
அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே,
நூல்கள் வாசிக்கத் தொடங்கிய பள்ளிப் பருவத்திலிருந்தே, நாமும் இதுபோல் நூல்கள் எழுத வேண்டும் என்பது ஒரு விருப்பமாக, அறுந்து விடாத நூலாக உள்ளுக்குள் இருந்து கொண்டே இருந்தது. வாசிப்பை நேசிக்கும் அனைவருள்ளும் இப்படி ஓர் இழை ஊடும் பாவுமாக ஓடிக்கொண்டிருக்கும் என்றே எண்ணுகிறேன்.
கல்லூரி நாட்களில் இரண்டு நாவல்கள் எழுதி சுற்றுக்கு விட்டதும், அதற்கு கிடைத்த வரவேற்பும் தனி மகிழ்வை தந்தது. பின்னர் கவிதைகள் எழுதித் திரிந்ததும் ஒரு கனாக் காலமாக கடந்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது தோழர்கள் கவிதைத் தொகுப்பு கொண்டு வரலாம் என முயற்சித்தார்கள். நாம் எழுதுவதெல்லாம் கவிதையா என்றொரு ஐயம் வந்து குத்த, பிடிவாதமாக மறுத்து விட்டேன். (இப்போதும் அந்த ஐயம் உண்டு) பின்னர் அவ்வாறு மறுத்தது தவறோ எனவும் யோசித்திருக்கிறேன்.
2008 ல் வலைதளம் தொடங்கி எழுத ஆரம்பித்ததும் நெருடலில்லாமல் இயல்பாக எழுதவந்தது. நான் எழுதியவைகள் இதுவரை அச்சில் வந்ததில்லை. ஒரு சில வெளியீட்டகங்களில் முயற்சித்த போது, ஆகும் செலவில் பாதி உங்களால் பங்களிக்க முடியுமா? வெளியிடும் படிகளில் எத்தனை விழுக்காடு உங்களால் விற்றுத் தர முடியும்? என்றெல்லாம் கேள்விகள் வந்தன. அதனால் அச்சில் கொண்டு வரும் விருப்பம் ஓர் ஓரத்தில் ஒடுங்கிக் கொண்டது.
இதன் தொடர்ச்சியாக அமேசானில் வந்திருக்கிறேன். இந்த தொழில்நுட்பத்திற்குள் இருக்க வேண்டும் என்பதும் ஒரு காரணம். விலை ஒரு பிரச்சனை தான் என்றாலும், வாய்ப்புள்ளவர்கள் வாங்கலாம், அல்லது, வாய்ப்புள்ளோருக்கு அறிமுகம் செய்யலாம்.
தொடர் முயற்சிகளுக்குப் பிறகு ”இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே” நூல் அச்சில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து அச்சில் நூல்கள் வெளிவரும். உங்கள் ஆதரவை தொடர்ந்து கோருகிறேன்.
நன்றி.
********************
