மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

 

“சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.

 

நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.

 

“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.

 

கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.

 

“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.

 

பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.

 

“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..

 

“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..

 

“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க” என்று அதட்டலாய் ஒன்று…

 

“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..” என்று மிரட்டலாய்…

 

“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…

 

“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..”  அதட்டலாய்…

 

“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…

 

“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…

 

முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.

 

குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம்.  கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.

 

வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.

 

அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.

 

பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.

 

மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.

 

அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.

 

“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை

 

அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர்.  அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.  

 

முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.

 

” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”

 

“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”

 

“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”

 

தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது.  முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.

 

குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.

 

முதல் பதிவு: தோழர் கார்க்கி

 

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா


உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 மிலி கேட்டாலும் 50 மிலி கேட்டாலும் கொஞ்சமும் சுணங்காம கொடுப்பாரு தோலர்.

அவர் எண்ணை விற்கும் போது வாசலில் வந்து அழைக்கிற அழகே தனி ” ஏனுங் கந்தசாமி கவுண்டர் தோலர் , எண்ணெய் வேணுங்களா” என்பார். செத்துக்கொண்டிருக்கும் கொங்குத்தமிழை எண்ணையோடு விற்றுக்கொண்டிருப்பார். ஊருல முக்காவாசிபேருக்கு அவரு ஏன் எல்லாரையும் தோலர்ன்னு கூப்பிடுகிறார் என்ற விசயம் தெரியாது. அவர் தான் சீபீஎம் கட்சியோட வட்டச்செயலாளர்.

பக்கத்து ஊரு சீபீஎம் வட்டச்செயலாளர், கட்ட பஞ்சாயத்துன்னு ரெண்டு டிராக்டர், 4 அடுக்கு மாடி வீடு கட்டிவிட்டார். ஆனால் எண்ணெய்த்தோலரோ இருந்த ஓட்டுவீட்டையும் அடகுக்கு வச்சிருக்கார். தோலரோட மனைவி திட்டுவாங்க “ஏய்யா உனக்கு பொழைக்கவே தெரியாதா? 3 பொட்டைங்க வயசுக்கு வந்து நிக்குது, முனுசாமியப்பாரு அவனுந்தான் உன்ர கட்சியில இருக்கான்  அவன் வூடென்ன? பங்களா என்ன? பொண்ணை 100 பவுன் போட்டு கட்டி கொடுத்திருக்கான், பயனுக்கு ஆட்டோ லூம் வச்சு கொடுத்திருக்கான், நீ என்ர வூட்லர்ந்து கொண்டுவந்ததையெல்லாம் தின்னுப்போட்ட”

மனைவியின் சொல் தோலரைச்சுடும், ஆனால் அவரால் ஏதும் பேச முடியாது ” என்ன செய்தோம் வீட்டுக்கு? முனுசாமி இத்தனைக்கும்  நான் கூட்டிட்டு வந்த பையன், அவன் இப்ப மாசம் ஆனா லச்சலச்சமா சம்பாதிக்குறான். நாம ஒண்ணைத்தியும் புடுங்கலீயே. மூணு பொட்டைங்க வயசுக்கு வந்து நிக்குதுங்க, என்ன செய்யறது?  பறயனா இருந்திருந்தா பரவால. அதுவும் வெள்ளாளக்கவுண்டான பொறாந்தாச்சு.  கவுரவத்தோட வாழணுமே ! தலைக்கு 30 பவுனுக்கு கொறயாம கேப்பானுங்க பரதேசிங்க” தன்னைத்தானே நொந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு ஒரே நிம்மதி சீபீஎம் -ன் வட்டச்செயலாளர் என்ற பொறுப்பு மட்டுமே. கண்டிப்பாய் புரட்சியை செய்யக்கூடிய கட்சியில் இருப்பதால் மன நிறைவு.

அவர் இளவட்டமா இருந்த காலத்துல ஊருல அவர் பார்க்காத போராட்டமில்லை, ஒட்டாத போஸ்டரில்லை. அவருக்கு இப்போது 50 வயசாயிடுச்சு, போன கமிட்டி கூட்டத்திலேயே “என்னால முடியல, என்னை வுடுங்க ” என்று சொல்லிவிட்டார். ஆனால் கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. அவருக்கு இரண்டு மகன்கள் ஒருவன் தனியரசு கட்சியிலும் மற்றொருவன் பெஸ்ட் ராமசாமி கட்சியிலும் இருக்கிறார்கள். இவர் கண்ணெதிரிலே பசங்க ரெண்டு பேரும் தண்ணியடித்துக்கொண்டு சண்டைபோடுவார்கள். போன முறை நம்ம எண்ணெய்த்தோலர் மாரியம்மனுக்கு 3 கிடா வெட்டுனப்பகூட ரெண்டு பேருக்கும் பயங்கர சண்டை.

அவர் அப்பப்ப வெளியூர்களுக்கு செல்வார், அப்போது சிலர் பேருந்துகளில் பிரச்சாரம் செய்வார்கள், சீபீஎம் கட்சியை விமர்சிப்பார்கள். இவர் புத்தகத்தை வாங்க மாட்டார், மனதில் நினைத்துக்கொள்வார் நான் எப்புடி எல்லாம் சவுண்டு விட்டவன் தெரியுமா? . நம்ம குப்புசாமி மகன் விஜி இவரிடம் கேள்வி கேட்டான் “பாராளுமன்றம் பன்றித்தொழுவம்னு லெனின் சொல்லியிருக்காரு, லெனின் பேரை சொல்லிகிட்டு பன்னிகூட   ஆடிகிட்டு இருக்கீங்களா?” இவர் புன்னகையை மட்டுமே உதிர்ப்பார்,.  இவர் என்ன சால்ஜாப்பு சொன்னாலும் விஜி ஏற்பதில்லை, என்னபண்றது ? தினமும் அவன் வீட்டை தாண்டி போகவேண்டியதிருக்கே. அவன் எப்போது தூங்குவானென்று காத்திருந்து பின்னர் செல்வார், அவன் வீட்டுக்கு வந்தால் கூட தன் மனைவியை அனுப்பி இல்லை என சொல்லச்சொல்லுவார்.

இப்படியே ஓடிக்கொண்டிருந்தது காலம், ஆண்டவன் இதுக்கும் ஒரு காலத்தை கொண்டு வந்துவிட்டான். ஆம் நாளைக்கு விலைவாசி உயர்வைக் கண்டித்து பீடிஓ ஆபீஸ் முன்னாடி ஆர்ப்பாட்டம். ஊரில் நம்ம எண்ணெய்த்தோலர் நோட்டீஸ் கொடுத்துக்கொண்டிருக்க, கெரகம் பிடிச்ச விஜி வந்து விட்டான். தோலர் எஸ்கேப் ஆக நினைக்கும் போது வசமாக பிடித்துக்கொண்டான் விஜி. பத்துபேர் முன்பு “சிறுதாவூர் பிரச்சினையில செயாவுக்கு எதிர்ப்புன்னு சொல்லுறீங்க, ஆனா போயஸ் கார்டனில குப்பை பொறுக்கிகிட்டு இருக்கீங்க, கோவிந்த சாமியை இப்ப கட்சி விரோத செயலில ஈடுபட்டதா சொல்லுறீங்க, என்ன கட்சிவிரோதம் ? மக்களுக்கு சொல்லுறதுக்கு என்ன தயக்கம்? எதும் தயக்கம்ன்னா பொறுக்கி தின்னுறதத்தவிர வேற என்ன இருக்கும்? அப்ப இருந்து இப்ப வரைக்கும் கருணா, எம்ஜிஆர், விஜயகாந்துன்னு போய்கிட்டே இருக்கீங்க” என்று மானத்தை வாங்கிவிட்டான். எண்ணெய்த்தோலருக்கு ஒரே அவமானம், இவனை சரிகட்ட ஒரே வழி நாளைக்கு ஆர்ப்பாட்டத்திற்கு வருகிற மாவட்ட செயலாளரிடம் கொண்டு போவதுதான் என்ற முடிவுக்கு வந்தார்.

“அந்தக் காலத்துல நாங்க கேட்கிற கேள்விக்கு “டாண் டாண்” னு பதில் சொல்லுவாரு அந்தத் தோலர். அவருகிட்ட எந்த நக்சலைட்டும் நிக்க முடியாது. ஒருமுறை நம்ம ஊருல ஒரு நக்சலைட் பதுங்கியிருந்தப்ப இவருதான் போலீசுக்கு தகவல் சொன்னாரு, ஏன்னா இடதுதீவிரவாதத்தை எந்த வகையில் வந்தாலும் ஏத்துக்கவே மாட்டோம்ன்னு சொல்லுவார். எங்களுக்கு அரசியல் வகுப்பு எவ்வளவு பவ்யமா பய பக்தியோட எடுப்பார் தெரியுமா? காலையிலேயே இராமாயண சொற்பொழிவோட துவங்கி அப்புறம் வர்க்கம், முதலாளி அப்படி போகும், கம்யூனிச கருத்துக்கள் ராமாயணத்துலேயும், மகாபாரதத்திலேயும் இருக்கறதா ஒரு தலைவர் சொன்னாராம், அவரு பேரு கூட மறந்துபோச்சு. அப்ப வாரத்துக்கு ஒரு வகுப்புன்னு இருந்தது பின்னாடி மாசத்துக்கு ஒண்ணுன்னு ஆச்சு அப்புறம் இப்ப வருசத்துக்கு ஒண்ணுன்னு ஆகி இப்ப நடக்குறதே இல்லை.

இதப்பத்தி மாசெ தோலர் கிட்ட கேட்ட போது அவர்  “இப்ப மக்கள் எல்லாம் ஆட்டு மந்தைகளாகிவிட்டார்கள், அறிவு இல்லை தோலர், யாரை ஓட்டுப்போட்டு தெரிவு செய்யணும்னு தெரியாத முட்டாள்கள்கிட்ட நாம் புரட்சி வேலை செய்ய வேண்டி இருக்கு, ஒருத்தணும் கட்சியில சேருவதில்லை.” விசனத்தோடு சொன்னார். கண்டிப்பாக விஜிக்கு ஆப்பு வச்சுடலாம் என்ற படி  அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை,
அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை, அவன் மூஞ்சியில என்ன வழியும் ? எண்ணை, ஒரு கட்டத்தில் தன்னையறியாமல் புரட்சியின் வேகத்தில் கத்தி விட்டார். அவன் மூஞ்சியில என்னா வழியும் ? எண்ணை. பயங்கரமாய் சிரித்தார். அது நடுநிசியைத் தாண்டிய இரவு நேரம்,

இவரின் சிரிப்பு அருகில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி விட்டது. அவரோ “அய்யயோ இந்த பாழாப்போனவனுக்கு பயித்தியம் புடிச்சுடுச்சு, அந்த பாழாப்போன என்னை பெத்த நாய் கேட்டாளா? எத்தனையோ பேரு என்னை கேட்டாகளே கூடப்பொறந்தவனுக்குத்தான்னு என்ன கட்டி வச்சாளே” என்று அலறத்தொடங்க, எண்ணெய்த்தோலர் புரட்சிக்காக திட்டுக்களை வாங்கிக்கொண்டு தூங்கினார்.

காலையில் ரொம்ப நாள் கழித்து ஆஞ்சனேயர் கோயிலுக்கு போய் ஒரு பூஜையை முடிக்கும் போது மனதில் நினைத்துக்கொண்டார் “இந்த கிரகம் பிடிச்சவனை நீ தான் மாத்தணும்”.  காரியம் கைகூடினால் 1008 ராமஜெயம் எழுதிபோடுவதாகவும் வேண்டிக்கொண்டார். இப்ப விஜி பார்த்தால் என்ன சொல்லலாம்? என்ற யோசனையில் பீடிஓ அலுவலகம் முன்னே சென்றார். கூட்டம் 40 பேர் வந்திருந்தார்கள் மாசெ டாடா சுமோவில் வந்தவுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. எல்லோருக்கும் தன் சொந்தப்பணத்தை எடுத்து டீ குடிக்க கொடுத்தார். எண்ணெய்த்தோலர் விஜியின் காதைக்கடித்தார்இது கட்சி வாங்கி கொடுத்த வண்டி, அங்க, இங்கன்னு போவோணுமில்ல

மாசெ தோலர் கிளம்ப தயாரான போது எண்ணெய்த்தோலர் விஜியை அவருக்கு அறிமுகம் செய்து விட்டு அமைதியானார். விஜி பல கேள்விகளை கொட்டினான். சிரித்தபடியே ” நேரமில்லை, இருந்தாலும் பதில் சொல்லுறேன்” என்ற படி ஆரம்பித்தார். “தம்பி, ரொம்ப டென்ஷனா இருக்கீங்க, மாவோயிஸ்டுங்க நக்சலைட்டுங்க எல்லாம், பாட்டாளிவர்க்க கட்சியான சிபிஎம் மீது அவதூறு கிளப்பறாங்க அதுக்கு பிஜேபி, முதலாளித்துவ பத்திரிக்கைகள் எல்லாம் கூட்டு, நம்ம பாரதத்துக்கு ஏத்தமாதிரி மண்ணுக்கேத்த புரட்சின்னு நம்ம பார்ட்டி சரியான வழியில தான் போவுது, புரட்சி  நடந்தா உழைக்கும் மக்கள் பயன்பெறுவாங்கன்னு எல்லாம் சேர்ந்து சதி பண்றானுங்க.

உங்க முதல் கேள்வி லால்கர் பத்தியது, அதாவது மேற்கு வங்காளத்துல நடக்குற எந்த உண்மையான செய்தியும் இங்க வர்ரதில்ல, அங்க மக்கள் சிபிஎம் பார்ட்டியை நேசிக்குறாங்க, பூஜிக்குறாங்க அதனாலதான் இத்தன வருசமா கட்சி இருக்கு, மாவோயிஸ்டுகளுக்கும் மம்தாவுக்கும் தொடர்பு, மாவோயிஸ்டுகளுக்கும் அத்வானிக்கும் தொடர்பு, எங்க கிட்ட ஆதாரம் இருக்கு. இந்தியா என்கிற பாரத பூமி இப்ப முதலாளித்துவ நாடு, அதுக்காக முதலாளிங்களோட கூட்டு சேர்ந்துதான ஆகணும்”

“ரெண்டாவது கேள்வி கேரளாவில், கர்னாடகத்தில, ஆந்திராவுல இனவெறியோட கம்யூனிஸ்டுகள் நடந்துக்குறாங்கன்னு… குறிப்பாக பாலாறு, பெரியாறு, காவிரி ஆறு பிரச்சினைகள்ல தமிழகத்துக்கு தோரோகம் பண்றாங்க ஒண்ணு புரிஞ்சுக்கோங்க ஒவ்வொரு பகுதிக்கேத்த மாதிரிதான் புரட்சி செய்யணும், மொத்தமா மத்தியிலேர்ந்து முடிவு எடுக்க முடியாது அது ஜனநாயகம் கிடையாது, யாரு யாருக்கு எது சரியோ அங்கங்க அப்படி நடந்துக்குவாங்க இதுல என்ன தப்பு?””

“மூணாவது கேள்வி, கோவிந்தசாமி பத்தி அது கட்சி ரகசியம், அதுக்கு மேல சொல்லக்கூடாது. அடுத்து நாடாளுமன்ற அரசியல் பத்தி, நாங்க எப்பவுமே தேர்தல் கூட்டணி தான் வச்சுக்குறோம், இதை புரட்சிக்கான கூட்டணின்னு சொன்னோமாஎன்ன? நீங்க நினைச்சுகிட்ட நானா பொறுப்பு? இன்னைக்கு மக்களோட பிரச்சினைகளை அரசியல் அரங்குல சொல்லுறதுக்கு யார் இருக்கா கம்யூனிஸ்டுகளைத்தவிர? கம்யூனிஸ்டு பாரம்பரியத்தை புரிஞ்சுக்கோங்க நடிகரா இருந்த எம்ஜிஆரை புரட்சித்தலைவர் ஆக்கியது யார்ன்னு தெரியுமா நம்ம தோலர் கல்யாண்குமார்தான், ஏன் புரட்சிதலைவிகூட எங்களால தான் ரெண்டாவதுமுறை ஆட்சி  செஞ்சாங்க. இதுவரைக்கும் வந்த ஒவ்வொரு முதல்வரின் நாற்காலியையும் அலங்கரித்தது மார்க்சிஸ்டு கட்சிகளின் ரத்த அணுக்கள் தான்,  இது கட்டுக்கோப்பான கட்சி, வட மாவட்டங்கள்ல அப்ப வன்னியர் சங்கம் ஆரம்பிச்சப்ப எல்லா கட்சியில இருந்தும் ஆளுங்க பிரிஞ்சாங்க ஆனா மாக்ஸிஸ்டுல ம்ம்ம்ம்ம்ம்ஹும்” ஒரு புரட்சிக்கான அலை அடித்து ஓய்ந்தது போலிருந்தது.

மேற்கொண்டு விஜி சொல்ல வாயெடுத்தான். எனக்கு நேரமாயிடுச்சு கிளம்புறேன் என்று சுமோவுக்குள் பாய்ந்தார் மாசெ தோலர். விஜி எண்ணெய்த்தோலரிடம் பேச முற்பட்ட போது ” எதுவும் எங்கிட்ட கேக்கேதே” என்றபடி நகர்ந்தார். விஜி   ” உங்க மாசெ சொல்லுறத கேட்டால் உங்களுக்கு சிரிப்பு வரலை?,  நான் என்ன சொன்னாலும் நீங்க கேக்க மாட்டீங்க, நடிகரை புரட்சி தலைவரா மாற்றியது கல்யாண்குமார் இல்லை அது கல்யாண சுந்தரம், பேச்சு போக்கில நடிகர் பேரை சொல்லிட்டாரு போல” என்றான். எண்ணெய்த்தோலரின் மூஞ்சியில் டன் கணக்கில் எண்ணை வழிந்தது. என்ன வழிஞ்சது மூஞ்சியில ? என்ன வழிஞ்சது மூஞ்சியில? எண்ணை. அதுவரை அவர் விற்ற எண்ணை எல்லாம் அவர் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

பின்னுரை

கலகத்திற்கு எப்போதும் முன்னுரை தேவையே, காரணம் கலகம் என்பது ஒரு வர்க்கத்திற்கோ, இனத்திற்கோ சொந்தமானதல்ல. ஆனால் இந்தக்கலகம் பாட்டாளைவர்க்கத்திற்கென கலகத்தை படைக்க விரும்புகிறது. மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு தீர்வாக கலகம் தேவைப்படும் சூழலில் சமூகமோ அக்கலகத்தை அகிம்சையான அமைதிகளால் கொன்று கொண்டிருக்கிறது. காலம் எப்போதும் இப்படியே இராது, காலம் வருமென்பதற்காக நாமும் காத்திருக்க முடியாது காலச்சக்கரத்தை நமக்காய் சுற்றுவோம். முதலாளிகளின் தேவைக்காக சுற்றப்பட்ட சக்கரம் நமக்காக சுற்றப்படவேண்டும். கூன் வளைந்த நமது முதுகுகள் நிமிரும் போது முதலாளிகள் பாசிசவாதிகள் வீழ்ந்து கிடப்பார்கள்.

என்னடா! ஒன்றும் தேராத கதைக்கு இந்த உலைகையே மாற்ற சொல்லுவது சிலருக்கு வியப்பாய் தோன்றலாம். நான் நேர்த்தியான எழுத்தாளன் அல்ல, அழகாய் கவிதைகளை எடுத்தியம்பும் கவிஞனும் அல்ல, நாவிலே பாலிடாயில் கலந்த தேனை ஓடவிடும் பேச்சாளனும் அல்ல. ஒரு சாதாரணமான மனிதன் அவ்வளவுதான். ஆயிரம் பரிசுகள் பெற்ற கவிதையாகட்டும், பல்லாயிரம் வன்ணங்களை கொண்ட ஓவியமாகட்டும் அவை மக்களுக்காக படைக்கப்படாவிட்டால் அவை வெறும் குப்பைகளே, மாறாக போபாலில் பாதிக்கப்பட்ட குழந்தையின் கால்களைப்போன்ற ஒட்டி வெட்டப்பட்ட நறுக்கப்பட்டவை சில எழுத்துக்கள் ஆயினும், உழைக்கும் மக்களுக்காக கிறுக்கப்பட்ட கோடுகளாயினும் சரி அவை அம்மக்களுக்காக இருப்பின் அவையே உயர்ந்தவையே, இதனால் நான் வறட்டுவாதியாகக்கூட பரிகாசிக்கப்படலாம். பிழைக்கத்தெரியாத நபர், முட்டாள் எனவும் எனவும் கேலிக்குள்ளாகலாம்.

உழைக்கும் மக்களுக்காக போரிடும் ஒரு புரட்சிகர இயக்கத்தின் ஆதரவாளனென்பதில் உள்ள பெருமை, அதை யாரும் என்னிடமிருந்து தட்டிவிட முடியாது. என்னுடைய எழுத்துக்கள் / படைப்புக்கள் யாவும் எனக்கு சொந்தமல்ல, அது இச்சமூகத்தின் பிரதிபலிப்பே. இச்சமூகத்தின் குழந்தையாகிய எனக்கு இந்த சமூகத்தை விடுவிக்க வேண்டிய வேண்டியதன் முக்கிய வேலை இருக்கிறது. அதை விட உங்களுக்கு முக்கிய வேலை இருக்கிறதா என்ன?

அறிமுகம்

இந்த சிறுகதையை எழுதியது தோழர் கலகம். போலிகம்யூனிஸ்டுகளை கிழித்து தோரணமாய் தொங்கவிடுவதில் கதை, கவிதை உரை நடை என அனைத்து வடிவங்களையும் பயன்படுத்தி கூர்மையான விமர்சனங்களை கலகம் எனும் வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். வாழ்வின் யதார்த்தமான நிகழ்வுகளை சிவந்த கண்ணோட்டத்தில் வழங்கிய பதிவுகள் சிறப்பானவை.

வலைத்தள முகவரி: http://kalagam.wordpress.com/

மாலுமியின் க‌தை

அண்மையில் ந‌ண்ப‌ர் மாலுமி ஒரு க‌தையை குறிப்பேடில் எழுதியிருந்தார். ப‌திலுக்கு நானும் அவ‌ர் க‌தையை முடித்துவைத்திருந்தேன். ஆனால் குறிப்பேட்டில் நீள‌மாக‌ போவ‌தால் அதை ம‌றுப்புரையில் கொண்டுவ‌ந்துள்ளேன்.(செங்கொடி.மல்டிபிளை தளத்தில்)

 

maalumi wrote on Nov 9, edited on Nov 9

 

தாங்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்தால் இதற்கு விளக்கம் தரவும்

இறைவன் இருந்தால் நல்லா இருக்கும் !

இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண மனிதனாக மாற்றிக் கொண்டு கீழே வருகிறார். அருகில் இருக்கும் ஆலயத்தின் மணி ஓசைக் கேட்க, தன்னை அழைப்பதை உணர்கிறார். உள்ளே நுழைகிறார், பக்தர்களுடன் வரிசையில் நிற்கிறார், அர்சகர் இவருடைய அருகில் செல்லும் போது

இறைவன் : நான் பகவான் வந்திருக்கேன்

அர்சகர் : நட்சத்திரம் சொல்லுங்கோ

இறைவன் : நட்சத்திரமா ? எனக்கு பிறப்பே இல்லை

அர்சகர் : லோகத்துல பிறப்பு இல்லாதவர் இருப்பாரா ? அநாதையா ? பரவாயில்லை…பகவான் பேருக்கு அர்சனைப் பண்ணிடுறேன்… அப்பறம் ஷேமமாக இருப்பேள். போய் அர்சனை தட்டும் சீட்டும் வாங்கி வாங்கோ

*******

இறைவன் வந்த வழியாக திரும்பி நடக்கிறார், அருகே வாசலில் செருப்பு பாதுகாப்பாளரிடம் செல்கிறார்

பாதுகாப்பாளர் : சாமி இன்னா வோணும்

,

இறைவன் : நான் தான் சாமி

பாதுகாப்பாளர் : உன் பேரு சாமியா, ரொம்ப களைச்சு போய் இருக்கே…தண்ணி குடிக்கிறியா

?

இறைவன் : அதெல்லாம் வேண்டாம்

பாதுகாப்பாளர் : வேற இன்னா வோணும் ? வீட்டாண்ட போன பையனைக் காணும், சித்த இப்பிடி குந்திகினு இரு யாராவது செருப்புப் போட்டால் வாங்கி வையி, வயித்த கலக்குது போய்டு வந்துடுறேன் என்று சொல்லி கள்ளாவைப் பூட்ட சாவியைத் தேடுகிறார்

இறைவன் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்

பாதுகாப்பளர் : ஐயே…இது பூட்ட கேசு

*******

அங்கே அருகில் இருந்த க்ளினிக்கைப் பார்க்கிறார், டாக்டர் பத்மனாபன் என்று போட்டிருந்தது

,

மூடப் போகிற நேரம் யாரும் பேசண்ட் இல்லை, இறைவன் டாக்டரைப் பார்க்கனும் என்றதும் ஒரு அம்மா உள்ளே போகச் சொல்லுது. டாக்டர் பக்தி பழமாக இருந்ததுடன், அன்று பிஸ்னஸ் முடியும் நேரம் என்பதால் சாமி படத்திற்கு கற்பூரம் காட்ட ஆயத்தமாகும் வேளையில், இறைவனைப் பார்த்துவிடுகிறார்

டாக்டர் : உட்காருங்க… உங்க பேரு

இறைவன் : நான் தான் இறைவன்

டாக்டர் ; நல்ல பெயர், இறையன்பு, இறையடியான் போல உங்க பேரு இறைவனா

?

இறைவன் : ஆமாம்

டாக்டர் : உங்களுக்கு என்ன செய்து

இறைவன் : எனக்கு ஒண்ணும் செய்யல, நான் தான் எல்லோருக்கும் இறைவன்

டாக்டர் இறைவனின் கையை நீட்டச் சொல்லி நாடியைப் பார்க்கிறார், மனதுக்குள் எல்லாம் சரியாகத் தானே இருக்கு…பின்னே… யோசித்தவாறு

டாக்டர் : நீங்க தப்பான டாக்டரிடம் வந்திருக்கிங்க, பக்கத்து தெருவுல பரந்தாமன் என்று ஒருவர் இருக்கிறார், எனக்கு நண்பர் தான் போன் போட்டுச் சொல்கிறேன், மன நல சிகிச்சை யெல்லாம் அவர் தான் கொடுப்பார்

*******

இறைவன் ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்ப…..அருகில்ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர சுவாமிஜி சரணாகதி ஆஸ்ரமம்” என்ற பெயர் முகப்பில் தாங்கி இருந்த ஒரு ஆசிரமம் போன்ற இடம், பஜனைப் பாடல்கள் ஒலிக்க பத்தி மணம் கமழந்தது….அந்த வீட்டிற்குள் நுழைகிறார்…”

எல்லோரும் பக்தி பெருக்குடன் மெய் மறந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பாடிக் கொண்டு இருக்கின்றனர்

ஆஸ்ரம ஸ்வாமிஜி , எல்லோரையும் சகஜ நிலைக்குத் திரும்பச் சொல்கிறார். வாசலில் நிற்கும் இறைவனை சைகையால் அங்கே ஓரமாக அமரச் சொல்லிவிட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்…..காமமே கடவுள்….காமத்தை முறையாக பெறுபவனும்…தருபவனும் இறைவனை தரிசிக்கிறான்…இல்லை இல்லை…இறைவனே அவன் தான்…இறைவனாகவே ஆகுகிறான்ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது

,

அருகில் இருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார் இறைவன்

பக்தர் : புதுசா வந்திருக்கிங்களா

?

இறைவன் : ஆமாம்

பக்தர் : யார் தேடினாலும் கிடைக்காத இறைவனின் அவதாரம் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர ஸ்வாமிகள்… இன்று இவர் இங்கே ரகசியமாகத்தான் வந்திருக்கிறார்…சொல்லிவிட்டு வந்தால் பக்தர் கூட்டம் கட்டுப்படுத்த முடியாது…குறிப்பாக பெண்களின் கூட்டம்….பகவான் அல்லவா

?

இறைவன் : நான் கூட இறைவன் தான்

பக்தர் : எங்க வந்து என்ன சொல்றிங்க..,பாபம் பண்ணிடாதிங்க…நாமெல்லாம் மனிதர்கள்…அவர் ஒருவர் தான் பகவான்… அவர் தேஜஸ் மின்னுவதைப் பாருங்கள்

இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது

சாமியாரின் அருளுரையை கேட்டு பரவசமடைந்தவர்கள்

சர்வேஸ்வர பகவானே….நாங்கள் ஜென்மம் தொலைத்தோம்…புண்ணியம் பெற்றோம்” என்கிறார்கள்

நல்ல வேளை ஒரு பெண்வேடம் எடுத்து நான் வரவில்லை…தப்பினேன் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார்…. இறைவன்

*******

அருகில் இருந்த இறைமறுப்பாளர்களின் தலைவரின் பெரிய பங்களா போன்ற இல்லத்துக்குள் அனுமதி கேட்டு காத்திருந்து உள்ளே செல்கிறார்

இறைமறுப்பாளர் : என்ன விசயமாக வந்திருக்கிங்க

இறைவன் : இறைவன் உண்டு, நான் தான் இறைவன்

இறைமறுப்பாளர் : முதலில் நீங்கள் சொல்வது பொய், அப்படி ஒன்று இல்லவே இல்லை

இறைவன் : நான் தான் உங்கள் எதிரில் இருக்கிறேனே, நான் உண்மை

இறைமறுப்பாளர் : அப்படியென்றால் ஒன்று கேட்கிறேன்….. ஒருபக்கம் பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஏழைகள் இருக்கிறார்கள் ஏற்றத் தாழ்வு ஏன் ? ஏழைகள் வஞ்சிக்கப்பாடுவது ஏன்

?

இறைவன் : உங்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு 500 கோடி…நீங்கள் நினைத்தால் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறீர்கள், இன்றைய தேதியில் எதிர்காலத்தில் உங்கள் பேரனுக்கு வாரிசு இருக்குமா இல்லையா என்றே உங்களுக்கு தெரியாது…உங்கள் சொத்துக்களெல்லாம் 4 ஆவது தலைமுறையால் தின்றே அழிக்கப்படுமா என்று கூட உங்களுக்கு தெரியாது, இருந்தாலும் பேராசையால் சொத்துக்களை குவித்தே வருகிறீர்கள், நீங்கள் மனது வைத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்….பணக்காரர்களின் சுரண்டலால் தானே ஏழை பரம ஏழை ஆகிறான்

இறைமறுப்பாளர் : இன்கெம்டாக்ஸ் ஆலுவலத்திலிருந்து வந்திருக்கிங்களா ? சொத்துவிபரமெல்லாம் சரியாகச் சொல்றிங்க…நாளைக்கு ஆடிட்டரிடம் பேசுங்க…இப்ப கிளம்புங்க

*******

அங்கிருந்து கிளம்புகிறார்… அருகே ரயில் தண்டவாளம்

ஒருவர் பரபரப்புடன் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்… ரயில் நெருங்கவும் தண்டாவளத்தில் பாய முயன்றவரை இழுத்துவிட்டு…. தனது சக்தியால் அவரை சாந்தமடைய வைத்துவிட்டு

இறைவன் : நான் இறைவன் சொல்லுங்க உங்களுக்கு என்ன கஷ்டம்…

தற்கொலை ஆசாமி : நகை பணமெல்லாம் சூதாட்டத்தில் போய்விட்டது கடன் தொல்லை அதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன்…நீங்கள் இறைவன் என்றால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுங்கள்…இல்லை என்றால் என்னை சாகவிடுங்கள்.

இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்… அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்

?

தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்…இல்லை என்றால் போய்விடுங்கள்… எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை… என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்

*******

அங்கிருந்து கிளம்ப

தூயத் தமிழில் ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து செல்ல அவரின் அருகில் சென்று இறைவன்

இறைவன் : நானே இறைவன் அனைத்தையும் ரட்சிப்பவன்

செந்தமிழர் : ரட்சிப்பவன் என்பது வடசொல், காப்பவன் என்று சொல்லி இருக்க வேண்டும், செந்தமிழ் பேசாத நீங்கள் இறைவனாக இருக்க முடியாது.

திடுக்கிட்ட கடவுள்… சொல்லிக் கொள்ளமால்

*******

அங்கே, அருகில் ஒரு ஜோதிடரின் வீட்டை அடைகிறார்

இறைவன் : நான் இறைவன் வந்திருக்கிறேன், உண்மையான இறைவன்

ஜோதிடர் : எனக்கு சனி திசையின் ஆரம்ப நாட்கள் நடக்கிறது, இப்போது இறைவன் எனக்கு முன்பு வரும் கிரக அமைப்பு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியகாரனுக்கு நான் ஜோதிடம் பார்ப்பது இல்லை…கிளம்புங்க

கிளம்பினார்

,

*********

வழியில்

,

ஒரு தாயின் இடுப்பில் இருந்த குழந்தை இறைவனைப் பார்த்து முகம் மலர… மிக்க மகிழ்ச்சியுடன் டாட்டா சொல்லியது

சும்மா இரு…. உங்க அப்பாவுக்கு காட்டச் சொன்னால் காட்ட மாட்டே…..கண்டவங்களுக்கும் டாட்டா காட்டனுமா ?” அந்த தாய் அதனை அதட்டினாள்….இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்

குழந்தையின் முகத்தில் இருந்த புன்னகையில் கிடைத்த திருப்தியுடன் இறைவன் மறைந்துவிட்டார்.

**********

இறைவனைத் தேடுகிறவர்கள் அனைவருமே….ஓவியத்திலும் கல்லிலும் வடித்திருப்பது போன்று இறைவன் இருப்பான் என்றே நினைக்கிறார்கள்.
சாதரண மனிதனாக வெறும் கையோடு வந்தால் எவரும் உணரக்கூடிய நிலையில் கூட இல்லை. அப்படியே முருகனாகவோ வேறு எதோ ஒரு கடவுளாக முன் தோன்றினாலும் போட்டிருக்கும் நகையெல்லாம் ஒரிஜினலா என்று அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவர், இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.

இறைவன் இல்லை என்போரும்….தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை…இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்… நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்

maalumi

 

senkodi wrote on Nov 10

 

நண்பர் மாலுமி

,

இறைவன் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற வாக்கியத்தை ஒருவன் பயன்படுத்தினால் இறைவன் இருப்பு குறித்த தன்னுடைய கருத்தை அவன் மறைக்கிறான் என்பது பொருள்.

இறைவன் குறித்து நீங்கள் எழுதியுள்ள கதை முழுமையடையாமல் இருக்கிறது. இதோ நான் முழுமையடையச்செய்கிறேன்.

அந்த இறைவன் தற்போது ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டின் வீட்டிற்கு சென்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார்.

அமருங்கள், உங்கள் பெயர் தான் கடவுள் என்பதா? :கம்யூனிஸ்ட்

ஆம் : கடவுள்

இந்த ஏழை பணக்காரன் குறித்து…..? :கம்யூனிஸ்ட்

பணக்காரர்கள் சொத்து ஆசையால் பகிர்ந்தளிக்க மறுப்பதே ஏழ்மையின் காரணம். : கடவுள்

 

ஏழையானாலும் பணக்காரனானாலும் அவர்களை செயல் பட வைப்பது

நீங்கள் தானே

, உம்மையல்லாது அவர்களால் தனித்து செயல் பட முடியுமோ? :கம்யூனிஸ்ட்

அது…வந்து….. : கடவுள்

சரி போகட்டும், நீங்கள் தான் காடு, மலை, பூமி ஏன் மொத்த அண்டவெளியையும் படைத்தது நீங்கள்தான் என்று பூமியில் மனிதர்கள் பிதற்றித்திரிகிறார்களே, மெய்யாகவே நீங்கள் தான் மொத்த அண்டவெளியையும் படைத்தீர்களென்றால் அப்படி படைப்பதற்கு முன்னால் எங்கு இருந்தீர்கள்? :கம்யூனிஸ்ட்

கடவுள் என்ற பெயர்கொண்ட அவர் காற்றில் மறைந்து காணாமல் போய்விட்டார்.

நண்பரே கற்பனை கதைகளுக்கு விளக்கம் கேட்பதைவிட உங்கள் மூடநம்பிக்கைகளை ஒதுக்கிவைத்துவிட்டு நேரடியாக பூமியையும், மக்களையும் பாருங்கள், உங்களிடமிருந்து கடவுள் காணாமல் போய்விடுவார்.

 

உங்கள் வாக்கிய அமைப்பு நீங்கள் ஒரு முஸ்லீம் என்று காட்டுகிறது, உள்ளே வந்து மறுப்புரைகள் (மதம்)எனும் தலைப்பிலுள்ள பதிவுகளுக்கும், அதன் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முயலுங்களேன்.

 

 

 

தோழமையுடன்
செங்கொடி

செந்தீ

உயர்ரக தொழில்நுட்பத்துடன் தனித்தனியாய் பிரித்து வைக்கப்பட்ட ஸ்பீக்கர்களிலிருந்து மெருகூட்டப்பட்ட இசை மென்மையாய் அதிர்ந்துகொண்டிருக்க எதிரே சன் டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் கொஞ்சம் கனமாய் சாப்பிட்டுவிட்டோமோ என்ற எண்ணத்துடன் சோபாவில் நன்றாக சாய்ந்து காலை நீட்டி டிவி பார்த்துக்கொண்டிருந்தார் காதர்பாய்.

“ஸலாமலேக்கும்” சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகுமான் பாய்.

“வாலேக்கும் ஸலாம், வாங்க பாய் பார்த்து நாளாச்சு. உக்காருங்க” சோபாவில் இடம் கொடுத்தார், உள்ளே மனைவிக்கு குரல் கொடுத்தார், “அய்சா அண்ணன் வந்துருக்காங்க பாரு, குடிக்கிறதுக்கு கொண்டா”

“ம்…ம்” பெருமூச்சுடன் ஆரம்பித்தார் ரகுமான்பாய். “நாம ரெண்டு பெரும் சேர்ந்து சுத்தாத இடமே கிடையாது இந்த ஊர்ல. இப்ப சாப்பிட்டுட்டு தூங்குற நேரம் போக மத்த நேரமெல்லாம் டிவிக்கு முன்னால தான் பொழுது போகுது”

“ஆமாமா, ஒரே தெருவுல பத்து வீட்டுக்கு முன்னபின்ன இருந்தாலும் இப்படி உக்காந்து பேசி மாசக்கணக்கா ஆவுது. மூணு மாசத்துக்கு முன்னால முக்கடி வீட்டு அம்சா மவன் நிக்காவுல பேசிக்கிட்டோம்” நண்பனின் பேச்சை ஆமோதித்தார் காதர்பாய்.

“ஆமா பாய் உங்க பையங்க நல்லா இருக்காங்களா? போன் போடுராங்களா? எப்ப ஊருக்கு வர்ராங்க? மூத்தவன் வந்துட்டு போய் ஒரு ரெண்டு வருசம் இருக்குமா?”

“ஆவுது ஒண்ணேமுக்கால் வருசம் ஆவுது வர்ற நோம்புக்கு ஊர் வர்றதா சொல்லியிருக்கான். முன்னெல்லாம் கடிதம் போடுவாங்க. போன் வந்ததுலருந்து ஒடனுக்குடன் பேசிரலாம்ல. அதுவும் இந்த செல்போன கண்டுபுடுச்சாங்க சம்பாதிக்குறதுல கால்வாசி போனுக்குத்தான் போகுது”

“என்ன செய்ய பாய், நிக்காவை பண்ணிட்டு கண்காணாத தேசத்துல போய் கிடக்காங்க அப்பப்ப பேசிக்கிட்டா தான ஆறுதலா இருக்கும்”

“என்ன வெளிநாடு. நம்ம வாப்பாமார் பர்மா ரங்கூன்னு போனாங்க, நாம சிங்கப்பூர் மலேசியான்னு போனோம், நம்ம புள்ளைங்க சௌதி துபாய்ன்னு போறாங்க, நம்ம பேரங்களுக்கு அல்லா என்ன எழுதிவச்சுருக்கானோ”

“ஏன் பாய் உங்க இளைய பையந்தான் இஞ்சினீயருக்கு படிச்சிருக்கான, ஊர்ல ஏதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணக்கூடாது? இப்ப மூணரை சதவீதம் இடஒதுக்கீடு கூட வாங்கிட்டாங்களே”

“எங்க, வாழ்க்கை பூரா இங்க இருந்து சம்பாதிக்குறதவிட துபாய்க்கு போனா பத்து வருசத்துல அதிகமா சம்பாதிச்சுடலாம்னு துபாய்க்கு போனான். எப்ப எட்டு வருசம் ஆவுது, இதோ இந்த வீடு கட்டுனது தான் மிச்சம்” சலித்துக்கொண்டார் காதர்பாய்.

“என்ன செய்யுறது பாய். நேத்து இருந்த மதிரியா இன்னிக்கு விலைவாசி இருக்குது. பத்து வருசத்துல சம்பாதிச்சுட்டு வீட்டுல வந்து செட்டிலாயிடலாம்னு பாத்தா. காலம் பூரா வெளிநாட்டுல இருந்துட்டு காலம் போன காலத்துல ஊருக்கு வந்தா இருக்குற மிச்சத்தையும் சுகருக்கும், பிளட் பிரஷருக்கும் செலவளிக்க வேண்டியிருக்கு”

“எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிச்சாலும் சம்பாதிச்சது நம்ம கையில நிக்கவா செய்யுது?”

“நாம நெனச்சு என்ன செய்ய அந்த ரப்பு நெனக்கணுமே. அவன் யாரை நெனைக்குறானோ அவருக்குத்தான் அவனோட ரஹ்மத்த கொடுப்பான்”

“சரியா சொன்னீங்க பாய். அவன் எழுதிவச்சபடி தான எல்லாம் நடக்கும்.அப்படியும் இப்படியும் நாம புலம்புனா ஆகுறதென்ன. நம்மள படைக்குறதுக்கு முன்னே நடக்கப்போறத ஒன்ணொன்ணையும் எழுதிவச்சுட்டான், அதுபடி தான எல்லாம் நடக்கும்”

“ஆமாமா அவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கும். இப்பக்கூட பாருங்க, முஸ்லீம்கள் போராடி இடஒதுக்கீடு கெடச்சுருக்குது, ஊருக்கு நூறு தர்கா இருந்தது மாறி தொழுகைக்கு கூட்டம் கூடுது. எல்லாம் அவன் செயல்”

“ஆமா பாய் உங்க பையன் நாலஞ்சு மாசமா ஊருலயே இருக்கானே திரும்ப போகலியா?”

இதை கேட்டதும் ரகுமான்பாயின் முகம் மாற்றமடைகிறது. “அதை ஏன் கேக்குறீக” என்று இருக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறத்தொடங்கினார். “கடைசி பையனாச்சேன்னு அவன் விரும்புன பொண்ணையே கட்டிவச்சேன். சேப்பு கச்சிக்காரன் தங்கச்சி வேண்டாம்னு எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் கேக்கல. ஆரம்பத்துல நல்லத்தான் இருந்தாங்க. இப்ப மருமக உண்டாயிருக்கா. வெக்கேசன்ல வந்தவன், குழந்தை பிறந்தப்புறம் போறேன்னுட்டு இங்கயே இருந்துட்டான். சந்தோசமாத்தான் இருந்தாங்க. பிறக்கப்போற குழந்தைக்கு என்ன பேர் வைக்குறதுண்ணு ரெண்டு பேருக்கும் சண்டை. “A” யில ஆரம்பிக்குற பேர் வச்சாத்தான் எங்க போனாலும் ரிஜிஸ்டர்ல முதல் பத்து பேருக்குள்ள வரும்ணு ஆண்குழந்தையிண்ணா அன்சாருல் அல்தாஃப்ன்னும் பெண்குழந்தையிண்ணா அஸ்வத்நிஸான்னும் அழகான பேர எம்பையன் சொல்றான். ஆனா அந்தப்பொண்ணு எந்தப்பேர் வச்சாலும் தமிழ்லதான் வைக்கனும்னு சொல்லுது. என்னா திமிர் பாத்தீங்களா?”

“என்ன தமிழ்ல பேர் வைக்குறதா?” காதர்பாய் அதிர்ச்சியடைந்தார்.

“பொட்டக்கழுதைங்க கட்டுனவன எதுத்துப்பேசுற அளவுக்கு துணிஞ்சுட்டுதுக என்ன செய்றது”

“என்ன பேசுதீங்க பாய் நீங்க. அடிச்சு மூலையில போடாம, பேசிக்கிட்டிருக்கீங்க பேச்சு” காதர்பாய் ஆவேசப்பட்டார்.

“ந‌ல்லாப்பா……..ந‌ல்லாப்பா” ரகுமான்பாயின் பேரன் ஓடிவந்தான். “சாச்சாவுக்கும் சாச்சிக்கும் சண்டை”

வெடுக்கென எழுந்தார். காதர்பாயும் கூடவே கிளம்பினார்.
** ** ** ** ** ** **

அந்தப்பெண் தரையில் அமர்ந்திருந்தாள். வாங்கிய அடியின் வலியும் அவமானமும் கண்ணீராய் வழிந்து கன்னங்களில் உறைந்திருந்தது. கண்களில் மட்டும் சீற்றம் பாவியிருந்தது.

“பெயர் மட்டுமல்ல பிறக்கும் குழந்தையின் வளர்ப்பும் என் விருப்பபடியே இருக்கும்” அந்தப்பெண்ணின் கண்களில் செந்தீ ஒளிர்ந்தது.

கலைச்சொற்கள்
‍‍‍௧) ஸலாமலேக்கும், வாலேக்கும் ஸலாம் = அஸ்ஸலாமு அலைக்கும், வா அலைக்கும் ஸலாம் = இஸ்லாமிய முகமன்.
௨) நிக்கா = நிக்காஹ் = திருமணம்.
௩) ரப்பு = ரப் = இறைவன், காப்பவன்.
௫) ரஹ்மத் = ஆண்டவனின் அருள்.
௬) தர்கா = இஸ்லாத்தில் இல்லாததாக கருதப்படும் அனால் முஸ்லீம்களிடம் இருக்கும் வழிபாட்டுமுறை.
௭) தொழுகை = இஸ்லாத்தின் வழிபாட்டுமுறை
௮) நல்லாப்பா = அப்பாவின் அப்பா
௯) சாச்சா சாச்சி = சிற்றப்பன் சிற்றன்னை.

நாய்க்கர்

கொழந்தசாமி, பெரிய வூட்டுக்கு அமெரிக்காவுலேந்து பெர்சா பார்சல் வந்துச்சின்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு எதுனாச்சும் கொடுத்திருப்பாங்களே? சும்மா சொல்லுயா நாங்க கேக்க மாட்டோம்!

“”தோ! கையில இந்த நாயதான் கொடுத்திருக்காங்க. எல்லாந் தெரிஞ்சு கேக்குறியே.. ஊம், வாய்தான் வாழப்பழம் கை கருணைக்கிழங்கு. போவியா” டீக்கடை வாசலில் மூங்கில் தூணில் சுண்ணாம்பை ஒரு விரலால் தடவிக்கொண்டே சுப்பையனை நிமிண்டி விட்டான் கோபு.

“””என்னய்யா இப்புடி சொல்ற தோட்டம் தொறவு சாவி, காரு, கொட்டா சாவி, போரு கொட்டா சாவி.. எல்லாம் உன் கையுலதான்ங்குறாங்க..” நீட்டி முழக்கினான்.

“”ஏன் நாய்க்கரு வூட்டு பீரோ சாவியே எங்கிட்டதான்னு சொல்லேன். ஒன் வாய்முகூர்த்தம் பலிக்கட்டும்” பேசிக்கொண்டிருக்கும் போதே, இறுகப் பிடித்திருந்த சங்கிலியை இழுத்த படியே நாய் கடைக்குள் போகப் பாய, குழந்தைசாமி தடுமாறிப் போனார்.

“”யோவ் என்னயா இது ஆளையே இழுத்துத் தள்ளிடும் போலருக்கு, ஏய்! ஸ்! அமெரிக்காவா சும்மாவான்னேன்.”

“”பின்னே அது நாய் மாதிரியா இருக்கு, கன்னுக்குட்டி சைசுக்கு இருக்கு, யோவ் இழுத்துப் புடிய்யா. இருக்குற எலும்ப இது லாவிடப் போகுது” சுப்பையன் தள்ளி ஓடினான்.

“”தோ.. தோ.. பிசி.. பிசி.. இங்க வா.. இத இழுக்க நாமே ஒரு கிலோ கறி திங்கணும்டா கோபு”

“”என்னயா பிஸி, பிஸிங்குற.. என்னா பேரு அது?”. “”அது என்னமொ நாய்க்கரு அப்படிதான் கூப்புடுவாரு. அது என்ன பிஸியோ.. பீசியோ… எவனுக்கு வாயில நொழையுது. வரட்டா! டீக்கடைல நாய வச்சிட்டு நின்னேன்னு எவனாவது போட்டு வுட்டா அந்தாளு வள்ளுன்னு பாய்வாரு” சுற்றுமுற்றும் ஜாடை பார்த்துக் கொண்டார் குழந்தைசாமி.

“”சரி எரைப்பு, ஆஸ்த்துமான்னியே இப்ப எப்படி இருக்கு?”

“”காலங் காட்டியும் நாய மேய்க்க எழுந்திருச்சா பனி ஒத்துக்காம எரப்பு புடுங்கி எடுக்குது. லேட்டா போனா அந்தாளு புடுங்கி எடுக்குறாரு. நாய பாக்குறதா? நாய்க்கர பாக்குறதான்னு லோல் படுறேன். மாசம் இந்த அறுநூறு ருவாய்க்கு தோட்டம், காரு கொட்டா, போரு கொட்டா… பத்தாததுக்கு நாய்க்கரம்மாவுக்கு கட கண்ணிக்கு போவணும். புள்ள ஒழுங்கா இருந்தா வயசான காலத்துல எனக்கிது தேவையா? சொல்லு! ”

“”நாகப்பட்டிணத்துல ஒரு பாய் மருந்து தர்றாராமே! போய் பாக்குறதுதானே.”

“”எல்லாம் பாத்தாச்சு கோபு… இன்னும எமன போய் பாக்க வேண்டியதுதான். ஏதோ தெனம் கடத்தெருவுல இந்த மாட்டுக்கறியும், சூப்பும் உள்ளாற வுட்டா தேவலாம் போல இருக்கு. நேரம் போவுது வரேன்.”

கிழக்கு மேற்காக, நாய் குழந்தைசாமியைப் பிடித்து இழுக்க “”அவுத்து வுட்டா உனக்கும் எனக்கும் தேவலாந்தான். அப்பொறம் நாய்க்கரு உன்னையும் என்னையும் வுட்டுட்டு தேட மாட்டாரு ஆமாம்!” பேசிக்கொண்டே வீட்டை நோக்கி வருவதைப் பார்த்த நாய்க்கர் புருவத்தை நெரித்து கூர்ந்து நாயைக் கவனித்தார்.

“”என்னடா பிஸிய ஏதோ திட்டிகிட்டே வரியா?”

“”அய்யய்யோ அதெல்லாம் இல்லீங்க, அங்க இங்க ஓடாத அய்யா தேடுவிங்கண்ணு…” வார்த்தையை முழுவதுமாக முடிக்காமல் பணிவுடன் வளைந்து சங்கிலியைக் கழட்டிவிட, தயங்கி நின்று வெளியே திரும்பிப் பார்த்த நாயைச் செல்லமாக சேர்த்து இழுத்து அணைத்தார் நாய்க்கர்.

“”வாடி செல்லம்.. என்ன வேணும்? என்ன வேணும்?” குனிந்து முதுகில் முத்தம் கொடுத்து கொஞ்சினார்.

“”என்னடா நாய்க்கு ரொம்ப எரைக்குது, செருமுற மாதிரி வருது, கட பக்கம் போறேன்னு எதுவும் பொறைய கிறைய வாங்கி போட்டுறாத; வீட்டுப்பக்கம் போறப்ப சோத்த கீத்த வச்சிடாத. உன் வீட்டு ரேசன் அரிசியெல்லாம் ஒத்துக்காதுடா” நாய்க்கர் நாய் முகத்தையே ஆராய்ந்தார்.

“”அய்யய்ய அதெல்லாம் இல்லீங்க.. ஓடியாந்தது எரைக்குங்க..” வந்த இரைப்பை அடக்கிக் கொண்டு படபடப்புடன் குழந்தைசாமி “”எனக்குத் தெரியாதுங்களா… வீட்டரிசி பொன்னி சூப்பர்ல அதுக்குப் போடுறீங்க!”

“”ஆமாம் மறந்தாப்ல ஏதும் தந்துடாத.. இந்த மாசம் அத டாக்டர் செக்கப் வேற அழச்சிட்டு போவணும்”, சற்று குரலைத் தாழ்த்தி “”அப்புறம்! நாய்கிட்ட நெருக்கமா போய் வாய்ப்பக்கம் கொஞ்சுறேன்னு பேசிடாதே! உனக்கு ஆஸ்துமா இருக்குல்ல”

“சரிங்க’ என்று மவுனமாக குழந்தைசாமி தலையாட்ட “”அதுக்கில்லடா, சிலருக்கு நாய்மூச்சு பட்டா ஒத்துக்காது! உனக்காகத்தான் சொல்ல வந்தேன்; காலைல நேரத்தோட வா! லேட்டானா பிஸி வெளிக்கி போக தவிச்சு போவுது”

“”கோழி கூப்புட வந்துர்றேங்க.” வீட்டுக்கு கிளம்பி கேட்டுக்கு வெளியே போன குழந்தைசாமியை ஏக்கமாக பார்த்தபடி நாய்க்கர் கைப்பிடிக்குள் திமிறிக் கொண்டிருந்தது நாய்.

···

“”வந்து நிக்குற ஆட்டை கட்டி வைக்காமகூட எங்க போனா இவ.., மருதாயி, மருதாயி” கத்திக் கொண்டே குடிசைக்குள் குனிந்தார் குழந்தைசாமி.

“”தே! ஏன் இப்புடி உசுரு போற மாதிரி கத்துற.. டான்னு சாப்புட வருவியேன்னு கருவாடு வைக்க உள்ளாற வந்தேன், ஆஸ்த்துமாவுக்கு ஆவாதுன்னா அடங்குறியா. செஞ்சாலே ஆச்சுன்னு வாங்கி குடுத்து வுட்ருக்க!”

“”ஆமாம் எதுதான் ஆவுது தின்னுபுட்டாவது சாவுறேன் போ! என்ன இங்க அய்வேசு கிழியுது!”

“”அதான கட்னவள கூட வுட்ருவ; இந்த கருவாட வுடமுடியாது உன்னால”, முனகிக் கொண்டே தட்டில் சோற்றை எடுத்து வைத்தாள்.

“”சே! ச்சூ.. கொழம்பை கொதிக்கவுடலெ, ஊருபட்ட பூனைங்க, உரமொறைய கூப்புட்டுட்டு வருதுங்க…” வளைய வளைய வந்த பூனைகளை விரட்டியடித்தாள்.

“”அட ஙொப்பன் தன்னான.. இத பாரு!” குழந்தைசாமி திடுக்கிட, “”அட நாய்க்கரு வூட்டு நாயி! எப்புடி செயினை அறுத்துட்டு வந்துச்சு” மருதாயி கன்னத்தில் கைவைத்து அதிசயித்தாள்.

“”நாய்க்கரு கட்டாம வுட்ருப்பாரு! பிசி.. தோ! வா! வா!”

வாலாட்டிக்கொண்டே, சாப்பாட்டில் கைவைத்த குழந்தைசாமியின் முதுகில் வந்து அணைந்து கொண்டது நாய்.

“”தே… என்ன அறிவு பாரு! எடஞ்ச பண்ணாம ஓரமா உக்காந்துகிச்சுங்குறேன்”, மருதாயிக்கு திகைப்பு கூடியது.

“”நாயக்கரு வூட்ல இருந்தாதான் அது ஏறுக்கு மாறு! இங்க எப்படி சொன்னதை கேக்குது பாரு! நாய்க்கரு கூடவே இருந்துச்சு இதுவும் கொணங்கெட்ட நாயாகிடும்.”
“”தே ரவ சோறு வையேன் பாவம்!”

“”ஏய் நீ வேற நாய்க்கரு வேற நாயை மோந்து, மோப்பம் பிடிப்பாரு. தெரிஞ்சுது வுட்டுட்டு தேட மாட்டாரு!” இடது கையால் தடவிக்கொண்டிருக்க “”கொழந்தசாமி நாயி வந்துச்சா நாய்க்கரு தேடுறாரு. உன்ன வரச்சொன்னாரு யோவ்!” கூவிக்கொண்டே சைக்கிளில் இருந்தபடியே ஒரு காலை ஊன்றினான் சுப்பையன்.

“”தோ கௌம்பிட்டேன்.. சாப்பிட்டுக் கொண்டிருந்த கையை உதறியபடி நாயைப் பிடித்துக்கொண்டு நடந்தார் குழந்தைசாமி.

“”அய்யே எமனாட்டம் வந்துச்சு. செத்த அந்த சோத்த திங்க வுட்டுச்சா”, மருதாயி ஆத்திரத்தில் நாயை முறைத்தாள்.

“”தே! வாயில்லாதது, நாய்க்கரு தேடுதறதுக்கு நாய் என்னா பண்ணும், அமெரிக்காவுல புள்ளைய வுட்டுட்டு கூட இருப்பாரு, அஞ்சு நிமிஷம் நாயை வுட்டுட்டு இருக்கமாட்டாரு, தோ வந்துடறேன்!”

“”ஆமாம் உனக்கு ரொம்ப வாயிருக்கு! அதாவது இருக்க புடிக்காம அத்துகிட்டு வந்துடுது… நீயும் இருக்கியே!” மருதாயி முனகிக் கொண்டே தட்டை மூடினாள்.

···

“”ஏய்… ஸ்! நாய்க்கரு வூட்டு வண்டிதான அது, காருக்குள்ள கழுத்த நீட்டிட்டு என்னமா போவுது பார்றா நாயி!”

“”திமிற பார்ரா பழிப்பு காட்டுற மாதிரி வாயை காட்டிட்டு போவுது.”

“”சே! அப்புடி பாக்குதுறா! நாய்க்கருக்கு குஷி வந்தா போரு கொட்டாபக்கம் போவாரு! இல்லேன்னா நாயை தூக்கிகிட்டு கார்ல சுத்துவாரு!” சுப்பையன் பொடிவைத்துப் பேச, தங்கையன் வாய்விட்டு சிரித்தான்.

“”ஏ சுப்பையா! நாய்க்கரு நல்ல மூடுல இருக்காரு, அறுப்பறுத்த மூணு நாள்கூலி பாக்கி வச்சிருக்கார்றா. இப்ப போனா வாங்கிட்டு வந்துடலாம். இரு பதமா போயிட்டு வந்துடறேன்.”

தங்கையன் நாய்க்கர் வீட்டுப் பக்கம் போக, அங்கே ஏற்கனவே கேட்டுக்கு வெளியே சின்னப்பொண்ணு குழந்தையை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“”எங்க வந்த?”

“”புளி உடைச்ச காசு வாங்க வந்தேன்! லேசுல வர மாட்டேங்குது, ஆணும் அப்புடி, பொண்ணும் அப்புடிதானா இருக்கும்?!”

“”சின்னப்பொண்ணு வருத்தப் படாதே பேசாம இரு நாய்க்கரு வர்றாரு” தங்கையன் அமைதிப்படுத்தினான்.

“”வாடா”, நாய்க்கர் குரலுக்கு போட்டியாக நாயும் குரைத்தது. சின்னப்பொண்ணு பின்னால் நகர, இடுப்பிலிருந்த பிள்ளை நாயைப் பார்த்து கையை நீட்டியது.

“”தே பாப்பா போவாத புடுங்கி வச்சுடும்”, வெடுக்கென நாய்க்கர் சின்னப்பொண்ணுவை கூர்ந்து பார்க்க, “”பாப்பா நாயைப் பாரு, தோ நாயைப் பாரு!” என்று சின்னப்பொண்ணு நாயைக் காட்டினாள். திண்ணை சோபாவில் சிரித்துக் கொண்டு உட்கார்ந்த நாய்க்கர் பிஸ்ஸி, பிஸ்ஸி என்று நாயை வாரி மடியில் போட்டார்.

“”என்னங்க பிசி என்னமோ மாதிரி இருக்கு?” நைசாக தங்கையன் பேச்சுக் கொடுத்தான். “”இவ்வளவு நேரம் ஏ.சி. ரூம்ல இருந்துச்சா அதான் என்ன மாதிரி அதுக்கும் வெளியில வந்தா ஒரு மாதிரி ஆவுது”. “”இங்க பாரு இங்க பாரு,” கொஞ்சிக் கொண்டே கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பிஸியின் கழுத்தில் மாட்டி அழகு பார்த்தார் நாய்க்கர்.

“”நல்லா இருக்குல்ல?”

“”சூப்பரா இருக்குதுங்க” என்று சின்னப்பொண்ணு சிரிக்க, தலையாட்டிக் கொண்டே தங்கையன் சின்னப்பொண்ணு முகத்தைப் பார்த்த படி தானும் சிரித்துக் கொண்டான். கழுத்தை ஆட்டி ஆட்டி உதறிப் பார்த்தது நாய். “”ஏய்! போட்டுக்க நாயே! அஞ்சு பவுனு”, செல்லமாய் தாடையை தட்டினார் நாய்க்கர். ஊவ், ஊவ் என்று அவர் பிடியிலிருந்து திமிறியது நாய்.

“”அத ஏண்டா கேக்குற தங்கையா நீ! நேத்து நைட்டு நானும் வீட்டுலயும் ஆப்பிள் நறுக்கி சாப்புடுறோம். குடுக்க குடுக்க இன்னும் கேக்குது! கறி தின்னாலும் நம்ப வூரு நைஞ்ச கறியத் திங்க மாட்டேங்குது. பெசலா டவுண்ல போய் வாங்கிட்டு வந்தா பொண்ணாட்டுக் கறியா கேக்குது, ஆளப்பாரு ஏய்! ஏய்!”

“”சும்மாவா உங்க வளர்ப்பாச்சே”, சின்னப்பொண்ணு செயற்கையாய் சிரித்தாள். திடீரென உள்ளே நாய்க்கர் எழுந்துபோக, தானாக நினைவு வந்து பணம் எடுக்கத்தான் போகிறார் என்று தங்கையன் எதிர்பார்க்க, கையில் செல்போனோடு வந்த நாய்க்கர், “”ஏய் பிஸி அமெரிக்காவுலேந்து அண்ணன் பேசுறான் கேளு, கேளு” செல்போனைக் கொண்டு நாயின் காதில் நெருக்கி வைக்க “”லொள், லொள்” என்று கத்திக்கொண்டு பயந்து ஒதுங்கியது நாய். “”ஏய்! அமெரிக்காவுலேந்து பேசுறான் கேள்றி பிஸி”, நாய்க்கர் நாயை விடவில்லை.

“”ஏங்க அதுக்கு கேட்குமா?” சின்னப்பொண்ணு வாயைப் பிளக்க “”தே! நீ ஒண்ணு நாயின்னா கேக்காதா பின்ன, அது டி.வி.யே பாக்குது!” தங்கையன் சின்னப்பொண்ணு வாயை அடக்கி எப்படியாவது விசயத்துக்கு வரத் தவித்தான். “”ஏய் தங்கையா அதுவும் இந்த கோலங்கள் போட்டா அந்த நேரத்துக்கு என்னா அமைதியா பாக்கும்ங்குற! அத வுடு, ஒருநாள் சுப்பையன் என் காரு பக்கம் போயிட்டான், என்னமா அவன் மேல பாயுதுங்குற..” நாய்க்கர் சொல்லிக் கொண்டே போக சின்னப்பொண்ணு “”ஒங்க வூட்ல ஒண்ணால்ல அது இருக்கு! நம்ம வூட்டுப் பொருளை ஒருத்தர் தொட்டா வுடுமா? ராசா மாதிரி உங்க அந்தஸ்துக்கு அத வச்சிருக்குறீங்க.. நன்றிய வுடுமா?” மேலும் வாயைக் கிளறிய சின்னப்பொண்ணை முறைத்துப் பார்த்த தங்கையனுக்கு ஆளைவிட்டால் போதும் என்று ஆகிப்போனது.
“”ஏ தங்கையா! எங்கெல்லாம் தேடுறது.. உன் வூட்ல உன்னைத் தேடுது” சுப்பையன் குரல் கொடுக்க, “”தோ என்னன்னு கேட்டுட்டு வந்துடறங்க” என்று தங்கையன் சமயம் கிடைத்ததென்று நடையைக் கட்டினான். “என்ன காசு பேந்துச்சா’ என்று சுப்பையன் ஜாடையில் கையைக் காட்டி கேட்க “”ஊக்ஹூம்” என்று உதட்டைப் பிதுக்கியபடி தெருவுக்கு வந்தான். குழந்தைசாமி புரிந்து கொண்டு “”யோவ்! இருந்து வாங்கிட்டுப் போயா” என்று கையைப் பிடித்து இழுத்தார்.

“”ஏ சாமி! அந்தாளு எதனாவது நம்பள பத்தி கேக்குறாரா? எவனால முடியும் நாயைப் பத்தி நாலுமணி நேரம் பேசுவான். காசே போனாலும் அய்யாசாமி அப்பாடா நீ ஆள வுடு! நீதான் அந்தாளுக்கு லாயக்கு!

“”நீ வேற நானே உடம்புக்கு ஈரல் எடுத்து தின்னா நல்லதுண்ணு காலைல அம்பது ரூவா கேக்குறேன்.. அப்புறம் பாக்கலானுட்டு எனக்கு நேராவே டிரைவர்கிட்ட நாய்க்கு கறி வாங்க டவுணுக்கு அனுப்புறார்ங்குறேன்.. கொடுமை இல்ல இது.. ஏ அப்பா! மணி ஆகுது! போரு கொட்டாகிட்ட போகணும், மடையை மாத்திட்டு வந்து இந்த நாயை அழைச்சிட்டு வேற நடக்கணும்.. வா பின்ன.. நாய்க்குள்ள பவுசு நமக்கில்ல..” முனகிக் கொண்டே அசைந்து அசைந்து நடந்தார் குழந்தைசாமி.

···

“”அன்னைக்குத்தான் பாத்தேன் எல்லக் கல்லாட்டம் இருந்தாரு நாய்க்கர், இப்புடி சாஞ்சிடுவார்னு யாரும் நெனக்கல.”

“”அது என்னவோ ரத்தக்கொதிப்பாம்ல, ஓவராம்.”

“”நேத்து பூரா ராவுல நாய் கத்திருக்கு! யமன் அது கண்ணுக்கு தெரிஞ்சிருக்கு”

“”நாயை மல்லுக்கட்டி குளிப்பாட்ட போனவரு செத்த நேரத்துக்கெல்லாம் படபடத்து டாக்டர கூப்புடுறதுக்குள்ள உசுரு போயிடுச்சாம்.” கட்டிலில் கிடத்தியிருந்த நாய்க்கர் பிணத்தைப் பார்த்து ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தனர். நாய்க்கர் வீட்டம்மாள் அப்படியே கணவன் தலைக்குப் பக்கத்தில் பிரமை பிடித்தவள் போல உட்கார்ந்திருந்தாள்.

“”தோ பாருப்பா என்னதான் கிராமமா இருந்தாலும் எல்லாரையும் வீட்டுக்குள்ள விட முடியுமா? பேசாம கட்டிலைத் தூக்கி அந்த ஜன்னலோரம் வச்சு கதவை திறந்த வச்சா, சந்து வழியா ஜனம் பாத்துட்டு போகட்டும்” நாய்க்கர் வீட்டு உறவினர்களில் வளப்பமான ஒருவன் ஆலோசனைகளைக் கூற, பிணத்தைக் கூடத்திலிருந்து ஜன்னலோரம் நகர்த்தினர்.

“”ஏ புள்ள! பொம்பள ஆளுங்க எல்லாம் மளமளன்னு சந்து வழியாவந்து பாத்துட்டு போங்க சீக்கிரம் அய்யாவ எடுத்தாயிடும்” குழந்தை சாமி தெருப்பெண்களுக்கு வழிகாட்டினார்.

“”நாய வுட்டுட்டு எப்புடித்தான் போனீங்களோ! சாவுறப்ப கூட கைய நீட்டி நீட்டி அங்க காமிச்சுருக்காரு.”

“”அந்த பீரோ பக்கமா?” செல்வி கேட்க “”சே! சத்தம் போடாத நாயை காட்டிருக்காருங்குறேன்.. இவ ஒருத்தி வௌரம் கெட்டவ!”

“”சாவுற நேரத்துல நாயி இல்øலயாம்ல; கொழந்தசாமி நடத்தறதுக்கு கூட்டிட்டு போயிட்டாராம்லா. அய்யோ பாவம்.. அந்த நாய் மூஞ்ச பாத்துட்டு கண்ணை மூடிருக்கலாம்.. நாயை நாயாவா வளர்த்தாரு அதற்கு என்னா தீனி? என்னா சோப்பு? என்னா சவரசனை?”

“”அட என்னமொ போக்கா! அவுதி கிவுதி படாம ஆருக்கும் படுத்தாம… நாய்க்கருக்கு நல்ல சாவுதான் போ!” கோமதி முந்தானையால் வாயை மூடிக்கொண்டே முனகினாள். நாய் ஆமோதிப்பது போல தலையாட்டி விட்டு, திண்ணைப்பக்கம் வந்தது.

“”கோவிந்தா.. கோவிந்தா..” பாடையைத் தூக்க கூட்டம் பின் தொடர்ந்தது. “”எங்க அந்த நாயி அய்யாவுக்கு முன்னாடி சுடுகாட்டுல போயி நிக்குதா?” மருதாயி பேசிக் கொண்டே தேட, திண்ணை மூலையில் இருந்த கிண்ணத்தில் இருந்த பழைய சோற்றைப் பொறுமையாகத் தின்று கொண்டிருந்தது நாய்.

“”சே! இங்க பாரேன் ஆசையா வளர்தவங்க செத்தா நாய் சோறு திங்காம கால் மாட்ல கெடக்கும், இந்த நாயைப் பாரு,” மருதாயி பொருமித்தள்ளினாள்.

அருகே வந்த குழந்தைசாமி, “”அடப்போவியா! நாய்க்கர்கிட்ட நான் பட்ட பாடவிட இந்த….” முழுமையாகச் சொல்லி முடிப்பதற்குள் பக்கத்தில் நாய்க்கர் வீட்டுப் பெண்கள் வர, நாயைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டே “”கோயிந்தா .. கோயிந்தா..” என்று பாடையை நோக்கி ஓடினார்.

· துரை.சண்முகம் ஜுலை 2008 புதிய கலாச்சாரம்

%d bloggers like this: