பெண்ணாக ஃபுல் மேக்அப்பில் வரும் சீதையை பார்த்து ராவணன் மனம் சஞ்சலப்படுகிறான்

இங்கயே இருந்திரு என்று சீதையிடம் கேட்கிறான் ஆனால் கை கூட படாமல் பார்த்துக் கொள்ளும் ராவணன் சீதையிடம் பொறாமையாக இருக்கிறது என்று கூறுகிறான் இறுதிக்காட்சியில் சீதை சொக்க தங்கம் என பிதற்றுகிறான் வாடுகிறான் . சொக்க தங்கம் என எதை வைத்து ராவணன் முடிவு செய்கிறான் அவளது குணநலன்களை வைத்தா என்று பார்த்தால் அப்படியும் காட்சிகள் இல்லை. சீதையின் முகத்தை ரசிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதாவது ஒரு மேட்டுக்குடி பெண்ணின் அழகில் மயங்கிவிடுகிறான் ராவணன்.

அந்த அழகும் இளமையும் அவனை கலங்கடிக்க வைக்கிறது, அதற்காக தனது தங்கையின் மரணத்திற்கு காரணமான ராமனையும் மன்னித்து விடுகிறான் பிறகு சீதையை பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக  நாயை போல் ராமனால் சுட்டு இறக்கிறான்.  ஆனால் சீதையோ ராவணனை பார்த்து சஞ்சலபடவுமில்லை மயங்கவுமில்லை  அவனுள் நல்லவனை பார்க்கிறாள் அவனுக்காக இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் மேட்டுக்குடி நாட்டிய பேரொளியை ஒழுக்கமானவளாகவும் , நியாயமான குணங்களை உடையவளாகவும் காட்டியிருக்கிறார் மணி ஆனால் ராவணன் மனதுக்குள் சீதையை நினைக்கும் அலைஞ்சானாக காட்டி ஒடுக்கபட்டவன் மேல் மேட்டுகுடி சீதைகள் இரக்கம் காட்டினால் ஒடுக்கப்பட்ட ராவணன்கள் மேய பார்ப்பார்கள் என அக்கிரகாரத்துக்கு மணி அடிக்கிறார் ரத்னம்.

அன்று ராமயணத்தில் தமிழர்களை குரங்காகவும். காட்டுமிராண்டிகளாகவும் காட்டி மகிழ்ச்சியடைந்தன பார்ப்பன கும்பல்

இன்று ஒடுக்கப்பட்ட ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் காட்டுமிராண்டிகளாக காட்டியிருக்கிறது மணிரத்னம் பார்ப்பன கும்பல்.

இந்திய அரசின் காட்டு வேட்டை நடக்கும் சமயத்தில வந்திருக்கும் இப்படத்தில் மணிரத்னம் சொல்லுவது ‘அரசாங்கத்துகிட்ட வெச்சுக்காதீங்க போட்டு தள்ளிருவாங்க உங்களாள ஒண்ணும் பண்ண முடியாதுலே’ என்று பத்து தலை கொண்ட ராவணனை “எடுத்திருக்கிறார்.

உள்ளங்கை நெல்லிக்கனி

படத்தை பார்க்கும் நோக்கர்க்கு இப்படம் எப்படிப்பட்ட அலைகளை ஏற்படுத்தும்?

போலீசு மேல் கோபமும்,பழங்குடியின போராளிகள் மீது ஆதரவும் ஆர்வமும் ஏற்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை ! ராவணன் கதையில் சீதை ஏன் நாயகியாக இருக்க வேண்டும்? பொதுவாக கதையின் நாயகனாக தன்னை உணருவது அதனூடாக நாயகனின் கோபத்தையும், ஆசைகளையும் உணருவது பெரும்பான்மையான படம் பார்ப்பவர்களின் உணர்வு. இப்படம் அப்படி நாயகனாக நோக்கரை உணரவைக்கவில்லை. ஏனென்றால் கதையின்நாயகி வில்லனின் மனைவி. கதையின்நாயகி நாயகனுக்கு ஜோடியில்லை. எனவே நோக்கர்களுக்கு நாயகனின் உணர்வு வருவதில்லை. மாறாக அது அழகு சீதையின் ஜோடியும் வில்லனுமான ராமனாக தன்னை உணர செய்கிறது. (இல்லையயன்றால் எட்டி நின்று பார்க்க வைக்கிறது) இதன் மூலம் ராமனின் பீத்தல் பெருமையை பாதுகாத்த மணி, ராவணனை தீண்டத்தகாதவனாக காட்டி பழம்பார்ப்பன பெருமையை பாதுகாக்கிறார். ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் நடக்கும் ஆரியபார்ப்பன யுத்தத்தில், இது போன்ற எத்தனை மணிரத்னங்களை மனித சமுதாயம் கண்டிருக்கும் , அது சரி ஒரு வகையில் மணிரத்னம் இந்த கால வால்மீகி என்றால் வால்மீகி அந்த கால மணிரத்னம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா !.சரி இப்போது புஷ்யமித்ர சுங்கனின் வாரிசுகள் யாரென்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

அறிமுகம்

இந்த திரைப்பட மதிப்புரையை எழுதியது தோழர் விடுதலை. விடுதலை எனும் பெயரில் ஒரு வலைத்தளம் நடத்திவருகிறார். அதில் அரசியல் விழிப்புணர்வுக்கான கருத்து படங்களை, ஆசான்களின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

வலைத்தள முகவரி: http://vitudhalai.wordpress.com/

மின்னஞ்சல் முகவரி: vitudhalai@gmail.com


%d bloggers like this: