பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறார்

bagath singh 3

 

அன்பார்ந்த இளைஞர்களே!

மார்ச் 23ம் நாள் குறித்து உங்களுக்கு தெரியுமா? இந்த நாடும் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என சிந்தித்து செயல்பட்ட 24 வயது இளைஞனை துக்கில் ஏற்றி கொன்ற நாள். அது நடந்தது 1931ம் ஆண்டு, வெள்ளைக்காரன் நம்மை ஆண்டு கொண்டிருந்த காலம்.

அன்று வெள்ளை அரசுக்கு எதிராக நம்மால் பேசக் கூட முடியாது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் அரசை எதிர்த்து பேசியதற்காக பேராசிரியர் சாய்பாபா, மருத்துவர் பினாயக் சென் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அன்று தரமான துணியை நெய்யக் கூடாது என்பதற்காக மஸ்லின் நெசவாளர்களின் கட்டை விரலை வெள்ளை அரசு துண்டித்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் வேதாந்தா நிறுவனம் பாக்ஸைட் எடுப்பதை தடுக்கிறார்கள் என்பதற்காக பழங்குடியின மக்களை வேட்டையாடுகிறது நம்முடைய அரசு என்பது உங்களுக்குத் தெரியுமா?

அன்று உணவு தானியங்களை ஏற்றுமதி செய்ததாலும், ஊக வணிகத்தாலும் பெரும் பஞ்சத்தை (தாது வருடப் பஞ்சம்) உருவாக்கியது வெள்ளை அரசு என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் நம்முடைய அரசின் தனியார்மயக் கொள்கையாலும், ஊக வணிகத்தாலும் விலைவாசி கடுமையாக உயர்ந்து பல லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

அன்று வெள்ளைக்காரர்கள் கூடும் இடங்களில் இங்கு நாய்களும் இந்தியர்களும் உள்ளே நுழையக் கூடாது என்று எழுதி வைத்திருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், கடலோர பொருளாதார மண்டலங்களிலும் இந்திய சட்டங்கள் உள்ளே நுழைய முடியாது என்பது உங்களுக்குத் தெரியுமா?

அன்று உப்புக் காய்ச்சினாலும் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்று உத்தரவு போட்டான் வெள்ளைக்காரன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல் இன்றும் போர்வெல் போட்டு நிலத்தடி நீரை எடுத்தால் அதற்கும் வரி கட்ட வேண்டும் என்று சட்டம் போட்டிருக்கிறது நம்முடைய அரசு என்பது உங்களுக்குத் தெரியுமா?

எதைச் சொல்வது எதை விடுவது?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் விவசாயம் செய்து வருகிறோம். நம் நாடு விவசாய நாடு. 60 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பை விவசாயம் வழங்குகிறது. ஆனால், அரசு அனுமதி இல்லாமல் விதை நெல்லை சேமித்து வைத்திருந்தால் அது குற்றம் என சட்டம் இயற்றியிருக்கிறது நம்முடைய அரசு. மரபணு மாற்று வித்துகளின் தீமைகள் குறித்து பரப்புரை செய்தால் அது குற்றம் என சட்டம் இயற்றியிருக்கிறது நம்முடைய அரசு.

தொழில்துறையில் தனியார் முதலீடு என்பது வேலை வாய்ப்பை உருவாக்கும், அதிகப்படுத்தும், திறன் மிக்கதாக்கும், சிக்கனமாக்கும் என்று ஏதேதோ சொன்னார்கள். அதனாலேயே ஏராளமான சலுகைகளை வாரிக் கொடுக்கிறோம் என்றும் சொன்னார்கள். இப்போதோ தொடர்ச்சியாக வேலை இழப்புகள். வேலையில்லாத் திண்டாட்டம் 7.9 சதவீதம் என்று நம்முடைய அரசே அறிவித்திருக்கிறது. நடப்பில் இதை விட அதிகமிருக்கும் என்பதே உண்மை. ஆனாலும் நம்முடைய அரசு சலுகைகளை ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தாது. மட்டுமல்லாது, தொழிலாளர்கள் உரிமைகளாக மிச்சமிருக்கும் ஒன்றிரண்டு உரிமைகளையும் குழி தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறது நம்முடைய அரசு.

பாரத்மாலா, சாகர்மாலா, ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ என்று திட்டங்கள் நீண்டு வந்து கொண்டிருக்கின்றன. அத்தனையும் வளர்ச்சித் திட்டங்கள் தாம் நம்முடைய அரசுக்கு. அவைகளால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழந்தாலும், செத்தொழிந்தாலும் கவலையில்லை நம்முடைய அரசுக்கு.

லலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி ஆயிரம் லட்சம் கோடிகளில் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க அனுமதித்து விட்டு, அவர்கள் தப்பிச் செல்ல வசதியும் செய்து கொடுத்து விட்டு, அவர்கள் சொத்துகளை முடக்க சட்டம் போடப் போகிறோம் என்றும் சொல்லும் நம்முடைய அரசு தான் இருபதாயிரம் டிராக்டர் கடனுக்கும், இருபத்து நான்காயிரம் கல்விக் கடனுக்கும் விவசாயிகளையும், மாணவர்களையும் கொலை செய்கிறது.

சாராயக் கடைக்கு பாதுகாப்பு, அதற்கு எதிராக போராடும் மக்களுக்கு மண்டை உடைப்பு, பொய் வழக்குகள். குடிக்க நீரில்லை, சாலை வசதிகள் இல்லை, மருத்துவமனைகளில் மருந்தில்லை, பள்ளிகளில், ஆசிரியர்கள் இல்லை, ஆய்வக வசதிகள் இல்லை, கழிப்பறை இல்லை, பிடித்தம் செய்த சம்பளம் வரவில்லை இப்படி இன்னும் தங்கள் வாழ்வின் கொடுமைகள் எதை சொல்லியும் மக்கள் போராடி விடக் கூடாது. போராடினால் அதை சட்டம் ஒழுங்காக மட்டுமே பார்க்கும் காவல் துறை அதாவது நம்முடைய அரசு.

அப்படி என்றால் நம்முடைய அரசு என்பதன் பொருள் என்ன? நம்மைச் சுரண்டிக் கொல்வதற்கு தரகு பன்னாட்டு முதலாளிகளுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்து, நம்முடைய கடைசி உயிர்ப் போராட்டத்தில் கூட அவர்களுக்கு நகக் கீரலேனும்  விழுந்து விடக்கூடாது என்று பாதுகாப்பு கொடுப்பது தான் நம்முடைய அரசு என்பதன் பொருளா?

இந்தக் கொடுமைகளுக்கு எதிராகத் தான் அன்று பகத் சிங் போராடினான். அவர்கள் வெள்ளைக்காரர்கள் என்பதால் மட்டும் தான் அது அன்னிய அரசா? இவர்கள் நம்மவர்கள் என்பதால் மட்டும் தான் இது நம்முடைய அரசா? இதை தெளிவாக உணர்ந்ததால் தான் அன்று, “இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை எங்களோடு முடியப் போவதும் இல்லை”  என்று முழங்கிக் கொண்டே தூக்கு மேடை ஏறினார்கள் பகத் சிங், சுக்தேவ், ராஜகுரு மற்றும் அஷ்பகுல்லா கான் ஆகியோர்.

அந்தக் கடமை நம் தோள் மீது இன்னும் இருக்கிறது. புழுத்து நாறும் இந்த அரசு கட்டமைப்பை அறுத்து வீச நாம் அமைப்பாக திரளும் போது தான் பகத் சிங் மீண்டும் சுவாசிக்கிறான். அந்த மாவீரர்களை மரணிக்க விடலாமா? அவர்களுக்கு சுவாசம் கொடுப்போம்.

எச்சைகளை மலத்தால் அடித்து விரட்டுவோம்

lenin statue rsyf

 

பார்ப்பன பாசிஸ்டுகள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதற்கு வரலாறு நெடுகிலும் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது அதற்கு மற்றுமோர் சான்று.

ஒரு தேர்தல் வெற்றி என்பது ஒரு போதும் மக்களின் விருப்பங்களை எதிரொலிக்காது என்பதற்கு, தேர்தல்கள் எப்படி எந்த அடிப்படையில் நடத்தப்படுகின்றன என்பது தொடங்கி ஏராளமான ஆய்வுகள் இருக்கின்றன.  தேர்தல் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் இறங்க ஆயத்தமாக இருப்பவர்கள் தான் இந்த பார்ப்பன பாசிச ஓநாய்கள். அப்படியான இழி உத்திகள் மூலம் தான் திரிபுர மாநிலத்தில் நடந்த தேர்தலிலும் இந்த பாசிசங்கள் தேர்தல் வெற்றியை சுவைத்திருக்கின்றன. ஆனால் அவர்கள் சுவைத்ததை உழைக்கும் மக்களின் முகத்தில் உமிழ்வது என்பது எவ்வளவு திமிர்த்தனம்?

உழைக்கும் மக்களின் ஒப்பற்ற தலைவர்களுள் ஒருவரான தோழர் லெனின் சிலையை உடத்திருப்பதன் மூலம் தங்களின் நாற்றமெடுத்த கொழுப்பை உழைக்கும் மக்களின் முகங்களில் உமிழ்ந்திருக்கிறார்கள். இதற்கு நாம் தக்க பதிலடி கொடுக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் சீழ் பிடித்த சொரிநாய் ஒன்று சுற்றித் திரிகிறது. அது இவ்வாறு ஊளையிட்டிருக்கிறது, “லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று. திரிபுராவில் லெனின் சிலை. நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ரா சிலை”

இந்த குலைப்பைக் கேட்டு திருப்பத்தூர் பெரியார் சிலையை நெருங்கிய இரண்டு குண்டர்களை மக்களே உதைத்து அனுப்பியிருக்கிறார்கள். ஆங்காங்கே எச்ச ராஜாவின் உருவப்படங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இது போதாது.  ஏனென்றால் இதை அவர்கள் உணர்ச்சி வேகத்தில் செய்யவில்லை. திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். இப்படி பேசி வெறியேற்றி ஆழம் பார்க்கிறார்கள்.  எனவே, அனுமதிப்பது அபாயமானது.

மக்களை மதிப்பவர்களிடம் தான் நாம் விமர்சனங்களை வைக்க முடியும். சரி செய்ய போராட முடியும். பார்ப்பன பாசிசங்களின் அடிப்படையே மக்களை பிளவுபடுத்தி ஆதிக்கம் செலுத்துவது தான். எனவே, இவர்களை, இவர்களின் பண்பாட்டை அடித்துத் தான் விரட்ட முடியும், விரட்ட வேண்டும். மலத்தால் அடித்து விரட்ட வேண்டும். அதுவரை நம்மால் ஓய்ந்திருக்க முடியாது.

சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு

முன்னுரை

1x66iat

பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு கற்பனை வரட்சி. ரஷ்யாவில் பஞ்சம் படுகொலை என்று கூறப்படுபவைகளை விட்டு விட்டால் இன்றும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய எங்களிடம் வேறொன்றுமில்லை என்று முதலாளித்துவமும் அதன் காலாட்படைகளும் மீண்டும் மீண்டும் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால், சோவியத் யூனியன் இருந்ததன் பலனை உலக மக்கள் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி என தன் குடி மக்களுக்கு சோவியத் யூனியன் ஏற்படுத்திக் கொடுத்ததைப் பார்த்துத் தான் உலகின் பிற நாடுகள் அதில் கொஞ்சத்தையேனும் தன் குடி மக்களுக்கு கொடுத்தன. தன் குடி மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. சோவியத் யூனியனைக் கண்டு தம்முடைய நாட்டிலும் புரட்சி வந்து விடக் கூடாதே என்பதற்காக. அவ்வாறான வசதிகள் உரிமைகளை எல்லாம் இன்று படிப்படியாக முதலாளித்துவம் படுகொலை செய்து வருகிறது. அதன் மூலம் பல்லாயிரக் கணக்கான மக்கள் அல்லலுற்று மடிகிறார்கள். எந்த அரவிந்தன்களுக்கும் சோவியத் யூனியன் தன் குடிமக்களை எப்படி வாழ வைத்தது என்பது புரிவதும் இல்லை. இன்று முதலாளித்துவம் செய்து கொண்டிருக்கும் இந்தப் படுகொலைகள், பஞ்சங்கள் தெரிவதும் இல்லை. இது தான் கம்யூனிச அவதூறுகளுக்கான மைய அச்சு. கம்யூனிசத்தின் மீதான அவதூறு என எதை எடுத்துக் கொண்டாலும் அது இந்த மைய அச்சிலிருந்து நகர்வதே இல்லை. இதற்கு அரவிந்தன் நீலகண்டன் மட்டும் விலக்காகி விட முடியுமா?

சற்றேறக்குறைய ஓராண்டுக்கு முன்னர் நண்பரொருவர் மேற்கண்ட நூலை அறிமுகப்படுத்தி இதற்கு நீங்கள் மறுப்பெழுத வேண்டும் என கேட்டுக் கொண்டார். பிரிதொரு சமயத்தில், தோழரொருவருடன் உரையாடுகையில் தன்னிடம் அந்த நூல் இருப்பதாக தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அனுப்பியும் வைத்து விட்டார். படித்துப் பார்க்கையில் அலுப்பாக இருந்தது. அதே அரை நூற்றாண்டுப் பொய்கள்.  உலகின் அத்தனை மொழிகளிலும் எவ்வளவோ விளக்கங்கள், சான்றுகள் இந்தப் பொய்களை அம்பலப்படுத்தி வெளிவந்திருந்த போதிலும் வெட்கமற்று மீண்டும் மீண்டும் வெளிவந்து கொண்டிருக்கும் அதே அரை நூற்றாண்டுப் பொய்கள்.

மறைந்த நவீன தமிழ் எழுத்தாளர் ஒருவர் ஒருமுறை, “ இரயில் பயணத்தில் ஒருவர் பாக்கெட் நாவலைப் படித்து விட்டு வாழைப்பழத் தோலை வீசி எறிவது போல் ஜன்னல் வழியே வெளியே தூக்கிப் போட்டதைப் பார்த்த பின்பிலிருந்து, நான் பாக்கெட் நாவல்கள் எழுதுவதில்லை” என்றார். அதேபோல் படித்த பின் இது போன்ற குப்பை நூல்களை எழுதியவரின் முகத்தில் வாசகர்கள் வீசியடிக்கும் நிலை வந்தால், இது போன்ற “என்ன கையப் புடிச்சு இழுத்தியா” வடிவ நூல்கள் குறையும் என எண்ணுகிறேன்.

மூன்றாம்தர ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் தம் கட்சியின் நிலைப்பாட்டை தூக்கிப்பிடிப்பதற்கு கொஞ்சமும் தயங்க மாட்டார்கள். இதற்காக தொடர்பற்ற விபரங்களை, தரவுகளை முன்னுக்குப் பின் முரணாக பேசுவதற்கு அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை. சுட்டிக் காட்டினாலும் அதை கொஞ்சமும் பரிசீலிப்பதும் இல்லை, நிறுத்துவதும் இல்லை. அந்த பிழைப்புவாத தகுதிகளுக்கு முற்றிலும் நிகரானவர்கள் இது போன்ற எழுத்தாளர்கள்.

யார் இந்த அரவிந்தன் நீலகண்டன்? பார்ப்பனிய வகை மாதிரிகள் பலவற்றில் ஒரு தனிவகை. தன் அறிவுஜீவி அகப்பையில் பார்ப்பன பாசிசத்தை நீர்த்துக் கொடுக்கும் ஒரு தலை. இந்த வகையினரின் எழுத்துக்கள் கம்யூனிசத்தைக் காதலித்தால் தான் எச்சரிக்கை கொள்ள வேண்டியதிருக்கும். வாழைப் பழத்தில் வெண்டை விதைகள் இருக்குமா என்ன? இந்துத்துவத்தை, பார்ப்பனியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒருவரிடம் சமத்துவக் காதல் அரும்புமா என்ன?

தேளின் கொட்டும் தன்மையை விலக்கி விட்டு அதன் அழகை மட்டும் ஆராதிக்க முடியுமா? புதிதாக படிப்பவர்கள் அப்படி மறுகக் கூடும். தன் 280 பக்க நூலில் 480 க்கும் மேற்பட்ட மேற்கோள்களை அள்ளித் தெளித்திருக்கிறார் அரவிந்தனார். இந்த மேற்கோள்கள் தான் புதிதாக படிப்பவர்களுக்கு மெய்யே போலும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மேற்கோள்களின் வகை மாதிரிக்கு சில

 1. தி டெத் ஆப் வைட் சோசியாலஜி – ஜாய்ஸ் லேட்னர் – 1998

 2. பிளாக் மார்க்ஸிசம்: மேக்கிங் ஆப்தி பிளாக் ரேடிகல் ட்ராடிசன் – செட்ரிக் ராபின்சன் – 2000

 3. தி லாஸ்ட் லிட்ரேசர் ஆப் சோசலிசம் – ஜார்ஜ் வாட்சன் – 2001

 4. எ ரெகெய்ம் ஆப் கார்ல் மார்க்ஸ் – ஃபிராங்க் மானுவல்- 1997

 5. கார்ல் மார்க்ஸ் அன் இண்டிமேட் பயாக்ரபி – மெக்ராத் ஹில்- 1978

 6. ஹார்ம்லெஸ் லவர்ஸ்? – மைக் கேன் 1993

 7. கார்ல் மார்க்ஸ் ரௌட்லெட்ஜ் – மைகேல் எவான்ஸ் 2004

 8. பீப்பிள்ஸ் டிராஜடி: தி ருஷ்யன் ரெவல்யூசன் – ஒர்லாண்டோ ஃபிஜ்ஜெஸ் – 1998

 9. தி ரைஸ் அண்ட் ஃபால் ஆப் கம்யூனிசம் – ஆர்ச்சி பிரவுண் – 2010

 10. ரெவல்யூசனரி டெர்ரரிசம் இன் ருஷ்யா – அன்னா ஹெய்ஃப்மன் – 1995

 11. தி எனிமி வித்தின்: எ ஹிஸ்டரி ஸ்பைசஸ் – டெர்ரி க்ரவுடி – 2008

 12. தி போல்ஸ்விக்ஸ்: தி இண்டலக்சுவல் அண்ட் பொலிடிகல் ஹிஸ்டரி – ஆடம் புருனோ எலம் – 1998

 13. ரூட்ஸ் ஆப் ரெபெலியன்: ஒர்கர்ஸ் பொலிடிகல் அண்ட் ஆர்கனைசேசன் – விக்டோரியா போனல் – 1983

 14. தி சீக்ரெட் ஃபைல் அப் ஜோசப் ஸ்டாலின் – ரோமன் பிராக்மன் – 2003

 15. ருஷ்யாஸ் செகண்ட் ரெவல்யூசன் – எட்வர்ட் நிகலோவிச் – 1987

 16. சோவியத் கிராஸ் ரூட்ஸ் – ஜெஃப்ரி ஹான் – 1988

 17. தி கவன்மெண்ட் அண்ட் பொலிடிக்ஸ் ஆப் சோவியத் யூனியன் – ஷப்பாரியோ – 1977

 18. லெனின் அண்ட் ட்வுன்ஃபால் ஆப் டிசாரிஸ்ட் ருஷ்யா – எலிசபெத் ராபின்ஸ் – 1966

 19. தி போல்ஸ்விக் ரெவாலியூசன் – ஜான்சி டாவன்போர்ட் – 2010

 20. லெனின்ஸ் லெஜசி – ராபர்ட் வெஸ்ஸன் – 1978

 21. லெனின்ஸ் ரெவல்யூசன் – ஸ்டூவர்ட் ஆண்ட்ரூஸ் – 2007

 22. கம்பெட்டிங் வாய்ஸெஸ் ப்ரம் ருஷ்யன் எவல்யூசன் – மைகேல் ஹிக்கி – 2010

 23. தி போல்ஸ்விக் இன் பவர் – அலக்ஸாண்டர் ரபினோவிச் – 2007

 24. தி கொயெஸ்ட் ஃபார் எவல்யூசனரி சோசலிசம் – மன்ஃப்ரெட் ஸ்டிச்சர் – 2006

 25. காம்ரேட்ஸ் எ ஹிஸ்டரி ஆப் வர்ல்ட் கம்யூனிசம் – ராபர்ட் சர்வீஸ் – 2007

 26. லெனின்ஸ் ரெவல்யூசனரி லைஃப் – கிரிஸ்டோபர் – 2005

 27. தி சோவியத் சீக்ரெட் போலிஸ் – சைமன் வோலின் – 1957

 28. சில்ட்ரன் ஒர்க் க்ரோவிங் அப் இன் ருஷ்யா – காட்ரியோனா கெல்லி – 2007

 29. தி ஃபேட் ஆப் தி சோவியத் டெமாக்ரசி – இஸ்ரேல் கெட்ஸ்லர் – 1983

 30. ஆர்ஜின் ஆப் குலாக் – மைகேல் ஜாகப்சன் – 1993

 31. எ டாகுமண்டரி ஹிஸ்டரி ஆப் கம்யூனிசம் இன் ரஷ்யா – ராபர்ட் வின்ஸெண்ட் – 1993

 32. லெனின்: எ பயாக்ரபி – ராபர்ட் சர்வீஸ் – 2000

 33. லெனின்ஸ் லாஸ்ட் ஸ்ட்ரக்கிள் – மோஷே லெவின் – 2005

 34. கான்ஸ்பிரேட்டர்: லெனின் இன் எக்ஸைல் – ஹெலன் ரெப்பாபோர்ட் – 2010

 35. தி பிராஃபெட் அன்னேம்ட் – ஈசாக் ட்யூட்ஸர் – 2003

 36. ட்ராட்ஸ்கி: ரௌட்லெட்ஜ் – இயான் தாட்சர் – 2003

 37. அவர் டெய்லி பிரட் – எலினா அலக்ஸாண்ட்ரோவ்னா – 2001

 38. கிரைம் அண்ட் பனிஷ்மெண்ட் ஆப் சோவியத் அபிஸியல்டம் – வில்லியம் க்ளார்க் – 1993

 39. சோவியத் ஃபேட்ஸ் அண்ட் லோஸ்ட் அல்டர்னேடிவ்ஸ் – ஸ்டேபன் கோகன் – 2011

 40. ஸ்டாலின்ஸ் டெர்ரெர் ஆப் 1937-1938 – வாதிம் ஸ்கரோவிச் – 2009

 41. தி ரைட் ஆப்பொசிசன் அண்ட் லோஸ்ட் பொலிட்பீரோ டிரான்ஸ்கிரிப்ட்ஸ்- வைன் – 2008

 42. புகாரின்ஸ் ஃபேட் – ஸ்டீபன் கோகன் – 1999

 43. தி விக்டிம்ஸ் ரிடர்ன் – ஸ்டீபன் கோகன் – 2011

 44. புல்லட்டின்ஸ் ஆப் அடாமிக் சைண்டிஸ்ட் – மார்க் பி.ஸிங்கர் – 1982

 45. ஸ்டாலின்: பயலோஜிகல் கம்பானியன் – ஹெலன் ரெப்பாபோர்ட் – 1999

 46. டெகார்ட்ஸ் ஆப் கிரிஸிஸ் – ஐவான் பெர்ரண்ட் – 2001

 47. லேபர் காம்ப் சோசலிசம் – கலினா இவனோவா – 2000

 48. தி எகானமி ஆப் யு.எஸ்.எஸ்.ஆர் – ஒலெக் கெல்வன்யுக் – 2003

 49. தி அன்னோவ்ன் குலாக் – லைன் வையோலா – 2007

 50. பிளட் அண்ட் சாய்ல் வர்ல்ட் ஹிஸ்டரி ஆப் ஜினோஸைட் – பென் கியர்னன் – 2007

பயன்படுத்தப்பட்டிருக்கும் மொத்த மேற்கோள்களில் ஓரிரு மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்களைத் தவிர ஏனைய அனைத்துமே மேற்கண்ட வகை மாதிரியில் அடங்குபவை தான். சற்றேறக் குறைய 1990க்கும் 2010க்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக் கழகங்களில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளின், கட்டுரைகளின் நூல் வடிவங்கள். கம்யூனிசம் வீழ்ந்து விட்டதாக கூறப்பட்டதைத் தொடர்ந்த இந்த காலகட்டத்தில் மிக ஓச்சமாக செய்யப்பட்ட கம்யூனிச அவதூறுப் பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் மேற்கண்ட நூல் வடிவங்கள். அதாவது, பஞ்சம் படுகொலைகள் நிகழ்ந்ததாக கூறப்படும் காலகட்டத்திற்கு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்த்தப்பட்ட உரைகள் அல்லது கட்டுரைகள். இதில் எவரும் ரஷ்யாவுக்கோ அல்லது அந்தந்தப் பகுதிகளுக்கோ சென்றிருக்க மாட்டார்கள். மட்டுமல்லாது இவர்களை நூல் பிடித்துச் சென்றால், கேரத் ஜோன்ஸ், ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன், வில்லியம் ஹெர்ஸ்ட், தாமஸ் வாக்கர் ஆகியோரிடம் சென்று சேரும். இவர்கள் பிரிட்டன் உளவுத்துறையிடம் கூலி வாங்கிக் கொண்டு எழுதியவர்கள் என்பதும், ஹிட்லரால் அனுப்பப்பட்டவர்கள் என்பதும் அப்பட்டமாக நிரூபணமாகி உள்ளன.

அரை நூற்றாண்டுப் பொய்களான கம்யூனிச அவதூறுகள் தொடர்ச்சியாகவும் தொய்வில்லாமலும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முதலாளித்துவ உலகில் நடந்து கொண்டிருப்பவை என்ன?

சோவியத் யூனியன் உருவானதன் விளைவாக முதலாளித்துவ நாடுகளில் அவசரம் அவசரமாக செய்யப்பட்ட மக்கள் நலன் சார்ந்த சீர்திருத்தங்கள் பல இன்று மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டன. சர்வதேச அளவில் நிதி நெருக்கடிகள் தோன்றி சீர்படுத்த இயலாத நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன. அதாவது, எந்த முதலாளிகள், சந்தையின் கட்டுப்பாட்டில் எல்லாவற்றையும் விட்டு விட வேண்டும். நிதி விவகாரங்களை, சந்தையை கட்டுப்படுத்துவது அரசின் வேலையல்ல என்று கூறினார்களோ அதே முதலாளிகள் அரசு நிதி உதவி செய்து எங்களை கைதூக்கி விட வேண்டும் என்று சப் பிரைம் நெருக்கடியின் போது கூறும் அளவுக்கு சென்றது. உலகின் வளங்கள் சிலரின் கைகளில் குவிக்கப்பட்டிருக்கும் அதே வேளையில் பலநூறு கோடி மக்கள் பட்டியின் பிடிக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மக்களைப் பற்றிய அக்கரையின்றி அரசுகள் அப்பட்டமாய் நடந்து கொண்டிருக்கின்றன. உலக யதார்த்தம் இப்படி இருக்கும் போது ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடாவடியாக அதற்கு துணை போய்க் கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலில் தான் கம்யூனிசம் குறித்த அவதூறுகள் மீண்டும் மீண்டும், .. .. .. மீண்டும் மீண்டும் புற்றீசல்களைப் போல் கிளம்பி வந்து கொண்டே இருக்கின்றன. நடப்பு உலகின் கொடூரமான யதார்த்தத்தை மறைப்பதற்காக அவை பயன்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வாசகர்கள் குப்பை எழுத்துகளை அந்தந்த எழுத்தாளர்களின் முகங்களில் வீசியடிக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி நாம் பயணப்பட்டுக் கொண்டே இருப்போம்.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

பகத்சிங் நினைவு நாளில் மாணவர் கடமை என்ன?

ஓங்கட்டும் நாட்டுப்பற்று!                       ஒழியட்டும் மறுகாலனியாக்கம்!

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; மறுகாலனியாக்க எதிர்ப்பு தினம்!

 

ன்பார்ந்த மாணவர்களே, இளைஞர்களே,

தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் மீதான தாக்குதல்கள், தற்கொலைகள், படுகொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. விழுப்புரம் கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தால் 3 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டது நாட்டையே உலுக்கியெடுத்தது. ஆனாலும் தனியார் கல்லூரிகளின் கொட்டம் அடங்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இத்தனை கொடுமைகளுக்கும் காரணம் என்ன? இந்த அரசு நடைமுறைப்படுத்தும் தனியார்மயக் கொள்கைதான். வளர்ச்சி, முன்னேற்றம் என்ற பெயர்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் ( நாட்டை மீண்டும் அடிமையாக்கும் ) கொள்கையின் விளைவாகத்தான் கல்வி படிப்படியாக தனியார் கைக்கு மாறி கடைச்சரக்கானது. சாராயம் விற்ற ரவுடிகளும்கூட கல்வித் தந்தைகளானார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இரத்தம் குடித்த தனியார்மய காட்டேரியின் அடங்காத பசிக்கு மொத்த கல்வித்துறையையுமே படையல் போட்டுள்ளது பார்ப்பன பாசிச மோடி அரசு.

கடந்த டிசம்பர் – 15 ந்தேதி கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக கழகத்தின் மாநாட்டில் காட்ஸ் ஒப்பந்தத்தின்படி கல்வித்துறையை மொத்தமாக தனியாருக்கு திறந்துவிட சம்மதம் தெரிவித்து கையெழுத்துப் போட்டுவிட்டு வந்திருக்கிறது.

இனி என்ன நடக்கும்? உள்நாட்டு – வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கல்வித் தந்தைகளாக காட்சியளிப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கே கல்விக் கடையை விரிப்பார்கள். மாணவர்களுக்கான இலவசக் கல்வி ரத்து செய்யப்படும். அரசுக் கல்லூரிகள், நிதி தன்னாட்சி (Financial autonomous) நிறுவனங்களாக மாற்றப்படும். கல்லூரிகளே மாணவர்களிடமிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் கட்டணம் வசூலித்துக்கொள்ளும். “டீச் இன் இந்தியா” திட்டம் மூலம், வெளிநாட்டு கல்வியாளர்கள், துறைசார் வல்லுநர்களை இறக்குமதி செய்து மாபெரும் திறந்தவெளி இணைய பாடத்திட்டங்கள் MOOCs (Massive Online Open Course) தயாரிக்கப்படும், உள்நாட்டு ஆசிரியர்களின் வேலைகள் ஒழிக்கப்படும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் கல்லூரிக்குச் செல்லாமல் கல்வி கற்பிக்கப்படும். மாணவர்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்படும்.

இப்படி, ஒட்டுமொத்த கல்வித்துறையையும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், தனியார், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக மாற்றுவதுதான் காட்ஸ். இனி கல்வி பற்றி முடிவெடுக்க இந்திய நாடாளுமன்றத்திற்கு எவ்வித சட்ட உரிமையும் கிடையாது. இதற்குப் பெயர் இறையாண்மையா?march23-baghat-singh-martyr-day-rsyf

கல்வித்துறையை மட்டுமல்ல, மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படையான மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட சேவைத்துறைகள் அனைத்தும் காட்ஸ் – ன் காலடியில் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அரசு பொதுத்துறை நிறுவனங்கள் பல தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டன. மீதமிருக்கும் ஒன்றையும் விடாமல் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தூக்கிக் கொடுத்து வருகிறார் மோடி.

பன்னாட்டுக் கம்பெனிகள் நம் தொழிலாளர்களை காண்ட்ராக்ட் ஊழியர்கள் எனும் பெயரில் கொத்தடிமைகளாக கசக்கிப் பிழிகிறார்கள். வேலைபறிப்பு, ஆலை மூடல் என தொழிலாளர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஐ.டி ஊழியர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. நமது விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்காக பறிக்கப்படுகிறது, விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டப்படுவதோடு, பட்டினி போட்டுக் கொல்லப்படுகிறார்கள். காடு, மலை, ஆறு, மணல் உள்ளிட்ட இயற்கை வளங்களும், கனிம வளங்களும் கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாட திறந்துவிடப்பட்டிருக்கிறது. மொத்தமாக, நாடே மறுகாலனியாக்கப்பட்டு வருகிறது.

சுருக்கமாகச் சொன்னால், 1947 க்கு முன்னால் நாடு எப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருந்ததோ அதேபோல்தான் இன்றும் உள்ளது. அது காலனி, இது மாறுகாலனி அவ்வளவுதான் வித்தியாசம். அன்று, ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை இந்தியாவில் நிலைநாட்ட வங்காளத்தின் தளபதி மீர்ஜாபர் விசுவாசமாக சேவை செய்தான். இன்று அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை மறுகாலனியாக்க விசுவாசமாக வேலை செய்கிறார் பார்ப்பன பாசிச மோடி.

நாம் என்ன செய்யப்போகிறோம்? ஆங்கிலேய காலனியாதிக்கத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்துக் கொண்டான் 23 வயது இளைஞன் பகத்சிங். அவன் தனது போர்க்குணமிக்க போராட்டங்களால் ஆங்கிலேய ஆட்சியை நிலைகுலையச் செய்த மாவீரன். வெள்ளையர்களை அடித்து விரட்டி வென்றெடுக்க வேண்டிய விடுதலையை, உண்ணாவிரதம், அறவழிப்போராட்டங்கள் என கெஞ்சிப் பெற வேண்டிய பிச்சையாக்கினார் காந்தி. ஆனால், விடுதலையை போராடி சாதிக்க வேண்டும் என்று கொதித்தெழுத்த பகத்சிங்கும் அவரைச் சார்ந்த மாணவர்களும், இளைஞர்களும் காந்திய காரிருளை கிழித்து போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னெடுத்தனர். பீதியடைந்த ஆங்கிலேய அரசு இந்திய விடுதலைப்போரை வீழ்த்த பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை தூக்கிலேற்றியது. அதன் நினைவுநாள்தான் மார்ச்-23. நாட்டின் விடுதலைக்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்ட இவர்கள்தான் நம்முடைய கதாநாயகர்கள். பகத்சிங்தான் நம் ரோல்மாடல். அவர் நினைவை நெஞ்சிலேந்துவோம்! பகத்சிங் நினைவுநாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்துவோம்!

’’அநீதிகளுக்கெதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதுமில்லை’’ என்று நாட்டின் விடுதலையை சாதிக்கும் கடமையை நம்மிடம் விட்டுச் சென்றிருக்கிறார் பகத்சிங். மறுகாலனியாக்கத்தை வீழ்த்தாமல் நமக்கு விடுதலை இல்லை. நாட்டின் விடுதலையை நேசிக்கும் மாணவர்கள், இளைஞர்களாகிய நாம் பகத்சிங் பாதையில் பயணிப்போம்! தேச விடுதலைப் போரை முன்னெடுப்போம்!

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு – 944512675

 

முதல் பதிவு: வினவு

போதையிலிருந்து தமிழகத்தை மீட்போம்! திருச்சிக்கு வாருங்கள்!

12657442_518976178272029_1146155974848426023_o

அன்புடையீர், வணக்கம்!

டாஸ்மாக் போதையால் சீரழிந்த குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாது. கணவனை இழந்த விதவைகளின் துயரங்களை சொல்லி மாளாது. பள்ளி மாணவிகள் – மாணவர்கள் குடிப்பதும், குழந்தைகளை குடிக்க வைப்பதும், குடிப்பது தவறில்லை என்ற பண்பாட்டுச் சீரழிவும் புற்றுநோயாக நம் சமூகத்தை அழித்து வருகிறது. தாய்மார்கள் கதறுகிறார்கள்.

டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்கள், சாலை விபத்தில் செத்து மடிந்தவர்கள்,விதவைகளாகிப் போனவர்கள் ஏராளம். பாம்பைக் கண்டவுடன் அலறியடித்து கொல்ல முயலுவதைப் போல, டாஸ்மாக்கை மூடினால் தான் அழிவிலிருந்து மீண்டு வாழ முடியும். யாராவது இந்த சனியனை ஒழித்துக் கட்ட மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் ஆத்திரமும் மக்களிடையே எரியும் நெருப்பாக தகிக்கிறது.

கூச்சப்பட்டு ஒழிவு மறைவாக குடித்த நிலைமை போய், குடிக்கும் பழக்கமில்லாத பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் கூட கூச்சநாச்சமின்றிக் குடிக்கும் நிலமை வந்து விட்டது. பள்ளி மாணவன் முதல் கிழவன் வரை அரை நிர்வாணமாக, போதை தலைக்கேறி நடுத் தெருவில் கிடக்கிறார்கள். பள்ளி மாணவிகள், சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை யாரும் பயமின்றி தெருவில் போக முடிவதில்லை. குடிவெறி போதையில் பெற்ற மகளிடமே காமவெறியுடன் பாயும் தகப்பன், இதை தடுக்க முடியாமல் அவனை அடித்தே கொல்லும் மனைவி. கூடப்பிறந்த சகோதரியிடமே பாலியல் வன்முறையில் ஈடுபடும் சகோதரன், வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் சிறுமிகள், குடிக்க காசு கொடுக்கவில்லை என்று தாயைக் கொல்லும் பிள்ளைகள், குவார்ட்டருக்காக திருடனாக மாறும் கல்லூரி மாணவர்கள். இப்படி சமூகமே மெல்ல அழுகி, அழிந்து கொண்டிருக்கிறது.

அரசு பள்ளிகளை மூடும் அரசு, மக்கள் போராடினால் கூட டாஸ்மாக்கை மூட முடியாது என திமிராக நிற்கிறது. விபத்து அதிகரிப்பதால் நெடுஞ்சாலையில் உள்ள சாராயக் கடைகளை அகற்ற வேண்டும் என உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் உத்தரவிட்டும் செய்ய மறுக்கிறது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராடிய அய்யா சசிபெருமாள் சாகட்டும் என ஜெயலலிதா அரசு வேடிக்கை பார்த்தது. கிராமப் பஞ்சாயத்துகள் எங்கள் ஊருக்கு டாஸ்மாக் வேண்டாம் எனப் போட்ட தீர்மானங்கள், அரசியல் அமைப்புச் சட்டப்படி மதுவிலக்கை அமல் படுத்த வேண்டும் என்பவை அனைத்தும் செல்லாக் காசாகிப் போய் விட்டது.

டாஸ்மாக்கை மூடப் போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசு அடித்து நொறுக்கி, மாணவிகளை பூட்சு காலால் மிதித்தது. மூடு டாஸ்மாக்கை என போராடிய மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் பலரை மாதக் கணக்கில் பொய் வழக்கில் சிறையிலடைத்து துன்புறுத்தியது. கலிங்கப்பட்டியில் போராடிய மக்கள் மீது கண்ணீர்புகை வீச்சு, தடியடி.

“ஊருக்கு ஊரு சாராயம் தள்ளாடுது தமிழகம்,

ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயசில் உல்லாசம்”

எனப் பாடிய கோவனை தேசத் துரோக வழக்கில் நள்ளிரவில் கைது செய்தது. அவரை நிரந்தரமாக சிறையில் அடைக்க உச்சநீதி மன்றம் வரை வழக்கு நடத்தியது. டாஸ்மாக்கை எதிர்த்தால் ஜெயா அரசுக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? போதையும் போலீசும் என இரட்டைக்குழல் துப்பாக்கியாக ஆட்சி நடத்தி அனைத்துப் பிரச்சனைகளையும் அடக்கி ஒடுக்க முயல்கிறது ஜெயா அரசு.

வெள்ளப் பேரழிவில் கூட தத்தளித்த தமிழகத்தில் மருத்துவமனைகளும் பள்ளிக் கூடங்களும் மூடப்பட்ட நிலையில் டாஸ்மாக் விற்பனை நடத்திய வக்கிரம் தான் ஜெயா ஆட்சி. பாலியல் குற்றவாளியை கரண்டு கம்பத்தில் கட்டி வைத்து விளக்கமாத்தால் விளாசினால், ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்தால் யாராவது பெண்களிடம் வாலாட்டுவானா? அறிவுரை சொல்லி பொம்பள பொறுக்கியை திருத்த முடியாது. அது போல் எத்தனை தாய்மார்கள் தாலி அறுத்தாலும், எத்தனை குடும்பங்கள் அழிந்தாலும் சாராயத்தை விற்றே தீருவேன் என்பவர்களிடம் மனு கொடுத்து என்ன பயன்?

குடி போதையில் இருந்து நம் இளைஞர்களை மீட்காமல், டாஸ்மாக்கை மூடாமல் எந்த பிரச்சனையை யாரிடம் பேசி என்ன பயன்? குடி போதையோடு ஆணாதிக்க கொடுமையை சகித்துக் கொண்டு, தினம் தினம் செத்துப் பிழைக்கும், தாய்மார்கள் களத்தில் இறங்கினால் டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட முடியும். ஆயிரக்கணக்கில் பெண்கள் மேல் மருவத்தூருக்கும், வேளாங்கன்னி மாதா கோவிலுக்கும் கால் வலிக்க நடக்கிறார்கள். நம் குடும்பத்தை, நமது சமூகத்தை சீரழிக்கும் குடியின் பிடியிலிருந்து விடுவிக்க சிறைக்கு போனாலும் பரவாயில்லை என ஒரு கணம் நினைத்தால், டாஸ்மாக்கை மூடப் போராடுவது கடினமில்லை.

எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போட்டும் டாஸ்மாக்கை நிரந்தரமாக ஒழிக்க முடியாது. ஓட்டுப் போட்டு அவர்களிடம் அதிகாரத்தை கொடுத்து விட்டு, அப்புறம் மனுவை வைத்துக் கொண்டு கலக்டர் ஆபீசு வாசலில் எதற்காக காத்து நிற்க வேண்டும்? மனு கொடுக்கும் மூட நம்பிக்கையை விட்டொழிப்போம்.

இனி அஞ்சுவதற்கோ தயங்குவதற்கோ எதுவும் இல்லை. நீதி நம் பக்கம், மக்கள் நம் பக்கம்.

குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே!

தடுக்க வரும் போலீசுக்கு அஞ்சாதே!

மூடு கடையை எவன் வருவான் பார்ப்போம்!

நம் தெருவில் இனி டாஸ்மாக் கிடையாது!

இது தான் மக்கள் அதிகாரம்.

டாஸ்மாக்  தேர்தல் பகடைக் காயல்ல, தமிழகத்தை மீட்கும் போராட்டம். எதிர்கால தலைமுறைக்கானது. சாராயக் கடையை மூடுவதற்கு நடக்கும் மக்கள் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டால் 24 மணி நேரத்தில் டாஸ்மாக்கை இயங்க விடாமல் செய்ய முடியும். எதற்காக காத்திருக்க வேண்டும்? இத்தகைய போராட்டம் தான் கள்ளச் சாராயத்தையும் ஒழிக்கும். மக்களின் எரியும் பிரச்சனையாக உள்ள டாஸ்மாக் தான் முதன்மையானது அதை மூடாமல், யாரும் தேர்தல் அரசியல் பேச முடியாது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அதற்குத் தான் இந்த டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு.

சுயமரியாதை தமிழகத்திற்காக, தேசபக்தியோடு மக்களை நேசித்ததற்காக எண்ணற்றவர்கள் சிறைக் கொட்டடியில் வாடினார்கள், தூக்கில் தொங்கினார்கள். அவர்களின் தியாகம் நம்மைக் கேள்வி கேட்கிறது. அத்தகைய வீரம்செறிந்த தமிழகத்தை மீட்டெடுப்பதில் டாஸ்மாக் ஒழிப்புப் போராட்டம் முதன்மையானது. அந்த அடித்தளத்தில் அனைத்தையும் சாதிக முடியும்.

சாராய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டுவோம்!

அனைவரும் திருச்சிக்கு வாங்க!

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

புரட்சி நாளை வரவேற்போம், சுடராய் அல்ல, சுட்டெரிக்கும் நெருப்பாய்…

நடைமுறையிலிருக்கும் முதலாளித்துவ அமைப்பு தனக்குள் இற்றுக்கொண்டிருக்கும் ஓசைகள் வெளிக்கேட்கத் தொடங்கி நீண்டகாலமாகிவிட்டது. அது தன் தலை நிலமாகிய அமெரிக்காவிலேயே வங்கிகளாய், பெரு நிறுவனங்களாய் வெடித்து வீழ்ந்துகொண்டிருக்கிறது. மக்களின் பணம் கொட்டப்பட்டு அவை நிலைத்திருப்பதாய் காட்ட முற்பட்டாலும் படிந்துவிட்ட வெடிப்புகளின் பல்லிளிப்புகளை மறைக்க விழி பிதுங்குகிறது முதலாளியம். உள்ளே எழுந்து கிளைபரப்பி விரியும் வலியை தடுத்தாட்கொள்வதாய் நினைத்துக்கொண்டு முன்னிலும் அதிகமாய் மக்களைக் கடித்து ரத்தம் குடித்துக்கொண்டிருக்கிறது. புவியெங்கும் கறைகளாய் அதன் உமிழல்கள்.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அத்தனையிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட‌ அரசுகளை சீர்குலைத்து தன் பொம்மைகளை நிறுவுவதற்கு படுகொலைகளையும் இனவழிப்புகளையும் துணிந்து நடத்தியிருக்கிறது அமெரிக்கா. சிலியின் அலண்டே தொடங்கி கியூபாவின் காஸ்ட்ரோ வரை தனது நலன்களுக்கு உகந்ததாக இல்லாத எந்தத் தலைவரையும் சதிப்புரட்சி மூலம் கொலைசெய்வதிலிந்து அடுக்கடுக்காய் வாடகைக் கொலையாளிகள் மூலம் கொலை செய்ய முயற்சிப்பதுவரை அமெரிக்கா செய்யாத பாதகங்களில்லை. வெனிசூலாவின் சாவேஸை கவிழ்த்துவிட வாய்ப்புக்கிடைக்காதா என அலைவது இன்னும் நின்றுவிடவில்லை. தோல்வியுற்ற ஈக்வடார் சதிப்புரட்சியின் சூடு இன்னும் ஆறிவிடவில்லை. இவைகளெல்லாம் முழுமையாக சோசலிசத்தை செயல்படுத்தும் நாடுகளில்லை என்றாலும், சோசலிசம், கம்யூனிசம் போன்ற வார்த்தைகளை எந்தநாடும் மறந்தும் கூட உச்சரித்து விடக்கூடாது என கங்கணம் கட்டுகிறது தன்னை ஜனநாயகத்தின் காவலன் என கருதிக்கொள்ளும் அமெரிக்கா.

மத்திய தரைக்கடல் நாடுகளில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டபின் வளைகுடா நாடுகளைனைத்தும் அறிவிக்கப்படாத அமெரிக்க மாநிலங்கள் என்றே செயல்பட்டுவருகிறது அமெரிக்கா. அவைகள் மீறிவிடக்கூடாது என்பதற்காக இஸ்ரேலை ஆதரித்து உருவாக்கி வளர்த்து வருகிறது. ஈரானில் அமெரிக்கப் பொம்மையான ஷாவை நீக்கி அயதுல்லா கொமேனி வந்ததும், தன்னால் உருவாக்கப்பட்ட பாத் கட்சியின் சதாம் உசேன் மூலம் போர் தொடுத்ததும், சதாம் அடிபணிய மறுத்ததால் அபாயகரமான ஆயுதங்கள் என்று கூறி தூக்கிலிட்டதும், ஈரான் இஸ்ரேலுக்கு அணுஆயுதப் போட்டியாகி வளைகுடா நாடுகளில் தாக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காக, பாகிஸ்தான் துணையுடன் ‘முஜாஹிதீன் ஹல்க்’, ‘ஜண்டுல்லாஹ்’ போன்ற இயக்கங்கள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதும் எல்லோரும் அறிந்த ரகசியங்கள்.

ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்கள் முதல் அனைத்தையும் மக்களை பட்டினி போட்டுக் கொன்று சுரண்டிக் கொழுக்கின்றன அமெரிக்க ஐரோப்பிய பெரு மூலதன நிறுவனங்கள். மூன்றாம் உலக நாடுகளை கடன்வலையில் சிக்கவைத்து, கடனுக்கான நிபந்தனைகளின் வாயிலாக உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளை வளைப்பதுடன் அவைகளின் உற்பத்தியை ஏற்றுமதி எனும் பெயரில் வட்டியாகக் கறந்துவிடுகின்றன. உலகின் வளங்களை கொள்ளையடித்துச் சுருட்டுவது ஒருபுறமென்றால் மறுபுறம் வளங்களையும், சுற்றுச்சூழலையும் மாசடையவைத்து சீர்கெடுப்பதும் முதலாளித்துவம் தான்.

இந்தியாவிலும் லட்சக்கணக்கான விவாசாயிகள் முதலாய், நேற்றைய நோக்கியோ அம்பிகா ஈறாய் எத்தனையெத்தனை கொலைகள், என்னென்ன கொடுமைகள். கோடிகோடியாய் முதலாளிகளுக்கு சலுகைகள் என்றாலும் உளுத்த தானியங்களைக்கூட ஏழைகளுக்கு கொடுக்கும் சாத்தியமில்லை என பிரதமரே பேசுவது, உழைப்பவனின் நரம்பை உருவி உதாரிகளுக்கு ஊஞ்சல் கட்டிப்போடும் அயோக்கியத்தனமில்லையா? இதற்கு முதலாளியத்தைத் தவிர வேறெதை நோக்கி விரல் சுட்டமுடியும்?

மக்களின் வறுமைக்கும், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களின் நாசத்திற்கும் ஒட்டுமொத்தக் காரணமாக இருக்கும் முதலாளித்துவத்தை மக்கள் எட்டி உதைத்திருக்க வேண்டும், ஆனால், முதலாளிய பொருளாதாரக் கொள்கைகள் முன்னேற்றமாகவும், ஏகாதிபத்திய நாடுகளை சொர்க்கமாகவும், அங்கு செல்வதை லட்சியமாகவும் கொள்ளுமளவுக்கு மக்கள் மந்தைகளாக்கப்படுகின்றனர். காரணம் உலகின் மொத்த ஊடகங்களும், கருத்துப்பரவலுக்கான கருவிகளும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாலும், அனைத்து அதிகாரங்களையும் குவித்து வைத்திருப்பதாலும் மக்களின் மனங்களை தங்களின் வசதிக்கேற்ப திருப்பியெடுக்குமான வாய்ப்பு வாய்க்கப்பெற்றிருப்பதும்தான். தாங்கள் வளர்த்துவிட்ட ஒரு சதாம் உசேன் தங்களுக்கெதிராய் திரும்ப எத்தனித்ததும் பேரளிவு ஆயுதங்கள் எனும் உலகின் மோசமான பொய்யை காரணமாகக் கூறி தூக்கிலிட்டுக் கொல்லவும், தடைகளின் மூலம் லட்சக்கணக்கான குழந்தைகளை கொன்றொழிக்கவும் சுலபமாக முடிகிறது. இன்றுவரை ஒரு குண்டூசியைக் கூட பேரழிவு ஆயுதமாக கண்டெடுக்க முடியவில்லை என்றாலும், எந்த நாட்டாலும், எந்த அமைப்பாலும் இந்தக் கொடூரத்தை, நரவேட்டையை தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முடிந்ததில்லை. இதை கண்ணெதிரே கண்டுகொண்டிருக்கும் போதிலுமே கம்யூனிசம் மக்களை வதைத்தது, ஸ்டாலின் கோடிக்கணக்கில் கொன்றார் எனும் கடந்த காலக் கட்டுக்கதைகளை நம்ப விரும்பும் மக்கள் இருக்கிறார்கள் என்பது, முதலாளித்துவம் எந்த அளவில் மக்கள் மனங்களையும் அரித்திருக்கிறது என்பதற்கான எடுத்துக்காட்டாய் நிற்கிறது.

இந்தக் கொடுமைகளிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும்; உலகைச் சீரழிப்பவர்களிடமிருந்தும், மக்களைச் சுரண்டி அவர்களை ஏழ்மையிலும் அடிமைத்தளையிலும் கட்டிவைத்திருப்பதிலிருந்தும் மக்களை விடுவிப்பது யார்? எது உலக மக்களுக்கான விடிவைத்தரும்? மதங்களா? காப்பது கிடக்கட்டும், இவைகளை சுட்டிக்காட்டி கண்டிக்கும் வீரியம் இருக்கிறதா அவைகளிடம்? செத்தபிறகு சொர்க்கமென்றும், மறுபிற‌வியில் வாழவைப்பேன் என்றும் மக்களை ஏமாற்றி இந்த சமூக அமைப்புகளைத் தக்கவைத்ததைத்தவிர மதங்கள் செய்ததென்ன? ஒன்றுமில்லை.

இந்த உலகில் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் அனைத்து உரிமைகளும் போராட்டத்தின் ரத்தச்சகதியிலிருந்து முளைத்து வந்தவைதான். அத்தனை உரிமைகளையும் நோகாமல் அனுபவிக்கும் நாம், நம் தோள்களில் தங்கி நகர்த்திச் செல்லவேண்டிய போராட்டக் களத்தை, சுகம் சொகுசு எனும் தனிமனித நத்தைக் கூட்டுக்குள் சுருக்கிக் கொள்வதேன்? நம் சொகுசுகளின் உறைகுளிரில் தீயைக் கிழித்துப்போட்டது ஒரு கொள்கை. இந்த உலகை வியாக்கியானம் செய்வதல்ல, அதை புரட்சிகரமாக மாற்றியமைப்பதே நம் முதல் தேவையாக இருக்கிறது என்று நம் செல்களின் தடித்தனங்களை ஊடுருவி, ஊடுருவி உரத்துச் சொன்னது அந்தக் கொள்கை. அது தான் கம்யூனிசம்.

மகிழ்ச்சி என்பது உளவியல் சார்ந்ததல்ல, அது செயல்களைச் சார்ந்தது, போராட்டத்தின் வழியே வருவது என ஒவ்வொரு மனிதனையும் உலுக்கிச் சொன்னது 1917 நவம்பர் 7. ஆம் இன்றுதான். உலகின் புரட்சிகர இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்த நாள். அந்த மகத்தான ரஷ்யப் புரட்சியின் நாள் இன்று. மக்கள் மீது சுமத்தப்படும் கொடுமைகளை, முதலாளித்துவ அநீதிகளை எதிர்த்து முறியடிக்கும் திறனை தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கும் கம்யூனிசத்தின் கீழ் அணிவகுப்போம், சுடர்களாய் அல்ல தீப்பந்தமாய்.

எழுந்து வாருங்கள் சுடர்களே,

அகல்விளக்கின் அங்கமாய்

மினுக்கிக்கொண்டிருந்தது போதும்

வெடித்துப்பேசும் நெருப்பு நாக்காய்

கொழுந்துவிட்டெரிவோம்

தோழர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி நாள் வாழ்த்துக்கள்

அதியமானும் சுதந்திரமும்

last british troops leave from india feb 1948 mumbai

1948 பிப்ரவரியில் சகல மரியாதையுடன் வழியனுப்பபடும் பிரிட்டீஷ் படைகள்

அண்மையில் 69 ஆவது முறையாக, ஆட்சி மாற்றத்தை சுதந்திரம் எனும் தவறான பொருளில் கொண்டாடினார்கள். [இதைவிட மென்மையாக இந்த அயோக்கித்தனத்தை குறிப்பிடவே முடியாது] இப்படி கூறுபவர்களை, தமிழ் கூறும் மெய்நிகர் உலகின் பிரபல தாராளவாதியான அதியமான் தன்னுடைய முகநூல் நிலைத் தகவல் ஒன்றில் கோபத்துடன் கண்டித்திருந்தார்.

போலி சுதந்திரம், etc என்றெல்லாம் அரத பலசான மார்க்சிய டைலாக்கை இன்னும் பேசும் அன்பர்களுக்கு :

சுதந்திரமே பெற முடியாமல் இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த அடிப்படை உரிமைகளை கூட பெற்றிருக்க முடியாது. நீங்க படித்து கூட இருக்க முடியாது. இட ஒதுக்கீடு, தலித் எழுச்சி எல்லாம் சாத்தியாமாகியிருக்காது….

காமராஜர் முதல்வராகி கல்வி தொண்டு செய்திருக்க முடியாது.

வறுமையை இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது.

—————

சுதந்திரத்திற்க்காக போராடி தியாகம் செய்தவர்கள் எல்லோரும் லூஸுகள் என்று சொல்லாமல் சொல்லும் அறிவீலிகள்…

முகநூல் கணக்க இலவசமா, ‘சுதந்திரமா’ பயன்படுத்த இந்த சுதந்திரம் தான் சாத்தியமாக்கியது என்று உணராத அறிவீலிகள்…..

அவர் பொங்கியிருப்பதை இலையில் கொட்டி காண்பித்து விடலாம் என எண்ணியதன் விளைவே இந்தக் கட்டுரை. என்ன, கொஞ்சம் தாமதமாகி விட்டது. பொருத்தருள்க.

47 ஆகஸ்ட் 15 ஐ சுதந்திரம் என்று கூறாமல் ஆட்சி மாற்றம் என்று ஏன் கூறுகிறோம் என்பதை பலமுறை கூறியிருந்த போதிலும் மீண்டும் ஒருமுறை சுருக்கமாக கூறிவிடலாம். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால் குவிந்த உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவும், தேவைப்படும் மூல வளங்களைக் கொள்ளையிடவும் உலகின் பெரும்பகுதியை தங்களின் காலனி நாடாக மாற்றினார்கள். அதில் இந்தியாவும் ஒன்று. தங்களின் கலனி நாட்டு மக்களை தங்களின் நோக்கங்களுக்கு இசைவாக ஆட்சி செய்தார்கள். தேவைப்படும் இடங்களில் கொடூரமாக ஒடுக்கியும், தேவைப்படும் இடங்களில் சலுகைகள் வழங்கியும். இதன் தொடர்ச்சியில் நெருக்கடிகள் முற்றி காலனி நாடுகளை இனிமேலும் வைத்திருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. அந்த நெருக்கடிகளை பொதுவாக மூன்றாக வகைப்படுத்தலாம்.

 1. 1917க்குப் பிறகு ரஷ்யாவில் லெனின் தலைமையிலான சோவியத்களில் அரசு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் கொண்டிருந்த அக்கரையும் செயல்பாடுகளும் உலக மக்களை அரசு குறித்த கண்ணோட்டத்தை மாற்றச் செய்தது. இதன் விளைவாக இந்தியாவில் காந்தியின் ‘அகிம்சை’யை மீறி மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதற்கு மேலும் காந்தியையும் காங்கிரசையும் கேடயமாக பயன்படுத்த முடியாத நிலை மெல்ல ஏற்பட்டது.
 1. சூரியன் மறையாத பரந்து விரிந்த காலனி நாடுகளை நூற்றாண்டுக் கணக்காக மக்களின் சமூக பண்பாட்டு நலன் சிறிதுமின்றி ஆண்டதன் விளைவாக மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே விரிந்த இடைவெளி, உலகப் போர்களால் ஏற்பட்ட பொருளாத நெருக்கடி, போன்றவற்றால் பல்வேறு நாடுகளை தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியாதபடி முற்றிய முரண்பாடுகளால் காலனி நாடுகள் சுமையாகிப் போனது.
 1. வளர்ந்து வரும் பொருளாதார வல்லரசாகவும், புதிய ஏகதிபத்திய தலைமையாகவும் உருவெடுத்த அமெரிக்கா உலகை தன் மதிப்பீட்டின்படி மறுபங்கீடு செய்ய இங்கிலாந்தை நெருக்கியது.

ஆகிய இந்த மூன்று முதன்மையான நெருக்கடிகளால், அந்தந்த நாடுகளில் தங்கள் உருவாக்கிய தலைமைகளிடம் ஆட்சியை மாற்றிக் கொடுத்து விட்டு தங்கள் நோக்கங்களை காப்பாற்றிக் கொண்டார்கள். அதாவது, என்ன நோக்கங்களுக்காக காலனி நாடுகளை ஏற்படுத்தினார்களோ அந்த மூல வளங்கள், சந்தைக்கு பங்கம் வராதவாறு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு நாடுகளை விட்டு வெளியேறினார்கள். இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் பல்வேறு வர்த்தக, பொருளாதார, இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை மறுகாலனியாக்கி தங்கள் கொள்ளையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இதை சுதந்திர நாடு என்று கூறுவதா? மறுகாலனி நாடு என்று கூறுவதா? இல்லை இந்தியா சுதந்திர நாடு தான் என்றால் யாருக்கு சுதந்திரம்? அல்லது சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?

இனி அதியமானின் பொங்கலை பார்க்கலாம், \\\இன்னும் ஆங்கிலேயர் ஆட்சி தொடர்ந்திருந்தால், இன்று அனுபவிக்க முடிந்த அடிப்படை உரிமைகளை கூட பெற்றிருக்க முடியாது. நீங்க படித்து கூட இருக்க முடியாது/// இதில் அவர் சொல்ல வருவது என்ன வென்றால், 47ஐ நீங்கள் ‘சுதந்திர’மாக கொண்டாடவில்லை என்றால் வெள்ளை ஆட்சியை விரும்புகிறீர்கள் என்று பொருள் என்பதைத்தான் தேசபக்தியை குழைத்து கூறுகிறார். எங்கோ கேட்டது போல் இருக்கிறதா? “நாங்கள் நடத்தும் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் நீங்கள் எங்களோடு இல்லையென்றால் எதிரிகளோடு இருக்கிறீர்கள் என்பது பொருள்” என்று பயங்கரவாதி புஷ் கூறியது தான். அதெப்படி இந்தியா பெற்றது விடுதலை இல்லை என்றால் அது வெள்ளை ஆட்சியை விரும்புவதாக அர்த்தப்படுமா? அல்லது அதரப் பழசான ஏதோவொரு மார்க்சியவாதி வெள்ளை ஆட்சியை விரும்புவதாக அதியமானிடம் அசரீரியாக சொல்லிவிட்டாரா? அதியமான் தான் தெளிவிக்க வேண்டும்.

இன்று அனுபவிக்க முடிந்த எந்த அடிப்படை உரிமை அன்றைய வெள்ளை ஆட்சியில் கிடைக்கவில்லை? ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்களே தவிர ஆட்சி மாறவில்லை. சாராயக் கடைகளுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் மக்களையும் குண்டாந்தடியால் கவனித்து விட்டு குடிப்பவர்களுக்கு காவல் நிற்கிறதே அரசு. இது ஒன்றே சொல்லிவிடவில்லையா எது அடிப்படை உரிமை? என்பதை, ஏன் அது அடிப்படை உரிமையாக இருக்கிறது என்பதை. ஏன் இந்த அரசு குடிப்பதை அடிப்படை உரிமையாகவும், சாராயக் கடையை எதிர்த்தால் அதை சட்டவிரோதம் என்றும் கருதுகிறது? தமிழ்நாடு மாநில அரசில் மட்டுமல்ல, அடிப்படையில் எல்லா அரசுகளுமே தன் மக்கள் போதையில் வீழ்ந்து கிடப்பதைத் தான் விரும்புகிறது. சாராயம் மட்டும் தான் போதையா? கலை, விளையாட்டுகள் தொடங்கி மதங்கள் வரை அரசுகள் பல்வேறு போதை ஊக்கிகளை போற்றிப் பாதுகாத்து. வளர்த்து வருகின்றன. அர்த்தசாஸ்திரம் எழுதிய கௌடில்யன் தொடக்கம் சீனாவின் அபினிப்போர் ஈறாக உலகின் வரலாற்றுப் பக்கங்களில் இதற்கு ஏராளம் ஆதாரங்களுண்டு. அரசு என்றால் என்ன என்பதை ஐயம்திரிபற தன் குடிமக்கள் தெரிந்து கொண்டுவிடக் கூடாது. தெரிந்து அரசுக்கு எதிராக யாரும் திரண்டு விடக் கூடாது என்பது தான் எந்த ஒரு அரசுக்கும் விருப்பமாக இருக்கிறது. இப்படியான விருப்பத்தைக் கொண்டிருக்கும் அரசுகள் எவற்றை அடிப்படை உரிமைகளாக கருதும்?

அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தால் அடிப்படை உரிமை என்ன, மக்களின் உயிர் வாழும் உரிமையைக் கூட அந்த அரசு பறித்தெடுக்கும். இதைத்தான் அன்றைய ஆங்கில அரசும் செய்தது இன்றைய மோடி அரசும் செய்கிறது, இதில் எங்காவது அடிப்படை உரிமைகள் எட்டிப் பார்க்கின்றனவா? ‘மருமகளை மயக்கிய மாமனார்’ என்று நீலப்பட சுவரொட்டியை சுதந்திரமாக ஒட்டலாம். ஆனால், ‘69 ஆண்டுகளாகியும் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வக்கற்ற அரசு ஆளும் அருகதையை இழந்து விட்டது’ என்று சுவரொட்டி ஒட்டினால் பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே அடைக்கிறது. என்றால் இந்த அரசுக்கு எது அடிப்படை உரிமை? எது உரிமை மீறல்? இதைத்தானே ஆங்கிலேயனும் செய்தான். அது அன்னிய ஆட்சி, இது அய்ம்பத்தாறு இன்ச் ஆட்சி என்று கூறுவது எந்த அளவுகோலை வைத்து?

\\\நீங்க படித்து கூட இருக்க முடியாது/// இப்படி அடித்து விளையாடுவது தேசபக்த பழங்களுக்கு வாடிக்கை தான். ஆனால் உண்மை வேறல்லவா? இருநூறு ஆண்டுகளா? ஈராயிரம் ஆண்டுகளாக மக்களை படிக்க விடாமல் தடுத்து வைத்திருந்தது யார்? பார்ப்பனியக் கொடுங்கோன்மையிலிருந்து கொஞ்சமேனும் மீட்டுக் கொண்டு வந்தது ஆங்கிலேயனல்லவா? குலக் கல்வியை, குடுமிக் கல்வியை மாற்றி மெக்காலே கல்வி முறையை புகுத்தியதால் தானே கொஞ்சமேனும் மக்கள் படிக்க முடிந்தது. சரஸ்வதி எங்கள் சிண்டுக்குள் தான் படுத்துக் கிடப்பாள், அவளை அவிழ்த்து விடமாட்டோம் என்று கயிற்றை இறுக்கியவர்களை, நிர்வாகத்துக்கு ஆள் தேவை என்று மக்கள் படிப்பதற்கு தொடக்கப் புள்ளியை ஏற்படுத்தியது ஆங்கிலேயன் தான். ஏன் ஆங்கில ஆட்சியில் படித்தவர்கள் எல்லாம் கட்டுச் சோறு கட்டிக் கொண்டு பொடிநடையாய் வெள்ளைக் காலனிக்கு வெளியில் சென்று கற்று வந்தார்களா? யார் மக்களுக்கு கல்வி வழங்கியது என்பது ஒருபுறம் இருக்கட்டும், எது கல்வி?

தான் கொண்டுவந்த கல்வியே ஆனாலும் ஆங்கிலேயென் இந்திய விடுதலை போராட்ட வரலாற்றையா பாடமாக வைத்தான்? எதை கல்வியாக கொடுக்க வேண்டும் என்பதில் ஆங்கிலேயனுக்கு ஒரு இலக்கணம் இருந்தது. அந்த இலக்கணம் இன்று வரை மாறியிருக்கிறதா? ‘சுதந்திர’ இந்தியாவின் பாடத்திட்டத்தில் இந்தியாவின் முதல் விடுதலைப் போர் ‘சிப்பாய்க் கலகம்’  என்று தான் இன்றும் குறிக்கப்பட்டிருக்கிறது. பகத் சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசியது எதனால்? பகத்சிங் காண விரும்பிய இந்தியா எது? பாடமாக வைக்குமா இன்றைய இந்தியா? தீரன் சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம் கூறுவது என்ன? பாடமாக வைப்பார்களா? இந்திய சுதந்திரம் என்றால் ஆங்கிலேயன் உருவாக்கிய காங்கிரசும் காந்தியும் தான். இதைத் தாண்டி ஊறுகாய் போல் வேறு சிலர். எது கல்வி என்பதில் ஆங்கிலேயனின் இலக்கணத்தை மில்லியேனும் மீறமாட்டேன் என்கிறார்களே ஏன்? ஏனென்றால் இருவரின் இலக்கணமும் வேறு வேறு அல்ல. இவர்கள் கூறும் சுதந்திரமும் மக்களுக்கானது இல்லை.

\\\இட ஒதுக்கீடு, தலித் எழுச்சி எல்லாம் சாத்தியாமாகியிருக்காது/// தேசபக்தி நெய் மண்டையில் உருகி வழிந்து கண், காதுகளை நிறைத்து விட்டது என்பதல்லாது, வேறென்ன கூறுவது? இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது யார்? சுதந்திரம் குறித்து பேசும் போது பார்ப்பனிய கொடுமையை பேசாமல் தவிர்க்க முடியாது. இத்தகைய அறிவுஜீவிகள் பெரியாரையும் பகத்சிங்கையும் பேசும் போது வெள்ளையனை ஆதரித்தார்கள் என்று கொளுத்திப் போடுவார்கள். இருவரும் சுதந்திரம் குறித்து ஒரே மாதிரியான கருத்தைக் கூறியிருக்கிறார்கள். அதிகாரத்தை வெள்ளையனிடமிருந்து எடுத்து பார்ப்பன பனியாக்களிடம் கொடுத்தால் அதற்குப் பெயர் சுதந்திரமாகுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அன்று காங்கிரஸ் பெருந்தலைகள் அனைவரும் ஒன்று தீண்டாமையை தூக்கிப் பிடித்தவர்கள், அல்லது தீண்டாமையை மழுப்பியவர்கள். காந்தி ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏன் ஹரிஜன் என புதுப்பெயர் சூட்டினார் என கேள்வி எழுப்பினால் அங்கு காந்தியின் தீண்டாமை பொக்கை வாய் காட்டும். இதற்கு எதிராக ஆங்கிலேயர்களால் கொண்டுவரப்பட்டது தான் இடஒதுக்கீடு.

இந்தியா என்பது மேல்தட்டு பனியாக்கள் மட்டுமல்ல ஊடும் பாவுமாக இந்தியாவின் உயிராக இருப்பது ஒடுக்கப்பட்டவர்களே. கல்வி கற்றவர்கள் எனும் அடிப்படையில் பார்ப்பனர்கள் மட்டுமே வெள்ளை அரசின் நிர்வாகப் பதவிகளில் இருந்தார்கள். இந்தியாவின் பெரும்பான்மை மக்களை நிர்வாகத்தை விட்டு விலக்கி வைப்பது தன் ஆட்சிக்கு ஆபத்து என உணர்ந்த ஆங்கிலேயர்கள் கொண்டு வந்தது தான் இட ஒதுக்கீட்டு முறை. இதுமட்டுமல்ல மாநில ஆட்சி, நகராட்சி, தேர்தல் முறை என  பலவற்றை அறிமுகப்படுத்தி இந்தியர்களை அதிகாரத்தில் பங்கெடுக்க வைப்பதன் மூலம் மக்களின் விடுதலை எழுச்சியை தடுக்க நினைத்தான் வெள்ளையன். இவைகளையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியது ஆதிக்கக் கும்பலே. ஆனாலும் வெகுசிலர் இதில் ஏறி வர முடிந்தது. இதன் இன்னொரு விளைவு தான் தலித் எழுச்சி.

என்று ஆதிக்க ஜாதி ஒடுக்குமுறை தோன்றியதோ அன்றே அதை எதிர்த்த எழுச்சிப் போராட்டமும் தோன்றி விட்டது. நாட்டுப்புற கதைப்பாடல் வடிவங்களில் அந்த வீரத்தை காணலாம். ஆனால் அவை அனைத்துமே பார்ப்பனியத்தால் செரிக்கப்பட்டன. வள்ளலார், நந்தன், வைகுந்தர் என அவரவர் வழியில் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களெல்லாம் இன்று அவர்களின் போராட்ட வரலாறு நீக்கப்பட்டு கடவுள் போல வடிவமைக்கப்பட்டு விட்டனர். என்றாலும், நிலப்பிரபுத்துவ கொடுந்தளைகளிலிருந்து வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தி முறைகளும், இட ஒதுக்கீடு, கல்வி, நிர்வாகத்தில் பங்கு பெறும் வாய்ப்பு என அனைத்தும் இணைந்து தான் தலித் எழுச்சிக்கான சாத்தியத்தை அதிகப்படுத்தியது. ஆனால் அதியமான்களுக்கு இவைகளெல்லாம் தெரியாது என்று எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படிக் கொண்டால் அது மாத்திரைக் குறைவு தான்.

\\\காமராஜர் முதல்வராகி கல்வி தொண்டு செய்திருக்க முடியாது/// கல்விக் கண் திறந்தவர் என்று காமராஜர் நினைவு கூறப்படுவது ஓரளவுக்கு சரிதான். என்றாலும் அந்த கல்விப்பணியும், எளிமையும் எப்படி புரிந்து கொள்ளப்பட வேண்டும்? எந்த ஒன்றிலிருந்தும் அரசியலை உருவி விட்டுப் பார்த்தால் அது உணர்ச்சி மேலீட்டுக்குத் தான் வழி வகுக்கும். நிலம் சார்ந்த உற்பத்தி முறையோடு மக்களின் உற்பத்தி இருக்கும் வரை ஏட்டுக் கல்வி என்பது பிரதானமானதில்லை, அனுபவக்கல்வியே முதன்மையானதாக இருக்கும். இது மாற்றமடைந்து ஆலை சார்ந்த உற்பத்தி அதிகரிக்கும் போது அங்கு அனுபவக் கல்வியை விட ஏட்டுக்கல்வி அதாவது பள்ளிகளில் படித்து பட்டம் பெற்று வேலை செய்வது முதன்மையானதாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பள்ளிக் கல்வியின் தேவை அதிகரிக்கும் போது அதை ஈடு செய்யும் விதத்தில் பள்ளிக்கல்வியை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். இந்த அவசியத்தை காமராஜர் முறையாகக் கையாண்டு மதிய உணவுத் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் பள்ளிக் கல்வியை பரவலாக்கினார். இந்த அடிப்படையிலிருந்து தான் காமராஜரின் சாதனைகளை புரிந்து கொள்ள வேண்டும். சரி இதற்கும் ஆங்கிலேய காலனி ஆட்சிக்கும், ஆட்சி மாற்றத்துக்கும் என்ன தொடர்பு? வெள்ளை ஆட்சி தொடர்ந்திருந்தால் காமராஜர் இதை செய்திருக்க மாட்டாரா? அல்லது, மத்திய அரசின் நோக்கத்துக்கு, பன்னாட்டு முதலாளிகளின் தேவைக்கு எதிராக இருந்திருந்தாலும் இதைச் செய்திருப்பாரா? இப்படி பரிசீலித்துப் பார்ப்பது தான் சரியானது. அவ்வாறன்றி கமராஜரின் கல்விப் பரவலாக்கத்தின் பலனை ஆட்சி மாற்றத்துக்கு கொடுப்பது அறியாமை.

\\\வறுமையை இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது/// இதைக் கண்டு எப்படி சிரிப்பது என குழப்பமாக இருக்கிறது. எந்த அளவு குறைத்திருக்கிறார்கள் வறுமையை? ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகள் ஆப்பிரிக்க கண்டத்தை விட இந்தியாவில் அதிகம் என்று ஒரு அய்.நா அறிக்கை கூறுகிறது. அண்மையில் வறுமைக் கோட்டை அளக்க பைசா சுத்தமாக அலுவாலியாக்கள் கணக்கு கூறிய போது இந்திய மக்கள் அதன் மீது காறி உமிழ்ந்தார்கள். வீடில்லாமல் சாலையில் உறங்குபவர்கள் எத்தனை கோடி என்பது வல்லாரை சாப்பிட்டாலும் அதியமான்களின் நினைவில் நிற்பதில்லை. ஏழ்மை விகிதத்தை குறைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்காக அள்ளிக் கொட்டப்பட்டிருக்கும் புள்ளி விபரங்களே இந்திய வறுமையின் அளவை அம்பலப்படுத்துவதற்கு போதுமானது. அவ்வளவு ஏன்? ஆகஸ்டு 15ஐ தூக்கிப் பிடிப்பதற்காக அதியமான எழுதியிருக்கும் வாக்கியத்தை அசை பிரித்தாலே அதுவே சொல்லும் இந்திய வறுமை நிலையை. இந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது என்பதன் பொருள் என்ன? வறுமையைக் குறைத்திருக்கிறோம் என்று அதியமானாலும் சொல்ல முடியவில்லை. அதனால் தான் புள்ளிவிபரப் பித்தலாட்டங்களின் மூலம் வறுமையை காகிதங்களில் குறைத்துக் காட்டுகிறார்களே, அந்த அளவு கூட குறைத்திருக்க முடியாது என்று அதியமானால் முனங்கத்தான் முடிந்திருக்கிறது.

இந்தப் படத்துக்கு விளக்கம் எதுவும் தேவையா?

இந்தப் படத்துக்கு விளக்கம் எதுவும் தேவையா?

ஆனால், இதை ஏதோ கொஞ்சம் வறுமையை குறைத்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியுமா? உலகின் முதன்நிலை பணக்காரர்கள் பத்துப் பேரில் இந்தியாவிலிருந்து மூன்று பேர் இடம்பிடித்திருக்கிறார்கள். இராணுவத்துக்காக அதிகம் செலவு செய்யும் நாடுகளில் உலகின் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. வெளிநாட்டு வங்கிகளில் இந்திய தனிநபர்கள் போட்டு வைத்திருக்கும் கருப்புப் பணத்தின் அளவு இந்தியாவின் பட்ஜெட்டில் கிட்டத்தட்ட பாதி அளவு. கடல்மேல் பனி நுனி போல் வெளி வந்திருக்கும் ஊழல்களின் அளவு மட்டுமே பலப்பல லட்சம் கோடிகள். பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்திருக்கும் இந்திய இயற்கை வளங்களின் மதிப்பை கணக்கிடவே முடியாது. இது போன்ற தகவல்களோடு இணைத்து ஒப்பிட்டுத் தான் இந்திய வறுமைக் குறைப்பு அளவை பார்க்க வேண்டும். இதை வறுமைக் குறைப்பு என்று கூற முடியாது, மக்களின் வயிற்றிலடிப்பு என்று தான் கூற வேண்டும். இப்படி சொந்த மக்களை வயிற்றிலடித்து வாழ வழியில்லாமல் செய்வதற்கு பெயர் தான் சுதந்திரமா?

சுதந்திரத்துக்காக போராடி தியாகம் செய்தவர்களை முட்டாளாக்கியது யார்? காந்தியும் கதர் குல்லா போட்டவர்களும் மட்டும் தானா தியாகிகள்? திப்பு, தாந்தியா தோபே தொடங்கி சௌரி சௌரா புரட்சியாளர்கள் வழியாக பம்பாய் கப்பற்படை எழுச்சி வரை கோடிக்கணக்கான தியாகிகள் அடையாளம் தெரியாமல் இந்த மண்ணில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் போட்டு இந்திய வளங்களை கபளீகரம் செய்வதற்கும், மக்களை காயடிப்பதற்கும் தானா அவர்கள் போராடினார்கள்? எட்டப்பன்களை, தொண்டைமான்களை அரசு சிறப்பு மரியாதைகளோடு கௌரவிப்பதற்குத் தானா அவர்கள் போராடினார்கள்? இதை சுதந்திர தினம் என்றும், இதை சுதந்திர நாடு என்றும் கூறுபவர்கள் தான் அந்த கோடானுகோடி   தியாகிகளை கேலி செய்கிறார்கள், அவமரியாதை செய்கிறார்கள்.

இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள் என்று ஆணவக் கொழுப்பை காட்டுபவர்களும், பிச்சைக்காரர்களெல்லாம் பேங்க் பாலன்ஸ் வைத்திருக்கிறார்கள் என்று நாக்குநுனியில் பேசுபவர்களும் அடுத்து தவறாமல் சொல்வது செல்போன் இண்டர்நெட் என்பது தான். அந்த வகையில் தான் அதியமானும் முகநூலை சுதந்திரமாக பயன்படுத்த முடியுமா? என்கிறார். சுதந்திரம் என்பதன் பொருள் புரியாதவர்களின் கைகளில் சுதந்திரம் எனும் சொல் படாதபாடு படுகிறது. பேஸ்புக் பாவிப்பது சுதந்திரத்தின் அடையாளம் என்று நாங்கள் கருதுவதில்லை. கலை, சினிமா, விளையாட்டு, மதம் போல் சமூகத் தளங்களும் ஒரு லாஹிரி வஸ்து[போதைப் பொருள்] தான். ஒரு எல்லைக்குமேல் அதை பயன்படுத்துவதும் அரசுக்குத் தான் உதவி செய்யும். எடுத்துக்காட்டாக சாக்கடை அடைத்து தெருவில் ஓடினால் அதைப் பார்க்கும் மனிதனின் சமூகக் கடமை என்ன? உரியவர்களிடம் செல்லி அடைப்பை சரி செய்ய வைப்பதும் மீறினால் அதற்காக போராடுவதும் தான் சமூகக் கடமை. ஆனால், சமூகத் தளங்கள் இதை எவ்வாறு மாற்றியிருக்கின்றன? அதை போட்டோ பிடித்து சமூகத் தளங்களில் பதிவேற்றி விடுவதாக மனிதனின் சமூகக்கடமையை வெட்டிக் குறைத்திருக்கின்றன. தவிரவும், அப்படி பதிவேற்றுவது தான் தன்னுடைய உச்சபட்ச சமூகக் கடமை என்றும், பிறர் மத்தியில் தான் மட்டும் செய்திருப்பதால் ஒரு பெருமித உணர்வும், துல்லியமாகச் சொன்னால் சமூகத்திலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலையும் ஏற்படுகிறது. ஒரு பொது இடத்தில், ஒரு பேரூந்தில், இரயில் பயணங்களில் அருகிருக்கும் சக பயணிக்கு, சக மனிதனுக்கு உறவுக்கரம் நீட்டுவதற்குப் பதிலாக செல்போன் திரைகளை நிரடி நிரடி விரல் தேய்த்து தனித்தீவாய் அமர்ந்திருப்பதும் தான் விளவாகியிருக்கிறது இந்த சமூகத் தளங்களால். சமூகத்தளங்களின் முதலாளிகளுக்கு தேவையும் இது தான். விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயை விட இந்த லாபம் தான் முதலாளிகளுக்கு முக்கியம்.

முகநூல் போன்ற சமூகத்தளங்கள் குறித்த சரியான பார்வை இது தான், இப்படித்தான் பார்க்க வேண்டும். இந்த எல்லையில் நின்று அது கொடுக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தும் விதமாகத்தான் அந்த சமூகத் தளங்களைப் பயன்படுத்துகிறோம், பயன்படுத்த வேண்டும். ஆனால், இதை 47ல் நடந்த ஆட்சி மாற்றத்துடன் தொடர்புபடுத்துகிறார் அதியமான். பேஸ்புக் பயன்படுத்துவது சுதந்திரமா? இல்லை, இவர் சொல்லும் சுதந்திரம் கிடைத்ததால் தான் பேஸ்புக் கிடைத்ததா? அவர் சொல்வதின் பொருள் என்ன? இதில் சீனாவில் பேஸ்புக் இல்லை என்று கூப்பாடு வேறு.

முதலாளித்துவம் எத்தனை கொடூரமானது என்பதற்கு மக்கள் வாழும் தடமெங்கும் தடயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் யாரோ ஒன்றிரண்டு அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளாக மடைமாற்றி, முதலாளித்துவத்துக்கு கொஞ்சம் டிங்கரிங் செய்தால் அது மக்களை காத்துவிடும் என்று அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் போல சத்தியம் செய்வது தான் அதியமானின் வேலை. இந்த வேலையைத்தான் சகதியில் சப்தம் எழுப்பும் சள்ளைக் குஞ்சுகளைப் போல் இணையப் பரப்பில் தொடர்ந்து செய்து வருகிறார் அதியமான். அறிவு நேர்மையுடன் அவர் தன்னை பரிசீலித்துக் கொள்ள வேண்டும் என்பதை தவிர வேறு ஒன்றும்கூறுவதற்கில்லை.

மின்னூலாக(PDF) தரவிறக்க‌

%d bloggers like this: